வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 5 ஜூலை, 2008

விடுதலை செய்திடுக! அல்லது நீதிமுன் நிறுத்திடுக!(“எங்கிருந்தோ வந்தான்” எனும் மகாகவி பாரதியாரின் பாட்டிசையில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது)இங்கிருந்தே வந்தார்! “இண்ட்ராப்பு(*1)” யாமென்றார்!
இங்கிவரை நாம்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்!
அம்மா! அம்மம்மா! - இங்கிருந்தே வந்தார்!

நூற்றாண்டில் பாதியய்யா! ஐம்பது போனதய்யா!
மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் மாறி மருகிநொந்தோம்!
எங்கள் இனமானம் காக்கவந்தீர் வாழ்கநீவீர்!
உங்கள் விடுதலைதான் வெற்றிபெறும் வாழ்கவாழ்க! (இங்கிருந்தே வந்தார்! )

இந்தியரின் வாய்ப்பிங்கே பத்துவிழுக் காடென்றார்
அஞ்சுக்குப் பத்து பழுதெனினும் தந்துவந்தார்!
“நீக்கம்; இனவிகிதம் இல்லையினி!(*2)” என்றாரே!
தேக்கமாய்ப் போனதய்யா எல்லாமே போனதய்யா!
தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் என்பதுபோல்
தொட்ட துறையெல்லாம் தட்டுக்கெட்டுப் போனதென்ன?
கேள்வி பலப்பலவே யாரே விடைசொல்வார்!
வேள்வி தொடங்கிவைத்தீர்! இண்ட்ராப்பே வாழியவே! (இங்கிருந்தே வந்தார்! )

எங்கள்தமிழ்ப் பள்ளிகளோ கழுதைதேய்ந்த கட்டெறும்பு
“பந்துவான் மோடாலாம்(*3)” பிச்சைபோல் ஈவாராம்!
கல்விநெறி சொல்லுங்கால் எல்லாம் சமமென்பார்
நம்பள்ளி என்றாலே கோயில்போல் மானியமாம்!
பன்னாட்டு மக்களிங்கே வேலைசெய்தே வாழுகின்றார்
இந்நாட்டு மக்களின்னும் “மை கார்டு(*4)” தேடுகின்றோம்!
நாள்தோறும் நல்ல அறிக்கைகள் செய்திகளாம்
கூழ்போல மக்களதை உண்டிடவோ தின்றிடவோ (இங்கிருந்தே வந்தார்! )

பாதை புரியாமல்; சோதி தெரியாமல்பேதையர்;
ஆயிரம்பல் லாயிரம்பேர் இன்னும்!
இதுபோல எத்தனையோ அத்தனையும் மாற
புதுப்பாதை தந்தவரே பாண்டவரே வாழியவே!
எங்கள் இனநிமிர்வை; இன்ப மலேசியத்தே
எங்கும் ஒளிச்சுடரை ஏற்றிவைத்த தங்கங்களே!
உங்கள் உயர்பணியை வன்முறை என்பவரார்?
பொங்கு தமிழினத்துச் சிங்கங்களே வாழியவே! (இங்கிருந்தே வந்தார்! )

விடுதலை செய்திடுக! இல்லையெனில் ஐவர்(*5)செய்த
கெடுதலைச் சொல்லிநீதி முன்னே நிறுத்திடுக!
விடுதலை செய்திடுக! இன்னே அவர்செய்த
கெடுதலைச் சொல்லிநீதி முன்னே நிறுத்திடுக! (இங்கிருந்தே வந்தார்! )


~ கரு. திருவரசு, மலேசியா. ~
  • விளக்கக் குறிப்பு:-
*1.இண்ட்ராப்பு:- (இந்து உரிமை மீட்புக் குழு) என்பது திரு.வேதமூர்த்தி, உதயகுமார் உடன்பிறப்புகளோடு, சில வழக்குரைஞர்களும் சேர்ந்து திட்டமிட்டு அமைத்துக் கொண்ட “ஆந்தியர் உரிமை மீட்புக்குழு”, அரசியல் கலப்பில்லாத ஒரு பணிக்குழு.

