வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 22 ஜூன், 2008

தசாவதாரம் நல்ல தமிழ்ப் படமா?


என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமையவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாய் இல்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவாய் இல்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவாய் இல்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாய் இல்லை!
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்
படமெடுத்து ஆடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

தமிழ்த் திரைப்படங்களை நோக்கி இப்படி நொந்துப் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். இப்போது வந்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் வரையில் பாவேந்தர் சொன்ன பரிதாபநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த முக்கால் நூற்றாண்டில் (75 ஆண்டு) தமிழர்களிடையே திரைப்படங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பது மிக பரந்துபட்டதும் மிகவும் அழுந்தமானதும் என்றால் அது உண்மையே. தமிழ் இனத்தின் சிந்தனைப் போக்கு மழுங்கடிக்கப்பட்டதில் தமிழ்த் திரப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழ்த்திரைப்படச் சுவைஞர்களின் (இரசிகர்) தரம் மிக மிக கழிப்பட்டது; கீழ்த்தரமானது என்று சொல்வதில் தப்பே இருக்க முடியாது. இத்தகைய மட்டமான தரம்கொண்ட சுவைஞர்களின் எண்ணிக்கையே பெருவாரியாக இருப்பதால், மிகச் சிறந்த முறையில் எடுக்கப்படுகின்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய படங்களும் வெற்றி பெறாமல் படுத்துக்கொள்கின்றன.

நல்லப் படங்கள் வருவதில்லை என்ற குறைபாடு ஒருபுறம் இருக்க, வருகின்ற படங்களைப் பார்த்துவிட்டு எழுதப்படுகின்ற விமரிசனங்களின் தரமும் பெருமைபடும் வகையில் இல்லை என்பது மற்றொரு பெருங்குறை. ஏதோ படத்தைப் பார்த்தோம்; அந்தப் படத்தில் இதுவெல்லாம் நன்றாக இருக்கிறது; இவையெல்லாம் சிறப்பாக இல்லை; இசை ஓரளவு நன்றாக உள்ளது; ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்; உரையாடல்(வசனம்) பிசுபிசுக்கிறது; இயக்கம் உலகத் தரம் என்றெல்லாம் மேம்போக்காக மட்டுமே பெரும்பாலான விமரிசனங்கள் எழுதப்படுகின்றன.

மிகவும் நுட்பமான முறையில், ஆழ்ந்து; ஆய்ந்து எழுதப்படுகின்ற விமரிசனங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. சுவைஞன் ஒருவனின் கருத்துக்கு எட்டாத கோணத்தை எடுத்துக்காட்டும் விமரிசனமே பாராட்டுக்குரியதாக அமையும்.

அவ்வகையில், இந்த தசாவதாரம் படம் பற்றி இணையத்தில் வந்துள்ள விமரிசனங்களில் தமிழுயிரைக் கவர்ந்த இரண்டு இங்கே தமிழுயிர் அன்பர்களுக்கு வழங்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று மலேசியத் தமிழர் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளைச் சொடுக்கிப் படித்துப் பார்க்கவும். இவைபோன்ற மாறுபட்ட விமரிசனங்கள் வேறு எதையேனும் இணையத்தில் பார்த்து இருந்தால் அன்பர்கள் தெரிவிக்கவும்.


1. தசாவதாரம்: காட்சிகள் சொல்லும் கருத்துகள்

2. தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு

@ஆய்தன்:-
இன்று வருமோ.. நாளைக்கே வருமோ.. என்று வருமோ..
நல்ல தமிழ்த் திரைப்படம்..?

டத்தோ சரவணனின் தாய்மொழிக் கடப்பாடு

அண்மைய ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது என்பது மகிழ்ச்சியளிக்கும் உண்மை. இவ்வாண்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலக்கத்து ஐயாயிரத்தையும் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

