களத்தில் நிற்கும்...
எனது அன்புள்ள அண்ணா அக்காக்களே !
உங்களின் உடன்பிறவா சகோதரி எழுதிக்கொள்வது......
என்னுடைய முகத்தை நீங்கள் அறியாத போதிலும் என்னுடைய உள்ளத்தை நீங்கள் அறிய நான் விரும்புகிறேன்.
நான் ஈழத்தில் பிறந்தவள் அல்ல. என்னுடைய முன்னோர்கள் ஈழத்தாய்க்கு பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கவில்லை.
ஆனால், தமிழர்களாகப் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர். தமிழர்களாய் பிறந்ததால் தங்களை எங்கள் உறவுகளாய் பெற்றிருக்கிறோம்.
தமிழினத்தின் வீரம் என்பது - அன்று சேர,சோழ,பாண்டியனின் வீரத்திலிருந்து - இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற தங்களின் மாபெரும் வீரம் வரைக்கும் வந்து நிற்கிறது.
இந்தப் போராட்டம் ஈழத்தமிழர்களின் விடுதலையை மட்டும் தழுவி நிற்கவில்லை - இது ஒட்டுமொத்த தமிழர்களின் விடுதலையையும் தழுவி நிற்கிறது.
தமிழர்கள் என்ற வகையில், இன்று நாம் ஒரே சேனையில், ஒரே தலைமையின் கீழ் எழுச்சி கொண்டு நிற்கிறோம்.
பகைவனிடம் இருந்து தமிழர்களுடைய சுதந்திரத்தை நிலை நாட்ட களத்தில் நீங்கள் ஒரு புறமும் - உலக நாடுகள் எங்கள் உரிமைப் போரட்டத்தை அங்கிகரி என்ற உணர்வெழுச்சியுடன் உலகத் தமிழர்களாகிய நாங்கள் மறுபுறமுமாக தங்களுடன் கலந்து நிற்கிறோம்.
எங்களுடைய மக்கள் சுதந்திரம் பெற உலக தமிழர்கள் ஐக்கிய நாடு சபைக்கு எழுதாத மனுவும் அல்ல விடுக்காத கோரிக்கையும் அல்ல, ஏன் நடத்தாத கண்டன ஊர்வலமும் அல்ல.
எந்தெந்த நாடுகள் அவர்களின் உரிமைக்காக போராட்டம் நடத்தி பின்பு தங்கள் நாட்டை பெற்றுக்கொண்டார்களோ - அந்தந்த நாடுகளிலிருந்தும் - அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் - அவர்களின் மொழியில் எமது உரிமை
போராட்டத்தை அங்கிகரிக்குமாறு - தொடர்ந்து குரலை எழுப்பி வருகிறோம்.
காலையில் எழும்பி நாங்கள் முழிப்பது சூரியனின் முகத்தில் அல்ல. கணினியின் முகத்தில் தான்.
ஏன் தெரியுமா ?
உலக தேசத்தில் எங்கு வாழ்ந்தாலும் எமது உயிர்நாடி உங்களைப் பற்றியே துடித்துக்கொண்டு இருக்கிறது.
உலகப்படை பலத்தை எல்லாம் திரட்டி - பகைவனவன் போர் மோகம் கொண்டு எங்களின் தமிழின போராட்டத்தை இந்தா அழித்துவிடுகிறேன் என்று போர் தொடுத்து நிற்கும் வேளையில் - எது வருகினும் தமிழின போராட்டத்தை அழித்துவிட முடியாது என்று நீங்கள் வீரமுடன் களத்தில் களமாடும் வேளை, எங்கள் இதயத்துடிப்பு உங்களைப்பற்றியே தினமும் துடித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால், அண்ணா அக்கா...
எப்படி உறங்கிக் கொண்டிருப்பவர்களைப் போல் நடிப்பவர்களை ஒரு போதும் தட்டியெழுப்ப முடியாதோ அப்படி தான் ஈழத்தமிழர்களின் அவல நிலைமையை இந்த உலகத்திற்கு எடுத்துரைப்பதென்பதும் ஒரு கடினமான விடயமாகிவிட்டது.
ஆனால், எங்கள் மனம் தளர்ந்துபோகவில்லை. தீவிரவாதம் என்ற பெயரில் எங்கள் சுதந்திரப் போராட்டத்தை முடக்க அவர்கள் எண்ணினாலும், தடைகள் ஒரு போதும் உலக தமிழர்களின் சுதந்திர தாகத்தை அடக்கி விட முடியாது.
உலகத்தில் எந்த மூலையாக இருக்கட்டும் அங்கங்கே எங்களுடைய குரலை எழுப்பிக் கொண்டே இருப்போம் - ஒவ்வொரு நாளும் எழுப்பிக் கொண்டே இருப்போம்.
களத்தில் நிற்க்கும் உங்களை எனது உறவாய் பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
உங்களை என் இனத்தவர் என்று கூற நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.
களத்தில் நிற்பது நீங்கள் மட்டும் அல்ல உலக தமிழர்கள் உங்கள் மேல் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கையும் தான்.
அண்ணா அக்காக்களே...
நீங்கள் வீரமுடன் களத்தில் களமாடும் வேளை, எங்கள் இதயத்துடிப்பு உங்களைப்பற்றியே தினமும் துடித்துக்கொண்டிருக்கும் !
அன்புடன்,
உங்கள் உடன்பிறவா சகோதரி,
-கலைவாணி-
@ஆய்தன்:-
எமது உடன்பிறப்பே கலைவாணி..
இந்த மடலில் ஒட்டுமொத்த உலகத்தமிழரின் மனத்தைப் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் அம்மா..!
உலகத் தமிழரின் ஒவ்வொரு இரவும் ஈழத்தின் விடியலை எண்ணியே முடிகிறது; ஒவ்வொரு பகலும் ஈழத்தின் விடுதலையை எதிர்பார்த்து விடிகிறது.