மலேசியாவில் தனித்தமிழ் நாள்காட்டி
தவத்திரு மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ்க் கொள்கை தமிழ்க்கூறு நல்லுலகில் வெற்றிகண்டுள்ளது என்பதற்குப் பறபல புறச்சான்றுகளை முன்வைக்கலாம். அவற்றுள் மிகப் புதியதொரு சான்றாகவும் சாதனையாகவும் அண்மைய வரலாற்று நிகழ்வென்றைக் கூறலாம். தனித்தமிழில் நாள்காட்டி வெளிவந்துள்ளது என்பதே அஃது. தனித்தமிழில் சொல்லமுடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்த நாள்காட்டி நற்சான்று. தனித்தமிழை வென்றெடுக்கும் முயற்சியில் இந்த நாள்காட்டி ஒரு மைல்கல். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனித்தமிழை மேலும் ஒருபடி உயர்த்தி இருக்கின்ற இந்த நாள்காட்டி மலேசியத்தில் வெளிவந்திருப்பது மாபெரும் வெற்றியும் சாதனையுமாகும்.
இந்த நாள்காட்டியைப் பத்தோடு பதினொன்றாக நினைத்துவிடக் கூடாது. நாளை மட்டும் காட்டுவதுதான் நாள்காட்டி. ஆனால், இஃது நாளை காட்டி; தமிழ் எண்ணைக் காட்டி; தமிழ் கணியத்தைக்(சோதிடம்) காட்டி; தமிழர் கண்ட வானியல் கலையைக் காட்டி; தமிழர் கண்ட கணக்கியல் மரபைக் காட்டி நம்மை வியக்க வைக்கிறது! விரும்ப வைக்கிறது!
உண்மையில் தமிழ்க்கூறு நல்லுலகில் வேறு எங்குமே நிகழ்ந்திடாத மிக அரிய; மாபெரிய முயற்சியாக - மீட்டெடுப்பாக - ஆக்கமாக இந்த நாள்காட்டி திகழ்கிறது. உலகின் பார்வைக்கும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமாக இந்த நாள்காட்டியில் பல உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. உலகம் தமிழைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையை இந்த நாள்காட்டி ஏற்படுத்தி உள்ளது.
இப்படியொரு செய்தற்கரிய சாதனையை மிக அமைதியாகச் செய்து முடித்திருக்கும் தமிழியல் ஆய்வுக் களம் என்ற அமைப்பையும் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்திருக்கும் இர.திருச்செல்வம் என்பாரையும் தமிழுலகம் கைகூப்பித் தொழவேண்டும்; உள்ளத்துள் வைத்து போற்றவேண்டும். (மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்)
- ஆய்தன் : தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்! தனித்தமிழ் வெல்லும்!
6 கருத்துகள்:
வணக்கம். தமிழ்நலம் சூழ்க!
தனித்தமிழ் நாள்காட்டி ஒன்று நம் மலேசியாவில் வெளிவந்திருப்பது வியப்பிற்குரிய செய்தியாகும். தமிழ்நாட்டைக் கடந்து அயல்நாடு ஒன்றில் அதுவும் நம் மலேசியத் திருநாட்டில் தனித்தமிழை முன்னெடுக்கும் முயற்சி நடைபெற்றிருப்பது பெருமையும் உவகையும் கொள்ளச் செய்கிறது. இப்படியான தனிதமிழ்ப்பணிகள் நம் நாட்டில் நடப்பதை நம் நாட்டுத் தகவல் ஊடகங்கள் பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் இந்த நாள்காட்டிக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.
இதனை வெளியிட்டிருக்கும் தமிழியல் ஆய்வுக் களத்திற்கும் அதன் பொறுப்பாளர்களுக்கும் சிறப்பானதொரு பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்,
தமிழ் அன்பன் அறிவழகன்
தலைநகர்
வணக்கம் சகோதரரே, தனித்தமிழில் நீங்கள் படைக்கும் கட்டுரைகள் என்னைக் கவர்ந்துள்ளன.. மென்மேலும் தனித்தமிழின் ஆட்சியில் உங்கள் சிந்தனை எனும் செங்கோல் ஆட்சிப் புரிய என் வாழ்த்துக்கள்.. தொடர்ந்து பல கட்டுரைகளை வெளியிடுங்கள், படித்துக் கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கின்றேன்.