புதிய எழுச்சியை நோக்கித் தமிழ்ப்பள்ளிகள் முன்னேறிவரும் வேளையில், தம்முடைய மகளைத் தமிழ்ப்பள்ளியில் பதிவுசெய்து பெருமை சேர்த்துள்ளார் அரசியல் மாண்புமிகு துணையமைச்சர் டத்தோ சரவணன். ஒரு தமிழர் என்ற முறையில் தன்னுடைய குழந்தையைத் தமிழ்ப்பள்ளியில் பதியவேண்டியது துணையமைச்சர் அவர்களின் கடமைதான். ஆனாலும், பதவி, பணம், அதிகாரம் என உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட தமிழர்கள் தமிழ்ப்பள்ளிகளை ஏரெடுத்தும் பார்ப்பது இல்லை. அவ்வளவு ஏன்? எதோ ஒரு சிறு வணிகம் செய்து கையில் நாலு காசுபணம் சேர்ந்ததும் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மற்ற மொழிப் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் தமிழ்ப் பெற்றோர்கள் இன்று பெருகிப்போய் விட்டனர். இப்படியொரு இக்கட்டான நிலையில், பிறந்த இனத்திற்கும் தாய்மொழிக்கும் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட்டிருக்கும் டத்தோ சரவணனைப் பாராட்டுவதில் தவறில்லை என நினைத்து தமிழுயிர் தனது மனமார்ந்தப் பாராட்டுதலை மகிழ்வோடு தெரிவிக்கின்றது.

சில அரசியலாளர்கள் போல பேச்சளவில் மட்டும் இல்லாமல் உண்மையாகவே செயலிலும் தன்னுடைய தாய்மொழி உணர்வை மெய்ப்பித்துள்ளார் மாண்புமிகு துணையமைச்சர். இவருடைய இச்செயல், மற்றவர்களுக்கு முன்மாதியாகவும் துண்டுகோளாகவும் அமைந்திருக்கிறது.

மேலும், மாண்புமிகு டத்தோ சரவணனின் மொழிப்பற்றும் மொழியின் மீதான சமூகக் கடப்பாடும் மற்றைய தலைவர்களுக்கும் வேண்டும். இவருடைய இந்தச் செயலானது அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், தொழில்முனைவர்கள், வணிகர்கள், உயர்நிலைப் பணியாளர்கள் என உயர்ந்த நிலையில் இருக்கின்ற தமிழர்களுக்குப் புதிய வேகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என தமிழுயிர் நம்புகிறது.

தமிழ்ப்பள்ளிகள் தரமுயர்ந்து வருகின்றன; தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பொதுமக்களை நோக்கி முழங்கிவரும் அரசியல் தலைவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளை நோக்கிப் படையெடுப்பார்கள் என்பது திண்ணம்.

அதற்கு, முன்னுரை எழுதி முன்மாதியாக செயல்பட்டுள்ள மாண்புமிகு டத்தோ சரவணன் அவர்களுக்குத் தமிழன்னை அருள் செய்வாளாக!!

@ஆய்தன்:-
மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி

வெள்ளி, 20 ஜூன், 2008

விண்வெளியை நோக்கி வீரத்தமிழன்


“என்ன நடந்தாலும் சரி, இன்னும் பத்து ஆண்டுகளில் அதாவது 2018க்குள் விண்வெளிக்குச் சென்று ஆய்வு நடத்துவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்”, என்று 20 வயதான செரடாங் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் முகிலன் ரெ. கோ. இராசு திட்டவட்டமாகக் கூறினார்.

“எனது ஐந்தாவது வயதிலிருந்து இது எனது இலட்சியமாக இருந்து வந்திருக்கிறது. இதனையடையாத வரையில் நான் மகிழ்ச்சியடையமாட்டேன் என்பதை நான் அறிவேன்”, முகிலன் மேலும் கூறினார்.

அவரது ஐந்தாவது வயதில் அவருக்குக் கொடுக்கப்பட்ட விண்வெளிப் பயணம் பற்றிய படப்புத்தகத்தால் கவரப்பட்டு அதுவே அவரது விண்வெளி ஆய்வுக்கான குறிக்கோளின் அடிப்படையாக அமைந்தது என்று முகிலன் விளக்கம் அளித்தார்.

விண்வெளியிலிருந்து தாய் பூமியைப் பார்க்க வேண்டும் என்ற அவரது இளமைக்கால கனவை நனவாக்கும் திண்மையில் முகிலன் அவரைப் போன்ற மற்ற இளைஞர்களைவிட மாறுபட்டிருக்கிறார்.

 • தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
“பெரிய சிந்தனை, பெரிய இலக்கு இருக்க வேண்டுமென்று எனது தந்தை எனக்கு கற்பித்துள்ளார். ஒருவர் அவரது சிந்தனையில் திடமாக இருந்தால், சாதிக்க முடியாதது எதுவும் இல்லை”, என்று வலியுறுத்திய முகிலன் அவரது பெற்றோர்கள் அளித்துவரும் ஊக்கமும் ஆதரவும் அவருக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறினார்.