*2.“நீக்கம்:- இனவிகிதம் இல்லையினி! என்றாரே” அதாவது, ஆன விகிதம் ஆனிமேல் ஆல்லை, அந்த முறை நீக்கப்படுகிறது எனும் அரசு அறிவிப்புக்கு முன், நாட்டு மக்களை மலாய் மக்கள், சீன மக்கள், இந்திய மக்கள், இதர மக்கள் என நான்கு பிரிவாகக்கொண்டு (இப்பொழுதும் அப்படித்தான்) அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

*3.பந்துவான் மோடால்:- (Bantuan Modal) இந்த நாட்டில் அரசு நடத்தும் எல்லாப் பள்ளிக்கூடங்களும் ஆரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. பந்துவான் புன்னோ Bantuan Penuh, 2. பந்துவான் மோடால் Bantuan Modal. அதாவது முழு உதவிபெறும் பள்ளிகள், பகுதி உதவிபெறும் பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கடந்த 50 ஆண்டுகளாகவே பகுதி உதவிபெறும் இரண்டாவது பிரிவிலேயே இருக்கின்றன.

*4.“மை கார்டு”:- (My Kad) இது மலேசியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு வழங்கும் அடையாள அட்டை. இந்தோனேசியா, பாக்கிசுத்தான், பங்களாதேசு போன்ற பல நாடுகளிலிருந்து முறையாகவும் கள்ளத்தனமாகவும் இங்கே குடியேறியுள்ளவர்கூட ஆந்த அட்டையை எப்படியோ பெற்றிருக்கிறார்கள். நாடு விடுதலை பெற்றபிறகு இங்கேயே பிறந்த மலேசிய இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் “மை கார்டு” இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

*5 ஐவர்;- “இந்தியர் உரிமை மீட்புக்குழு”வைச் சேர்ந்த ஐந்துபேர். இவர்களை மலேசிய அரசு “இசா” (Internal Security Act)எனும் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் வைத்துள்ளது. இசா என்பது வழக்கு, விசாரணை எதுவும் ஆல்லாமல் கால வரையின்றிக் காவலில் வைப்பதற்கு வகைசெய்யும் சட்டமாகும்.

@ஆய்தன்:-
எமது மலேசியத்தின் மிகச் சிறந்த பாவலர்களுள் ஒருவர் வண்ணக்கவிஞர் கரு.திருவரசு. பாவலர் ஐயா அவர்கள், உள்ளத்தை நெகிழ வைக்கும் இந்த அருமையான கவிதையை அனுப்பி தமிழுயிரைப் பெருமைபடுத்தி இருக்கிறார். பாவலர் ஐயா போன்ற பெரியோர்களும் எமது தமிழுயிரைப் படித்து வருகின்றனர் என்பதை அறிகையில் மிகவும் மகிழ்வு அடைகிறேன். பாவலர் கரு.திருவரசு ஐயா அவர்களை நன்றியோடு வணங்கி மகிழ்கிறேன்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நமது வீரர்கள் ஐவரைப் பற்றி இப்படி ஒரு சிறப்பான கவிதையைப் படித்ததில் மிகவும் பெருமிதமாக உள்ளது. கவிஞர் திருவரசு அவர்கள் இப்படிப்பட்ட கவிதைகளைத் தொடர்ந்து எழுதவேண்டும்.

தமிழுயிரில் இப்படியான எழுச்சிக் கவிதைகளை முடிந்தால் அதிகமாக வெளிடலாமே!

இளையவேல்,
சிரம்பான்

கிருஷ்ணா சொன்னது…

இதுபோன்ற நல்ல கவிதையை வெளியிட்டமைக்கு தமிழுயிருக்கு நன்றி..! ஐவரின் நிலையையும், இந்தியர் நிலையையும் நயமட உரைத்திட்ட கவிஞர் திருவரசு அவர்களுக்கும் மிக்க நன்றி.

தமிழினக் கொலை என்றால் தாண்டவம் ஆடுகின்றார்.. தமிழனின் பிரச்சனை என்றால் மட்டும் செவிடர்கள் ஆகின்றார்! துனிந்து கேள்வி கேட்டால் இசாவில் அடைக்கின்றார்.. தொல்லை தரும் தொழில் செய்தால் துன்புறுத்தி கொள்கின்றார்! ஐயகோ.. என்ன கொடுமை இது.. என்றுதான் தனியுமிது..!!!