வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 27 டிசம்பர், 2007

மலேசியாவில் தனித்தமிழ் நாள்காட்டி



தவத்திரு மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ்க் கொள்கை தமிழ்க்கூறு நல்லுலகில் வெற்றிகண்டுள்ளது என்பதற்குப் பறபல புறச்சான்றுகளை முன்வைக்கலாம். அவற்றுள் மிகப் புதியதொரு சான்றாகவும் சாதனையாகவும் அண்மைய வரலாற்று நிகழ்வென்றைக் கூறலாம். தனித்தமிழில் நாள்காட்டி வெளிவந்துள்ளது என்பதே அஃது. தனித்தமிழில் சொல்லமுடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்த நாள்காட்டி நற்சான்று. தனித்தமிழை வென்றெடுக்கும் முயற்சியில் இந்த நாள்காட்டி ஒரு மைல்கல். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனித்தமிழை மேலும் ஒருபடி உயர்த்தி இருக்கின்ற இந்த நாள்காட்டி மலேசியத்தில் வெளிவந்திருப்பது மாபெரும் வெற்றியும் சாதனையுமாகும்.


இந்த நாள்காட்டியைப் பத்தோடு பதினொன்றாக நினைத்துவிடக் கூடாது. நாளை மட்டும் காட்டுவதுதான் நாள்காட்டி. ஆனால், இஃது நாளை காட்டி; தமிழ் எண்ணைக் காட்டி; தமிழ் கணியத்தைக்(சோதிடம்) காட்டி; தமிழர் கண்ட வானியல் கலையைக் காட்டி; தமிழர் கண்ட கணக்கியல் மரபைக் காட்டி நம்மை வியக்க வைக்கிறது! விரும்ப வைக்கிறது!


உண்மையில் தமிழ்க்கூறு நல்லுலகில் வேறு எங்குமே நிகழ்ந்திடாத மிக அரிய; மாபெரிய முயற்சியாக - மீட்டெடுப்பாக - ஆக்கமாக இந்த நாள்காட்டி திகழ்கிறது. உலகின் பார்வைக்கும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமாக இந்த நாள்காட்டியில் பல உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. உலகம் தமிழைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையை இந்த நாள்காட்டி ஏற்படுத்தி உள்ளது.


இப்படியொரு செய்தற்கரிய சாதனையை மிக அமைதியாகச் செய்து முடித்திருக்கும் தமிழியல் ஆய்வுக் களம் என்ற அமைப்பையும் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்திருக்கும் இர.திருச்செல்வம் என்பாரையும் தமிழுலகம் கைகூப்பித் தொழவேண்டும்; உள்ளத்துள் வைத்து போற்றவேண்டும். (மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்)


  • ஆய்தன் : தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்! தனித்தமிழ் வெல்லும்!

வெள்ளி, 14 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி வருக! வாழ்க!



முடக் குமுகாயத்தின்
மூன்றாம் கால்!
மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் மண் பயனுறும்
'ஒளி' உரம்!
மக்கள் தொலைக்காட்சி.

மறத்தமிழன் மாண்பின்
முரசு ஒலி!
மக்கள் தொலைக்காட்சி.

தொல்காப்பியத் தமிழின்
ஒளிச்சுவடி!
மக்கள் தொலைக்காட்சி.

ஒளிமயமான எதிர்காலக் காட்டி
தமிழுக்கும் தமிழனுக்கும்!
மக்கள் தொலைக்காட்சி.

ஆய்தன்: உலகத் தமிழரின் இல்லத்திரை! மக்கள் தொலைக்காட்சி நல்லத்திரை!


சனி, 20 அக்டோபர், 2007

போட்டுத் தாக்கு (1)




ஞாயிறு, 14 அக்டோபர், 2007

வாக்கெடுப்பு (1) முடிவு


தமிழில் அன்னிய மொழிகளைக் கலக்கலாமா?

வாக்குகள்:

1.அறவே கூடாது = 86%
2.ஓரளவு = 1%
3.தேவை கருதி = 13%


ஆய்தன்: உணவில் கலப்படம் நடந்தால் உயிருக்குக் கேடு! மொழியில் கலப்படம் நடந்தால் இனத்துக்குக் கேடு!

மலேசியத்தில் தமிழ்க் காக்கும் நால்வர்

கடந்த 30.9.2007இல் தலைநகர் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் மிக அமைதியாக மாபெரும் தமிழ் எழுச்சி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. தமிழ் இலக்கியக் கழகம், தமிழ்நெறிக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம் ஆகியன ஒன்றிணைந்து பிறதோழமை தமிழ் அமைப்புகளின் ஒத்துழைபோடும் நடத்தப்பட்ட இந்த எழுச்சிக் கூட்டத்திற்குத் தமிழை உயிரென மதிக்கும் மலேசியத் தமிழறிஞர்களும் உண்மைத்தமிழ்ப் பற்றாளர்களும் உணர்வாளர்களும் இந்த அருமை நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அரங்கம் நிறைந்த கூட்டத்தில் அன்றைய அந்த அறைநாள் நிகழ்ச்சி மாபெரும் மொழி எழுச்சியை ஏற்படுத்தியது என்பது உண்மை. வந்திருந்த தமிழ் உள்ளங்களில் தமிழ் உணர்வை மீண்டும் அழுத்தமாக பதியவைத்தது என்பதும் உண்மை.

1.பாடநூலின் எதற்கு பண்டிதத் தமிழ்?
2.தமிழ்மொழியைப் பற்றிய தொன்மை வெறும் கற்பனையே!
3.தமிழின் வாழ்வு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில்தான் உள்ளது.
4.வானொலி அறிவிப்பில் சுழியத்தை அகற்றிவிட்டு பூஜ்யம் நிலைப்படுத்தப்பட்டது
5.அன்னிய மொழிக்கலப்பால் தமிழ் வளரும்.
6.தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்துகளை இணைக்க வேண்டும்.

இப்படி, அண்மையக் காலத்தில் நம் நாட்டில் தமிழ்மொழிக்கு எதிராக தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் சிலர் முன்வைத்த கருத்துகள் தொடர்பில் விரிவான ஆய்வு விளக்கங்களும் ஆழமான தெளிவுகளும் இந்த அருமை நிகழ்ச்சியில் தமிழ்விருந்தாகப் பரிமாறப்பட்டது.

மெத்தப் படித்தவர்கள், உயர்ப்பதவியாளர்கள், மேலதிகாரிகள், பேராசிரியர்கள், இதழாளர்கள், எழுத்தாளர்கள் என்ற உரிமையில் தமிழ்மொழியின் அடித்தளங்களில், அடிப்படைக் கொள்கைகளில் கைவைத்த தமிழ்ப் பேதையர்கள் சிலருடைய முகத்திரைகள் கிழி கிழியெனக் கிழித்தெரியப்பட்டது. அந்தப் பேதையர்களின் குறையறிவு படம்பிடித்துக் காட்டப்பெற்றது. மேற்கண்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பில் அறிவான விளத்தங்களும் ஆழமான விளக்கங்களும் சான்றுகளுடன் அன்றைய அரங்கில் முன்வைக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குரியது.

தமிழ் – தமிழர் வரலாறுகளில் திருப்பல்கள், மறைப்புகள், ஆகியன திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன. தமிழ் – தமிழர் சிறப்புகள் மிக நுட்பமாக இழித்தும் பழித்தும் கூறப்பட்டுள்ளன. தமிழ் – தமிழர் அடையாளங்கள் உருதெரியாமல் வஞ்சகமாக அழிக்கப்பட்டன. தமிழ் – தமிழர் என்ற சிந்தனைகளும் உணர்வுகளும் கொஞ்சங் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டன. தமிழ் – தமிழர் என்ற நம்பிக்கைகள் நசுக்கப்பட்டு அன்னிய மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு நெறிகள் பெருமளவில் விதைக்கப்பட்டன. இப்படியாக, தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக வரலாற்றுக் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி அடுக்கடுக்காக நிகழ்ந்துவருகின்ற அவலம் அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் விளக்கிச் சொல்லப்பட்டது மிகச்சரியான வினைத்திட்பம்.

தமிழுக்கு இந்த நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதேனும் கேடுகள் ஏற்படும்போது முன்னின்று குரல்கொடுக்கும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் தமிழ்நெறி அறிஞர் இரா.திருமாவளவன், மலேசியத் திரவிடர் கழகத் தேசியத் தலைவர் தமிழ்மானமிகு ரெ.சு.முத்தையா, தமிழ் இலக்கியக் கழகத் தலைவர் தமிழ் இலக்கியப் பண்பாட்டுக் காவலர் மு.மணிவெள்ளையன், தமிழியல் ஆய்வுக் களத் தலைவர் தமிழியல் ஆய்வறிஞர் இர.திருச்செல்வம் ஆகிய நால்வர் இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேருரை நிகழ்த்தினர். வைதீக, புத்த, சமண சமய அழுத்தங்களிலிருந்து அன்று தமிழைக் காத்தவர்கள் சமயப்பெரியோர் நால்வர்; அந்த நால்வரின் அடியொற்றி மலேசியத்திலும் நால்வர் என்று இவர்களுக்குப் புகழாரம் சூட்டுவதில் தமிழுயிர் பெருமையடைகிறது.

இந்த நால்வருடைய எழுச்சி உரைகளானது, இந்த நாட்டில் தமிழுக்கு எதிராகக் கேடுகளும் கீழறுப்புகளும் சூழ்ச்சிகளும் எட்டப்பத்தனங்களும் செய்துவரும் தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் ஆகியோரை நேரடியாகக் கண்டிக்கும் வண்ணமாக அமைந்தது. இது மிகவும் துணிகரமான செயலாகவும் இருந்தது.

தமிழையும் தமிழரையும் காப்பதற்கு வாழையடி வாழையென வந்த தமிழ்த் தலைவர்கள் வரிசையில் எமது மலேசியத்தில் வந்துதித்த அறிவுடைச் சான்றோராக; ஆற்றலுடை அறிஞராக; மொழியின சமயப் பண்பாட்டு நாட்டமுடைய மறவோர்களாக இந்த நால்வரும் விளங்குகின்றனர். இவர்களைத் தவிர இவர்களின் அடியொற்றிய பெரியோர் இன்னுஞ்சிலர் இந்த நாட்டில் உள்ளனர் என்பது பெருமைக்குரியதாகும். இவர்களின் பின்னால் தமிழ் மொழியின சமய பண்பாட்டுப் பற்றாளர்கள் அனைவரும் திரண்டு நின்று தமிழை உயர்த்திப் பிடிப்போம் வாரீர்.

