வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

வாக்கெடுப்பு(4) முடிவு


  • தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றனர்.

1.ஆமாம் :- 23%

2.இல்லை:- 73%

3.தெரியவில்லை :- 4%


@ஆய்தன்:-
கூலிக்கு மாறடிக்கும் தமிழ்க் கல்வியாளர் கூட்டமே பெரிதாக பெரிதாக இருக்கிற வேளையில், தமிழ் வளர்ச்சியாவது..? தமிழ் வாழ்வாவது..? நான் வாழ்ந்தால் போதும்.. என் பொண்டாட்டி பிள்ளைகள் வாழ்ந்தால் போதும்.. என்று எண்ணிகின்ற தமிழ்க் கல்வியாளர்களே அதிகம். வயிற்றுக்கு மட்டும் பிழைக்கும் சோற்றுப் பிண்டங்கள் இவர்கள்!! தமிழ்ச் சோறு தின்னும்கூட தமிழுக்காக ஒரு சிறிய ஆக்கத்தையும் செய்யாத இந்தத் தண்டச் சோற்றுப் பிண்டங்கள் என்றுதான் திருந்துவார்களோ? நானறியேன் பராபரமே...!

மலேசியத்தில் தமிழ்க் காப்பகம்



மலேசிய மண்ணில் தமிழ்மொழியைப் பேணவும் வளர்த்தெடுக்கவும், தமிழ் சார்ந்த இயக்கங்களின் தலைவர்கள் பலர் ஒன்றுகூடி 'தமிழ்க் காப்பகம்' ஏற்படுத்துவதற்கு முடிவெடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கூட்டம் கடந்த 8..8.2008ஆம் நாள் சிலாங்கூர் சா ஆலத்தில் வெற்றிகரமாக நடந்தேறியது.

மலேசியத்தில் தமிழ்மொழிக்கு எதிராக ஏற்படுகின்ற அழிப்பு வேலைகளை வேருடன் அறுத்தெறியவும், தமிழுக்கு ஆக்கமான பணிகளை முன்னெடுக்கவும் ஆகிய முகாமையான இலக்குகளை முன்வைத்து 'தமிழ்க் காப்பகம்' அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரும் தங்களின் கருத்துகளை வெளிப்படையாகக் கூறி கலந்துரையாடினர்.

மலேசியத்தில் தமிழ் நிலைப்பாடு உறுதிசெய்யப்படுவது மிகவும் அவசியம் என்பது எல்லாத் தலைவர்களின் ஒருமித்தக் கருத்தாக அமைந்தது. மலேசிய அரசு தமிழைப் படிப்பதற்கான வாய்ப்புகளைச் சட்டமுறைப்படி வழங்கி வருகின்றது. அந்த வாய்ப்புகளைத் தமிழர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மலேசியத் தமிழ்க் காப்பகத்திற்கு, மலேசியத் தங்கத் தமிழ் மணிமன்றத்தின் தேசியத் தலைவர் தமிழ்த்திரு சு.வை லிங்கம் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் மருத்துவர் க.குமரன், உதவித் தலைவர்களாக தமிழ்த்திரு இரே.சு.முத்தையா (தேசியத் தலைவர், மலேசியத் திராவிடக் கழகம்), தமிழ்த்திரு பி.பொன்னையா (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ் இளஞர் மணிமன்றப் பேரவை) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தமிழுக்கு நலிவு ஏற்படும்போதெல்லாம் முன்னின்று போராடும் செயல்வீரர் தமிழ்த்திரு இரா.திருமாவளவன் (தேசியத் தலைவர், மலேசியத் தமிழ்நெறிக் கழகம்) செயலாளராகவும், டத்தோ செல்லக்கிருஷ்ணன் (தங்கத் தமிழ் மணிமன்றம்) பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும், கோலாலம்பூர் முத்தமிழ்ப் படிப்பகத்தின் சிவராசு வேதையா, ம.தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் பொன்.அன்பழகன், ம.திராவிடர் கழகத்தின் நாகபஞ்சு, ம.தமிழ்நெறிக் கழகத்தின் கனல்வீரன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர்.ம.கிருஷ்ணன், திருக்குறள் பணிக்களத்தின் சுப.நாராயணசாமி, ம.தமிழ் கலைஞர் இயக்கத்தின் வி.தி.கிருஷ்ணன், ம.இந்திய கலாச்சார மன்றத்தின் ஆனந்தன், ம.கலைஞர் கருணாநிதி மன்றத்தின் அன்பு இதயன், ம.தமிழர் கலைமன்றத்தின் ஜோசப் செபஸ்டியன், ம.தமிழ் மணிமன்றத்தின் கை.சிவப்பிரகாசம் ஆகியோர் 'தமிழ்க் காப்பகத்தின்' செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மலேசியத்தில் தமிழைக் காக்க உருவாக்கப்பட்டுள்ள இந்தத் 'தமிழ்க் காப்பகம்' சீருடன் செயல்பட்டு சிறப்பான திட்டங்களை முன்னெடுத்து வினையாற்றிட 'தமிழுயிர்' மனதார வாழ்த்துகின்றது. தமிழ்க் காப்பகத்தின் எல்லாப் பணிகளுக்கும் 'தமிழுயிர்' முழு ஆதரவை வழங்க அணியமாக உள்ளது. 'தமிழ்க் காப்பகத்தின்' சீரிய தமிழ்ப்பணிகளைப் பற்றிய செய்திகளைத் தமிழருக்குப் பரப்புவதற்கும்; 'தமிழுயிர்' முழுமையாக ஈடுபடும்.

