வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 25 ஜூலை, 2007

தமிழ் அழிவாரியம்

நம் நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சியையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்ச்சியையும் இலக்கெனக் கொண்டு செயல்படும் தமிழ் அறவாரியம் வெளியிடும் 'திசைகள்' செய்தி இதழைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அவர்களின் பணிகள் அருமை; நாட்டுக்கு மிகத் தேவை. அதற்காக அவர்களைப் போற்றுகிறேன். ஆனால், தமிழ் அறவாரியம் வெளியிடும் அந்த இதழில் தமிழைக் காணாமல் திடுக்கிட்டேன். அவ்விதழின் 95 விழுக்காடு பக்கங்கள் ஆங்கிலத்தில் அச்சாகி இருந்தது. ஒப்புக்குச் சப்பாணியாக தமிழுக்கு 5 விழுக்காடு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். இது என்ன தமிழ் அறவாரியமா? இல்லை, தமிழ் அழிவாரியமா? தமிழ்ப்பள்ளிக்காக குரல் கொடுப்பார்கள்; தமிழ்க்கல்விக்காக துணைநிற்பார்கள்; தமிழ்மொழியை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் அறவாரியம் தமிழுக்குக் குழி பறிப்பார்கள் என நானும் எமது மக்களும் நினைக்கவே இல்லை. தமிழ் அறவாரியம் தமிழை மறந்த வாரியமாக மாறி தமிழ் உணர்வாளர்களின் தூற்றலுக்கும் சாபத்திற்கும் தயவுகூர்ந்து ஆளாகிவிட வேண்டாம்.

இத்தனைக்கும் அதன் நிருவாக உறுப்பினர்களில் பெரும்பெரும் தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமிழ்ப் போராளிகளும் இருந்தும்கூட இப்படியொரு கேடு நிகழ்ந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக உள்ளது. தமிழ் அறவாரியம் தமது பெயருக்கு ஏற்றாற்போல் எமது இன்னுயிர்த் தமிழை முன்னெடுக்க வேண்டாமா? தமிழ் உணர்வையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா? 'டோங் ஜியாவ் ஜோங்' போன்ற சீன கல்வியாளர்கள் அமைப்புடன் கூட்டு சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் தமிழ் அறவாரியம் சீனர்களைப் போல் மொழி உணர்வைப் பெறாமல் போனது ஏன்? தன் ஆட்சிக்கு உட்பட்ட சொந்த இதழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காத தமிழ் அறவாரியம் இந்த நாட்டில் தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்கும் என்பது நம்பத்தகுந்ததா? மொழி உணர்வில் சீனர்களைப் போல் அல்லாமல் மழுங்காண்டிகளாக ஆகிவிட்ட தமிழ் அறவாரிய நிருவாக உறுப்பினர்கள் மனம் மாறுவார்களா?
  • ஆய்தன் : அடுத்த 'திசைகள்' இதழில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தால் தமிழ் அறவாரியம்! இல்லையேல் தமிழ் அழிவாரியம்!!

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளில் குறைநீக்கல் மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள மலாய்க்கார ஆசிரியர்களை அரசாங்கம் மீட்டுக்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால், சீனப்பள்ளிகளில் அமர்த்தம் செய்யப்பட்ட மலாய்க்கார ஆசிரியர்களை மீட்டுக்கொண்ட கல்வியமைச்சு தமிழ்ப்பள்ளிகளின் நிலைமையில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றது. இந்தப் ஒருதலைபட்சமான போக்கைக் கண்டித்து தமிழ் அறவாரியம் தக்க தருணத்தில் குரல் எழுப்பியுள்ளது. இந்தத் தகவல் 7.8.2007ஆம் நாள் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்திருந்தது. தமிழ்ப்பள்ளி - தமிழ்க்கல்வி நலன்காக்க மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருக்கும் தமிழ் அறவாரியத்திற்கு 'தமிழுயிர்' தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.

அன்புடன்;
ஆய்தன்.

