வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 25 ஜூலை, 2007

தமிழ் அழிவாரியம்

நம் நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சியையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்ச்சியையும் இலக்கெனக் கொண்டு செயல்படும் தமிழ் அறவாரியம் வெளியிடும் 'திசைகள்' செய்தி இதழைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அவர்களின் பணிகள் அருமை; நாட்டுக்கு மிகத் தேவை. அதற்காக அவர்களைப் போற்றுகிறேன். ஆனால், தமிழ் அறவாரியம் வெளியிடும் அந்த இதழில் தமிழைக் காணாமல் திடுக்கிட்டேன். அவ்விதழின் 95 விழுக்காடு பக்கங்கள் ஆங்கிலத்தில் அச்சாகி இருந்தது. ஒப்புக்குச் சப்பாணியாக தமிழுக்கு 5 விழுக்காடு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். இது என்ன தமிழ் அறவாரியமா? இல்லை, தமிழ் அழிவாரியமா? தமிழ்ப்பள்ளிக்காக குரல் கொடுப்பார்கள்; தமிழ்க்கல்விக்காக துணைநிற்பார்கள்; தமிழ்மொழியை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் அறவாரியம் தமிழுக்குக் குழி பறிப்பார்கள் என நானும் எமது மக்களும் நினைக்கவே இல்லை. தமிழ் அறவாரியம் தமிழை மறந்த வாரியமாக மாறி தமிழ் உணர்வாளர்களின் தூற்றலுக்கும் சாபத்திற்கும் தயவுகூர்ந்து ஆளாகிவிட வேண்டாம்.

இத்தனைக்கும் அதன் நிருவாக உறுப்பினர்களில் பெரும்பெரும் தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமிழ்ப் போராளிகளும் இருந்தும்கூட இப்படியொரு கேடு நிகழ்ந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக உள்ளது. தமிழ் அறவாரியம் தமது பெயருக்கு ஏற்றாற்போல் எமது இன்னுயிர்த் தமிழை முன்னெடுக்க வேண்டாமா? தமிழ் உணர்வையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா? 'டோங் ஜியாவ் ஜோங்' போன்ற சீன கல்வியாளர்கள் அமைப்புடன் கூட்டு சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் தமிழ் அறவாரியம் சீனர்களைப் போல் மொழி உணர்வைப் பெறாமல் போனது ஏன்? தன் ஆட்சிக்கு உட்பட்ட சொந்த இதழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காத தமிழ் அறவாரியம் இந்த நாட்டில் தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்கும் என்பது நம்பத்தகுந்ததா? மொழி உணர்வில் சீனர்களைப் போல் அல்லாமல் மழுங்காண்டிகளாக ஆகிவிட்ட தமிழ் அறவாரிய நிருவாக உறுப்பினர்கள் மனம் மாறுவார்களா?
  • ஆய்தன் : அடுத்த 'திசைகள்' இதழில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தால் தமிழ் அறவாரியம்! இல்லையேல் தமிழ் அழிவாரியம்!!

திங்கள், 16 ஜூலை, 2007

ராகா.. ஆகா! சிறந்த உளறல்!

