வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 29 மார்ச், 2009

தமிழகத் தலைவர்கள் திருந்துவார்களா?


அரசியல் கோமாளிகள் என்று சொன்னான் பொன்சேகா. ஐயோ என்று பதறினோம் ஆறு கோடி தமிழரும்.

அமைதியாய் நின்றீர் நீர் அனைவரும், அதற்கு ஆம் என்று அர்த்தம் என்று இன்றுதான் புறிந்துகொண்டோம்.

பிறக்காத குழந்தைக்கும் சாவு கீதம் படுகிறார் ஈழத்தில். பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.

தமிழ் தமிழ் என்று கதறுகிறீர்.

அம்மா என்று கூட அழைக்காத குழந்தை அய்யோ என்று கதறுகிறதே அங்கே. தமிழனாக பிறந்த குழந்தை தலையின்றி கிடக்கிறதே.

தமிழனின் சாவை தடுக்காத நீ தமிழனுக்கு தலைவனென்று ஏன் சொல்கிறாய்?

ஒரு தலைவன் ஒரு துரோகம் இன்னொரு தலைவன் இரு துரோகம் இன்னும் ஒருவன் பல துரோகம். துரோகத்தின் பாதையில் படையெடுத்து செல்கிறீர் தமிழகத்தின் கதி என்ன?

யாரிடம் எங்களை ஒப்படைக்க போகிறீர்?

சாக்கடயாம் அரசியலில் குளிக்கிறீரே. அங்கே நம் தமிழர் பிணவாடை நாற்றத்தில் தவிக்கிறாரே.

தலைவர்களை தலைக்குமேல் தூக்கி ஆடும் என் தமிழினமே, தமிழக இனமே, நம் உறவுகளை காக்க எந்த ஒரு தலைவன் குரல் கொடுத்தான் கூறுங்கள் பார்ப்போம்.

கட்சி புகழை பறைசாற்றும் தொண்டர்களே என் தமிழர்களே எந்த ஒரு தலைவன் ஈழத்திகாக ஒரு ஆயிரம் பேரை திரட்டி ஒரு போராட்டம் நடத்தினான் கூறுங்கள் பார்ப்போம்.

புரட்சி இனத்தை.. போராட்ட இனத்தை.. குருட்டு பூனைகலாய் மாற்றிவிட்டீர் எம் தமிழக தலைவர்களே.

கூட்டம் கூட்டமாக ஒன்று சேருகிறீர் தமிழினத்தின் எதிரிகளுடன் கூட்டணி சேருகிறீர் கருணாவும் நீயும் ஒன்றுதானா? நீயும் தமிழன்தான் நரிகளுடன் சேர்ந்துகொண்டு நாடாள நினைக்கிறீர் நாயைவிட கேவலமாய் நாளை உன்னை நடத்துவான்.

நரி என்ன செய்யும் என்று நம் தமிழ் பாடம் சொல்லுமடா. மானம் விட்டீர், மரியாதையை விட்டீர், உரிமை விட்டீர் தமிழ் உணர்வை விடாதீர் இல்லையேல் இவ்வுலம் உம்மை விட்டுவிடும்.

தமிழனுக்கு குரல் கொடுங்கள் தமிழன் உங்களுக்கு உயிர் கொடுப்பான்; சான்று முத்துகுமார் மாற்றானுக்கு மயங்காதீர் அவன் உன் உயிரை எடுப்பான்; சான்று உங்களுக்கு தெரியும்.

இனியாவது திருந்துங்கள்! பொருள் பிச்சை கேட்ட காலம் போய் உயிர் பிச்சை கேட்கிறான் தமிழன் ஒருவன்.

தயங்காமல் முடிவெடுங்கள் தமிழர் இருக்கிறோம் ஆறுகோடி பேர்!!

@ஆய்வு:
சு.பிரசாத் (தமிழ்நாடு)

@ஆய்தன்:-
அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும்


@நன்றி:தமிழ்த்தேசியம்

சனி, 28 மார்ச், 2009

அநீதியின் பக்கம் போய்விட்டது இந்தியா


இலங்கை புல்மோட்டையிலும், மணலாற்றிலும் இந்திய இராணுவத்தினர் நேரடியாக போரில் இறங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வல்லரசான இந்தியா ஏற்கனவே 1989 களில் ஒரு சிறிய இயக்கமான விடுதலைப் புலிகளிடம் தோற்று ஓடியது. தன் சுய லாபத்துக்காக ஈழப் பிரச்சினையில் விளையாடிய இந்தியா கையை சுட்டுக் கொண்டது.

