வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 5 ஜூலை, 2008

தமிழ்ப்பள்ளி அறவாரியம் தமிழ்க்கல்விக்கு அரணாகட்டும்

எமது மலேசியத்தில் தற்போது 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 150 பள்ளிகள் முழு அரசு உதவிபெறும் பள்ளிகளாகவும், எஞ்சிய 373 தமிழ்ப்பள்ளிகள் பகுதி உதவிபெறும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. எமது நாடு விடுதலையடைந்து 50ஆண்டுகளைக் கடந்தும்கூட 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இன்னமும் அரசின் முழு உதவிபெறாமல் இருப்பதானது வருத்தமளிக்கும் செய்திதான். ஆயினும், அரசின் முழு ஆதரவு இல்லாமல் குற்றுயிரும் குலையுயிருமாக எமது தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடித் தத்தளித்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்த 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை துணையமைச்சர் மாண்புமிகு தோ.முருகையா அண்மையில் வெளியறிவிப்புச் செய்தார். அறிவிப்புச் செய்ததோடு நின்றுவிடாமல் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார் துணையமைச்சர்.

அந்தவகையில், கடந்த 29.6.2008ஆம் நாளில் கோலாலம்பூர் புத்திரா உலக வாணிக நடுவ(மைய)த்தில் குமுகாயத்தைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மிகப்பெரிய அளவில் கலந்துரையாடலை நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைப்பதற்கு அனைவரும் கொள்கையளவில் ஒத்துக்கொண்டனர்.

இந்த அறவாரியத்தின் கீழ் 10 மில்லியன் மலேசிய வெள்ளி பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும். அதோடு, வெள்ளிக்கு வெள்ளி என்ற அளவில் தமிழ் மக்கள் வழங்கும் ஒவ்வொரு வெள்ளிக்கு ஈடாக அரசிடமிருந்து மானியம் கோரப்படும். இந்த அறவாரியத்தின் செயற்குழுவில் பல்வேறு பொது இயக்கங்களின் நிகராளிகள் நியமிக்கப்படுவர்.

'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை ஏந்து(வசதி)கள் மேம்படுத்தப்படும். தமிழ்ப்பள்ளிகளில் படித்து மேல்படிப்புக்குச் செல்லும் மானவர்களுக்குக் கல்வி உதவிநிதி வழங்கப்படும். மேலும், நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இப்படியாக, 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் பேச்சளவில் மட்டும் இருந்துவிடாமல் மிக விரைவிலேயே செயல்வடிவம் காணவேண்டும் என்பது தமிழுயிரின் அவாவாகும்.

இத்தனைக்கும் மேலாக, இந்தத் 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' கலந்துரையாடலில் எம்மைப் பெரிதும் கவர்ந்த விடயம் ஒன்று உண்டு. அதாவது, இந்த நிகழ்ச்சியில், மக்கள் முற்போக்குக் கட்சியின் (பிபிபி) துணையமைச்சர் தோ.முருகையாவோடு, ம.இ.காவின் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், கெராக்கான் கட்சி துணையமைச்சர் எ.கோகிலன் என மூன்று கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் சமுதாயத்திற்காக ஒன்றுசேர்ந்திருப்பது பாராட்டுக்குரிய நிகழ்வாகும். (படத்தைப் பார்க்க)


எமக்குத் தெரிந்தவரையில், மலேசிய வரலாற்றில் இப்படி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கட்சி வேறுபாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு குமுகாய நலனுக்காக அதுவும் தமிழ்ப்பள்ளி நலனுக்காக ஒன்றுபட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றால் அது மிகையாகாது.

எமது தமிழினத் தலைவர்களின் இந்த ஒற்றுமையும்.. இந்த புரிந்துணர்வும்.. இந்த நல்லிணக்கமும் என்றென்றும் தொடர வேண்டும். முன்னாள் தலைவர்கள் சிலரின் தன்னலப் போக்கினால் எமது தமிழ்க் குமுகாயம் அவதிப்பட்டது... பிளவுப்பட்டது... நட்டப்பட்டது... எல்லாமே போதும்..! போதும்..!

இனியேனும், தனிப்பட்ட கருத்துகளை.. தன்னல எண்ணங்களை.. கட்சி வேறுபாடுகளை.. அரசியல் நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தலைவர்களும் இந்த நாட்டில் ஏமாளியாக வாழ்ந்துவரும் எமது தமிழ் மக்களைக் கைதூக்கிவிட கைகோர்த்து நிற்கவேண்டுமென தமிழுயிர் வேண்டுகிறது. இந்த வேண்டுகோள் நடுவணரசு ஆளுங்கட்சித் தலைவர்களுக்கும் சில மாநிலங்களின் ஆளுங்கட்சி தலைவர்களுக்கும் சேர்த்துதான்.

@ஆய்தன்:-
எந்தக் கட்சியில் நீ இருந்தாலும்
இனத்தை மறந்திடாதே - தமிழா
இனத்தை மறந்திடாதே.!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளுக்காக அறவாரியம் அமைவது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், இது எந்த அளவுக்கு நடைமுறைக்கு ஒத்துவரும்? தங்கள் சொந்த அரசியல் நன்மைக்காக சில தலைவர்கள் தடாலடியாக பல திட்டங்களை அறிவிக்கின்றனர். இதுவும் அப்படி ஆகிவிடாமல் இருக்க துணையமைச்சர் மாண்புமிகு முருகையா அவர்கள் தக்க நடவடிக்கைகளை எடுப்பாரா?

இந்த அறவாரியத்தின் அமைப்புப் பணிகளை அவ்வப்போது துணையமைச்சர் மக்களுக்குச் சொல்ல வேண்டும். அப்போதுதான் ஒரு நம்பிக்கை ஏற்படும்.