அண்மையில் தி.எச்.ஆர்.ராகா வானொலி அறிவிப்பாளர் மேதாவி உதயாவும் உளறுவாயி ஆனந்தாவும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அதாவது, வானொலியில் பழந்தமிழில் பேசினால் மக்களுக்குப் புரியாது என்பதே அது. இதைப் போய் பெரிய கண்டிபிடிப்பு செய்து சொன்ன அந்த இரண்டு பேருக்கும் எமது நன்றி. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன். இவர்களை யாரய்யா பழந்தமிழில் பேசச் சொல்லி கேட்டார்கள். நல்லதமிழில் பேசினாலே போதாதா? இப்போது இவர்கள் பேசுவதைக் கொஞ்சம் திருத்திக்கொண்டாலே போதும். ஆங்கிலமும் மலாயும் சமயத்தில் சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம் இப்படி பல மொழிகளையும் கலந்து கலந்து பேசி சொதப்பாமல் சற்று தூய்மையாகப் பேசினாலே போதும். அதைத்தானே கேட்கிறோம். ஆங்கிலத்தை வைத்து பிழைப்பவன் நன்றாக ஆங்கிலம் பேசுகிறான். மலாயை வைத்து பிழைப்பவன் நன்றாக மலாய் பேசுகிறான். தமிழை வைத்து பிழைப்பவன் மட்டும் ஏன்தான் தமிழைக் கொன்று தொலைக்கிறான். வானொலி தொலைக்காட்சியில் நல்லதமிழில் பேசி நேயர்களைக் கவரமுடியாது என்பதை நல்லபுத்திக்காரார்கள் எவரும் நம்பமாட்டார்கள். நம்நாட்டில் தமிழ்மக்கள் மனங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கும் சி.பாண்டித்துரை, இராசேசுவரி இராசமாணிக்கம், மு.சங்கர் போன்ற அறிவிப்பாளர்கள் பலரை தமிழ்மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால், உதயா ஆனந்தா போன்ற சில கத்துகுட்டிகள் மொட்டை வாலை தூக்கி ஆட்ட முயற்சி செய்ய வேண்டாம். தமிழைப் பற்றி கருத்து சொல்ல வயதும் அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழைப் பற்றி நினைத்தவனெல்லாம் நினைத்தைச் சொல்லலாமா? தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பா? ஐயா உதயா – நைனா ஆனந்தா நல்ல முறையில் நயமாகச் சொல்லும்போது கேட்டுக்கொள்ளுங்கள்! தமிழன் சூடானவன். கொதித்து எழுந்தால் தாங்கமாட்டீர்கள். இனியாவது உங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!
  • ஆய்தன் : இவர்கள் சின்ன குழந்தையா இருக்கும்போது நாக்கில் 'என்னத்த' தடவி தொலைச்சாங்களோ!

ஞாயிறு, 15 ஜூலை, 2007

மின்னலுக்கு இரண்டு நாக்கு

மலேசிய வானொலி மின்னல் (எஃப்.எம்) பண்பலை சில காலங்களுக்கு முன் 'சுழியம்' என்ற நல்லதமிழ்ச் சொல்லைப் பெரும் பாடுபட்டு வேரறுத்ததை எமது தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார். தமிழன்னையின் அருள்பெற்ற இளம் அறிவிப்பாளர் பெருமக்கள் சிலர் முன்னின்று அறிமுகப்படுத்திய 'சுழியம்' என்ற சொல்லைப்பார்த்து மிரண்டுபோன மின்னலின் தலைமை பொறுப்பாளர்கள் சிலர் பெரிதும் முயன்று முயன்று அச்சொல் வானலையில் ஒளிபரப்பாவதை தடுத்து நிறுத்தினர். துடிப்புமிக்க இளம் அறிவிப்பாளர்கள் அதற்காக தண்டிக்கப்பட்டனர். இத்தனையும் நடந்த சுவடுகள் இன்னமுன் அழியாத நிலையில், இப்போது மின்னல் பஸ் என்று சொல்லாமல் 'பேருந்து' என்கிறது; லைசன்ஸ் என்று உளறாமல் 'உரிமம்' என்கிறது; 'குறுந்தகவல்' என்று கூறாமல் 'குறுஞ்செய்தி' என்கிறது; பேட்டி என்று புலம்பாமல் 'நேர்க்காணல்' என்கிறது. இதுவெல்லாம் 'சுழியம்' போன்ற நல்லதமிழ் சொற்கள் என்பது மின்னலுக்கு தெரியுமா? தெரியாதா? சுழியத்தை அழித்த சூழ்ச்சிக்காரர்கள் மேலே சொன்ன சொற்களுக்கு இசைவு அளித்தது எப்படி? மின்னல் ஒருபக்கம் தமிழை அழிக்கிறது; மறுபக்கம் வளர்க்கிறது. இவர்களால் எப்படி முடிகிறது இது? இன்னொன்றும் சொல்லலாம். மூளை கெட்ட மின்னல் உயர் அதிகாரிகளே உங்கள் வானொலியில் உலாவரும் 80 விழுக்காட்டு சொற்கள் நல்லதமிழே! ஒரே ஒரு சுழியத்தை அழிக்க வரிந்துகட்டிக்கொண்டு வீம்பு செய்த இராச சேகரன்களும் சாந்தாக்களும் எங்கே போனார்கள்? நீங்களே தெரிந்தோ தெரியாமலோ நல்லதமிழ்ச் சொற்களை உலறிவிட்டால் அது சரி! மற்றவர்கள் எடுத்துச்சொன்னால் அது (தமிழ்)வெறியா? இனியாவது திருந்துங்கள்! இறைவன் நல்லபுத்தி தருவானாக!
  • ஆய்தன் : மயக்கமா? கலக்கமா? மனதிலே குழப்பமா?