மேலும், இனி இந்த நாட்டில் தமிழைப் பற்றி பேசத்துணியும் எவரும் நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும்; சரியான சான்றுகளோடு பேச வேண்டும்; தமிழ்நலத்திற்குக் கேடு செய்யாமல் பேச வேண்டும்; தமிழுக்குக் கீழ்படிந்து பேச வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். காரணம் தமிழையும் தமிழனையும் எதிர்க்கும் எந்தவொரு 'பீரங்கிக்குண்டு'களையும் சமைலறையில் 'முள்ளங்கித்தண்டாக' முறித்துப் போடுவதற்கு அறிவாற்றலுடையத் தமிழ்ப் பற்றாளர் படையொன்று எமது மலேசியத்தில் உருவாகி இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியில் நேரில் கண்ட தமிழுயிர் தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்த் துரோகிகள்; தமிழ்ப் பேதைகள் அனைவருக்கும் அறிவிக்க விரும்புகிறது.

(பின் குறிப்பு: தமிழ் வெறியர்கள் என்று இந்தப் படையைக் குறைமதியர் எவரும் பிதற்றித் திரிய வேண்டாம். பற்று வேறு வெறி வேறு என்று தமிழ்ப்பற்றாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.)

  • ஆய்தன்: "கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க" நால்வரே! உங்கள் பின்னால் இருப்பார் நல்லவரே!

திங்கள், 1 அக்டோபர், 2007

கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா?


'சிறந்த இசை' வழங்கும் தனியார் வானொலி நிலையம் அண்மையில் நடத்திய 'கலக்கல் காலை பங்கி பயணம்' என்ற நிகழ்ச்சி தமிழ் மக்களை மிகஞ்சுளிக்க வைத்துவிட்டது. இதில் நடத்தப்பட்ட போட்டியில் வழங்கப்பட்ட புதுமையான பரிசுதான் இதற்குக் காரணம். வெற்றி பெறுகின்றவர் அறிவிப்பாளருடன் விருந்துக்குப் (dating) போவதுதான் அந்தப் 'பரிசு'. தமிழ்ப் பண்பாட்டை முற்றிலும் கேவலப்படுத்தும் இப்படியொரு போட்டியும் பரிசும் தேவையா? தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திப் பெண்ணடிமைக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சியைத் தமிழுயிர் வன்மையாகக் கண்டிக்கின்றது. அந்த வானொலியாருக்காகத் தமிழுயிர் வழங்கும் ஆகா சிறந்த பாடல் இதோ! கேளுங்கள் மகிழுங்கள்!

இராகான்னு ஒரு வானொலி கேளுங்க – அதில்
தெறிக்குது தமிழ்ப் பண்பாடு பாருங்க!

பங்கி பயணம்னு நிகழ்ச்சி பேருங்க – அதில்
பொண்ணுங்க மானம்தான் நாறுங்க!

போட்டின்னு பேருசொல்லி நடத்துறான் – அதில்
பரிசுன்னு விருந்து ஒன்னு கொடுக்கிறான்!

பொண்ணுக்கூட ஆம்பிள போகுறான் – விருந்துக்கு
ஆண்கூட பொம்பளயும் போகுறாள்!

எங்கேடா படிச்சானுங்க இந்தப் பண்பாடு – இதை
வெளியில சொன்னாக்கா வெட்கக்கேடு!

எவனுங்கடா அந்த அறிவிப்பாளரு – அந்த
வெள்ளைக்காரனா இவனுங்கள பெத்தவரு!

பொறுக்கீங்க போட்டிக்குப் போகலாமா? – நம்ம
பொண்ணுங்க புத்தியும் மேயலாமா?

  • ஆய்தன்:பண்பாடும் நாகரிகமும் இல்லாதவை விலங்கும்; பேய்பிடித்த பைத்தியமும் தான்!

ஞாயிறு, 30 செப்டம்பர், 2007

தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏற்படுத்திவிட்ட புயல் அடங்குவதற்குள் "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்ற மேலும் ஒரு விவாதம் தமிழ் நாளிதழ்களில் மிகச் சூடாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆளும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.காவும் பி.பி.பியும் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி மாறிமாறி அனல்பறக்க அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி என்ற தடத்திலிருந்து அரசியல் களத்திற்குப் போய்விட்ட இந்த விவகாரத்தைப் பற்றி தமிழுயிர் கருத்துரைக்க விரும்பவில்லை. ஆயினும், தமிழ்மொழியைத் தேசியப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கருத்தை ஒட்டி தமிழுயிர் தனது எண்ணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறது.

மலேசியாவில் தற்சமயம் 523 பள்ளிகள் இருப்பதாகவும் அவற்றில் ஓரிலக்கத்து ஐயாயிரத்து அறுநூற்றுப் பதினெட்டு (105,618) மாணவர்கள் பயின்று வருவதாகக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேவேளையில் தேசியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் அல்லது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாகுவது தமிழ்மொழியின் நீடுநிலவலுக்கு நல்லது என்னுமொரு கருத்தும் நிலவுகிறது. இக்கருத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது? தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதால் அது வளர்ந்து விடுமா? காலத்திற்கும் நிலைத்திருக்குமா? இதனால் தமிழ்க் குமுகாயத்திற்கு நன்மையா? தமிழ்ப் பண்பாட்டுக்கும் சமயத்திற்கும் ஆக்கமா? ஆகிய வினாக்களுக்கு ஆழமான ஆய்வுகளின் மூலமாக விடைகளைக் காணவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குள், தமிழை ஏற்கனவே கட்டாயப் பாடமாக்கியுள்ள நமது அண்டை நாட்டையும் இணைத்துக்கொளவது மிக மிக அவசியமாகும். காரணம், தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதால் அந்நாட்டில் தமிழ்மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு, பாரம்பரிய, வரலாற்று அடையாளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இதன் தொடர்பில், நமக்கு நிறைவளிக்கும் முன்னேற்றங்கள் எதுவும் பெரிதாக அங்கே நடந்துவிடவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆக, அதுபோன்றதொரு நிலைமை நாளை நம்நாட்டிலும் நிகழ வேண்டுமா என்பதைத் "தமிழைக் காட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்று போராடும் அன்பர்கள் தயவுகூர்ந்து சிந்திக்க வேண்டும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் எண்ணம் கல்வி அமைச்சுக்கே இல்லாதபோது நம்மில் சிலர் ஏன் அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வேண்டும்? இப்படியொரு திட்டம் நிகழுமானால் அது நிச்சயமாகத் தமிழைக் கருணைக் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். தமிழைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொலை நோக்குத் திட்டத்திற்கு ஒப்பானதாகும். தமிழ் வரலாற்றில் குமரிக்கண்டத் தமிழ் அழிவுக்குப் பின்னர் நடைபெறும் மிக பெரிதான தமிழ் அழிவுக்கு ஒப்பானதாகும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதை விரும்பும் அன்பர்கள் தயவுகூர்ந்து கீழ்க்காணும் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தமிழுயிர் தாழ்மையுடன் வேண்டுகிறது.

1.தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும். 2.மாணவர்கள் குறைந்தால் இயல்பாகவே தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும். 3.இப்போது இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து ஒருகாலக் கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிகள் மட்டுமே மிஞ்சும். 4.தலைமையாசிரியர் என்ற துறைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழர் அல்லது இந்தியரின் எண்ணிக்கை படிப்படியாகக் கணிசமாகக் குறையும். 5.தமிழ்ப்பள்ளிக் கண்காணிப்பாளர், மொழி அதிகாரி, உதவி இயக்குநர் முதலான உயர்ப்பொறுப்புகள் காணாமல் போகும். 6.தமிழ்மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையம், தேர்வு வாரியம், பாடநூல் பிரிவு, ஆய்நர் பிரிவு முதலானவற்றில் உள்ள தமிழ்மொழிக்குரிய பிரிவுகளும் உயர் பொறுப்புகளும் இல்லாமல் போகும். 7.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகம் முதலிய உயர்க்கல்விக் கழகங்களில் தமிழைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழ்ப் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் காலப்போக்கில் குறையும். 8.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் விரிவுரைஞர், பேராசிரியர், இணைப்பேராசிரியர் முதலான பொறுப்புகளும் தமிழின் பெயரால் இயங்கும் உயர்ப்பதவிக்கான இருக்கைகளும் காணாமல் போகும். 9.தற்போது தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் வட்டாரக் கல்வி, நன்னெறிக் கல்வி, வாழ்வியல் திறன், உடற்கல்வி, நலக்கல்வி, குடிமையும் குடியுரிமைக் கல்வியும், இசைக்கல்வி, கலைக்கல்வி முதலான பாடங்களும் பாடநூல்களும் இல்லாது போய்விடும். 10.தமிழ்ப் பள்ளிகளுக்கான மேற்கண்ட பாடநூல்களை எழுதும் அதிகாரிகளுக்கு வேலை இல்லாமல் போகும்; அப்பாடநூல்களை ஆச்சிடும் பல தமிழ் நிறுவனங்களும் பதிப்பகங்களும் முடங்கிப்போகும். 11.தமிழ்ப்பள்ளிகள் குமுகாய பண்பாட்டு நடுவங்களாகச் செயல்படும் நிலை கெட்டுப் போகும். 12.தேவார வகுப்பு, சமய வகுப்பு, திருக்குறள் வகுப்பு, கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, தேர்வுக்கால சிறப்பு பூசை, கல்வி யாத்திரை முதலான சமயப் பணிகள் ஆற்றி ஆன்மிக வளர்ச்சிக்கும் வித்திடும் தமிழ்ப்பள்ளிகளின் அரும்பணிகள் அழிந்துபடும். 13.தமிழ் மக்களே முழுவதுமாக ஆட்சி செய்யும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிருவாக வாரியங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் ஆகியவை பூண்டோடு காணாமல் போய்விடும். 14.தமிழ்பள்ளி மாணவர்களுக்காகச் சில சிறப்பான கல்வித் திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்தியர் அரசியல் கட்சிகள், தமிழர்/இந்தியர் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது இயக்கங்கள் ஆகிய தரப்புகளின் பங்களிப்பும் பணிகளும் முடங்கிப் போகும். 15.கபடி, சிலம்பம் முதலான தமிழ் விளையாட்டுகளைப் பேணிக்காத்துவரும் சில தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போகும்; தமிழ் விளையாட்டுகள் மறைந்துபோகும். 16.தமிழ்மொழி சார்ந்து நடைபெறும் மொழிப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள், திருமுறை ஓதும் போட்டிகள், மாணவர்த் திறன் போட்டிகள் முதலானவற்றின் தளங்கள் தகர்ந்துபோகும். 17.தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், தேவாரம், திருவாசம் முதலிய இன்னும்பல அருமை நூல்களின் அடிபடையில் இன்று தமிழ்ப்பள்ளியில் இயங்கும் தமிழ்மொழி காணாமல் போய் குமுகவியல் மொழி (social language) ஆட்சி பெறும். இதனால், தமிழின் தரம் குறைந்துபோய்; உண்மை அடையாளம் மாறிப்போய்; இறுதியில் அழிந்துபடும். 18.தமிழ்மொழியில் ஏற்படும் சிதைவும் மாற்றங்களும் தமிழ் இனத்தின் அடையாளத்தை உருமாற்றிவிடும்; கலை பண்பாட்டை உருமாற்றிவிடும். இதற்கு நம்மோடு நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உடன்பிறப்புகளான 'மலாக்கா செட்டிகளே' நற்சான்று. 19.தமிழ்மொழி திரிந்தோ அல்லது சிதைந்தோ போகுமானால் இந்த இனமும் தன்நிலை மாறிப்போய் வேறு மொழியாகவும் வெவ்வேறு இனமாகவும் பிரிந்து போகும். இதற்கு, தமிழினத்திலிருந்து பிரிந்துபோன தமிழ்த் தோழமை இனத்தாரான தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடர்களும் சான்று. 20.தமிழ்மொழி நம் இனத்தின் உயிர் என்பதால் மொழியின் சிதைவும் அழிவும் பத்தாயிரம் ஆண்டுக்கும் குறையாத தமிழ் இனத்தின் அடிச்சுவட்டையே அழித்துவிடும். இதற்கு, இந்தோனிசியா, மியான்மார், மொரிசியசு, பிஜி, இரியூனியன் முதலான நாடுகளில் வாழும் தமிழர்களே சான்று. 21."மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியர் கூற்றுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளியிலும், தமிழ்மொழியிலும், தமிழினத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் ஏற்படும் திரிபுகள் இறுதியில் உலக வரலாற்றில் தொன்மை இனமாகிய தமிழினத்தின் பேரழிவுக்கே வித்திடும். 22."தமிழ் எம் உயிர்; தமிழ்ப்பள்ளி எம் உடல்" என்று முழங்கி மலேசியத்தில் தமிழை நிலைபெறச் செய்த தமிழவேள் கோ.சா ஐயா அவர்களின் திருக்கூற்றின்படி தமிழ்ப்பள்ளி என்ற உடல் அழித்தால் தமிழ் என்ற உயிர் அழியும்! தமிழ் அழிந்தால் தமிழினமே அழியும்! தமிழின அழிவுக்கு இட்டுச் செல்லும் எந்த ஒரு திட்டத்தையும் வழிமொழிந்து அடுத்து வரும் ஏழேழு தலைமுறையின் சாபத்திற்கு இன்றைய தலைமுறை ஆளாக வேண்டாம்.