ஆகவே, 'தமிழ்க் காப்பக' பொறுப்பாளர்கள் தங்களின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை 'தமிழுயிருக்கு' விடுத்துவைக்கலாம்.

@ஆய்தன்:-
எமது பகைவர் எங்கோ மறையட்டும்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

சனி, 16 ஆகஸ்ட், 2008

காசி ஆனந்தன் நறுக்குகள் - 1


ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் – சிறைச்சாலைகள் – தலைமறைவுப் பொழுதுகள் – உசாவல்கள் – கடல்கடந்த பாய்ச்சல்கள் – இவற்றின் இடைய்ல், ஒயாது தமிழ்மொழி – தமிழ் இனம் – தாய்மண் பற்றுடன் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், சிந்தனைக் கனல் சுடரும் கட்டுரைகளையும், சிந்திக்கத் தூண்டும் குறுங்கதைகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் காசி ஆனந்தன்.

கவிஞர் காசி ஆனந்தன் மனித நேயம் மிக்கவர்; மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும்; தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று விடுதலையானவர்களாக அன்போடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காகப் போராடுபவர்.

கவிஞர் காசி ஆனந்தன் படைப்புகள் கூர்மையானவை; வேகமும் உணர்ச்சியும் கொண்டவை; உண்மையின் ஒளி பொருந்தியவை; சிந்திக்கத் தூண்டுபவை; போலித்தனங்களையும் பொய்மைகளையும் வெளிச்சப்படுத்துபவை. சொல்லிலும் செயலிலும் – இலக்கியப் படைப்புகளிலும் – வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் – மாறுபாடு இல்லாது, வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டு செயலாற்றி வரும் ஓர் உண்மை மனிதனின் இதய ஒலிகள் அவை.

'கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்' எனும் நூலில் இலக்கியச்செல்வர் வல்லிக்கண்ணன் எழுதியுள்ள மேற்கண்ட சிறப்புரையை அறிமுகவுரையாகக் கொண்டு, கவிஞர் காசி ஆனந்தனின் உணர்ச்சிப் பொங்கும் நறுக்குகளை 'தமிழுயிர்' தொடராக வெளியிட உள்ளது.

எமது மலேசியத் தமிழரிடையே மொழி – இன சிந்தனைகளை எழுப்புவதற்கும், எழும்பிய சிந்தனைகளை சரியாகக் கட்டமைப்பதற்கும் இந்த 'நறுக்குகள்' துணைநிற்கும் என 'தமிழுயிர்' நம்புகிறது. 'காசி ஆனந்தன் நறுக்குகள்' தொடரின் முதல் பகுதியை இனி தொடர்ந்து படியுங்கள்.

1. மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

'பசு பால் தரும்'
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...


2. இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!


3. மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...

அம்மணமாகவே
போராடு..!

@ஆய்தன்:-

மலேசியத்தில்
விழித்தெழுந்து
எழுச்சியுடன்
அணிதிரண்டு
போராடுகிறான்
தமிழன்...

இந்தியன்
நலனுக்காக..!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2008

தமிழே தெலுங்கப்பா? தமிழ்ப்பள்ளியில் தெலுங்காப்பா?



டந்த 7.8.2008இல், மலேசியத் தெலுங்கு சங்கத்தின் தேசியத் தலைவர் மருத்துவர் அட்சயக்குமார் "தமிழ்ப்பள்ளிகளில் தெலுங்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று அச்சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்" என்பதாக ஓர் அறிக்கையை தமிழ் நாளிதழ்களில் விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மறுநாள் மலேசியத் திராவிட இயக்கத்தின் தேசியத் தலைவர் மானமிகு இரே.சு.முத்தையா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். தமிழ்ப்பள்ளிகளில் தமிழே பாடமாக இருக்க வேண்டுமே ஒழிய தெலுங்குக்கு அங்கே இடம் கொடுக்கக்கூடாது என கூறியிருந்தார். பிறகு, 10.8.2008இல், பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு அ.சிவனேசன் தெலுங்கு சங்கத்தின் அறிக்கையை வரவேற்றும் இரே.சு.முத்தையாவைக் கண்டித்தும் அறிக்கை விடுத்தார்.

இந்தச் சிக்கல் தொடர்பில் 'தமிழுயிர்' 20க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றது. 'தமிழுயிரின்' நிலைப்பாட்டை அறிய ஆர்வத்துடன் மின்னஞ்சல் விடுத்த தமிழுயிர் அன்பர்களை நன்றியோடு வணங்கி இந்த இடுகை வெளியிடப்பெறுகிறது. இந்தச் சின்ன செய்தி நச்சென்று இருக்குமென 'தமிழுயிர்' நம்புகிறது.





மூக்குக்கு முக்கு
அப்பாவுக்கு அப்பா
இதுதான் தெலுங்கப்பா!


வெண்டைக்குப் பெண்டா
வண்டிக்குப் பண்டி
என்றே சொல்லப்பா!


பச்சைக்குப் பச்ச
பாம்புக்குப் பாமு
தமிழே தெலுங்கப்பா!


பொழுதுக்குப் பொத்து
மருந்துக்கு மந்து
எருதுக்கு எத்தப்பா!


வேட்டைக்கு வேட்ட
ஓட்டைக்கு ஓட்ட
கோட்டைக்குக் கோட்டப்பா!


கண்ணுக்குக் கண்ணு
பல்லுக்குப் பண்ணு
காலுக்குக் காலப்பா!


நமதே என்பதை
மனதே என்பது
தமிழுக்குத் தெலுங்கப்பா!


எவனுக்கு எவடு
அவனுக்கு அவடு
வாடுதான் அவடப்பா
வீடுதான் இவடப்பா!


தமிழிலே வயிறு
தெலுங்கிலே கடுப்பு
வயிற்றுக் கடுப்பப்பா
எங்கள்தமிழே தெலுங்கப்பா!!


நன்றி: 6ஆம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்

@ஆய்தன்:-
மதிப்புமிகு அட்சய குமாரப்பா!
மாண்புமிகு சிவ நேசனப்பா!
எங்கள் தமிழே தெலுங்கப்பா!!!
எதற்குத் தமிழ்ப்பள்ளியில் தெலுங்கப்பா???

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

தமிழன், தமிழனானால் சாதி ஒழியும்

தெலுக் பங்ளிமா காராங் தேசிய இடைநிலைப்பள்ளியில் 5ஆம் படிவத்தில் பயிலும் தமிழ் மாணவர்களை, அப்பள்ளியின் வரலாற்று ஆசிரியர் (ருசுனிசித்தா அபு அசான்) "கில்லிங்" என்றும் "சாதிப்பெயரைச்" சொல்லியும் திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, மிகவும் தடிப்பான; தகாத சொற்களை உரத்தக் குரலில் மிகவும் சினத்தோடு கொட்டித் தீர்த்துள்ளார். கடந்த 3.8.2008இல் எல்லா தமிழ் நாளேடுகளும் இந்தச் செய்தியை வெளியிட்டன.