சனி, 14 ஜூலை, 2007

அசுட்டுரோ குட்டையைக் குழப்புகிறது!

கடந்த 24.06.2007ஆம் நாளன்று அசுட்டுரோ வானவில்லில் ஒளிபரப்பாகிய 360 நிகழ்ச்சியைக் கண்டேன்.

தீமிதி பற்றிய அன்றைய கண்ணோட்டத்தில் பல்வேறு கோணத்தில் அலசி ஆராயப் பட்டிருந்தது மிகவும் சிறப்பாகவே இருந்தது. தீமிதி பற்றிய ஆன்மிகப் பார்வையும் அறிவியல் பார்வையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல ப்பட்டது.

தீமிதியின் அறிவியல் கோணத்தை விளக்கிய கல்விமான் அவர்கள் அறிவியலை பேசுவதாக நினைத்துக்கொண்டு, எந்தவித அடிப்படை கோட்பாட்டு மேற்கோள்கள் இல்லாமலும்; அறிவியல் வழிபட்ட ஆய்வுண்மைகளைச் சாராமலும் பேசிய கருத்துகள் மக்களைக் குழப்புவதாக இருந்தன. அந்தக் கல்விமான் அவர்களை நான் குறைத்து மதிப்பிடுவதாக தயவுகூர்ந்து நினைத்திடக் கூடாது. பேராசிரியர் அவர்கள் கல்வித்தரத்தில் உயர்ந்தவராக இருப்பினும், இந்தத் துறைபோகிய அறிவும் ஆற்றலும் கொண்டவராகத் தெரியவில்லை. அன்னாருடைய பேச்சே இதனைத் தெளிவுபடக் காட்டிவிட்டது.

அவர் கூறிய கருத்துகளை மிக கீழ்நிலை நூலறிவு கொண்டோரும் கூட கூறிவிடலாம். மிக ஆழமான கருத்துகளையோ சிந்திக்க வைக்கும் அறிவியல் வழிபட்ட சான்றுகளையோ அல்லது யாருமே அறிந்திடாத புதிய கருத்த்களையோ அவர் முன்வைத்ததாகத் தெரியவில்லை. மேலும், தீமிதியை இன்றைய அறிவியல் கருத்துகளோடு ஒப்பிட்டுக் காட்டிப் பேசியவை அறிவுக்கு ஏற்றதாக இல்லை! ஆய்வின் வழிபட்டதாகவும் இல்லை! தீமிதியை நியாயப்படுத்துவதற்காகக் கட்டிய சப்பைக் கட்டாகவே அவருடைய பேச்சுகள் அமைந்தன.