இவரது முதல் பள்ளி சிலாங்கூரிலுள்ள செரடாங் தமிழ்ப்பள்ளியாகும். தமிழ்ப்பள்ளி மாணவர் என்றாலே இவ்வாறான உயர்ந்த இலட்சியங்களை கொண்டிருக்க இயலாதவர்கள் என்ற பொதுவான கருத்து நிலவுகின்ற காலத்தில் முகிலன் அதற்கு மாறுபட்டவராக இருக்கிறார்.
எஸ்பிஎம் தேர்வில் 11ஏக்கள் பெற்ற முகிலன் உள்ளூர் தனியார் கல்லூரியில் சேர்ந்து அமெரிக்க பட்ட மாற்று திட்ட வழியில் உயர்க்கல்வியைத் தொடங்கினார்.

பின்னர், அமெரிக்க புளோரிடா மாநிலத்திலுள்ள எம்பிரி ரிடல் ஏரோனோட்டிக்கல் (Embry Riddle Aeronautical University) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இப்போது அப்பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு "விண்வெளிப் பொறியியல் மற்றும் விண்வெளி அறிவியல்" (Aerospace Engineering and Space Science) மாணவராக இருக்கிறார் முகிலன். அவரது இலக்கை அடைய இப்பட்டப் படிப்பு அடிப்படையாக அமையும்.

11ஏக்கள் பெற்று சிறந்த மாணவராக விளங்கிய மற்றும் உயர்ந்ததோர் இலக்கைக் கொண்டிருந்த முகிலன் மலேசிய அரசாங்கத்திடமிருந்து கல்விக்கடன் உதவி எதனையும் பெறவில்லை. பல முயற்சிகளை மேற்கொண்டார். பலன் ஏதுமில்லை.

“அமெரிக்க பட்ட மாற்று திட்ட படிப்பு முடிந்தவுடன் 2006 அம் ஆண்டில் மலேசியப் பிரதமர், கல்வி அமைச்சு மற்றும் மலேசிய விண்வெளிக் கழகம் ஆகியவற்றிடம் உபகாரச் சம்பளம் கோரி விண்ணப்பம் செய்திருந்தேன். தனியார் நிறுவனங்களிடமும் விண்ணப்பம் செய்தேன். கடனாவது கொடுக்குமாறு கேட்டேன். எவ்வித பதிலும் இன்றுவரையில் கிடைக்கவில்லை”, என்று ஒருவிதமான புன்னகையோடு அவரது முயற்சிகள் பற்றி முகிலன் விளக்கம் அளித்தார்.
தனது முயற்சிகள் பலனளிக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும் இலட்சியத்தைக் கைவிட வேண்டும் என்ற எண்ணம் அவரது சிந்தனையில் ஒரு கணம்கூடத் தோன்றவில்லை. மாறாக வேறு வழிகளைக் காண முடிவெடுத்ததாக முகிலன் கூறினார்.

எம்ஐஇடி(MIED) மற்றும் சில தனியார்களிடமிருந்து கடன் பெற்றதோடு அவரது தந்தையும் உதவியதாக முகிலன் கூறினார். இன்னும் ஓர் ஆண்டில் தனது பட்டப் படிப்பை முடிக்கவிருக்கும் முகிலன் அதன் பின்னர் தனது இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்கப் போவதாகக் கூறினார்.

“சூழ்நிலைகள் தடங்களாக இருக்குமானால், வேறு வழியில் எனது இலட்சியத்தை அடைய முயற்சிப்பேன். ஒரு வழி அடைக்கப்பட்டால், இன்னொரு வழியைப் பாவிப்பேன். விட்டுவிடுவது என்ற எண்ணமே கிடையது”, என்று தனது நிலையைத் தெளிவாக விளக்கினார்.

பெரும் இலட்சியத்தை கொண்ட இந்த மாணவனுக்கு உதவ மலேசிய அரசாங்கம் தவறிவிட்ட போதிலும், இந்நாட்டின் மீதான அவரது விசுவாசம் உறுதியானது என்று கூறிய முகிலன் இந்த நாட்டின் விண்வெளித்துறை வளர்ச்சிக்கு தனது பங்கையாற்ற என்றும் தயராக இருப்பதாக முகிலன் மேலும் கூறினார்.

 • நன்றி: மலேசியா இன்று
@ஆய்தன்:
மண்ணகத்தில் தமிழன் கொடி பறக்கப் போகிறது!
கூடவே விண்ணகத்திலும் தமிழன் கொடி பறக்கட்டும்! பறக்கட்டும்!