ஆசிரியர் என்னும் பண்புமிக்க பொறுப்பில் இருந்துகொண்டு மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் கீழ்த்தனமாகவும் நடந்திருக்கும் அந்த அறிவுநலங்கெட்ட ஆசிரியரை தமிழுயிர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏழரை கழுதை வயதுக்கு வளர்ந்துவிட்ட ருசுனித்தா என்ற அந்த கரிநாக்கியின் செயல் ஒட்டுமொத்த மலேசியத் (இந்தியர்)தமிழர்களை வருத்தமடையச் செய்துள்ளது; மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை புகட்டும் ஆசிரியர் இவ்வாறு காலாடித்தனமாக நடக்கலாமா? ஒழுக்கத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் இவ்வாறு ஒழுங்கீனமாக பேசலாமா? புனித மதத்தைப் பின்பற்றும் அந்த ஆசிரியர் இவ்வாறு புத்திக்கெட்டுப் போகலாமா?

அந்த ஆசிரியரின் கடுமையான பேச்சினாலும், துன்புறுத்தலினாலும் பாதிப்புற்ற மாணவர்கள் மிக மிகத் துணிவாகப் பள்ளி முதல்வரிடம் எழுத்துப்படியாகப் புகார் செய்துள்ளனர். மேலும், காவல் துறையிலும் பகிரங்கமாகப் புகார் கொடுத்துள்ளனர்.

தன்னுடைய இனம் பழிக்கப்படுவதை; சிறுமைபடுத்தப் படுவதை; கேவலப்படுத்தப் படுவதைப் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்துள்ள அந்த இளம் உள்ளங்களைத் 'தமிழுயிர்' பெருமையோடு வாழ்த்துகிறது. அவர்களின் இன உணர்வையும் மனத் துணிவையும் 'தமிழுயிர்' மனதாரப் பாராட்டுகிறது.

ரோசித்தா என்னும் அந்த மானங்கெட்ட மலாய்க்காரியைக் கண்டிக்க வேண்டியது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமையாகும். அதே வேளையில், அவள் பேசிய சாதியியல் பற்றி சற்று சிந்திப்பதும் எமது தமிழினத்தின் கடமையாகும்.

குறிப்பாக, இளம் வயதிலேயே இனமான உணர்வுடன் செயல்பட்டிருக்கும் அந்த 'வீரத்'தமிழ் மாணவர்களுக்குத் 'தமிழுயிர்' சில தெளிவுகளைச் சொல்ல விரும்புகிறது. அந்த இளமைச் செல்வங்களின் இன உணர்வை மிகச் சரியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பும் வளர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடும் 'தமிழுயிருக்கு' இருக்கிறது. அந்த மாணவர்களுக்குச் சாதியியல் பற்றிய உண்மையான வரலாற்றையும் விளக்கத்தையும் சொல்ல வேண்டியது கற்றோரின் கடமையாகும். அந்தக் கடமையுணர்வின் காரணமாகத் 'தமிழுயிர்' சில விளக்கங்களைச் சொல்ல விரும்புகிறது.

தமிழர் கண்ட குமுகவியல்

அதாவது, முதலில் தங்களை இந்தியன் என்றோ அல்லது இந்து என்றோ நம்புவதை அந்த மாணவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். எதோ, சட்ட ஆவணங்களுக்காக நம்முடைய பிறப்புப் பத்திரத்தில் இனம் 'இந்தியா' என்றும் மதம் 'இந்து' என்றும் குறிக்கப்பட்டுள்ளதே தவிர உண்மையில் நாம் தமிழரே! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவர் தமிழரே! மற்ற இந்திய மொழிக்காரர்கள் வேண்டுமானால் 'இந்தியன்' என்று சொல்லிக்கொள்ளட்டும்.