சமயத்தை விட தனிமனித நம்பிக்கையும் மனத்திடமும் உயர்ந்தவை என்பது போன்ற கருத்தையே அப்பேராசிரியர் முன்வைத்தார். இக்கருத்தானது சமயத்தைப் புறந்தள்ளுவதாக இருந்தது. சுருங்கச் சொல்லப்போனால், இறைமறுப்புக் கொள்கை சார்ந்த கருத்தை சமய சாயம் பூசி வழங்கியுள்ளார். இதுபோன்ற பொய்ப் பரப்புரைகள் காலங்காலமாக நம் சமயத்தை இருட்டடிப்புச் செய்ததும் மக்களை மேலும் மேலும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தியதும்தான் மிச்சம். எனவே, சமயப் பூச்சுப் பூசிக்கொள்ளும் ஆன்மிகக் கருத்துகளைத் தவிர்த்து உண்மையான மெய்யியல் கருத்துகளை மக்களுக்குச் சொன்னால் நலமானது என்பதை மதிப்புமிகு பேராசிரியர் அவர்களையும் அசுட்டுரோவையும் வேண்டுகிறேன்.

அடுத்து, இதே நிகழ்ச்சியில் தீமிதியைப் பற்றிய ஆன்மிக நோக்கை எடுத்துப் பேசிய ஐயா ந.தர்மலிங்கனார் அவர்களின் கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கனவாக இருந்தன. நமது சமய கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தெளிவான, அறிவான, ஆய்வின் வழிபட்ட கருத்துகளை ஐயா அவர்கள் முன்வைத்தார். நமது சமயப் பெருமக்கள், அருளாளர்கள், அடியார்கள் யாவருமே சொல்லாததை சமய நூல்கள் சொல்லாததை மக்கள் கடைப்பிடித்து வருவதை மிக நேர்மையாக எடுத்துரைத்த அன்னவரின் மனத்துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தீமிதி பற்றிய மக்களின் நம்பிக்கையை வெறுமனே சாடாமல், சிறுமைப்படுத்தாமல் ஆனால் ஆன்றோர்களின் கருத்துகளைத் துணைகொண்டு சான்றுகளோடு அதனை மறுத்துப்பேசி தெளிவைக் கொடுத்த ஐயா அவர்களின் கருத்துகள் வரவேற்கத்தக்கன. நமது சமயத்தின் உண்மை நிலைகளை எடுத்துக்காட்டும் இவர் போன்றவர்களை மேலும் ஊக்கப்படுத்தி அசுட்டுரோ நிகழ்ச்சிகளைப் படைக்க முன்வர வேண்டும். செய்வீர்களா?

தவிர, நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மக்களை மீண்டும் மூடநம்பிக்கைச் சாக்கடையில் தள்ளிவிடுகின்ற வகையில் முடிவினைக் கூறி நிகழ்ச்சிக் கெடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இறைவனின் பெயரில் நம்பிக்கையோடு எதனைச் செய்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளலாம் என்ற சிந்தனை அடியோடு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இறைமையின் உயரிய நிலையை கேவலப்படுத்தும் செயல்களையும், கிரியைகளையும், பூசனைகளையும், வழிபாடுகளையும் இறைவனின் பெயரில் முழு நம்பிக்கையோடு செய்வது ஏற்கக்கூடிய ஒன்றல்ல. இதுபோன்ற கொள்கைகளால் இன்னும் அதிக அளவுக்கு மக்கள் மூட பழக்கங்களுக்கே இட்டுச் செல்லப்படுவர் என்பதை உணர வேண்டும்.



நிகழ்ச்சியின் முடிவில் எப்போதும் மக்களுக்கு உண்மை வழியைக் காட்ட வேண்டும்; சரியான தெளிவைத் துணிவோடு சொல்லவேண்டும்; நியாயமான தீர்ப்பை எவருக்காகவும் எதற்காகவும் அஞ்சாமல் வழங்கவேண்டும்; நேர்மையான கருத்தை தக்கச் சான்றுகளோடும் அடிப்படை களோடும் முன்வைக்கவேண்டும்.
  • ஆய்தன் : ஒன்றே சொல்லனும்! அதை நன்றே சொல்லனும்! அதையும் நல்லதுக்கே சொல்லனும்!

