வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 27 டிசம்பர், 2007

மலேசியாவில் தனித்தமிழ் நாள்காட்டிதவத்திரு மறைமலை அடிகளார் தொடக்கி வைத்த தனித்தமிழ்க் கொள்கை தமிழ்க்கூறு நல்லுலகில் வெற்றிகண்டுள்ளது என்பதற்குப் பறபல புறச்சான்றுகளை முன்வைக்கலாம். அவற்றுள் மிகப் புதியதொரு சான்றாகவும் சாதனையாகவும் அண்மைய வரலாற்று நிகழ்வென்றைக் கூறலாம். தனித்தமிழில் நாள்காட்டி வெளிவந்துள்ளது என்பதே அஃது. தனித்தமிழில் சொல்லமுடியாதது எதுவுமில்லை என்பதற்கு இந்த நாள்காட்டி நற்சான்று. தனித்தமிழை வென்றெடுக்கும் முயற்சியில் இந்த நாள்காட்டி ஒரு மைல்கல். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனித்தமிழை மேலும் ஒருபடி உயர்த்தி இருக்கின்ற இந்த நாள்காட்டி மலேசியத்தில் வெளிவந்திருப்பது மாபெரும் வெற்றியும் சாதனையுமாகும்.


இந்த நாள்காட்டியைப் பத்தோடு பதினொன்றாக நினைத்துவிடக் கூடாது. நாளை மட்டும் காட்டுவதுதான் நாள்காட்டி. ஆனால், இஃது நாளை காட்டி; தமிழ் எண்ணைக் காட்டி; தமிழ் கணியத்தைக்(சோதிடம்) காட்டி; தமிழர் கண்ட வானியல் கலையைக் காட்டி; தமிழர் கண்ட கணக்கியல் மரபைக் காட்டி நம்மை வியக்க வைக்கிறது! விரும்ப வைக்கிறது!


உண்மையில் தமிழ்க்கூறு நல்லுலகில் வேறு எங்குமே நிகழ்ந்திடாத மிக அரிய; மாபெரிய முயற்சியாக - மீட்டெடுப்பாக - ஆக்கமாக இந்த நாள்காட்டி திகழ்கிறது. உலகின் பார்வைக்கும் சிந்தனைக்கும் ஆய்வுக்குமாக இந்த நாள்காட்டியில் பல உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன. உலகம் தமிழைத் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையை இந்த நாள்காட்டி ஏற்படுத்தி உள்ளது.


இப்படியொரு செய்தற்கரிய சாதனையை மிக அமைதியாகச் செய்து முடித்திருக்கும் தமிழியல் ஆய்வுக் களம் என்ற அமைப்பையும் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்திருக்கும் இர.திருச்செல்வம் என்பாரையும் தமிழுலகம் கைகூப்பித் தொழவேண்டும்; உள்ளத்துள் வைத்து போற்றவேண்டும். (மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்)


  • ஆய்தன் : தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்! தனித்தமிழ் வெல்லும்!

வெள்ளி, 14 டிசம்பர், 2007

மக்கள் தொலைக்காட்சி வருக! வாழ்க!முடக் குமுகாயத்தின்
மூன்றாம் கால்!
மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் மண் பயனுறும்
'ஒளி' உரம்!
மக்கள் தொலைக்காட்சி.

மறத்தமிழன் மாண்பின்
முரசு ஒலி!
மக்கள் தொலைக்காட்சி.

தொல்காப்பியத் தமிழின்
ஒளிச்சுவடி!
மக்கள் தொலைக்காட்சி.

ஒளிமயமான எதிர்காலக் காட்டி
தமிழுக்கும் தமிழனுக்கும்!
மக்கள் தொலைக்காட்சி.

ஆய்தன்: உலகத் தமிழரின் இல்லத்திரை! மக்கள் தொலைக்காட்சி நல்லத்திரை!