வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 11 மே, 2009

தமிழக உறவுகளே.! இம்முறை.. ஒரே முறை.. தமிழ் இனநலம் கருதி வாக்களியுங்கள்!

வருகிற மே திங்கள் 13ஆம் நாள் இந்திய நாட்டின் மக்களைவைத் தேர்தலில் ஓட்டளிக்க உள்ள தமிழக உறவுகளுக்கு மலேசிய மண்ணிலிருந்து விடுக்கப்படும் வேண்டுகை இது:-

மது அன்பான தமிழக உறவுகளே,
நீங்கள் வாக்களிக்கும் முன் அருள்கூர்ந்து இவற்றைச் சிந்தியுங்கள்.
இதுவரை நடந்த தேர்தல்களில்..
உங்கள் கட்சிக்காரர் என்பதற்காக
உங்கள் சாதிக்காரர் என்பதற்காக
உங்கள் ஊர்க்காரர் என்பதற்காக
உங்களுக்குப் பணம் கொடுத்தார் என்பதற்காக..
உங்களுக்குப் பதவி கொடுத்தார் என்பதற்காக..
நீங்கள் யார் யாருக்கெல்லாமோ வாக்களித்திருக்கலாம்.
ஆனால், இந்த முறை.. ஒரே ஒரு முறை..
தமிழ் இனத்துக்காக உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்!
நமது தமிழ் இனத்தின் இருப்பை உலகத்திற்குக் காட்டுங்கள்!
மானமுள்ள தமிழர்கள் இன்றும் தமிழகத்தில் வாழுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்!
உலகத்தின் எந்த மூலையில் தமிழனுக்கு இன்னல் நேர்ந்தாலும் தட்டிக் கேட்டத் தமிழகத் தமிழன் இருக்கிறான் என்பதை அறிவியுங்கள்!
வரலாற்றில் பதிவாக உள்ள இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் முன் இதனைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்:-
* ஆறு மாதங்களாகத் தமிழ்நாட்டில் நாம் போராடியும், ஈழத்தில் போர் நிறுத்தம் வரவில்லையே ஏன்?

* வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் ஈழப்போரை இயக்குவது நடுவண் காங்கிரசு ஆட்சியாளர்கள்தாம்.!

* போரை இயக்குபவர்களை நடுநிலையாளர்களாகக் கருதி நாம் அவர்களிடம் போர் நிறுத்தக் கோரிக்கை வைத்தோம். இது நமது முதல்குறை.

* ரேடார் முதல் போசுபரசு பீரங்கிவரை இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைக்குக் கொடுத்துள்ளார்கள்.

* இந்தியக் கடற்படை ஈழ மண்ணைச் சுற்றி முற்றுகையிட்டுள்ளது. இந்தி வான்படையும் இப்போரில் ஈடுபட்டுள்ளது. ஈழத் தமிழர்களை அழிக்கப் பல்லாயிரம் கோடி ரூபாய்களை இந்தியா கொட்டிக் கொடுக்கிறது இலங்கைக்கு!

* முல்லைத் தீவின் முகப்பில் குவியல் குவியலாய்த் தமிழர் பிணங்கள்; கைகள் துண்டிக்கப்பட்டு கால்கள் துண்டிக்கப்பட்டு குழந்தைகள்!

* “தமிழ் ஆண் கடலுக்கு, தமிழ்ப் பெண் இராணுவ வீரனுக்கு” என்று கொக்கரிக்கிறான் கோத்தபய இராசபட்சே!
* பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வரவழைத்துத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் குண்டு போட்டுக் கொல்கிறார்கள்.
* ஒரே இரவில் பல்லாயிர குண்டுகளைப் போட்டு இரண்டாயிரம் தமிழர்களை மிக மிக கொடூரமாகப் படுகொலை செய்கிறார்கள்.
* இந்த மனித அழிவை அன்றாடம் தொலைக்காட்சியில் பார்த்துப் பார்த்து மனம் பதைத்துத் தீக்குளித்து மடிகிறார்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள்.
* தமிழ்நாட்டு மீனவர்கள் 400 பேர்க்கு மேல் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதற்கான துணிச்சலை இந்திய அரசுதான் சிங்களப் படைக்கு அளித்து வருகிறது.
* காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் உள்ளிட்டவற்றில் தமிழக உரிமைகளைப் பக்கத்து மாநிலங்கள் பறிப்பதற்கு இந்திய அரசு தான் மறைமுகமாகத் துணை செய்கிறது.
* ஈழத்திலிருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்தாலும் தமிழர்களைப் பகையினமாகத்தான் தில்லி ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். தமிழர் அவர்களுக்குப் பகையாளி; சிங்களர் அவர்களுக்குப் பங்காளி.
* ஈழத்தமிழ் இனத்தை அழிக்கும் போரில் ஈடுபட்டுள்ள இந்தியக் காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டாவிட்டால், நம் இனம் பூண்டோடு அழிந்துவிடும்.
* தற்காப்புணர்ச்சியும், தன்மான உணர்ச்சியும் இல்லையேல் ஈழத்தில் நம் கண் முன்னால் தமிழ் இனம் அழிந்துவிடும். தமிழ்நாட்டில் நாம் கொத்தடிமைகள் ஆக்கப்படுவோம்!
2009 மே 13-ஆம் நாள் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடியுங்கள்!
தீக்குளித்த தியாகிகள் பெயரால் உறுதி ஏற்போம்!;!
அன்றாடம் ஈழத்தில் கொல்லப்படும் ஈழத்தமிழர் நினைவு அனலாக எரியட்டும்.
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடாதே ஓட்டு!
தமிழினத்திற்கு வைக்காதே வேட்டு
காங்கிரசுக்கும், திமுகவுக்கும் போடும் வாக்கு!
தமிழினத்திற்குப் போடும் தூக்கு

@ஆய்தன்:-
ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை - உள்ளத்தே
தமிழ்த்தாய் இங்கு ஆட்சி புரியும்வரை
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் - மண்டியிட்டால்

பிறப்பின்மேல் ஐயம் பெற்றவர் மேல் ஐயம்
என்று தயக்கமின்றிச் சாற்று!! (பாவலரேறு பெருஞ்சித்திரனார்)

கருத்துகள் இல்லை: