வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 2 ஜூன், 2008

இடைநிலைப்பள்ளியில் இனியத் தமிழ்ப்பணிபேரா மாநிலத்தில் தமிழ்வீறு கொண்டு செயல்படும் சிறப்புமிக்க இடைநிலைப்பள்ளி என்று டத்தோ ஹஜி அப்துல் வஹாப் தேசிய இடைநிலைப்பள்ளியைத் துணிந்து குறிப்பிடலாம். காரணம், மிகப் போற்றுதலுக்குரிய தமிழ்ப்பணியொன்று இப்பள்ளியில் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரையில் அந்தத் தமிழ்ப்பணி தங்குத் தடையின்றி நடந்துகொண்டிருக்கிறது. மாணவர்கள் உள்ளத்திலும் உணர்விலும் மெல்லெனத் தமிழ்ப்பற்றை வளர்க்கும் அந்தச் சீரிய தமிழ்ப்பணி செம்மையாக அங்கே நடந்துகொண்டிருக்கிறது.

அந்தச் சிறப்புமிகு தமிழ்ப்பணி என்னவெனில், 'கதம்பம்' என்ற பெயரில் அருமைமிகு சிற்றிதழ் ஒன்று ஒவ்வொரு மாதமும் முழுக்க முழுக்கத் தமிழிலேயே மலர்ந்து வருவதுதான். 50ஆவது இதழைக் கடந்து தொடர்ந்து பீடுநடைபோட்டு பவனிவருகிறது இந்த மாணவர் இதழ். இந்தக் 'கதம்பம்' சிற்றிதழைக் கண்டு மனமெங்கும் மகிழ்ச்சி கமகமவென மணத்தது. தமிழ்மொழி, வரலாறு, இலக்கியம், புதிர்கள், கட்டுரை, சிறுகதை, மரபுக்கவிதை, அரிய செய்திகள், துணுக்குகள் என நல்லநல்ல படைப்புகள் இந்தக் 'கதம்பத்தை' மிக நேர்த்தியாக அலங்கரித்துள்ளன.

அவற்றைப் படிக்கின்ற மாணவர்களுக்கு வாசிப்பதில் ஆர்வம் ஏற்படும்; பொது அறிவு வளப்படும்; மொழி ஆற்றல் மேம்படும்; என்பது திண்ணம். இத்தனைக்கும் மேலாக, நல்ல தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் மாணவர்களிடையே இந்த இதழ் நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது மறுக்கவியலாத உண்மை. இந்த இதழின் வழியாக தமிழின்பால் பற்றுதலும் ஈடுபாடும் கொண்ட மாணவர் குமுகாயத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பதும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத உண்மை.

மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் இலக்கணச் சுவையை ஊட்டவும், தமிழின் உயர்வை உணர்த்தவும் இந்த இதழ் தொடங்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக இடைவிடாது வெளிவந்து கொண்டிருப்பது மிகப்பெரும் சாதனையாகும். அந்தச் சாதனையின் சின்னமாக, கதம்பம் 50ஆவது இதழ் விளங்குகிறது. "தமிழே! உயிரே! தமிழால் உயர்வே" என்ற முழக்கத்தோடும் மிகச் செப்பமான கட்டமைப்போடும் இவ்விதழ் வெளிவருவது பாராட்டுக்குரியது.

ஓர் இடைநிலைபள்ளி அளவில் இப்படியொரு அரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கும் கதம்பம் இதழின் தொகுப்பாசிரியர் திரு.சபா.கணேசு அவர்களுக்கும் அவருடன் துணையிருந்து உதவியிருக்கும் அப்பள்ளியின் அருமைசால் ஆசிரியர்களுக்கும், தமிழ்மொழிக் கழக மாணவர்களுக்கும் தமிழுயிர் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தான் தமிழன், தன் இனம் தமிழினம், தன் இனத்தின் மீதும் மொழியின் மீதும் தனக்குக் கடப்பாடு உண்டு என்று எண்ணுகின்ற சபா.கணேசு என்ற அந்த ஒற்றைத் தமிழ் ஆசிரியரின் நனிசிறந்த நற்றமிழ்ப் பணி மற்றைய ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என தமிழுயிர் விரும்புகிறது. சபா.கணேசு போன்ற உண்மைத் தமிழ் உணர்வுள்ள தமிழாசிரியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் உருவாக வேண்டும். 'கதம்பம்' போல ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் ஒரு சிற்றிதழ் அல்லது மாணவர் இதழ் வெளிவந்து தாய்த்தமிழைச் செழித்தோங்கச் செய்ய வேண்டுமென தமிழுயிர் எதிர்ப்பார்க்கிறது. மரியாதைக்குரிய மலேசியத் தமிழாசிரியர்கள் சிந்திப்பார்களா?

@அய்தன்:-
சேமமுற வேண்டுமெனில் பள்ளிகளெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர் ஆசிரியர்காள்!

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நம்மோடு பணியாற்றும் ஆசிரியர்களில் திரு.சபா.கணேசு அவர்கள் போன்ற நல்லாசிரியர்களும் உள்ளனர் என்பதற்கு இந்த செய்தி நல்ல எடுத்துக்காட்டு. சிறந்த பணியாற்றும் அவர் ஆசிரியர் குலத்திற்கே பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது.

அன்புடன்,
தமிழ் மானமுள்ள ஆசிரியன்,
இளையவேல்,
சிரம்பான்.

பெயரில்லா சொன்னது…

தமிழ் ஆசிரியர்கள் மத்தியில் இந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிறப்புக்குரியவர்களாக விளங்குகின்றனர். அதிலும், கதம்பம் இதழின் தொகுப்பாசிரியர் திருவாளர். சபா.கணேசு அவர்கள் பெரும் பாராட்டுக்குரியவர். அவருடைய தமிழ்ப்பணி சிறப்பான ஒன்று. இந்தக் கதம்பம் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு தமிழுக்குச் சிறந்த தொண்டு செய்ய அவருக்கு இறைவன் எல்லாவிதமான நலங்களையும் கொடுத்து அருள வேண்டிக் கொள்கிறேன்.

தமிழ் அன்பன்,
இளஞ்சித்திரன்,
வெள்ளி மாநிலம்