வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 13 ஜனவரி, 2009

தமிழ்ப் புத்தாண்டே தமிழீழம் கொடு!

ஆங்கிலம் 14.1.2009, சுறவம்(தை) 1ஆம் நாள் திருவள்ளுவராண்டு 2040 பிறக்கிறது. அந்தத் தமிழ்ப் புத்தாண்டு நன்நாளை வரவேற்று இந்தப் பதிவு....


தமிழ்ப் புத்தாண்டே
தமிழ்ப் புத்தாண்டே – 2040
திருவள்ளுவர் தொடராண்டே...

எங்களுக்குப் புத்தாண்டில்
என்ன கொண்டு வருகிறாய்?
எந்தமிழர்க்குப் புத்தாண்டில்
என்ன தரப் போகிறாய்?

நலமான உடல் வேண்டாம்
நலிவற்ற உள்ளம் வேண்டாம்
நாடுகேட்டுப் போராடும் – ஈழத்
தமிழன் மண்ணை மீட்டுக்கொடு!

வளமான வாழ்வு வேண்டாம்
வேளைக்கு உணவு வேண்டாம்
வீடிழந்து வாடுகின்ற – ஈழத்
தமிழன் வாழ்வை திருப்பிக்கொடு!

கைநிறைய காசு வேண்டாம்
காலடியில் கம்பளம் வேண்டாம்
காட்டுக்குள் சிறைபட்ட – ஈழத்
தமிழு டன்பிறப்பை விடுதலையிடு!

காதுக்கினிய கவிதை வேண்டாம்
கண்ணுக்கினிய கனவு வேண்டாம்
காலத்தைத் தொலைத்துநிற்கும் – ஈழப்
பிஞ்சுகள் துயரை ஆற்றிவிடு!

சூரியப் பொங்கல் வேண்டாம்
சுவைகூட்டும் செந்தேன் வேண்டாம்
சோர்வின்றி படைநடத்தும் – ஈழப்
போராளிக்(கு) இறவா நிலைகொடு!

இத்தனையும் கேட்கின்றோம் எதற்காக?
ஈழத்தமிழ் மண்ணொன்றே - உலகத்
தமிழர்க்குக் கதியாகும்; அதற்காக!
தமிழீழம் மலர்வதொன்றே – உலகத்
தமிழர்க்கு விடிவாகும்; அதற்காக!
  • @ஆய்தன்

2 கருத்துகள்:

கோவி.மதிவரன் சொன்னது…

உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள். தமிழீழம் வெகு விரைவில் மலர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

தமிழீழ விடுதலையே தமிழர்க்கு விடுதலை

மு.வேலன் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்!