கல்வி கற்கத் தமிழ் மாணவருக்குத் தடை!


பிறப்பு பத்திரம் இல்லாத தமிழ்ச் சிறுவர்கள் பள்ளியில் சேர அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே சேர்க்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்கள். இச்செயல் அச்சிறுவர்களின் பிறப்புரிமையைப் பறிப்பதாகும்.

சிறுவர்கள் கல்வி கற்பதற்கான உரிமையை எக்காரணத்திற்காகவும் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று இன்று காலை 11.00 மணிக்கு தமிழ் அறவாரியத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கல்வி,பொதுநல ஆய்வு அறவாரியத்தின் (EWRF) தலைவர் சி. பசுபதி கூறினார்.

அவரைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் கா. உதயசூரியன், “தேர்தலுக்குமுன் கல்வி அமைச்சர் எக்காரணத்திற்காகவும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது. அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். தேர்தல் முடிந்து விட்டது. ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்திற்காக பள்ளியில் சேருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை; சேர்க்கப்பட்டிருந்தவர்கள் நீக்கப்படுகிறார்கள். இச்செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்”, என்று கூறினார்.

பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்தால் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஏற்படும் சிக்கல் எல்லா இனத்தவரையும் பாதிக்கிறது என்ற போதிலும் மிக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மாணவர்களே.

 • மன்னிக்க முடியாத குற்றம்

எந்த இனத்தவர் என்பது பிரச்னை இல்லை. எந்த குழந்தையும் பள்ளிக்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படக்கூடாது. பிறப்பு பத்திரம் இல்லாதிருப்பது குழந்தையின் தவறல்ல. பிறப்பு பத்திரம் இல்லாத குறைக்கு குழந்தையைப் பள்ளியில் சேர்க்க மறுப்பது அக்குழந்தையைத் தண்டிப்பதாகும். இச்செயல் மடைமையிலும் மடைமையாகும். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார் பசுபதி.

நடந்த தவறுக்கு தீர்வு காண வேண்டுமேயன்றி பள்ளியில் இருக்க வேண்டிய மாணவர்களை வீதிக்கு விரட்டியடிக்கக்கூடாது. பிறப்பு பத்திரம் இல்லாதிருப்பது ஒரு பழையச் சிக்கல். ஆனால், இந்தச் சிக்கல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

சிலாங்கூரில் பல பள்ளிகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை பள்ளியில் சேர்க்க மறுப்பதுடன் சேர்க்கப்பட்டிருந்த மாணவர்களை வெளியேற்றியுள்ளன. ஜாலான் காப்பாரிலுள்ள வாலம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி, மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுடன இன்னும் பல பள்ளிகள் இருக்கின்றன. நிலைமை மோசமடைவதற்குமுன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 • வேட்டு வைப்பார்கள்

“தெருவில் தூக்கி எறியப்படும் மாணவர்கள் தெருவுக்கே வேட்டு வைப்பார்கள் என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்”, என்று எச்சரிக்கை விடுத்த கா. உதயசூரியன் இவ்விவகாரத்திற்கு ஒரு தீர்வு காண தமிழ் அறவாரியமும் கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியமும் தயாராக இருப்பதாகக் கூறினார்.

 • இனியும் பொறுக்கமுடியாது

“தமிழ் மாணவர்கள் அவர்கள் செய்யாத தவறுக்காக தண்டிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள நமது சமுதாயம் இனிமேலும் தயாராக இல்லை”, என்று திட்டவட்டமாக பசுபதி கூறினார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கல்வி அமைச்சர் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

கல்வி அமைச்சர், கல்வித் துறை, தமிழ்ப்பள்ளிகள், அரசு சார்பற்ற அமைப்புகள் இவ்விவகாரத்தைத் தீர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். அதற்கு, எல்லா வகையிலும் ஒத்துழைக்க தமிழ் அறவாரியமும் கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியமும் தயாராக இருப்பதாக பசுபதியும் உதயசூரியனும் உறுதியளித்தனர். தேவைப்பட்டால், மாநில அளவிலும் நாடுதழுவிய அளவிலும் பிறப்பு பத்திரம் இல்லாத குழந்தைகளின் பெற்றோர்களின் கூட்டத்தை நடத்தவும் தயாராக இருப்பதாக அவர்கள் இருவரும் அறிவித்தனர்.