இத்தனை விளைவுகளையும் இன்னும் விரிந்துச் செல்லும் பற்பல விளைவுகளையும் தீர்க்கமாகச் சிந்தித்தப் பிறகுதான் "தேசியப் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது" பற்றி எவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையாகவே தமிழ்பள்ளி; தமிழ்மொழி நலம் நாடுவோர் கண்மூடித்தனமாகக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிராமல் ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் பேசுவதே நலம்.

  • ஆய்தன்: தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதைச் சிந்திக்கும் மூளைகள் இடைநிலைப்பள்ளிகளில் இதனைச் செய்ய முனைந்தால் தமிழுக்கு ஆக்கம் விளையுமே! இதனைச் சிந்திக்கவும் பேசவும் எவரும் துணிவதில்லையே! ஏன்? ஏன்?

தமிழில் முதலெழுத்து எழுது குயிலே!


மலேசியத் தமிழ் மாணவர்களிடயே தமிழுணர்வுடன் கல்விப்பணி செய்துவரும் ஒரேயோர் இதழ் 'குயில்' மாணவர் இதழாகும். தமிழ் வானில் பறக்கும் இந்த ஜீவக்குயிலின் பணிகள் கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குப் பெரும் நன்மையைக் கொண்டுவந்துள்ளன என்றால் மிகையாகாது. இந்தத் தேசியத் தமிழ் மாணவர் இதழை நடத்திவரும் ஜெயபக்தி நிறுவன உரிமையாளர் கு.செல்வராஜூவைத் தமிழுயிர் மனந்திறந்து பாராட்டுகிறது. காரணம், தமிழ் மாணவர் குமுகாயத்தின் நலன்கருதி அவர் செய்யும் இந்த அரும்பணி போற்றுதலுக்குரியது.

குயில் செப்தெம்பர் திங்கள் இதழில் எமது கண்ணை உறுத்திய தமிழ்கேடு ஒன்றை இங்கே குறிப்பிட விழைகிறேன். அதாவது, சில பெயர்களின் முன்னால் உள்ள முதலெழுத்து(initial) தமிழில் குறிக்காப்படாமல் ஆங்கில எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. கு.செல்வராஜூ என்பதில் உள்ள முதலெழுத்து 'கு' தமிழில் எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் மாண்புமிகு டத்தோ R.ராகவன் என்றும் டத்தோ (Dr) K.S.நிஜார் என்றும், திருமதி.A.தனலட்சுமி என்றும் பெயர்களில் ஆங்கில எழுத்தை முதலெழுத்தாக இதே இதழ் எழுதியிருக்கிறது. ஏன் இந்த முரண்பாடு? ஏன் இந்த மொழிக்கேடு? 'R' என்பதை 'இரா' என்று தமிழில் எழுதியிருக்கலாம் அல்லது குறைந்தது 'ஆர்' என்றேனும் தமிழ்ப்படுத்தி இருக்கலாம். அதைவிடுத்து மாண்புமிகு டத்தோ ராகவன் என்று வரிசைப்பிடித்து நிற்கும் தமிழ் எழுத்துகளுக்கு மத்தியில் 'R' என்ற ஆங்கில எழுத்தை எழுதி தமிழைச் சிதைத்திருப்பது முறையாகுமா? மேலும், 'ரா' என்பது தமிழில் முதலில் வாராது என்ற இலக்கணத்தை அறிந்து ராகவன் என்பதை இராகவன் என்று எழுதியிருக்க வேண்டும். அதுபோலவே மருத்துவர் கே.எஸ்.நிஜார் என்றும் திருமதி.A.தனலட்சுமி என்பதில் அ அல்லது ஆ அல்லது அந்த ஆங்கில எழுத்தை 'எ' என்று எழுதியிருக்கலாம்.

இது மிகச் சிறிய குறையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் மொழி நலனைக் கொடுத்துவிடக்கூடிய சிக்கலாக உறுமாறிவிடும். அதுவும், மாணவர்கள் படிக்கக் கூடிய 'குயில்' இதழில் இதுபோன்ற குறைபாடுகளும் மொழிக்கேடுகளும் நிகழ்வது பெரும்பிழையென தமிழுயிர் கருதுகிறது. காரணம், மாணவர்களும் இதனைப் பின்பற்றி எழுதக்கூடும் அல்லவா? எனவே, தமிழ்மொழி நலம் கருதி இதுபோன்ற சிறுசிறு குறைபாடுகளைத் தவிர்த்து, தமிழ் வளர்க்கும் பணியைத் தொடருமாறு குயில் அண்ணா அவர்களைத் தமிழுயிர் வேண்டிக்கொள்கிறது.



  • ஆய்தன்: சிறு துளி பூமியில் பெரு வெள்ளம் ஆகிவிடும்; சிறு குறை மொழியில் பெருஞ் சிதைவு ஆக்கிவிடும்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2007

தனக்கொரு நீதி தமிழுக்கொரு நீதியா?



“தமிழ் நெடுங்கணக்கை மாற்றவேண்டுமா?” என்ற சிக்கலில் பொங்கியெழுந்த அத்தனை உணர்ச்சிகளையும் தமிழ் உணர்வாளர்களையும் சீண்டிப்பார்க்கும் வகையில் வார இதழ் ஆசிரியர் ஒருவர் தலையங்கம் தீட்டியுள்ளார். ஆறிப்போன புண்ணைச் சொறிந்து பார்த்திருக்கும் அந்த வார இதழ் ஆசிரியரைத் ‘தமிழுயிர்’ நினைத்துப்பார்த்தது... கற்பனை சிறகடித்துப் பறந்தது; காட்சி பிறந்தது! இப்படி..

வித்யா :- டேய் சாகர், மஞ்சள் சட்டைய மாட்டிகிட்டு எங்கேடா கிளம்பிட்டே?

சாகர் :- 'தொன்றல்' வார இதழ் வாங்கிட்டு வரலாம்னு போறேன்.

வித்யா :- ஆமா, அண்மையில் பாடத்திட்ட அதிகாரி ஒருவர் நம்ம தமிழைப்பற்றி கேவலமாய் பேசியிருப்பது பற்றி என்னடா நினைக்கிற?

சாகர் :- ‘தமிழ்த்துரோகிகள்.. கண்டிக்கவேண்டும்.. தமிழ் எங்கள் மூச்சு.. பொங்கி எழுவோம்.. குரல் கொடுப்போம்.. மகஜர் வழங்குவோம்.. முழங்கு சங்கே! என்று ஆவேசமாய் பொங்கி எழுவதால் மட்டுமே எதையும் சாதித்துவிட முடியாது.

வித்யா :- நல்லபடியா புத்தி சொன்ன எவன்டா கேட்கிறான்? அவனவனுக்குப் பெரிய அதிகாரி, அறிவாளி, பெரிய ஆள் என்று நினைப்பு!

சாகர் :- தவறு, அறியாமை, தடுமாற்றம் என்பதெல்லாம் எல்லாரிடமும் உண்டு! அதனால் உட்கார்ந்து அமைதியாய் பேசி பிரச்னைகளை நமக்குள் தீர்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.

வித்யா :- டேய் தமிழைப் பழிப்பதும் தாயைப் பழிப்பதும் ஒன்னுடா? அதுவும் எப்ப பார்த்தாலும் சொந்த தாய்மொழியையே பழிக்கும் ஒருவனைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதுடா.. நல்லா போட்டுத் தாக்கனும்!

சாகர் :- உணர்ச்சிகரமாய் எதையும் எதிர்கொள்ளாமல் உணர்வுப்பூர்வமாய் கைகோர்த்து செயல்பட வேண்டும்.

வித்யா :- டேய் நீயா இப்படி பேசுற? அன்னிக்கு ஒருத்தன் உன்னைப் ‘பொட்டப்பயன்னு’ சொல்லிட்டான்னு வானத்துக்கும் பூமிக்குமா என்னமா குதிச்ச! ஒரு தனிமனிதன் உன்னை ஏசுனதுக்கே உனக்கு அவ்வளவு கோபம் வருதே.. இது ஆறுகோடி தமிழ் மக்களோட தாய்மொழி! தமிழ் இனத்தோட உயிர்மூச்சு! எல்லா மொழிக்கும் மூத்தமொழி! இலக்கணம் இலக்கியத்துல உயர்ந்த மொழி! ஞானிகள் கூட போற்றி புகழும் மொழி! இந்த மொழிய வச்சுதான் நிறைபேர் பொழப்பு நடத்துறான்! நீயும்கூட பொழைக்கிற! அந்தத் தமிழை ஒருத்தன் கேவலமா பேசும்போது அமைதியா உட்கார்ந்து பேசனும்னு சொல்றியே உனக்கு எங்கேயாவது சூடு, சொரணை இருக்குதாடா? உனக்கு ஒரு நியாயம் தமிழுக்கு ஒரு நியாயமாடா? நீயும் தமிழ்த் துரோகிதாண்டா? உன்னோட ‘கலர’ காட்டிட்ட பாத்தியா?