இப்போது திரும்பவும் தனது கொலைக்கரங்களை ஈழத்தை நோக்கி திருப்பியிருக்கிறது. சீனா பக்கமோ, பாகிசுதான் பக்கமோ சென்றால் அவர்கள் தர்ம அடி கொடுப்பார்கள். அதனால்தான் என்னவோ, இளிச்சவாயர்கள் என்று எண்ணி தமிழர்களை சீண்டிக் கொண்டிருக்கிறது.

அதி நவீன ரேடார்கள், ஆயுதந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், செயற்கைக் கோள்கள் மூலம் உளவு சொல்லி இந்தியா நேரடியாக போரில் இறங்கினாலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை. போர் இழுத்துக் கொண்டே செல்கிறது. 70,000 இராணுவத்தினர், கணக்கு வழக்கில்லாமல் எண்ணற்ற ஆயுதங்கள், 7 நாடுகளின் உதவிகள், இத்தனையும் கொண்டு இலங்கை அரசு போரை நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. புலிகளின் சூழ்நிலையில் வேறு எந்த பெரிய இராணுவமாக இருந்தாலும் இந்நேரம் தோற்கடிக்கப்பட்டிருப்பார்கள்.

புலிகளும், தமிழர்களும் ஆக்கிரமிப்பு போரை நடத்தவில்லை. அவர்கள் தங்கள் பூர்வீக பூமியை அடிமைத்தளையில் இருந்து மீட்பதற்காக விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறார்கள். தர்மமும் நீதியும் அவர்களின் பக்கம் உள்ளது. தமிழர்களுக்கு இலங்கையில் ஒரு ஊசி முனையளவு நிலம் கூட தரமாட்டோம் என்று துரியோதனன் போல் கொக்கரித்த மகிந்தவுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறது.

எவராலும் வெல்ல முடியாது என்று கருதப்பட்ட பிதாமகன் பீசுமர் மகாபாரதப் போரில் தோற்றுப் போனார். அக்கிரமத்திற்கும், அநீதிக்கும் துணை போனதால்தான் அவர் தோற்க நேர்ந்தது.

இந்தியா அல்ல, எந்த வல்லரசு உதவி செய்தாலும் எத்துணை வலிமையாக இருந்தாலும் அநீதியின் பக்கம் இருந்தால் வெற்றி கிட்டாது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். எத்தனை அடக்குமுறைகளை ஏவினாலும், கொன்று குவித்தாலும், அக்கிரமம் செய்தாலும் சாம்பலிலிருந்தும் தமிழர்கள் மீண்டெழுவார்கள். விடுதலையை அடையும் வரை இந்த போராட்டத்தை தொடருவார்கள்.

'தருமத்தின் வாழ்வுதனை சூது கௌவும்; தருமம் மறுபடியும் வெல்லும்'.

@தமிழகத்திலிருந்து அதிபதி.

@ஆய்தன்:-
கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்றல் அதுவே படை (அதி:77 குறள்:765)


வியாழன், 26 மார்ச், 2009

இராமர் பாலமும் மதவாதப் பூச்சாண்டியும்தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்பட வைக்க பல ஆண்டுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு ஒரு வழியாக தற்பொழுது தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது அத்திட்டத்தை செயல்படுத்தினால் இராமர் பல இலட்ச வருடங்களுக்கு முன்பு கட்டியதாக மதவாதிகளால் சொல்லும் இராமர் பாலம் இடிபடும் என்று கூறி மதவாத சக்திகள் பூச்சாண்டிகள் காட்டி வருகின்றன. (விரிவாக)


@ஆய்தன்:-
ஏமாறுபவன் இருக்கும் வரை.. ஏமாற்றுவதற்கு எமட்டன்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்..!!