வருங்காலங்களில், மலேசியத் தமிழ் வலைபதிவளர்களின் சந்திப்புக் கூட்டம் ஒன்று நடந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.. நமக்குள் பல சிந்தனைப் பறிமாற்றங்களைச் செய்துக் கொண்டு இணையத்தில் தமிழ் மொழி சிறந்த இடத்தினைப் பெறுவதற்கு நாம் துணியலாம் அல்லவா...?
கண்டிப்பாக உங்கள் கனவும் இதுவாக இருக்கலாம், கூடிய விரைவில் மலேசிய தமிழ் வலைபதிவளர்களை ஒன்று திரட்டுவோம்..
இந்தப் பரிந்துரைத் தொடர்பாக உங்கள் கருத்துக்கள் மிக அவசியம்...
வாழ்க தமிழ் !
சதீஷ் குமார் கிருஷ்ணன்
ஈப்போ
வணக்கம். தனித்தமிழ் நாள்காட்டி 2008 தொடர்பில் என் வலைப்பதிவு செய்திக்கு பாராட்டுரை வழங்கியதோடு தமிழுயிரில் அதற்கு இணைப்பும் கொடுத்து தமிழ் மக்களிடையே பரப்பும் பணியைச் செய்துள்ள தங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். தமிழை முன்னெடுத்துச் செல்லுகின்ற நம்மைப் போன்ற அன்பர்கள் ஒன்றிணைந்து செயலாற்றினால் தமிழை மீட்டெடுக்கும் பணி எளிதில் முடியும் என நம்புகிறேன். தமிழுக்காகப் பணி செய்கிறோம் என முழங்கும் தமிழ்ப்பற்றாளர்கள் அனைவரும் ஒருவர் முயற்சியை மற்றொருவர் புரந்தும் ஆதரித்தும் செயல்பட வேண்டும். தமிழர் ஒன்றாதல் கண்டு பகைவர் எங்கோ மறையும் காலம் கனியும் வகையில் நமது பணிகள் அமைய வேண்டும்.
தமிழைத் தமிழாக வளர்த்தெடுப்போம்!
நன்றி, வணக்கம்.
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்
தமிழே உயிரே வணக்கம்; தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்.
வணக்கம்.
தமிழால் முடிந்தால் தமிழரால் முடியும் என்னும் கூற்றுக்கொப்ப தனித்தமிழில் நாள்காட்டியினை வெளியீடு செய்திருக்கும் சொல்லாய்வறிஞர் ஐயா அவர்களுக்கு நன்றி. செந்தமிழ் மொழியாம் தமிழில் எல்லாம் முடியும் என்பதற்கு தமிழ் நாள்காட்டி நல்லதொரு சான்று. மலேசியத் தமிழ்க்கூறு நல்லுலகில் தமிழ் நாள்காட்டி ஒரு வரலாறு. வாழ்க தமிழ் வளர்க தமிழர்.
தாய்தமிழ்ப்பணியில் வாய்மையுடன்
தமிழ்ச்சித்திரன்
தொல்லூர்( செலாமா)
தமிழ் நாள்காட்டி என்ற பெயர் இந்த ஒரு நாள்காட்டிக்கே பொருந்தும். காரணம் நாள்காட்டியின் அனைத்துக் கூறுகளும் தமிழில்.. தனித்தமிழில்! தமிழால் முடியும் என்பதற்கு இந்த நாள்காட்டி புதிய சான்று சொல்லுமோ? தமிழ் நாள்காட்டி என்ற பெயரில் ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு நல்ல தமிழ்ப் பணியா? வியப்பாக உள்ளது. இராசி, நட்சத்திரம், திதி, எண்கள் என எல்லாமே தமிழில் என்பது நம்பமுடியாத உண்மை! கண்டிப்பாக தமிழன் நான் வாங்குவேன்.. பரப்புவேன். இது உறுதி!
-சித்தன் சிவாஜி
ஆய்தன் அவர்களுக்கு பொங்கல் / 2039ஆம் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல வருகின்ற தை மாதத்தில் தங்களுடைய அடுத்தப் பதிவுக் கட்டுரையை மிகவும் எதிர்பார்க்கிறேன். வாழ்க தமிழ்.. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க...!
கருத்துரையிடுக