சாகர் :- ??????????????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • ஆய்தன் : தமிழர் மேன்மை அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்; எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை? ஏற்றசெயல் செய்வதற்கும் ஏன் அஞ்சவேண்டும்? (பாவேந்தர்)

செவ்வாய், 11 செப்டம்பர், 2007

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?



"மலேசியாவில் செயல்படும் தமிழ்ப் பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று ஓய்வுபெற்ற முறையீட்டு நீதிபதி டத்தோ.வி.சி.ஜார்ஜ் என்பவர் பேசினார் என்ற செய்தி கடந்த 4-9-2007ஆம் நாள் தமிழ் நேசன், மலேசிய நண்பன் ஆகிய தமிழ் நாளிதழ்களில் வெளிவந்தது. 'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற செய்தியிதழுக்கு வழங்கிய நேர்க்காணலில் அந்த முன்னாள் நீதிபதி அவ்வாறு கருத்து தெரிவித்திருந்ததை வழக்கறிஞர் அ.சிவநேசன் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். 'ரிலெவன்' இதழுக்கு ஆங்கிலத்தில் வழங்கிய நேர்க்காணலில் முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "I would like to see tamil schools abolished" என்று சொன்னது நாட்டில் உள்ள எமது தமிழ் மக்களிடையே எரிமலையாய் வெடித்தது. நாடெங்கிலும் அனைவரும் குமுறிப் போயினர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசு சார்பற்ற இயக்கம், ஆசிரியர் சங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள், மாணவர்கள் என குமுகாயத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் ஒன்றாய்ச் சேர்ந்து முன்னாள் நீதிபதிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நின்றனர். அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் நாடெங்கெங்கிலும் தமிழ்த் தலைவர்களும் மக்களும் பொங்கி எழுந்தனர்; கண்டனம் தெரிவித்தனர்; அமைதி மறியல் நடத்தினர்; எதிர்ப்புப்போராட்டம் நடத்தினர். மலேசிய வரலாற்றில் தனிப்பட்ட வேற்றுமைகளை மறந்து எமது தமிழ்மக்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் நின்று தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவான போராட்டத்தை முன்னெடுத்தது வரலாற்றுப் பெருமையாக அமைந்தது. 50 ஆண்டுகாலத்தில் மலேசியத் தமிழ்க் குமுகாய விடியலுக்கான முன்னுரையாகவும் அமைந்தது. இந்தக் குமுகாயப் போராட்டத்தின் நடப்புகளைத் 'தமிழுயிர்' இங்கே நாட்குறிப்பாக வழங்குகின்றது.

4.9.2007:- *'ரிலெவன்' எனப்படும் வழக்கறிஞர் மன்ற இதழுக்கு வழங்கிய ஒரு நேர்க்காணலில் முறையீட்டு வழக்குமன்ற முன்னாள் நீதிபதி டத்தோ வி.சி.ஜார்ஜ் "தமிழ்ப்பள்ளிகள் ஒழிக்கப்படுவதை நான் காண விரும்புகிறேன்" என்று கூறியிருப்பதாக வழக்கறிஞர் ஆ.சிவநேசன் பொதுவுக்கு வெளிப்படுத்தினார். அதற்காக கடுமையான கண்டனமும் தெரிவித்தார். தன்னுடைய பேச்சினை முன்னாள் நீதிபதி மீட்டுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லையேல் காவல்துறையில் புகார் செய்யப்படும் எனவும் கூறினார்.

5.9.2007:- *முன்னாள் நீதிபதி வி.சி.ஜார்ஜ் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தும் பல இயக்கத் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர். மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா, மனித உரிமை ஆணையர் டத்தோ.என்.சிவசுப்பிரமணியம், மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ.அ.வைத்தியலிங்கம், ஐ.பி.எப். கட்சியின் தேசிய உதவித் தலைவர் எம்.சம்பந்தன், சிலாங்கூர் மக்கள் வளர்ச்சிக் கழகத் தலைவர் கே.பஞ்சமூர்த்தி, மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் பெ.தர்மலிங்கம், மலேசியத் தமிழ் இளஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா, பயனீட்டாளர் சங்கத் தலைவர் டத்தோ சுலைமான் ஆகியோர் தங்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.

* இவ்விவகாரம் பற்றி விளக்கம் பெற சென்ற மலேசியநண்பன் செய்தியாளர் நக்கீரனிடம் நீதிபதி மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதோடு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. *மேலும், வழக்கறிஞர் அ.சிவநேசனும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனும் காவல்துறையில் புகார் செய்யவிருப்பதாகக் கூறினர். *முன்னாள் நீதிபதியின் வரப்புமீறிய பேச்சைக் கண்டித்தும் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கெடா, சுங்கை பட்டாணி மகா ஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர்களும் மாணவர்களும் அமைதி மறியல் நடத்தினர்.

6.9.2007:- *முன்னாள் நீதிபதியின் கருத்துக்கு ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோ சிறி ச.சாமிவேலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். கல்வி அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளாதேவி, ம.இ.கா.தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் முதலான இன்னும் பிறருடைய கண்டனங்கள் தொடர்ந்தன.

*இதற்கிடையில், முன்னாள் நீதிபதிக்கு எதிரான காவல்துறை புகாரை ஒத்திவைப்பதாகவும் தமது பேச்சு தொடர்பாக விளக்கம்தர அவருக்கு வாய்ப்பு வழங்குவதாகவும் வழக்கறிஞர் அ.சிவநேசன் குழுவினர் அறிவித்தனர்.

7.9.2007:- *இந்தச் சிக்கல் தொடர்பாக விளக்கம் அளிப்பதாக முன்னாள் நீதிபதி முன்வந்த செய்தியை நாளிதழ்கள் அறிவித்தன. அ.சிவநேசன், எம்.குலசேகரன் முதலான தமிழ் வழக்கறிஞர்கள், இயக்கப் பொறுப்பாளர்கள், இதழாளர்கள் ஆகிய தரப்பினரைச் சந்திக்க அவர் முன்வந்திருக்கும் செய்திகள் வந்தன.

8.9.2007:- *"தமிழ்ப்பள்ளிகள் தொடர்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழ்ப்பள்ளிகள் மேசமான நிலையில் இருப்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டேன்" என்று முன்னாள் நீதிபதி தம் கருத்தில் உறுதியாக இருக்கும் செய்திகள் வெளிவந்தன. தம் தாய்மொழி மலையாளம்; சமயம் கிறித்துவம் தாம் மலேசிய மலையாளிகள் சங்க நிருவாகக் குழு உறுப்பினர், தன்னுடைய பிள்ளைகளை மலையாள மொழி படிக்க கேரளாவிற்கு அனுப்பி வைத்ததாகத் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட அவர் கூட்டத்தில் கலந்துகொண்டோர் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்ததாகவும் அப்படியே சொன்ன பதில்கள் குழப்பமாக இருந்ததாகவும் நாளிதழ்கள் கூறின. *நீதிபதியின் கூற்று தமிழ் மக்களை மேலும் சினமடையச் செய்தது.

9.9.2007:- *டத்தோ.வி.ஜார்ஜ் மன்னிப்பு கேட்க மறுத்ததைத் தொடர்ந்து 8.9.2007இல் தலைநகர் பிரிக்பீல்ட்டு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்ட செய்தி வெளிவந்தது. *ஜார்ஜை கைது செய்க என்ற கோரிக்கையும் செய்தி தலைப்பாக வெளிவந்தன. *மேலும், இன்னும் 10 நாட்களில் கோலாலம்பூரில் மிகப் பெரிய கண்டனô பேரணி நடத்தப்படும் என்றும் அ.சிவநேசன் தெரிவித்தார்.

10.9.2007:- *முன்னாள் நீதிபதியின் உருவ பொம்மை தலைநகர் பிரிக்பீல்ட்டு சாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காலணியால் அடித்து பின்னர் தீயிடப்பட்ட செய்திகள் நாளிதழ்களை அலங்கரித்தன. மக்கள் செயலணித் தலைவர் கலைவாணர் தலைமையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. *காஜாங் இந்து நடவடிக்கைக் குழு காவல்துறையில் புகார் செய்தனர். *மலேசியத் தமிழ்நெறிக் கழகம், மலேசிய இந்தியர் சங்கம், பினாங்கு ஜனநாயக செயல் கட்சி, பினாங்கு ஐ.பி.எப், பினாங்கு இந்து சங்கம், பினாங்கு அறிவாலயம் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு அலைகள் கண்டன அறிக்கைகளாக வெளிவந்தன.
11.9.2007:- பேரா, பாரிட் புந்தாரில் இயங்கும் செயிண்ட்மேரி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும், பாரிட் புந்தார் தமிழ் இளைஞர் மணிமன்றத்தினரும் காவல்துறையில் புகார் செய்ததாக ம.நண்பன் செய்தி கூறியது. தமிழ்ப்பள்ளிகளின் நிலை குறித்து முடிவுசெய்ய வேண்டியவர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பல்லாயிரக்கணக்கான பெற்றோர்களே அன்றி யாரோ ஒரு பார்வையாளர் அல்ல. நாட்டின் அரசியல் சட்டத்தை அவமதித்ததற்காகவும் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் குந்தகம் விளைவித்ததற்காகவும் முன்னாள் நீதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.ஆ.சங்கத் தலைவர் முருகையா தம் அறிக்கையில் குறிப்பிட்டுளார்.

12.9.2007:- டத்தோ ஜார்ஜுக்கு எதிராக மேலும் ஒரு புகார் பினாங்கு நிபோங் திபாலில் செய்யப்பட்டது. செபராங் பிறை வட்டாரத்திலுள்ள கலிடோனியா இளைஞர் மன்றச் செயலர் கோ.அமிதலிங்கம், ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி பெ.ஆ.சங்கத் தலைவர் பெ.சுப்பிரமணியம், டிரான்ஸ் கிரியான் தோட்ட கெராக்கான் கிளையின் சார்பில் எம்.நலிங்கம், பினாங்கு மாநில இந்திய மாணவர்களின் பெற்றோர் சங்கத் தலைவர் ம.தமிழ்செல்வன் ஆகியோர் புகார் செய்தனர். தனது அறிக்கையைத் திரும்பப் பெறுவதோடு பொது மன்னிப்பும் கேட்க அவர் மறுப்பாரேயானால் அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ம.தமிழ்செல்வன் கேட்டுக்கொண்டார்.
  • ஆய்தன்: தமிழ்ப்பள்ளியின் நலன்காக்க துடித்தெழுந்த தமிழ்த் தாயின் வீரத்திரு மக்களுக்குத் எமது வீரவணக்கம்! இவர்களைப் போல் ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை; உள்ளத்தில் தமிழ்த்தாய் ஆட்சி புரியும்வரை தமிழ் நிலைக்கும்! தமிழ்ப்பள்ளிகள் நீடிக்கும்!