எப்போது நாம் நம்மைத் தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறோமோ, அப்போதே நாம் 'சாதி' அமைப்பிலிருந்து விடுபட்டவராக ஆகிவிடுகிறோம். காரணம், தமிழரிடையே சாதியியல் அமைப்புமுறை கிடையாது. பழந்தமிழர் வாழ்வியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற குமுகாயப் பகுப்புமுறை மட்டுமே இருந்தது. இந்தப் பகுப்புமுறை சாதி அமைப்பியலுக்கு முற்றிலும் மாறுபட்டது.

தமிழரின் குமுக பகுப்புமுறை யாரையும் மோலோர் என்றும் கீழோர் என்றும் பிரிப்பது இல்லை. தமிழர் குமுக அமைப்பில் மேல்சாதி, கீழ்சாதி என்று எதுவும் கிடையாது. அதனால்தான், திருமூலர் பெருமான் "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்றார். உலகப் பொதுமறை ஈந்த வள்ளுவப் பேராசான் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" அதாவது பிறக்கும் எல்லா உயிர்களும் ஒன்றே என்று உறுதிபட மொழிகின்றார். கணியன் பூங்குன்றன் என்ற தமிழ்ப்புலவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" அதாவது எல்லா மக்களும் உறவினர்களே என கூறுகின்றார்.

தமிழரை வீழ்த்திய ஆரிய சதுர்வர்ணம்

ஆக, தமிழன் கண்ட குமுகவியல் அமைப்பு மிகவும் சிறப்பானது; நீதியானது; நடுநிலையானது; மாந்தநேயம் நிறந்தது. ஆனால், வடமொழி வழிவந்த அதாவது இந்தியக் குமுகவியல் அமைப்பு அப்படியல்ல. வடமொழியாளர்கள் "சதுர்வர்ணம் மயா சிருட்டி" என்ற கீதையின் கருத்தில் ஆழமான நம்பிக்கை உடையவர்கள். அதாவது, உலகில் நான்கு வகையான குலத்தை நானே படைத்தேன் என்று இறைவனே சொல்லுவதாக அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த நான்கு குலம் அல்லது சாதி என்னவென்றால் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகியவை. படைப்புக் கடவுள் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால் பாதத்தில் பிறந்தவன் சூத்திரன். இந்த நான்கு இடத்திலும் பிறக்காதவனைப் 'பஞ்சமர்' என்று வடநாட்டு இந்தியர்கள் நம்புகிறார்கள்.

தனித்தன்மையோடு வாழ்ந்த காலம் வரையில் தமிழர்கள் எந்தவொரு மாறுபாடும் வேறுபாடும் இல்லாமல் ஒரே குலமாக தமிழ் இனமாக வாழ்ந்திருந்தனர். இந்தியாவின் கைபர் கணவாய் வழியாக ஊடுருவிய ஆரியர்கள் படிப்படியாகத் தென் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழரோடு கலக்கத் தொடங்கினார்கள்.

இங்குதான், தமிழருடைய அத்தனை சீருக்கும் சிறப்புக்கும் கேடுகள் ஏற்பட்டன. அதில் ஒன்றுதான், தமிழரின் குமுகவியல் அமைப்பு அடியோடு அழிந்துபோனது. தமிழரிடையே ஆரியரின் 'வருணாசிரமம்' எனப்படும் சாதி வேறுபாடு முறை புகுத்தப்பட்டது; தமிழினம் பல்வேறு சாதிகளாகக் கூறுபோடப்பட்டது; மேல்சாதி கீழ்சாதி என அடையாளப்படுத்தப்பட்டது.

அன்று தொடங்கி இன்றுவரையில், தமிழனிடமிருந்து இந்த சாதியியல் முறையைப் பிரிக்க முடியவில்லை. காரணம், ஆதிக்கக் கூட்டம் ஒன்று தமிழரை ஒன்றுபட விடாமல் தடுப்பதற்கு இந்த 'சாதி' என்ற கருவையை மிக நன்றாகப் பயன்படுத்தி வருகின்றது.