திங்கள், 23 மார்ச், 2009

272 படிகளில் முழங்காலால் ஏறி முருகனிடம் வேண்டுதல்


இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் துயரங்கள் நீங்கி புதுவாழ்வு பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் மலேசிய இளைஞர் ஒருவர் அங்குள்ள பத்துமலை முருகன் கோவில் படிக்கட்டுகளில் தனது முழங்காலால் ஏறி பிரார்த்தனை மேற்கொண்டார்.

கோலாலம்பூர் செந்தூல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சவுந்தரராஜா நாயுடு என்பவரே. அண்மையில் பத்துமலையில் மேற்கண்ட சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அப்போது பத்துமலைக் கோவிலில் உள்ள 272 படிகளையும் முழங்காலினாலேயே ஏறி இறங்கினார்.

இவருக்கு குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் துணை புரிந்தனர். "இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதி பிறக்க வேண்டி பத்துமலை முருகப்பெருமானிடம் பிரார்த்தனைச் செய்தேன். ஈழத் தமிழர்கள் தினம் தினம் செத்து மடிவது கொடுமையிலும் கொடுமை" என்று அவர் துயரத்தோடு கூறினார்.


@ஆய்தன்:-
தமிழ்க்கடவுளே.. தமிழனைக் காப்பாற்று..!

ஞாயிறு, 22 மார்ச், 2009

விடுதலையை வென்றெடுக்கும் காலம் கனிகிறது


திரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது நம்பிக்கையுடன் முகம் கொடுத்துவரும் நிலையில் விடுதலையை வென்றெடுக்கும் காலம் எல்லா வகையிலும் கனிந்து வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்புக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (20.3.2009) மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா சொல்வது போல நாம் 17 சதுர கிலோ மீற்றர்களுக்குள் உள்ள இயக்கம் அல்ல. தமிழ் மக்கள் இருக்கும் இடம் எங்கும் வியாபித்து நிற்கும் உலகு எங்கும் கூட வியாபித்து தமிழ் மக்களின் உள்ளங்களின் உணர்வாக இருக்கும் விடுதலை அமைப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அண்மைய நாட்களிலும் சிங்களப் படைகளின் முன்னணிப் படைகள் பாரிய சிதைவுகளை சந்தித்திருக்கின்றன. பாரிய உயிரழிவுகளை சந்தித்திருக்கின்றன. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை. இனி நடக்கப்போவதும் இல்லை.

கடந்த புதன்கிழமைக்கு முன்நாள் புதுக்குடியிருப்பின் நான்கு முனைகளில் உச்சகட்ட பலத்துடன் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நகர்வுகள் மீதான முறியடிப்புத் தாக்குதல்களில் 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவில் காயமடைந்துள்ளனர்.

இந்த நாட்களுக்கு முதல் மூன்று நாட்களில் 480 படையினர் கொல்லப்பட்டது எதிரியாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். இவை எல்லாம் படையினரின் உளவுரணை உடைக்கும் தாக்குதல்களாகும். நாம் ஒரு வலுவான இயக்கம். இலகுவில் எம்மை அழித்துவிடலாம் என எதிரி கணக்குப் போட்டு விடலாம் என நினைக்கின்றான்.

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெருவெற்றியாக பரப்புரை செய்கின்றான். படை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எமது உறுதியான நிலைப்பாட்டில் எமது மக்களின் வளமான எதிர்காலம் நோக்கிய திருப்பங்கள் ஏற்பட்டே தீரும்.

உயிரும் உடலும் போல் ஒன்றாக நிற்கும் நாம் இன்னும் பற்றுறுதியுடனும் நம்பிக்கையுடனும் எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரண்டு முறியடிப்போம்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் கொடுத்திருக்கின்ற உயர் அழுத்தத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் மக்கள் சிலர் எதிரிகளின் பிடிக்குள் செல்கின்றனர். அவர்கள் எதிரியின் சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். இதற்காகவா இந்தளவு துன்ப துயரங்களை இதுவரை காலமும் பட்டோம்.

நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் நமது மக்கள் அவற்றை பொறுத்து அவலங்களின் மத்தியில் வாழ்கின்ற நிலைமை பெரும் விடுதலைப் பங்களிப்பாகும்.

