வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 22 ஜூன், 2008

தசாவதாரம் நல்ல தமிழ்ப் படமா?


என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை உடை பாவனைகள்
உள்ளதுவாய் அமையவில்லை, உயிர் உள்ளதில்லை!
ஒன்றேனும் தமிழருமை உணர்த்துவதாய் இல்லை!
ஒன்றேனும் உயர்நோக்கம் அமைந்ததுவாய் இல்லை!
ஒன்றேனும் உயர்நடிகர் வாய்ந்ததுவாய் இல்லை!
ஒன்றேனும் வீழ்ந்தவரை எழுப்புவதாய் இல்லை!
இடக்ககற்றிச் சுயநலத்தைச் சிறிதேனும் நீக்கி
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
படமெடுத்தால் செந்தமிழ் நாடென்னும் இளமயிலும்
படமெடுத்து ஆடும்; தமிழர் பங்கமெலாம் போமே!

தமிழ்த் திரைப்படங்களை நோக்கி இப்படி நொந்துப் பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். இப்போது வந்திருக்கும் தசாவதாரம் திரைப்படம் வரையில் பாவேந்தர் சொன்ன பரிதாபநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த முக்கால் நூற்றாண்டில் (75 ஆண்டு) தமிழர்களிடையே திரைப்படங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பது மிக பரந்துபட்டதும் மிகவும் அழுந்தமானதும் என்றால் அது உண்மையே. தமிழ் இனத்தின் சிந்தனைப் போக்கு மழுங்கடிக்கப்பட்டதில் தமிழ்த் திரப்படங்களுக்குப் பெரும் பங்கு உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

தமிழ்த்திரைப்படச் சுவைஞர்களின் (இரசிகர்) தரம் மிக மிக கழிப்பட்டது; கீழ்த்தரமானது என்று சொல்வதில் தப்பே இருக்க முடியாது. இத்தகைய மட்டமான தரம்கொண்ட சுவைஞர்களின் எண்ணிக்கையே பெருவாரியாக இருப்பதால், மிகச் சிறந்த முறையில் எடுக்கப்படுகின்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய படங்களும் வெற்றி பெறாமல் படுத்துக்கொள்கின்றன.

நல்லப் படங்கள் வருவதில்லை என்ற குறைபாடு ஒருபுறம் இருக்க, வருகின்ற படங்களைப் பார்த்துவிட்டு எழுதப்படுகின்ற விமரிசனங்களின் தரமும் பெருமைபடும் வகையில் இல்லை என்பது மற்றொரு பெருங்குறை. ஏதோ படத்தைப் பார்த்தோம்; அந்தப் படத்தில் இதுவெல்லாம் நன்றாக இருக்கிறது; இவையெல்லாம் சிறப்பாக இல்லை; இசை ஓரளவு நன்றாக உள்ளது; ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்; உரையாடல்(வசனம்) பிசுபிசுக்கிறது; இயக்கம் உலகத் தரம் என்றெல்லாம் மேம்போக்காக மட்டுமே பெரும்பாலான விமரிசனங்கள் எழுதப்படுகின்றன.

மிகவும் நுட்பமான முறையில், ஆழ்ந்து; ஆய்ந்து எழுதப்படுகின்ற விமரிசனங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. சுவைஞன் ஒருவனின் கருத்துக்கு எட்டாத கோணத்தை எடுத்துக்காட்டும் விமரிசனமே பாராட்டுக்குரியதாக அமையும்.

அவ்வகையில், இந்த தசாவதாரம் படம் பற்றி இணையத்தில் வந்துள்ள விமரிசனங்களில் தமிழுயிரைக் கவர்ந்த இரண்டு இங்கே தமிழுயிர் அன்பர்களுக்கு வழங்கப்படுகிறது. அவற்றுள் ஒன்று மலேசியத் தமிழர் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்ட இணைப்புகளைச் சொடுக்கிப் படித்துப் பார்க்கவும். இவைபோன்ற மாறுபட்ட விமரிசனங்கள் வேறு எதையேனும் இணையத்தில் பார்த்து இருந்தால் அன்பர்கள் தெரிவிக்கவும்.


1. தசாவதாரம்: காட்சிகள் சொல்லும் கருத்துகள்

2. தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு

@ஆய்தன்:-
இன்று வருமோ.. நாளைக்கே வருமோ.. என்று வருமோ..
நல்ல தமிழ்த் திரைப்படம்..?

1 கருத்து:

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தசாவதாரம் பற்றிய என்னுடைய பார்வையை பாராட்டி எழுதியுள்ள தங்களுக்கு நன்றி மொழிகின்றேன்.

திறனாய்வுக் கலை இன்னும் வளரவில்லை என்ற தங்களின் கருத்தை வழிமொழிகின்றேன். என்னுடைய பார்வைகூட படத்தின் ஒரு கோணத்தை மட்டுமே ஆராய்ந்துள்ளதாக நினைக்கிறேன். அப்படத்தை இன்னும் வேறு சில கோணங்களிலும் ஆராய முடியும்.

தமிழுயிர் செய்திகள் மிகச் சிறப்பு. நாட்டில் தமிழுக்கு எதிராக நடக்கும் கீழறுப்புகளை நன்றாகப் படம்பிடித்துக் காட்டி தமிழ்மொழிக்கு ஆதரவாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் தமிழுயிர் பணி சிறக்கட்டும்