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007

தமிழ்ப் பழிப்பும்! தமிழர் விழிப்பும்!

18-08-2007 என்ற நாள் மலேசியத் தமிழ் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இந்த நாளில்தான் 'மலேசிய நண்பன்' நாளிதழ் தமிழ் நெடுங்கணக்கில் மாற்றம் செய்ய சில தரப்பினர் முனைகிறார்கள் என்று ஒரு அதிரடியான செய்தியை வெளியிட்டது. முந்துதமிழின் அடித்தளத்தையே ஆட்டம்காணச் செய்யும் இந்தக் கொடுஞ்செயலை அறிந்து தமிழ் உணர்வாளர்களும் உறவோர்களும்; அறிஞர்களும் அடிமட்டத் தொண்டர்களும், தமிழ்சார்ந்த அமைப்புகளும் தமிழ்ப் பற்றாளர்களும் பேரதிர்ச்சி அடைந்தனர். தமிழுக்கு எதிராக செயல்பட்டதாக அடையாளம் கூறப்பட்ட பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். நெடுங்கணக்கில் மாற்றம் என்னும் செய்தியோடு 'தமிழ் நீசமொழி' என்று யாரோ ஒருவர் பேசிவிட்டார் என்னும் உணர்ச்சிமிகு செய்தியும் சேர்ந்துகொண்டதால் தமிழ் மக்கள் பெரிதும் கொதிப்படைந்து போய்விட்டனர் என்பது உண்மை. தேசிய அளவில் இதற்குக் கண்டனக் குரல்கள் உரக்க ஒலித்தன. மலேசியத் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிதான கொந்தளிப்பை உருவாக்கிய இந்த 'வரலாற்றுச்' சிக்கல் பற்றியும் அதனைத் தொடர்ந்து எழுந்த தீப்பிழம்புக்கு ஒப்பான கண்டன முழக்கங்கள் பற்றியும் இறுதியில் ஏற்பட்ட தீர்வு பற்றியும் இங்கே எமது 'தமிழுயிர்' தொகுத்து வழங்குகிறது.

செய்தி : பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டக் குழுவில் தமிழ் மொழிக்காக நியமிக்கப்பட்டவர்கள் தமிழ்மொழியில் இதுவரை உள்ள நெடுங்கணக்கையே மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது எனத் தமிழ்ப் பற்றாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். கிரந்த எழுத்துகள் என்று ஜ, ஸ, ஷ, ஹ, ‚ ஆகிய எழுத்துகளை தனியாகச் சுட்டாமல் தமிழ் எழுத்துகளுடன் இணைத்து 252 எழுத்துகளாக அறிவித்துவிட வேண்டும். இல்லையெனில், தூயதமிழ் என்று சொல்லிக்கொள்வோரின் நீசமொழி (பாஸ்டர்ட் லாங்குவேஜ்) ஆகிவிடும் என்று பேசிய அந்தக் குழுவைச் சேர்ந்தவரை இழிமாந்தர் என்றுதானே எண்ணவேண்டியிருக்கிறது. மேலும், கிரந்த எழுத்தான 'ஜ' என்ற எழுத்திற்கு வலுவான அம்சம் இருப்பதால்தான் சிவாஜி திரைப்படம் வெற்றி பெற்றதாக அந்த அதிகாரிகள் கூறினார்களாம். தமிழ்மொழியால் வாழ்ந்துகொண்டு அந்த மொழியின் அடித்தளத்திற்கே வெடி வைக்கும் கேடான செயலைச் செய்ய சிலர் முற்பட்டுள்ளதாகத் தமிழ்ப் பற்றாளர்கள் இதனை வருணித்துள்ளனர். (மலேசிய நண்பன் செய்தி:18.8.2007)


கண்டனக் குரல்கள் : (இரா.திருமாவளவன், மலேசியத் தமிழ்நெறிக கழகத் தேசியத் தலைவர்) தமிழ் நெடுங்கணக்கை மாற்றிக் கிரந்த எழுத்துகளை இணைக்கும் திட்டமானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதும் எதிர்க்கத்தக்கதுமாகும். தூய தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் 'வேசி மொழி' (Bustard Language) என்று சொல்ல இவர்களுக்கு எப்படி மனம் துணிந்தது? தமிழைச் சூத்திர மொழி என்று ஆரிய பார்ப்பன நூல்களில் குறிப்பிட்டிருப்பதை இவர்கள் வழிமொழிகிறார்கள் என்றால் இவர்கள் எந்தப் பிறப்பினர்? தமிழுக்குச் சீரழிவை ஏற்படுத்த முனைந்தால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

(ரெ.சு.முத்தையா, மலேசியத் திராவிடக் கழகத் தேசியத் தலைவர்) தமிழனாகப் பிறந்து தமிழில் பேசிக்கொண்டு தமிழால் பிழைத்துக் கொண்டு தமிழ்மொழியை வேசிமொழி என்று கூறுகிற ஒரு மனிதனைக் கொண்டுள்ள ஓர் இனம் உலகத்திலேயே தமிழினம்தான். இது மாகேவலம். எல்லாம் உடைத்தத் தமிழில் அயல்மொழிக் கலப்பு எதற்கு? தமிழை நீசமொழி என்று நினைப்பவர்கள் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் கேடர்களைப் போன்றவர்கள்.

(மு.மணிவெள்ளையன், மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தலைவர்) வெறும் பழம் பெருமைகளை மட்டுமே பேசி வாழும் தமிழர்களிடத்தில் மொழியுணர்வு குன்றிவிட்டதே என்று இத்தனை நாளும் உள்ளம் களைப்புற்றிருந்த நமக்கு தமிழால் பிழைக்கும் தமிழனே, தமிழை 'வேசிமொழி' என்று கூறியிருப்பது நிலைகுலையும் நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

(மா.தமிழன்பன், பாவலர் மன்ற பேரா மாநிலத் தலைவர்) "மூன்றுறழ்ந்த பதிற்றெழுத்தான் முழுவதுமாய்; உனக்கினிதாய்த் தோன்றிடும் அத்தமிழ்" என்று சிவஞான முனிவரின் கருத்துபடியும் மொழிப்பேரறிஞர் தேவநேயப் பாவாணரின் 'தமிழ் வரலாறு' நூல்படியும் தமிழ் நெடுங்கணக்கு வரையறுக்கப்பட்ட ஒன்று. எனவே, ஆக்க வேலைகள் ஏதும் இருந்தால் செய்யுங்கள்; இல்லாவிடில் சோம்பியாவது திரியுங்கள்.

(சு.வை.லிங்கம், சிலாங்கூர் மாநில தமிழ் இளைஞர் மனிமன்ற முன்னாள் தலைவர்) தமிழினத்திற்கு வேலியே தமிழ்தான். தமிழில் அரியது அத்தனையும் உரியதாய் இருக்க அடுத்ததைத் தேடும் அசட்டுத்தனத்தை விட்டுவிடுங்கள். தாய்மொழியைப் பழிக்கும் கீழ்ச்செயலையும் அறவே அறுத்து விடுங்கள்.

(திருவருள், செலாமா) தமிழ் நெடுங்கணக்கை மாற்றி அமைக்கும் எண்ணம் மின்னல் கீற்று போலக்கூட துளிர்க்கக் கூடாதே! எப்படி வந்தது இந்த ஏகடியத் துணிவு? இந்த மொழியை நம் மாணவர்களிடையே வளர்க்கவும் பாதுகாக்கவும் உங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதே தவிர சிதைக்க அல்ல! திருவாசகம், திருமந்திரம் உள்ளிட்ட 12 திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சொற்கள் நல்லதமிழ் சொற்களே! அவற்றின் வழிதானே 63 நாயன்மாரும் இன்னும் பிறரும் இறைமாட்சியின் அருந்துணையை நாடியுள்ளனர். நல்லதமிழைத் தாக்கும் முகமாக 'நீசமொழி' என்று பேசியவரின் நீச குணம் இன்றோடு ஒழியட்டும்.

(டத்தோ சுலைமான், போம்கா தேசிய உதவித் தலைவர்) கல்வி அமைச்சர் இதில் தலையிட்டு தமிழ் நெடுங்கணக்கை மாற்ற விரும்பும் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களை உடனே நீக்க வேண்டும். 'செம்மொழி' தகுதியைப் பெற்றது தமிழ். அதைச் சிதைக்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் சங்கம் போராட்டத்தில் இறங்கும்.

(கரு.யோகநாதன், திருவள்ளுவர் நன்னெறி மையத் தலைவர்) தமிழுக்கு மீண்டும் இழுக்கா? தமிழரே அதற்குத் துணையா? நெஞ்சம் பதறுகிறது. நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ் சார்ந்த இயக்கங்களும் வெறுமனே கைகட்டி வாய்மூடிக் கொண்டிராமல் ஒருமித்த குரல் எழுப்புவோம்.

(க.முனுசாமி, தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம்) 'தமிழ் எங்கள் உயிர்' என்று முழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி நிதி திரட்டி பல்கலைக்கழகத்திக் தமிழதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குரல்கொடுத்து வெற்றி பெற்றார். அதனால், சமஸ்கிருதம் தவிர்க்கப்பட்டது. தற்போது பொறுப்பில் உள்ள பாடத்திட்டக் குழுவினர் 'சாஸ்திரி'யின் அதே முயற்சியில் மீண்டும் தமிழை வேரறுக்க துணிந்துள்ளனர். தமிழைத் தாயாக நினைக்கும் தமிழர்களின் இந்தப் பிரச்சினைக்குப் பொது அமைப்புகள் ஒன்றுகூடி கல்வி அமைச்சரைச் சந்தித்து விரைந்து தீர்வுகாண வேண்டும்.