எதிரியின் நடவடிக்கைக் காலம் காலக்கெடுக்களை தாண்டி படையினரின் இழப்புக்களை அதிகமாக்கி அவர்களின் களப் படைக் கட்டமைப்புக்களில் சிதைவுளை ஏற்படுத்தி அவர்களின் உளவுரணை வீழ்த்தி வருகின்றோம்.

கடைசிக் கட்டமாக சேடம் இழுத்த நிலையில்தான் படையினர் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். அவர்களின் நகர்வுகளை தேக்கி தாக்குப்பிடித்து தொடர்ந்து பலத்த இழப்புக்களை ஏற்படுத்தி உளவுரணை உடைத்துக் கொண்டிருக்கின்றோம். இதற்கு எமது மக்களின் முழுப்பங்களிப்பும் உண்டு.

எம்மை இலகுவில் அழித்து விடலாம் என்ற எதிரியின் கணக்கை தகர்க்கும் வல்லமை எம்மிடம் உண்டு. அதனை நாம் உறுதியாகச் செய்வோம். எவரும் அஞ்சவோ கலங்கவோ ஐயுறவோ தேவையில்லை. உறுதியுடன் தளராது குழப்பம் இல்லாது செயற்படுங்கள். எதிரியின் தாக்குதல்களில் உங்களின் உயிர்களை காத்து வைத்துக்கொள்ளுங்கள் என்றார் சி.இளம்பருதி.

@நன்றி: புதினம்

@ஆய்தன்:-
தமிழீழம் பற்றியே எங்கும் பேச்சு..!
தனிநாடு ஒன்றே எங்கள் மூச்சு..!!

வெள்ளி, 20 மார்ச், 2009

ஈழ விடுதலை நெருங்கிக் கொண்டிருக்கிறது

ராசபக்சேவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.

ஏனென்றால், போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரசு ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது.

ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.


இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று இராசபக்சே கணக்கு போட்டார்.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை இராசபக்சே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கனிணி கூட திணறும் போலிருக்கிறதே? இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்?.

பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த இராசபக்சேதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரசு அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.


இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள்.

வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். இராசிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது.

ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.

@தமிழ்நாட்டிலிருந்து அதிபதி.
@ஆய்தன்:-
தமிழீழம் மலரும் நன்னாள் - உலகத்
தமிழரின் விடுதலைப் பொன்னாள்

உலகமெங்கிலும் ஒரே உணர்வு; தனித்தமிழ் நாட்டுணர்வு


மிழ் மண்ணை மீட்டெடுக்கும் போராட்டம்
ஓயவில்லை இன்னும் தமிழ் ஈழத்தில்..

தமிழ் இனத்தை விடுவிக்கும் சமர்களம்
ஓயவில்லை இன்னும் தமிழ் ஈழத்தில்..

ஈழத்தில் எழுச்சிகொண்ட வீரப்போராட்டம்
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது..

ஈழக்காட்டில் பொந்திடை மூண்டத் தீ
இன்று உலகம் முழுவதும் குமுறுகிறது..

உலகத் தமிழர் உள்ளமெல்லாம் ஒரே உணர்வு
தனித்தமிழ் நாட்டுணர்வு..

உலகத் தமிழர் உறவுகளெல்லாம் ஒரே அணியில்
தமிழினத் தலைவர் அணியில்..

உலகத் தமிழர்கள்
ஓரணியில் நின்று
ஒரே உணர்வில் திரண்டு
ஒரு தனி நாட்டிற்காக
ஓய்வு ஒழிச்சலின்றி
ஒருமனதாகப் போராடும்
போராட்டங்களின் தொகுப்பு:-
@ஆய்தன்:-
வெற்றிகளை ஈட்டும்வரை அஞ்சுவதில்லை - ஈழ
வெற்றிக்கொடி கட்டும்வரை துஞ்சுவதில்லை!


செவ்வாய், 17 மார்ச், 2009

பான் கீ மூனுக்குத் தமிழர்களின் மனு

கடந்த 16.3.2009 ஆம் நாளை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அனைத்துலகம் அங்கீகரிப்பதற்கான நாளாக பிரகடனப்படுத்தி 'சாவிலும் எழுவோம்' கண்டனப் பேரணி ஊர்வலம் செனீவாவில் உள்ள ஐ.நா.முன்றலில் நடைபெற்றது.

தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் மாபெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணியாக நகர்ந்து சென்றனர்.

அவ்வமயம், சுவிஸ் தமிழர் பேரவையால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட மனுவின் விபரம்:
மேதகு திரு. பான் கீ மூன்
பொதுச் செயலாளர்
ஐக்கிய நாடுகளின் செயலகம்
நியூயோர்க்
செனீவா.
16.03.2009

மேதகு ஐயா,

தமிழ் மக்களின் அவல நிலை

சுவிசில் உள்ள நாடற்ற தமிழர்களின் 30-க்கும் அதிகமான அமைப்புக்களின் ஒன்றியமான சுவிற்சர்லாந்தின் தமிழர் பேரவை தங்களால் சோர்வின்றி இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு ஒரு நிலையான அமைதித் தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறது. ஆனாலும் ஐ.நா.வினாலும் ஐ.நா. துணை அமைப்புக்களாலும் வெளியிடப்பட்டு வரும் சில அறிக்கைகளையிட்டு திருப்தி கொள்ள முடியாதுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் 1905 ஆம் ஆண்டில் இருந்தே அமைதி அரசியல் வழியில் தாம் இழந்துவிட்ட தன்னாதிக்கமான இறையாண்மையை மீளப் பெறப் போராடி வந்துள்ளனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரம், மொழி மற்றும் பண்பாட்டு தனித்துவத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட அனைத்து முறையான நேர்மையான முயற்சிகளும் தோல்வி கண்ட பின்னரே ஆயுதப் போராட்டத்தை தொடங்கினர்.

தமிழ் மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மை இனத்தவர் மீதும் அரசுகளால் முறையே 1956, 1958, 1961, 1970, 1977, 1980, 1983 என மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகளும் 1987 முதல் இன்று வரை தொடரும் இராணுவ நடவடிக்கைகளும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவர்களின் ஆதரவுடன் தமது துயரங்களுக்கு ஒரு நிலையான தீர்வைக் காணத் தமிழர் அயராது முயன்று வருகின்றனர்.

எனினும், அனைத்துலக அரங்கின் நாயகர்கள் தள யதார்த்தத்தை உதாசீனம் செய்து தமது அரசியல் பொருளாதார நலன்கள் சார்ந்த விருப்பங்களுக்கு அமைய மாறுபட்டு நடப்பதாகத் தெரிகிறது. இதற்கு அண்மைக்கால உதாரணமாக, வன்னித் தமிழ் மக்களை அவர்களின் விருப்பம் இன்றியே அவர்களது வாழ்விடங்களில் இருந்து இடம் மாற்றும் கோரிக்கை அமைகிறது.

இத்தகைய கோரிக்கையை விடுப்பவர்கள், அத்தகைய செயற்பாடு அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் சிங்கள வல்லாதிக்க அரசின் இராணுவ நோக்கங்களுக்கே துணை போவதைக் கவனிக்கத் தவறுகின்றனர்.
அதற்கும் அப்பால், தமிழ் மக்களை அகற்றி இராணுவத் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் எந்த ஒரு முயற்சியும் அவர்களின் அடிப்படை உரிமைகளை முற்று முழுதாக மறுக்கும் நிலையில் இப்பாவத்தை ஐ.நா. கூடச் செய்ய முற்பட்டிருக்கக் கூடாது.

மேலும், உண்மையான சுயாதீனமான ஆதாரங்கள் இல்லாது மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடுத்து வைத்துள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஐ.நா.வின் நேர்மை, நடுநிலைமை என்பவற்றைச் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.

இதன் மூலம் சிறிலங்கா அரசின் பயங்கரவாத ஒழிப்புப் போர் எனப் பிழையாகக் கூறி நடத்தும் தமிழருக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு, இன அழிப்புப் போர்க் குற்றங்களுக்கு ஐ.நா. உடந்தையாகச் செயற்படும் குற்றம் செய்வதாகக் கருத இடமளிக்கிறது.

இப்பொழுது வன்னியில் 300,000-க்கும் அதிகமான மக்கள் போதுமான அளவு உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றிப் பட்டினியாலும் கடுங்காயங்களாலும்; நோயாலும் அவஸ்தைப்படுகின்றார்கள்.