மலேசியத் தமிழர் சிந்திக்க வேண்டும்

இந்தியாவில் அதுவும் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவிய இந்த சாதி முறை எமது மலேசியத்திலும் குடியேறிவிட்டது. மலேசியத் தமிழன் தன்னை இந்தியன் என்று ஏற்றுக்கொண்டால், சாதி முறையையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும். அப்படி ஆகிவிட்ட நிலையில், யாராவது சாதியைப் பற்றி பேசும்போது சினம்கொள்வதும் புகார் கொடுப்பதும் வேண்டாத வேளையாக ஆகிவிடக்கூடும். காரணம். இந்தியனிடம் இருப்பதைத் தானே மற்றவர்கள் சொல்லுகிறார்கள். அதற்கு ஏன் கோவப்பட வேண்டும்? அதற்கு ஏன் மனம் புண்பட வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்!

அதே வேளையில், தன்னைத் தமிழன் என்று நினைக்கின்றவனுக்கு சாதியால் எந்தவொரு சிரமமோ, சங்கடமோ, மனவருத்தமோ ஏற்படப்போவது இல்லை! காரணம், தமிழனிடன் சாதி இல்லை என்பதுதானே பழைய வரலாறு. எந்தச் சாதிப் பெயரைச் சொன்னாலும் அது இந்தியனையும் இந்துவையும் குறிப்பதே ஆகும். மாறாகத், தமிழனை எந்தச் சாதிப் பெயரையும் சொல்லிக் குறிப்பிட முடியாது; குறிப்பிடவும் கூடாது.

தமிழன், தமிழனாக வேண்டும்

ஆக, தமிழனிடன் வந்து புகுந்துவிட்ட ஆரியனுடைய; வடவருடைய; இந்தியனுடைய; இந்துவினுடைய சாதியியல் அமைப்பத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அதற்கு ஒரே தீர்வு தமிழன் தன்னைத் தமிழன் என்று துணிந்து சொல்ல வேண்டும். தமிழன், தமிழனானால் சாதி தொலைந்து போகும்!

@ஆய்தன்:-
சாதி இரண்டொழிய வேறில்லை – சாற்றுங்கால்
இட்டார் உயர்ந்தோர் இடாதார் இழிகுலத்தோர்.
(ஔவையார்)
குறிப்பு:- தொடர்பான செய்தியை 'ஓலைச்சுவடியில்' படிக்கவும். (இங்கே சொடுக்கவும்)

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2008

இரட்டை வேடம் போடும் இரசினிகாந்து

கதையைப் படிப்பதற்கு முன்னால் ஒரு பாட்டு. இதோ:-

அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

வாரிக் கொடுத்தது தமிழ்நாடு
வாழ வைத்தது தமிழ்ப்பாலு
பாட்டுதான் பாடி வச்சான் படத்துல – தமிழனுக்கு
வேட்டுதான் வச்சுப்புட்டான் இடுப்புல!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

பத்தி எரிஞ்சது ஒக்கேனக்கல்
செத்து மடிஞ்சது தமிழ்மக்கள்
வேடம் போட்டு ஓடிவந்தான் குள்ளநரி – தமிழனுக்கு
மேட போட்டு குரல்கொடுத்தான் மொள்ளமாரி!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

படமெடுத்தான் குசேலன்னு பேரு
தடபோட்டான் கன்னடத்து ஆளு
ஓடிப்போயி நக்கிட்டான்யா காலத்தான் – தமிழனுக்கு
வெடியவச்சி கிளப்பிட்டான்யா தூளுதான்!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

சோறுபோட்ட தமிழனத்தான் மறந்துட்டான்
சுயநலந்தான் பெரிதெனவே காட்டிட்டான்
தன் இனமும் தன் மொழியும் பெரிசா போச்சு – தமிழனுக்குத்
தலையிலதான் மூனு நாமம் மிச்சமாச்சு!
அடிச்சான் பாரு பல்டி! – அவன அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

இப்பவாச்சும் முழிச்சிக்கோடா தமிழா
எதிரிமூஞ்சைக் கிழிச்சுப்போடு தமிழா
சூடு சுரணை இன்னும் இருக்கும் இனமா? தமிழா நீ
செத்துவிட்ட நாரிப்போன பிணமா?

அடிச்சான் பாரு பல்டி! - அவன
அடிக்கணும்டா செருப்ப கழட்டி!!