(சி.சங்கர், பினாங்கு அறிவாலயத் தலைவர்) "மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியச் சிந்தனைக்கேற்பத் தமிழ் மரபைக் காக்க வேண்டும். தமிழ் யாருடைய தனிப்பட்ட சொத்தல்ல. தமிழரின் சொத்து. மொழி அறிஞர்களிடமும் துறைசார்ந்த வல்லாண்மை பெற்றவர்களிடமும் ஆலோசனை பெற்ற பிறகே மொழி தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். அதிகார பலத்தால் தனிப்பட்ட ஒரு சிலர் எடுக்கும் முடிவால் ஏற்படும் தமிழ்ச்சிதைவை இனியும் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இதற்குப் பொறுப்பானவர்கள் விளக்கம் தரவேண்டும். இல்லையேல், கல்வி அமைச்சுக்கு முறையீட்டுக் கடிதம் அனுப்புவதோடு அமைதி மறியலும் நடத்தப்படும்.

தீர்வு : மலேசியத் தமிழுலகத்தைக் கிளர்ந்தெழச் செய்த இந்த உணர்ச்சிமிகு செய்தி கல்வி அமைச்சின் நாடளுமன்ற செயலாளர் மாண்புமிகு கோமளா கிருஷ்ணமூர்த்தியின் விளக்கத்தால் ஒரு நிறைவு பெற்றது. தமிழ் நெடுங்கணக்கில் நிலைத்திருக்கும் உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்துக்களான 247உடன் வடமொழி எழுத்துகளைச் சேர்க்கும் திட்டம் ஏதும் கல்வி அமைச்சுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார். (தமிழ் நேசன் நாளிதழ் 22.8.2007)

  • ஆய்தன் : தமிழைத் தாயாக – தெய்வமாக - உயிராக – வாழ்வாக – மதிப்பவர் உணர்வோடு விளையாடுவது பெரும் பிழை! பிறவிப் பாவம்!

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2007

திருக்குறள் பள்ளிப் பாடமாகட்டும்!


உலகம் போற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளைத் தொடக்கப் பள்ளிகளில் தனிப்பாடமாகப் பயிற்றுவிக்க வகை செய்யும்படி கல்வியமைச்சுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தேசியத் தலைவர் மு.மணிவெள்ளையன் தெரிவித்துள்ளார். புனித நூலான திருக்குர்ஆன், பைபிள் நூல்களின் வரிசையில் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திருக்குறளும் திகழ்கிறது. திருவள்ளுவர் இதனைத் தமிழில் இயற்றி இருந்தாலும் இதிலுள்ள 1330 அருங்குறட்பாக்களுள் எந்த இடத்திலும் தமிழ், தமிழர் என்னும் சொற்களைப் பயன்படுத்தாமல் 'மாந்தர்' போன்ற மாந்த இனத்தைப் பொதுவாகச் சுட்டும் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றார். எனவேதான், இனம் கடந்து; சமயம் கடந்து; நாடு கடந்து உயர்ந்த கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள் என்று ஆன்றோரும் சான்றோரும் அழுத்தம் திருத்தமாக உரைத்து வருகின்றனர்.

ஆகவே, தமிழர்களையும் தமிழைப் படித்துவரும் இந்தியர்களையும் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்வியல் நூலாகவும் நன்னெறி நூலாகவும் விளங்கும் திருக்குறள், தொடக்கப்பள்ளிகளில் பாடநூலாக அமைந்தால், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
(நன்றி: மலேசிய நண்பன் நாளிதழ் 6 ஆகத்து 2007 தலையங்கம் சில மாற்றங்களுடன்)

  • ஆய்தன் : ஐயா மு.மணிவெள்ளையனார் செயற்கரிய இப்பணியினைச் செய்துமுடிக்க எல்லாம்வல்ல இறைமை அருள்செய்ய வேண்டுகிறேன்.

தமிழை மதிக்காத தமிழர்


தமிழுக்கு முன்னுரிமை தராத தமிழர் உணவகங்களைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ கோ.இராஜு வலியுறுத்தினார். நமது நாடு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் மேம்பாடு கண்டு வருகின்றது. அதுபோலவே நம்மின மக்களும் வணிகத் துறை உள்பட பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு முன்னேறும் தமிழ் வணிகர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே தங்களின் தாய்மொழி வளர்ச்சிக்கும் துணைநிற்க வேண்டும். ஆனால், நமது வணிகர்களே தங்கள் வணிக நிறுவன பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை வழங்குவது கிடையாது. முழுக்க முழுக்க தமிழர்களையே நம்பி தமிழர்களளே நடத்தும் உணவகங்கள், மளிகைக் கடைகள், துணிக்கடைகள், பூசை பொருள் கடைகள் முதலான நிறுவனங்கள்கூட தமிழைப் புறக்கணிப்பு செய்கின்றன. அத்தகைய நிறுவனங்களைத் தமிழர்கள் புறக்கணிப்பதில் தவறேதும் இல்லை. தமிழன் வீட்டுப் பணம் மட்டும் வேண்டும், ஆனால் தமிழ் வேண்டாம் என எண்ணமுடைய தமிழ் வணிகர்களால் தமிழுக்கு இழுக்கு ஏற்படுவது வருத்தமளிக்கிறது. இதே நாட்டில் வாழும் சீனர்கள் எத்துணைப் பெரிய வணிகம் செய்தாலும் எத்தனை கோடி பொருள் ஈட்டினாலும் தங்களின் தாய் மொழியை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுப்பதில்லை. தங்கள் நிறுவனங்களில் சீனமொழிக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறுவதில்லை. இப்படிப்பட்ட சீன குமுகாயத்தோடு ஒட்டி வாழும் நம்மவர்களுக்கு மட்டும் ஏன் மொழியுணர்வு இருப்பதில்லை. சீனர்களைப் பார்த்தாவது மொழிச்சுரணை வரவேண்டுமல்லவா? (நன்றி : மக்கள் ஓசை செய்தி 6 ஆகத்து 2007)

  • ஆய்தன் : தமிழைப் புறக்கணிக்கும் வணிக நிறுவனங்களைப் புறக்கணிப்புச் செய்யும் போராட்டத்தை முன்னெடுக்கப் பொது அமைப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ் மணக்கும் பினாங்கு


பினாங்கு மாநிலத்தில் 'மக்கள் மடல்' என்ற ஒரு செய்தியிதழ் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த இதழ் பினாங்கு மாநில அரசினால் வெளியிடப்பெறுகிறது. முற்றும் முழுவதுமாக தமிழில் இந்த இதழ் வெளிவருகிறது. இந்த நாட்டில் ஒரு மாநில அரசு இத்தகையதோர் இதழை வெளியிட்டு வருவது; அதுவும் தமிழில் வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியதும்; வியப்புக்குரியதுமாகும். தமிழுக்கும் எமது தமிழ் மக்களுக்கும் பினாங்கு அரசு வழங்கியிருக்கும் மிக உயர்வான மரியாதையாக இதனைப் போற்ற வேண்டும். பினாங்கு மாநில நடப்புகளையும் மக்களுக்குப் பயன்மிக்க செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி தரமான தாள்களில் அச்சிடப்பட்டு எட்டு கண்கவர் வண்ணப்பக்கங்களோடு இந்த 'மக்கள் மடல்' இதழ் வெளிவருவது, பினாங்கு வாழ் தமிழர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களுக்கே பெருமைக்குரிய செய்தியாகும். மற்றைய மொழிகளுக்குத் தரப்படும் அதே மரியாதையையும் உரிமையையும் நடுவுநிலைமையோடு தமிழுக்கும் வழங்கியிருக்கும் பினாங்கு மாநில முதல்வர் தான்ஸ்ரீ கோ சூ கூன் அவர்களுக்கும் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருக்கும் மாண்புமிகு பி.கே.சுப்பையா அவர்களுக்கும் தமிழ் மக்கள் சார்பில் 'தமிழுயிர்' வணங்கி நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

  • ஆய்தன் : மற்ற மாநில ஆட்சிக்குழு செவிகளில் நம்மின மாண்புமிகுகள் இதைப்பற்றி சங்கு ஊதலாமே!

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2007

தமிழை மறந்த தமிழ் வாத்தி!


தமிழ் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய பெண் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் பற்றிய செய்தி ஒன்று எமக்கு மின்னஞ்சல் வழி வந்திருந்தது. அந்தத் தமிழ் வாத்தி தம் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? 'ரோமனேஸ்வர்யா' என்பதுதான். இந்தப் பெயர் எந்த மொழி என்று அந்தத் தமிழ் வாத்தியும் அவர் மனைவியாகிய தமிழ் வாத்திச்சியும் அறியாமலா போனார்கள்? இவர்களின் ஆங்கில மோகம் அவமானத்திற்குரியது அல்லவா? இவர்களின் அன்னிய மொழி அடிமைப் புத்தி நகைப்புக்குரியது அல்லவா? தாய்மொழி மீது உயர்வெண்ணம் இல்லாத இவர்களின் தன்மானம் கேள்விக்குரியது அல்லவா? தமிழ் போட்ட பிச்சையில் இடைநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிபுரியும்(கூலிக்கு மாறடிக்கும்) இந்த இரண்டு தமிழ் வாத்தி இணையரின் மொழிப்பற்றை என்னவென்று சொல்லுவது? தன்னுடைய அரத்தத்திற்கு(இரத்தம்) பிறந்த குழந்தைக்குக்கூட நல்ல தமிழ்ப்பெயரை வைக்கத் தெரியாத அல்லது துணிவில்லாத இந்தத் தமிழ் வாத்திகள், அவர்களிடம் படிக்கும் எமது தமிழ் மாணவர்களுக்கு தமிழைக் கற்பிப்பது எங்ஙணம்? அல்லது அவர்கள் கற்பிப்பது தமிழாகத்தான் இருக்குமா? கொஞ்சம்கூட தாய்மொழி உணர்வோ பற்றோ இல்லாத இவர்களைப் போன்ற தமிழ் வாத்திகள் நிறையவே உள்ளார்கள் நம் நாட்டில். தாய் மொழிக்கான 'தார்மீக' பொறுப்பிலிருந்து தவறியிருக்கும் இவர்களைப் போன்றோர் தமிழால் பிழைப்பு நடத்துவது வெட்கக்கேடானது! தமிழ் வேண்டாம்; ஆனால் தமிழால் ஆயிரக்கணக்கில் வரும் ஊதியப்பணம் மட்டும் வேண்டுமா இவர்களுக்கு? இப்படி ஒரு கேவலமான பிழைப்பு தேவையா?

சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் ஆசிரியர்களே இப்படி பாமர மக்களைப் போல அறியாமையையும் ஆற்றாமையையும் கொண்டிருப்பது அவலத்திற்குரிய செய்தியாகும். மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி மொழிநலக் குருடர்களாக இருப்பது வேதனைக்குரியதாகும். போலியான நாகரிகத்தை நம்பி, படித்த பட்டப் படிப்பையும் அறிவையும் தன்மானத்தையும் விற்றுவிட்ட இதுபோன்ற தமிழ் வாத்திகள் எமது குமுகாயத்திற்குத் தேவையில்லை.