 • தொடர்பு கொள்ளுங்கள்

பிறப்பு பத்திரம் இல்லை என்ற காரணத்திற்காக எந்த ஒரு மாணவராவது பள்ளியில் சேர்க்கப்படாவிட்டாலோ அல்லது பள்ளியிலிருந்து நீக்கப்பட்டாலோ, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது ஈடுபாடுடையவர் தமிழ் அறவாரியத்துடன் அல்லது கல்வி, பொதுநல ஆய்வு அறவாரியத்துடன் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு பசுபதியும் உதயசூரியனும் வேண்டுகோள் விடுத்தனர்.

 • நன்றி: மலேசியா இன்று

@ஆய்தன்:
தனியொரு மனிதனுக்குக் கல்வி இல்லையேல்
சகத்தினை அழித்திடுவோம் என இனி பாடவேண்டுமோ?

திங்கள், 2 ஜூன், 2008

இடைநிலைப்பள்ளியில் இனியத் தமிழ்ப்பணிபேரா மாநிலத்தில் தமிழ்வீறு கொண்டு செயல்படும் சிறப்புமிக்க இடைநிலைப்பள்ளி என்று டத்தோ ஹஜி அப்துல் வஹாப் தேசிய இடைநிலைப்பள்ளியைத் துணிந்து குறிப்பிடலாம். காரணம், மிகப் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பணியொன்று இப்பள்ளியில் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் அந்தத் தமிழ்ப்பணி தங்குத் தடையின்றி நடந்துகொண்டிருக்கிறது. மாணவர்கள் உள்ளத்திலும் உணர்விலும் மெல்லெனத் தமிழ்ப்பற்றை வளர்க்கும் அந்தச் சீரிய தமிழ்ப்பணி செம்மையாக அங்கே நடந்துகொண்டிருக்கிறது.

அந்தச் சிறப்புமிகு தமிழ்ப்பணி என்னவெனில், 'கதம்பம்' என்ற பெயரில் அருமைமிகு சிற்றிதழ் ஒன்று ஒவ்வொரு மாதமும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே மலர்ந்து வருவதுதான். 50ஆவது இதழைக் கடந்து தொடர்ந்து பீடுநடைபோட்டு பவனிவருகிறது இந்த மாணவர் இதழ். இந்தக் 'கதம்பம்' சிற்றிதழைக் கண்டு மனமெங்கும் மகிழ்ச்சி கமகமவென மணத்தது. தமிழ்மொழி, வரலாறு, இலக்கியம், புதிர்கள், கட்டுரை, சிறுகதை, மரபுக்கவிதை, அரிய செய்திகள், துணுக்குகள் என நல்லநல்ல படைப்புகள் இந்தக் 'கதம்பத்தை' மிக நேர்த்தியாக அலங்கரித்துள்ளன.

அவற்றைப் படிக்கின்ற மாணவர்களுக்கு வாசிப்பதில் ஆர்வம் ஏற்படும்; பொது அறிவு வளப்படும்; மொழி ஆற்றல் மேம்படும்; என்பது திண்ணம். இத்தனைக்கும் மேலாக, நல்ல தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் மாணவர்களிடையே இந்த இதழ் நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது மறுக்கவியலாத உண்மை. இந்த இதழின் வழியாக தமிழின்பால் பற்றுதலும் ஈடுபாடும் கொண்ட மாணவர் குமுகாயத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பதும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத உண்மை.

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் இலக்கணச் சுவையை ஊட்டவும், தமிழின் உயர்வை உணர்த்தவும் இந்த இதழ் தொடங்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாது வெளிவந்து கொண்டிருப்பது மிகப்பெரும் சாதனையாகும். அந்தச் சாதனையின் சின்னமாக, கதம்பம் 50ஆவது இதழ் விளங்குகிறது. "தமிழே! உயிரே! தமிழால் உயர்வே" என்ற முழக்கத்தோடும் மிகச் செப்பமான கட்டமைப்போடும் இவ்விதழ் வெளிவருவது பாராட்டுக்குரியது.