புதன், 11 ஜூலை, 2007

தமிழே உயிரே வணக்கம்! வருக.. வருக.!

"உலகமெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள்." இது பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவாய்மொழி.

இதன் அடிப்படையில், மலேசியாவில் அரசு அணைப்படி அனைத்து உரிமைகளும் சலுகைகளும் பெற்று வாழ்வதற்குத் தமிழர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அவற்றுள் ஒன்றுதான் தாய்மொழி உரிமை. மலேசியத் தமிழர்கள் தங்களின் தாய்மொழியாகிய தமிழைப் போற்றிக்கொள்ளவும் காத்துக்கொள்ளவும் வளர்த்துக்கொள்ளவும் உரிமை உள்ளது.

எனவே, இந்த அருமை வாய்ப்பைக் கையகப்படுத்தி, உயிரான தமிழை உயர்த்திப் பிடிக்க தமிழர்கள் முனைய வேண்டும். தமிழை உயிர்போல் மதித்துப் போற்ற வேண்டும். தமிழும் உயிரும் வேறல்ல; தமிழே உயிர் என்ற உணர்வு தமிழர்க்கு வேண்டும்.

ஆனால், இங்கே தமிழுக்கு அவ்வப்போது சில கேடுகளும் சிதைவுகளும் அழிவுகளும் ஏற்பட்டு வருகின்றது.

இதனை முன்னின்று செய்பவர்கள் தமிழால் பிழைக்கும் எமது தமிழ் உடன்பிறப்புகளே என்று எண்ணும்போது எமது இதயம் வலிக்கிறது.

இந்தத் தமிழ் அழிப்பு முயற்சிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி, காலங்காலமாக எமது தமிழ்மறவர்கள் வெற்றிபெற்று வந்துள்ளது மறுக்கவியலாத வரலாறாகும்.

அந்த வகையில், அண்மையக் காலத்தில் தமிழுக்கு எதிராக புதிய முறையில் புதிய கோணத்தில் அழிப்பு முயற்சிகள் நாட்டில் அவ்வப்போது தலைதூக்குகின்றன.

பல்துறை சார்ந்த தமிழ் உடன்பிறப்புகள் தமிழைப் பேணிக்காக்கும் பணியிலிருந்து இடறி, தமிழை எள்ளி நகையாடவும், கிள்ளி விளையாடவும், அள்ளி அழித்துப்போடவும் துணிந்துவிட்டனர் போலும்.

இந்த மாபாவச் செயலைத் தடுத்துநிறுத்தும் முயற்சியாக;
தமிழைப் பேணிக்காக்கும் பெருமக்களுக்கு உதவும் முயற்சியாக;
தமிழைப் பழிப்போரின் முகத்திரையைக் கிழிக்கும் முயற்சியாக;
எல்லாத் துறையிலும் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியாக;
அடுத்த தலைமுறைக்கு நல்லதமிழை கொடுத்துச் செல்லும் முயற்சியாக

இந்தத் 'தமிழுயிர்' வலையகம் தம் தமிழ்ப்பணியை முன்னெடுக்கும்.
இதற்கு எமது தமிழ் மக்கள் ஆசியும் ஆதரவும் வழங்கவேண்டும்.

உங்கள் எண்ணங்களையும் கருத்துகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் கருத்துகளை எமக்கு அனுப்பித் தமிழுக்கு உரம் சேருங்கள்.
எங்கேயும் எப்போதும் தமிழின் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்!

எம் தமிழர் ஒன்றாதல் கண்டு – எமது பகைவர் எங்கோ மறையட்டும்!

  • ஆய்தன் : தமிழே உயிரே வணக்கம்!
  • தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்!
  • தமிழே உயிரே உன்நலன்; காப்பது ஒன்றே என்கடன்