மேலே குறிப்பிட்ட தமிழ் வாத்திகளின் குருட்டுப் புத்திக்கும் அறிவுகெட்ட தனத்திற்கும் இன்னொரு எடுத்துக்காட்டும் உண்டு. அந்தக் குழந்தையின் பெயரைத் திரைச்சீலையில் பெரிதாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்களாம் இப்படி! ROOMANESHHWARRYA. இதனை எப்படித்தான் சரியாக படிப்பதோ தெரியவில்லை. குழந்தையின் பெயரில் கணியமும்(ஜாதகம்) எண்கணிதமும் புகுந்து விளையாடியிருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. படித்த தமிழன் புத்தி ஆரிய-ஆங்கில மலக்குழியில் சிக்கிச் சின்னபின்னமாகி போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.



  • ஆய்தன் : நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

சனி, 4 ஆகஸ்ட், 2007

தமிழின் அடையாளம் தமிழ்ப்பள்ளி

இந்நாட்டின் தமிழ்ப்பள்ளிகள் தமிழ்மொழியின்; தமிழினத்தின் அடையாளமாகத் திகழ்ந்து வருகின்றன. இனத்தின் அடையாளத்தை; தாய்மொழி உரிமையைக் காக்க வேண்டி தமிழ்ப்பள்ளிக்குத் தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகின்றது. ஆனால், சில தமிழ்ப்பள்ளிகளின் தலைவாசல்களை அலங்கரிக்கும் பெயர்ப்பலகைகளில் தமிழ்மொழி இடம்பெறவில்லை என்ற செய்தியைக் கேட்கும்போது வளர்ச்சிக்குள் ஒரு வீழ்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோமோ என்ற அச்சமும் இதயத்தின் ஓரத்தில் வந்து ஒட்டிக்கொள்கிறது.

தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியில் பெயர்ப்பலகை இல்லை என்பது சிலருக்கு வேண்டுமானால் இயல்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், நாம் கடந்துவந்த பாதைகளை அலசிப்பார்த்தால், சிறு துளிதானே என்று எண்ணி சிந்திக்காமல் விட்டுவிட்ட குறைபாடுகள் எல்லாம் பின்னாளில் நமது அடையாளத்தை இழந்து நிற்பதற்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பது வரலாற்று உண்மைகள்.

ஒருவேளை, தமிழ்மொழியில் பெயர்ப்பலகை அணியம் செய்வது (தயாரிப்பது) பணவிரயம் என்று நினைக்கும் தரப்பினர் இருப்பார்களேயானால், அவர்கள் இழப்பது பணத்தை அல்ல! எதிர்கால தமிழ்மொழியின் உரிமையையும்தான்! நமது கட்டுப்பட்டுக்குள் இருக்கும் இந்த உரிமைக்கு உயிர் கொடுப்பதில் அலட்சியம் காட்டுவது நம் கண்களை நாமே குத்திக்கொள்வதற்கு ஒப்பாகும். மூலம்: மக்கள் ஓசை (26 சூலை 2007)
  • ஆய்தன் : தன்னைக் காக்கும் தமிழை, தான் காக்க மறந்தானை தூவென்று துப்புதல் தகும்!

புதன், 25 ஜூலை, 2007

தமிழ் அழிவாரியம்

நம் நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சியையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்ச்சியையும் இலக்கெனக் கொண்டு செயல்படும் தமிழ் அறவாரியம் வெளியிடும் 'திசைகள்' செய்தி இதழைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அவர்களின் பணிகள் அருமை; நாட்டுக்கு மிகத் தேவை. அதற்காக அவர்களைப் போற்றுகிறேன். ஆனால், தமிழ் அறவாரியம் வெளியிடும் அந்த இதழில் தமிழைக் காணாமல் திடுக்கிட்டேன். அவ்விதழின் 95 விழுக்காடு பக்கங்கள் ஆங்கிலத்தில் அச்சாகி இருந்தது. ஒப்புக்குச் சப்பாணியாக தமிழுக்கு 5 விழுக்காடு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். இது என்ன தமிழ் அறவாரியமா? இல்லை, தமிழ் அழிவாரியமா? தமிழ்ப்பள்ளிக்காக குரல் கொடுப்பார்கள்; தமிழ்க்கல்விக்காக துணைநிற்பார்கள்; தமிழ்மொழியை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் அறவாரியம் தமிழுக்குக் குழி பறிப்பார்கள் என நானும் எமது மக்களும் நினைக்கவே இல்லை. தமிழ் அறவாரியம் தமிழை மறந்த வாரியமாக மாறி தமிழ் உணர்வாளர்களின் தூற்றலுக்கும் சாபத்திற்கும் தயவுகூர்ந்து ஆளாகிவிட வேண்டாம்.

இத்தனைக்கும் அதன் நிருவாக உறுப்பினர்களில் பெரும்பெரும் தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமிழ்ப் போராளிகளும் இருந்தும்கூட இப்படியொரு கேடு நிகழ்ந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக உள்ளது. தமிழ் அறவாரியம் தமது பெயருக்கு ஏற்றாற்போல் எமது இன்னுயிர்த் தமிழை முன்னெடுக்க வேண்டாமா? தமிழ் உணர்வையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா? 'டோங் ஜியாவ் ஜோங்' போன்ற சீன கல்வியாளர்கள் அமைப்புடன் கூட்டு சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் தமிழ் அறவாரியம் சீனர்களைப் போல் மொழி உணர்வைப் பெறாமல் போனது ஏன்? தன் ஆட்சிக்கு உட்பட்ட சொந்த இதழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காத தமிழ் அறவாரியம் இந்த நாட்டில் தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்கும் என்பது நம்பத்தகுந்ததா? மொழி உணர்வில் சீனர்களைப் போல் அல்லாமல் மழுங்காண்டிகளாக ஆகிவிட்ட தமிழ் அறவாரிய நிருவாக உறுப்பினர்கள் மனம் மாறுவார்களா?
  • ஆய்தன் : அடுத்த 'திசைகள்' இதழில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தால் தமிழ் அறவாரியம்! இல்லையேல் தமிழ் அழிவாரியம்!!

திங்கள், 16 ஜூலை, 2007

ராகா.. ஆகா! சிறந்த உளறல்!

அண்மையில் தி.எச்.ஆர்.ராகா வானொலி அறிவிப்பாளர் மேதாவி உதயாவும் உளறுவாயி ஆனந்தாவும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அதாவது, வானொலியில் பழந்தமிழில் பேசினால் மக்களுக்குப் புரியாது என்பதே அது. இதைப் போய் பெரிய கண்டிபிடிப்பு செய்து சொன்ன அந்த இரண்டு பேருக்கும் எமது நன்றி. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன். இவர்களை யாரய்யா பழந்தமிழில் பேசச் சொல்லி கேட்டார்கள். நல்லதமிழில் பேசினாலே போதாதா? இப்போது இவர்கள் பேசுவதைக் கொஞ்சம் திருத்திக்கொண்டாலே போதும். ஆங்கிலமும் மலாயும் சமயத்தில் சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம் இப்படி பல மொழிகளையும் கலந்து கலந்து பேசி சொதப்பாமல் சற்று தூய்மையாகப் பேசினாலே போதும். அதைத்தானே கேட்கிறோம். ஆங்கிலத்தை வைத்து பிழைப்பவன் நன்றாக ஆங்கிலம் பேசுகிறான். மலாயை வைத்து பிழைப்பவன் நன்றாக மலாய் பேசுகிறான். தமிழை வைத்து பிழைப்பவன் மட்டும் ஏன்தான் தமிழைக் கொன்று தொலைக்கிறான். வானொலி தொலைக்காட்சியில் நல்லதமிழில் பேசி நேயர்களைக் கவரமுடியாது என்பதை நல்லபுத்திக்காரார்கள் எவரும் நம்பமாட்டார்கள். நம்நாட்டில் தமிழ்மக்கள் மனங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கும் சி.பாண்டித்துரை, இராசேசுவரி இராசமாணிக்கம், மு.சங்கர் போன்ற அறிவிப்பாளர்கள் பலரை தமிழ்மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால், உதயா ஆனந்தா போன்ற சில கத்துகுட்டிகள் மொட்டை வாலை தூக்கி ஆட்ட முயற்சி செய்ய வேண்டாம். தமிழைப் பற்றி கருத்து சொல்ல வயதும் அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழைப் பற்றி நினைத்தவனெல்லாம் நினைத்தைச் சொல்லலாமா? தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பா? ஐயா உதயா – நைனா ஆனந்தா நல்ல முறையில் நயமாகச் சொல்லும்போது கேட்டுக்கொள்ளுங்கள்! தமிழன் சூடானவன். கொதித்து எழுந்தால் தாங்கமாட்டீர்கள். இனியாவது உங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!
  • ஆய்தன் : இவர்கள் சின்ன குழந்தையா இருக்கும்போது நாக்கில் 'என்னத்த' தடவி தொலைச்சாங்களோ!

ஞாயிறு, 15 ஜூலை, 2007

மின்னலுக்கு இரண்டு நாக்கு

மலேசிய வானொலி மின்னல் (எஃப்.எம்) பண்பலை சில காலங்களுக்கு முன் 'சுழியம்' என்ற நல்லதமிழ்ச் சொல்லைப் பெரும் பாடுபட்டு வேரறுத்ததை எமது தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார். தமிழன்னையின் அருள்பெற்ற இளம் அறிவிப்பாளர் பெருமக்கள் சிலர் முன்னின்று அறிமுகப்படுத்திய 'சுழியம்' என்ற சொல்லைப்பார்த்து மிரண்டுபோன மின்னலின் தலைமை பொறுப்பாளர்கள் சிலர் பெரிதும் முயன்று முயன்று அச்சொல் வானலையில் ஒளிபரப்பாவதை தடுத்து நிறுத்தினர். துடிப்புமிக்க இளம் அறிவிப்பாளர்கள் அதற்காக தண்டிக்கப்பட்டனர். இத்தனையும் நடந்த சுவடுகள் இன்னமுன் அழியாத நிலையில், இப்போது மின்னல் பஸ் என்று சொல்லாமல் 'பேருந்து' என்கிறது; லைசன்ஸ் என்று உளறாமல் 'உரிமம்' என்கிறது; 'குறுந்தகவல்' என்று கூறாமல் 'குறுஞ்செய்தி' என்கிறது; பேட்டி என்று புலம்பாமல் 'நேர்க்காணல்' என்கிறது. இதுவெல்லாம் 'சுழியம்' போன்ற நல்லதமிழ் சொற்கள் என்பது மின்னலுக்கு தெரியுமா? தெரியாதா? சுழியத்தை அழித்த சூழ்ச்சிக்காரர்கள் மேலே சொன்ன சொற்களுக்கு இசைவு அளித்தது எப்படி? மின்னல் ஒருபக்கம் தமிழை அழிக்கிறது; மறுபக்கம் வளர்க்கிறது. இவர்களால் எப்படி முடிகிறது இது? இன்னொன்றும் சொல்லலாம். மூளை கெட்ட மின்னல் உயர் அதிகாரிகளே உங்கள் வானொலியில் உலாவரும் 80 விழுக்காட்டு சொற்கள் நல்லதமிழே! ஒரே ஒரு சுழியத்தை அழிக்க வரிந்துகட்டிக்கொண்டு வீம்பு செய்த இராச சேகரன்களும் சாந்தாக்களும் எங்கே போனார்கள்? நீங்களே தெரிந்தோ தெரியாமலோ நல்லதமிழ்ச் சொற்களை உலறிவிட்டால் அது சரி! மற்றவர்கள் எடுத்துச்சொன்னால் அது (தமிழ்)வெறியா? இனியாவது திருந்துங்கள்! இறைவன் நல்லபுத்தி தருவானாக!
  • ஆய்தன் : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?