சிறிலங்கா அரசினால் 'பாதுகாப்புப் பிரதேசம்' என அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்தவர்களும் மருத்துவமனைகளில் உள்ளவர்களும் தொடர்சியான எறிகணை குண்டுவீச்சு மழைக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கானோர் நாளாந்தம் கொல்லப்பட்டும் காயப்பட்டும் வருகின்றனர்.

கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்து எறிகணைகள் அப்பாவிப் பொதுமக்கள் மேல் இரவு - பகல் பாராது மழைபோல் பொழிவதால் அவர்கள் மழைநீர் நிறைந்த மண் பதுங்கு குழிகளுக்குள் போதிய உணவும் சுத்தமான குடி நீரும் இன்றித் தவிக்கும் நிலை உள்ளது.

அனைத்துலக போர்ச் சட்டங்களை மீறும் வகையில் உணவு மருந்து என்பவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் குற்றங்களை சிறிலங்கா அரசு செய்கிறது என நாம் அனைத்துலகத்தின் கவனத்துக்குப் பல தடவைகள் விளக்கி உள்ளோம். அரசு வன்னிக்கு உணவு, மருந்துகளை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கிறது என வெறுமனே கூறுவதால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிட்டிவிடாது.

எனவேதான் அனைத்துலக சமூகத்திடம் இருந்து உருப்படியான உறுதியான செயல் வடிவங்களைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக சமூகத்தினால் இதனைச் செய்ய முடியாது என்றால் நாமே இவற்றை வன்னிக்கு எடுத்துச் செல்ல எமக்கு உதவுமாறு கேட்கிறோம்.

இந்திய அரசை இந்தப் போரில் ஒரு முக்கிய பங்காளியாக நாம் பார்ப்பதால் அவர்களின் கைகளில் எமது நோயாளிகளையும் காயப்பட்டவரையும் கவனிக்கும் பொறுப்பை நாம் ஒப்படைக்க முடியாதுள்ளது.

ஏதிலியான ஈழத் தமிழரான முருகதாசு என்பவர் ஐ.நா. முன்றலில் அதிஉயர் தியாகமான தீக்குளிப்பு மூலம் தமிழ் மக்களின் அவல நிலையைச் அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வுக்கான ஒரு தூண்டுதலுக்கு வழி தேட முயற்சித்தார். ஆயினும் இதுவரை அவ்வாறான எந்தவித உருப்படியான முன்னெடுப்பும் இதுவரை தென்படவில்லை.

தென்னிலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தெடுப்பின் தரவுகள் சிங்கள மக்கள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றது.

ஏனெனில், அவர்கள் சிறிலங்கா, சிங்கள பௌத்த தேசம் என்பதை வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அந்தத் தீவில் வேறு எவரும் வாழும் உரிமை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

ஏற்கனவே தமிழ் மக்களும் போதும் போதும் எனும் அளவுக்கு துன்பப்பட்டுவிட்டதால் பிரிந்து செல்லவே விரும்புகின்றனர். இப்படியான நிலையில் அனைத்துலக சமூகம் எப்படித் தமிழர்களை சிறிலங்காவின் ஒற்றை ஆட்சிக்குள் வாழ அறிவுரை வழங்க முடியும்?

சிங்கள அரசுகளிடம் நீதியை எதிர்பார்த்து முன்னரும் நாம் மிகவும் கேவலமாக ஏமாந்து விட்டோம் என்பதை முழு உலகமே அறியும். இந்த உண்மையை பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு சாட்சியமாக உள்ளது. இந்த நிலையில் நாம் அனைத்துலக சமூகத்திடம் உள்ளக சுயாட்சி அடிப்படையில் ஒரு தீர்வை எதிர்பார்க்கிறோம்.

அனைத்துலக சமூகத்தை தூண்டும் வகையில், சுவிசில் வாழும் ஏதிலித் தமிழர்களாகிய நாம், ஐ.நா. முன்றலில் மார்ச் 5 ஆம் நாள் முதல் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தி வருகிறோம்.