ஓர் இடைநிலைபள்ளி அளவில் இப்படியொரு அரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கும் கதம்பம் இதழின் தொகுப்பாசிரியர் திரு.சபா.கணேசு அவர்களுக்கும் அவருடன் துணையிருந்து உதவியிருக்கும் அப்பள்ளியின் அருமைசால் ஆசிரியர்களுக்கும், தமிழ்மொழிக் கழக மாணவர்களுக்கும் தமிழுயிர் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தான் தமிழன், தன் இனம் தமிழினம், தன் இனத்தின் மீதும் மொழியின் மீதும் தனக்குக் கடப்பாடு உண்டு என்று எண்ணுகின்ற சபா.கணேசு என்ற அந்த ஒற்றைத் தமிழ் ஆசிரியரின் நனிசிறந்த நற்றமிழ்ப் பணி மற்றைய ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என தமிழுயிர் விரும்புகிறது. சபா.கணேசு போன்ற உண்மைத் தமிழ் உணர்வுள்ள தமிழாசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக வேண்டும். 'கதம்பம்' போல ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் ஒரு சிற்றிதழ் அல்லது மாணவர் இதழ் வெளிவந்து தாய்த்தமிழைச் செழித்தோங்கச் செய்ய வேண்டுமென தமிழுயிர் எதிர்ப்பார்க்கிறது. மரியாதைக்குரிய மலேசியத் தமிழாசிரியர்கள் சிந்திப்பார்களா?

@அய்தன்:-
சேமமுற வேண்டுமெனில் பள்ளிகளெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் ஆசிரியர்காள்!

புதிய எழுச்சியை நோக்கித் தமிழ்ப்பள்ளிகள்


2008 மார்ச்சு 8க்குப் பின்னர், எமது நாட்டுத் தமிழ்ப்பள்ளிகளின் வரலாற்றில் புதிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

 • 'பந்துவான் மோடால்' எனப்படும் பகுதி உதவிபெறும் பள்ளிகள் 'பந்துவான் புனோ' என்ற முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றம் காணுகின்ற சூழ்நிலைகள் மலர்ந்துள்ளன.

 • பல்லாண்டுகளாக கேட்பாரற்றுக் கிடந்த தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதிகள் நல்ல நிலைமைக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

 • எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளிகளின் மீது தலைவர்கள் அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர்.

 • தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்த 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைக்கத் திட்டமிடுகின்றனர்.

 • தமிழ்ப்பள்ளிகளைச் சீரமைப்பதற்கு கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வருகின்றன.

இத்தனைக்கும் இடையில், கடந்த 50 ஆண்டுகளில் என்றுமே இல்லாத வகையில் புதிதாக இரண்டு தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கான உரிமத்தை(லைசன்சு) அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பானது, தமிழரிடையே அதிர்ச்சிகலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், இதற்கு முன் பொதுமக்களும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என பல காலமாகவே கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், குமுகாயத்தின் அந்தக் காட்டுக்கத்தல்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் முடிந்துள்ளன.

தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நினைப்பு எல்லாரிடமும் அறவே அற்றுப்போய்விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், புதிதாக இரண்டு தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு உரிமம் என்ற அதிரடி அறிவிப்பு வந்துள்ளது. தேசிய நீரோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்த தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக இதனைக் கருதலாம். இந்த இரண்டு உரிமங்களைக் கொண்டு பேரா, சுங்கை சிப்புட்டில் ஒரு பள்ளியும், கெடா பாயா பெசாரில் ஒரு தமிழ்ப்பள்ளியும் கட்டப்பட உள்ளன.

பல ஆண்டு போராட்டங்களுக்குப் பின்னர் இந்த வெற்றியை பெற்றுள்ளதாக ஓர் அரசியல் கட்சி தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. அதே வேளையில், அரசியல் சுனாமியை ஏற்படுத்தியுள்ள மக்கள் கூட்டணி, மக்கள் சத்தி ஆகியவற்றின் எழுச்சியால் கிடைத்ததுதான் இந்த வெற்றி என குமுகாயம் நம்பிக் கொண்டிருக்கிறது.

எது எப்படி இருந்தாலும், என்றுமே இல்லாத அளவுக்கு இப்போது தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய எழுச்சியும் புதிய விடியலும் ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 800இருந்து 523ஆக சுருங்கிப் போய்விட்டன. இந்த நிலைமை இனிமேலும் கழுதை தேய்ந்து கட்டெரும்பாகி, அதுவும் தேய்ந்து சிற்றெறும்பான கதையாகி விடக்கூடாது.

இனிவரும் 50 ஆண்டுகளுக்கு இப்போது இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றைக்கூட இழந்துவிடாமல் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். காரணம், தமிழ்ப்பள்ளிகள் நமது உரிமையாகும்.

@ஆய்தன்:
தமிழ்ப்பள்ளி இருக்கும் வரை - இந்நாட்டில்
தொடரும் தமிழர்தம் வாழ்வுரிமை!