சனி, 14 ஜூலை, 2007

அசுட்டுரோ குட்டையைக் குழப்புகிறது!

கடந்த 24.06.2007ஆம் நாளன்று அசுட்டுரோ வானவில்லில் ஒளிபரப்பாகிய 360 நிகழ்ச்சியைக் கண்டேன்.

தீமிதி பற்றிய அன்றைய கண்ணோட்டத்தில் பல்வேறு கோணத்தில் அலசி ஆராயப் பட்டிருந்தது மிகவும் சிறப்பாகவே இருந்தது. தீமிதி பற்றிய ஆன்மிகப் பார்வையும் அறிவியல் பார்வையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ப்பட்டது.

தீமிதியின் அறிவியல் கோணத்தை விளக்கிய கல்விமான் அவர்கள் அறிவியலை பேசுவதாக நினைத்துக்கொண்டு, எந்தவித அடிப்படை கோட்பாட்டு மேற்கோள்கள் இல்லாமலும்; அறிவியல் வழிபட்ட ஆய்வுண்மைகளைச் சாராமலும் பேசிய கருத்துகள் மக்களைக் குழப்புவதாக இருந்தன. அந்தக் கல்விமான் அவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக தயவுகூர்ந்து நினைத்திடக் கூடாது. பேராசிரியர் அவர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்தவராக இருப்பினும், இந்தத் துறைபோகிய அறிவும் ஆற்றலும் கொண்டவராகத் தெரியவில்லை. அன்னாருடைய பேச்சே இதனைத் தெளிவுபடக் காட்டிவிட்டது.

அவர் கூறிய கருத்துகளை மிக கீழ்நிலை நூலறிவு கொண்டோரும் கூட கூறிவிடலாம். மிக ஆழமான கருத்துகளையோ சிந்திக்க வைக்கும் அறிவியல் வழிபட்ட சான்றுகளையோ அல்லது யாருமே அறிந்திடாத புதிய கருத்த்களையோ அவர் முன்வைத்ததாகத் தெரியவில்லை. மேலும், தீமிதியை இன்றைய அறிவியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டிப் பேசியவை அறிவுக்கு ஏற்றதாக இல்லை! ஆய்வின் வழிபட்டதாகவும் இல்லை! தீமிதியை நியாயப்படுத்துவதற்காகக் கட்டிய சப்பைக் கட்டாகவே அவருடைய பேச்சுகள் அமைந்தன.

சமயத்தை விட தனிமனித நம்பிக்கையும் மனத்திடமும் உயர்ந்தவை என்பது போன்ற கருத்தையே அப்பேராசிரியர் முன்வைத்தார். இக்கருத்தானது சமயத்தைப் புறந்தள்ளுவதாக இருந்தது. சுருங்கச் சொல்லப்போனால், இறைமறுப்புக் கொள்கை சார்ந்த கருத்தை சமய சாயம் பூசி வழங்கியுள்ளார். இதுபோன்ற பொய்ப் பரப்புரைகள் காலங்காலமாக நம் சமயத்தை இருட்டடிப்புச் செய்ததும் மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தியதும்தான் மிச்சம். எனவே, சமயப் பூச்சுப் பூசிக்கொள்ளும் ஆன்மிகக் கருத்துகளைத் தவிர்த்து உண்மையான மெய்யியல் கருத்துகளை மக்களுக்குச் சொன்னால் நலமானது என்பதை மதிப்புமிகு பேராசிரியர் அவர்களையும் அசுட்டுரோவையும் வேண்டுகிறேன்.

அடுத்து, இதே நிகழ்ச்சியில் தீமிதியைப் பற்றிய ஆன்மிக நோக்கை எடுத்துப் பேசிய ஐயா ந.தர்மலிங்கனார் அவர்களின் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கனவாக இருந்தன. நமது சமய கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தெளிவான, அறிவான, ஆய்வின் வழிபட்ட கருத்துகளை ஐயா அவர்கள் முன்வைத்தார். நமது சமயப் பெருமக்கள், அருளாளர்கள், அடியார்கள் யாவருமே சொல்லாததை சமய நூல்கள் சொல்லாததை மக்கள் கடைப்பிடித்து வருவதை மிக நேர்மையாக எடுத்துரைத்த அன்னவரின் மனத்துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தீமிதி பற்றிய மக்களின் நம்பிக்கையை வெறுமனே சாடாமல், சிறுமைப்படுத்தாமல் ஆனால் ஆன்றோர்களின் கருத்துகளைத் துணைகொண்டு சான்றுகளோடு அதனை மறுத்துப்பேசி தெளிவைக் கொடுத்த ஐயா அவர்களின் கருத்துகள் வரவேற்கத்தக்கன. நமது சமயத்தின் உண்மை நிலைகளை எடுத்துக்காட்டும் இவர் போன்றவர்களை மேலும் ஊக்கப்படுத்தி அசுட்டுரோ நிகழ்ச்சிகளைப் படைக்க முன்வர வேண்டும். செய்வீர்களா?

தவிர, நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மக்களை மீண்டும் மூடநம்பிக்கைச் சாக்கடையில் தள்ளிவிடுகின்ற வகையில் முடிவினைக் கூறி நிகழ்ச்சிக் கெடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இறைவனின் பெயரில் நம்பிக்கையோடு எதனைச் செய்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தனை அடியோடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இறைமையின் உயரிய நிலையை கேவலப்படுத்தும் செயல்களையும், கிரியைகளையும், பூசனைகளையும், வழிபாடுகளையும் இறைவனின் பெயரில் முழு நம்பிக்கையோடு செய்வது ஏற்கக்கூடிய ஒன்றல்ல. இதுபோன்ற கொள்கைகளால் இன்னும் அதிக அளவுக்கு மக்கள் மூட பழக்கங்களுக்கே இட்டுச் செல்லப்படுவர் என்பதை உணர வேண்டும்.



நிகழ்ச்சியின் முடிவில் எப்போதும் மக்களுக்கு உண்மை வழியைக் காட்ட வேண்டும்; சரியான தெளிவைத் துணிவோடு சொல்லவேண்டும்; நியாயமான தீர்ப்பை எவருக்காகவும் எதற்காகவும் அஞ்சாமல் வழங்கவேண்டும்; நேர்மையான கருத்தை தக்கச் சான்றுகளோடும் அடிப்படை களோடும் முன்வைக்கவேண்டும்.
  • ஆய்தன் : ஒன்றே சொல்லனும்! அதை நன்றே சொல்லனும்! அதையும் நல்லதுக்கே சொல்லனும்!

புதன், 11 ஜூலை, 2007

தமிழே உயிரே வணக்கம்! வருக.. வருக.!

"உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்." இது பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவாய்மொழி.

இதன் அடிப்படையில், மலேசியாவில் அரசு அணைப்படி அனைத்து உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்வதற்குத் தமிழர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அவற்றுள் ஒன்றுதான் தாய்மொழி உரிமை. மலேசியத் தமிழர்கள் தங்களின் தாய்மொழியாகிய தமிழைப் போற்றிக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளது.

எனவே, இந்த அருமை வாய்ப்பைக் கையகப்படுத்தி, உயிரான தமிழை உயர்த்திப் பிடிக்க தமிழர்கள் முனைய வேண்டும். தமிழை உயிர்போல் மதித்துப் போற்ற வேண்டும். தமிழும் உயிரும் வேறல்ல; தமிழே உயிர் என்ற உணர்வு தமிழர்க்கு வேண்டும்.

ஆனால், இங்கே தமிழுக்கு அவ்வப்போது சில கேடுகளும் சிதைவுகளும் அழிவுகளும் ஏற்பட்டு வருகின்றது.

இதனை முன்னின்று செய்பவர்கள் தமிழால் பிழைக்கும் எமது தமிழ் உடன்பிறப்புகளே என்று எண்ணும்போது எமது இதயம் வலிக்கிறது.

இந்தத் தமிழ் அழிப்பு முயற்சிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி, காலங்காலமாக எமது தமிழ்மறவர்கள் வெற்றிபெற்று வந்துள்ளது மறுக்கவியலாத வரலாறாகும்.

அந்த வகையில், அண்மையக் காலத்தில் தமிழுக்கு எதிராக புதிய முறையில் புதிய கோணத்தில் அழிப்பு முயற்சிகள் நாட்டில் அவ்வப்போது தலைதூக்குகின்றன.

பல்துறை சார்ந்த தமிழ் உடன்பிறப்புகள் தமிழைப் பேணிக்காக்கும் பணியிலிருந்து இடறி, தமிழை எள்ளி நகையாடவும், கிள்ளி விளையாடவும், அள்ளி அழித்துப்போடவும் துணிந்துவிட்டனர் போலும்.

இந்த மாபாவச் செயலைத் தடுத்துநிறுத்தும் முயற்சியாக;
தமிழைப் பேணிக்காக்கும் பெருமக்களுக்கு உதவும் முயற்சியாக;
தமிழைப் பழிப்போரின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியாக;
எல்லாத் துறையிலும் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியாக;
அடுத்த தலைமுறைக்கு நல்லதமிழை கொடுத்துச் செல்லும் முயற்சியாக

இந்தத் 'தமிழுயிர்' வலையகம் தம் தமிழ்ப்பணியை முன்னெடுக்கும்.
இதற்கு எமது தமிழ் மக்கள் ஆசியும் ஆதரவும் வழங்கவேண்டும்.

உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பித் தமிழுக்கு உரம் சேருங்கள்.
எங்கேயும் எப்போதும் தமிழின் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்!

எம் தமிழர் ஒன்றாதல் கண்டு – எமது பகைவர் எங்கோ மறையட்டும்!

  • ஆய்தன் : தமிழே உயிரே வணக்கம்!
  • தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
  • தமிழே உயிரே உன்நலன்; காப்பது ஒன்றே என்கடன்