வே. இளஞ்செழியன் சொன்னது…

வணக்கம்.

1. தங்களின் கருத்திற்கு நன்றி. அது தமிழ் அறவாரிய தலைமைத்துவத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டது. சுட்டி: http://groups.google.com/group/tamilfoundation .

2. தமிழ் அறவாரியம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டு வருகின்றது. இருப்பினும், இன்று வரை மிகக் குறைவான தமிழ் உணர்வாளர்களே தமிழ் அறவாரியத்தில் உறுப்பியம் பெற்றுள்ளனர். ஆதரவும் அளித்து வருகின்றனர். ஏன்? ஒன்று பட்டால் உண்டு சக்தி. ஒற்றுமையே பலம். ஒன்றுபடுவோம்!

c.m.elanttamil சொன்னது…

வணக்கம் ஆய்தன் ஐயா அவர்களே,தங்களின் வலைப்பூவினில் தமிழ் அறவாரியத்தைப்பற்றி தங்களின் நிலைப்பாட்டினை தெரிவித்ததிற்கு நன்றி.
தங்களின் தமிழ் உணர்விற்கு நான் மதிப்பளிக்கின்றேன்.
தமிழ் போராளிகள் எங்கிருந்தாலும் தமிழ் போராளிகள்தான் கண்டிப்பாக தமிழுக்கு குழி பறிக்க மாட்டார்கள்.தங்களின் தடிப்பான வார்த்தைகள் மனதைப் புண்படுத்துகின்றன.தமிழ் அறவாரியத்தைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் தாங்கள் 'திசைகள்' யாருக்காக நாங்கள் வெளியிடுகிறோம் என்பதினை அறியாததனால் மனம் நொந்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.எங்களின் நோக்கம் தமிழ் பள்ளிகளை வளப்படுத்துவதாகும்.எங்களுக்கு நிதி அளிப்பவர்களில் பெரும்பாலானோர் தமிழ் அறியாதவர்கள் ஆனால் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.இவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்ற காரணத்திற்காக இவர்களை ஒதுக்கி விட போகின்றோமா?.நன்கொடையாளர்களுக்கு நாங்கள் செய்யும் நடவடிக்கைகளை தெரிவிக்கும் பொருட்டே திசைகள் வெளியிடப்படுகிறது. தமிழ்மொழி இல்லாவிட்டால் தமிழ்பள்ளிகளே இல்லை என்பதனை நாங்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளோம்.தமிழுக்கு பணி செய்ய முன்வரும் அனைவருமே ஒரு தாய் மக்கள்.தமிழ் பள்ளிகள் நிலைத்தால்தான் தமிழ்மொழி இந்நாட்டில் அதிகாரபூர்வமாக நிலைக்கும்.தமிழுக்கு கண்டிப்பாக தமிழ் அறவாரியம் முன்னுரிமை கொடுக்கும்.தமிழ் அறவாரியம் அறிவியல் விழா முதற்கொண்டு ஆங்கில முகாம் வரை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தரணி உயர் மாணவர்களாக வர வேண்டும் என்ற நோக்கில் உளப்பூர்வமாக பணிகளை செய்து வருகிறது. புதிய தலைவராகவும் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கா.உதயசூரியன் ,சி.ம.திரவியம் இருவருமே தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.தமிழ் அறவாரியத்திற்கு முதுகெலும்பாக இருக்கின்ற தமிழ் உணர்வாளர்கள் முழுமையாக தமிழ் அறவாரியத்திற்கு உதவி செய்ய தொடங்கும் பொழுது தமிழ் அறவாரியத்தில் அனைத்து செய்திகளும் முழுமையாக தமிழில் வரும்.

*உங்களின் தமிழ் பணி தொடர எமது வாழ்த்துகள்

தமிழ் எங்கள் உயிர் என்பதனாலேவெல்லும்
தரம் உண்டு தமிழர்களுக்கு -இப்புவிமேலே

சி.ம.இளந்தமிழ்