வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 16 ஜூலை, 2007

ராகா.. ஆகா! சிறந்த உளறல்!

அண்மையில் தி.எச்.ஆர்.ராகா வானொலி அறிவிப்பாளர் மேதாவி உதயாவும் உளறுவாயி ஆனந்தாவும் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அதாவது, வானொலியில் பழந்தமிழில் பேசினால் மக்களுக்குப் புரியாது என்பதே அது. இதைப் போய் பெரிய கண்டிபிடிப்பு செய்து சொன்ன அந்த இரண்டு பேருக்கும் எமது நன்றி. ஆமாம், தெரியாமல்தான் கேட்கிறேன். இவர்களை யாரய்யா பழந்தமிழில் பேசச் சொல்லி கேட்டார்கள். நல்லதமிழில் பேசினாலே போதாதா? இப்போது இவர்கள் பேசுவதைக் கொஞ்சம் திருத்திக்கொண்டாலே போதும். ஆங்கிலமும் மலாயும் சமயத்தில் சீனம், இந்தி, தெலுங்கு, மலையாளம் இப்படி பல மொழிகளையும் கலந்து கலந்து பேசி சொதப்பாமல் சற்று தூய்மையாகப் பேசினாலே போதும். அதைத்தானே கேட்கிறோம். ஆங்கிலத்தை வைத்து பிழைப்பவன் நன்றாக ஆங்கிலம் பேசுகிறான். மலாயை வைத்து பிழைப்பவன் நன்றாக மலாய் பேசுகிறான். தமிழை வைத்து பிழைப்பவன் மட்டும் ஏன்தான் தமிழைக் கொன்று தொலைக்கிறான். வானொலி தொலைக்காட்சியில் நல்லதமிழில் பேசி நேயர்களைக் கவரமுடியாது என்பதை நல்லபுத்திக்காரார்கள் எவரும் நம்பமாட்டார்கள். நம்நாட்டில் தமிழ்மக்கள் மனங்களில் நல்ல பெயரைப் பெற்றிருக்கும் சி.பாண்டித்துரை, இராசேசுவரி இராசமாணிக்கம், மு.சங்கர் போன்ற அறிவிப்பாளர்கள் பலரை தமிழ்மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால், உதயா ஆனந்தா போன்ற சில கத்துகுட்டிகள் மொட்டை வாலை தூக்கி ஆட்ட முயற்சி செய்ய வேண்டாம். தமிழைப் பற்றி கருத்து சொல்ல வயதும் அறிவும் இவர்களுக்கு இல்லை. தமிழைப் பற்றி நினைத்தவனெல்லாம் நினைத்தைச் சொல்லலாமா? தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பா? ஐயா உதயா – நைனா ஆனந்தா நல்ல முறையில் நயமாகச் சொல்லும்போது கேட்டுக்கொள்ளுங்கள்! தமிழன் சூடானவன். கொதித்து எழுந்தால் தாங்கமாட்டீர்கள். இனியாவது உங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்!
  • ஆய்தன் : இவர்கள் சின்ன குழந்தையா இருக்கும்போது நாக்கில் 'என்னத்த' தடவி தொலைச்சாங்களோ!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ராகா நிலையத்தில் பேசும் அறிவிப்பாளர்கள் பெரிதாக ஒன்றும் மொழிக்குக் கேடு செய்வதாக நான் நினைக்கவில்லை. ஆனாலும், ராம் மற்றும் ஆனந்தா ஆகிய இருவரும் கொஞ்சம் நன்றாகவும் சுத்தமாகவும் தமிழ் பேசினால் இன்னும் நல்லது.

-கரிகாலன், ஈப்போ,பேரா