வன்னி மக்களுக்கு உடனடி உணவும் மருந்தும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும் எனவும், உடனடிப் போர் நிறுத்தம் தேவை; என்பதை வலியுறுத்தியும் நாம் இதனை மேறகோள்கிறோம். எமது கோரிக்கைகள் நிறை ற்றப்படும் வரை இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வைத் தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.

ஐ.நா. பொதுச் செயலாளர் என்ற வகையில் காலத்தின் கட்டாயம் கருதி இந்த இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்தும் உருப்படியான நடவடிக்கையினைத் தாங்கள் மேற்கொள்வீர்கள் என நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தங்களின் மேலான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

சண் தவராஜா (துணைத் தலைவர்)
தம்பிப்பிள்ளை நமசிவாயம் (செயலாளர்)

@ஆய்தன்:-
உலகத்தின் செவிகள் செவிடாகிப் போனதா?
உலகத்தின் வாய்கள் ஊமையாகிப் போனதா?
உலகத்தின் பார்வைகள் குருடாகிப் போனதா?
உலகத்தின் மனங்கள் இறுகித்தான் போனதா?

புதன், 11 மார்ச், 2009

அவசர அழைப்பு: உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம்

லகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகுமாறு தமிழகம் சென்னையில் இருந்து தமிழக மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-


கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய‌ இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக‌ இருக்கின்றனர்.

பச்சிளம்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இள‌ம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த‌ அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசை கண்டித்தும் சர்வதேச சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கும் தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா, இலங்கையில் உள்ள‌ தாயகத் தமிழர்களும், 130 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் 12 மணி நேர உண்ணாநிலையை (இரு வேளைகள்) கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வீடுகளில் இருப்போரும், பணியிடங்களில் இருப்போரும் தத்தமது இடங்களில் உண்ணா நிலையை தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த போராட்டத்தினால் பலன் இருக்காது என்று எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் அனைவரும் இந்த‌ மாபெரும் போராட்ட‌திற்கு ஒத்துழைப்பு ந‌ல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பணியிடங்களிலோ, மற்ற‌ இடங்களில் இருந்து கொண்டோ நீங்கள் நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் மற்றவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நலச் சங்கங்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறைகளில் இருக்கும் கைதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

ஆகவே, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பினர் இந்த உண்ணாநிலைப் போரட்டத்தை தத்தமது நாடுகளில் உத்வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பார்வையற்றோர் 6 பேர் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களால் முடியும் போது நாம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது பெரிய காரியமில்லை.


கொத்துக் கொத்தாக மடியும் உறவுகளைக் காக்க
அனைவரும் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

இவ‌ண்,
தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை.

@ஆய்தன்:-
ஒவ்வொரு தமிழனும் உண்ணாநிலையில் இருப்போம்
ஈழத்துத் தமிழனின் துயர்நீங்கத் துணை நிற்போம்..!!

திங்கள், 9 மார்ச், 2009

வாக்கெடுப்பு (6):- முடிவு


தமிழ்ப் பள்ளிகளில் கணிதம் அறிவியல் எவ்வாறு கற்பிக்கப்படுதல் நலமானது?


1.தமிழில்:- (66%)
2.ஆங்கிலத்தில்:- (14%)
3.இருமொழிகளில்:- (26%)

பி.கு:-கடந்த 7.3.2009இல் கணிதம் அறிவியல் பாடங்கள் தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோலாலும்பூரில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. அதன் விவரங்களை விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்.


@ஆய்தன்:-
வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்..!

செவ்வாய், 3 மார்ச், 2009

'இன அழிப்பின் விளிம்பில் ஈழத்தமிழர்கள்' மாபெரும் கூட்டம்மலேசிய வரலாற்றில் முதன்முதலாக, ஒரு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், நாடாளுமன்ற எதிரணி தலைவர், மூத்த எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி இலங்கை அரசாங்கத்தின் இனவெறிப் போக்கை கண்டித்து பேசவுள்ளனர். மலேசிய தமிழர் வரலாற்றில், இதுநாள் வரையிலும் இலங்கை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்ட பொழுதிலும், இம்முறை நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தின் வழி மலேசிய மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். (விரிவான செய்தி)
@ஆய்தன்:-
தமிழர்கள் அணிதிரள்வோம் - ஈழத்
தமிழர்கள் துயர்தீர்ப்போம்..!