...பாட்டு முடிந்தது. இனி, கதைக்கு வருவோம்..

**இது பழைய கதை:-
கடந்த மார்ச்சு 2008இல் தமிழ்நாடு ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தடுத்து கன்னட வெறியர்கள் கருநாடகத்தில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; திரையரங்குகள் கொளுத்தப்பட்டன; தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டன; கருநாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டனர். இந்த வெறித்தனத்திற்குக் கண்டனம் தெரிவித்து ஏப்பிரல் 4ஆம் நாள் தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் மாபெரும் எதிர்ப்புக்கூட்டம் ஒன்றினை நடத்தினர். இக்கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக 'சூப்பரு சுட்டாரு' இரசினிகாந்தும் கலந்துகொண்டார். மேடையில் தோன்றிய இரசினி, கன்னட வெறியர்களைக் கண்டிப்பது போலவும் அப்பாவித் தமிழ் மக்களை ஆதரிப்பது போலவும் உளறிக்கொட்டிக் கிளறிமுடினார்.

**இது புதிய கதை:-

கடந்த 1.8.2008இல் 'சூப்பரு சுட்டாரு' இரசினிகாந்து நடித்த 'குசேலன்' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைக் கருநாடகத்தில் திரையிடக்கூடாது என கண்டித்து அதே கன்னடர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்; இரசினியின் படத்தை எரித்தனர். உடனே, இர‌சினிகா‌ந்‌‌து க‌ன்னட த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்று‌‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், ஒகேன‌‌க்க‌ல் ‌பிர‌ச்‌சனையி‌‌ன் போது தா‌ன் பே‌சிய பே‌ச்சு‌க்காக வரு‌த்த‌ம் தெ‌ரி‌‌வித்தார். "இ‌ந்த ‌நிக‌ழ்வு என‌க்குப் பாட‌த்தைக் க‌ற்று‌த்த‌ந்து‌ள்ளது. இது போ‌ன்ற தவறை நா‌‌ன் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்யமா‌ட்டே‌ன். நான் கருநாடகத்தில் பிறந்தவன். கருநாடகத்தில் 'பஸ் கண்டக்டராக' வேலை செய்தவன். அந்தத் தொழில்தான் இன்று என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. எ‌ன்னை‌ எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ம‌க்க‌ளு‌ம் க‌ர்நாடகா‌வி‌‌ன் குழ‌ந்தைக‌ள். அவ‌ர்க‌ள், அவ‌ர்களுடைய மா‌நில‌த்‌தி‌ற்காக இதனை‌ச் செ‌ய்‌‌கி‌ன்றன‌ர். கட‌ந்த கால‌த்‌தி‌ல் நா‌ன் கூ‌றியதை தயவு செ‌ய்து... தய‌வு செ‌ய்து... மற‌ந்து‌விடு‌ங்க‌ள். எ‌ன்னுடைய பட‌த்தை ‌திரை‌யிட என‌க்கு அனும‌தியு‌ங்க‌ள். நா‌ன் க‌‌ன்னட‌ர்களு‌க்கு‌ம் உத‌வி செ‌ய்ய தயாராக இரு‌க்‌கிறே‌ன். "'குசேல‌ன்' பட‌த்தைக் க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தா‌ர்.

இதனா‌ல் க‌ர்நாடகா‌வி‌ல் ர‌‌சி‌னிகா‌ந்‌தி‌ன் 'குசேல‌ன்' பட‌ம் வெ‌ளியாவ‌தி‌ல் இரு‌ந்த ‌சி‌க்கலு‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. க‌ர்நாடகா‌வி‌ல் ர‌சி‌னி‌யி‌ன் 'குசேல‌ன்' பட‌ம் 15 திரையர‌ங்குக‌ளி‌ல் ‌திரை‌யிட‌ப்பட உ‌ள்ளது. இ‌ப்பட‌த்‌தி‌ன் ஒரு வார‌த்து‌க்கான நுழைவுச்சீட்டுகள் அனை‌த்து‌ம் ஏ‌ற்கனவே ‌வி‌ற்று‌த் ‌தீ‌ர்‌ந்து ‌வி‌ட்டன எ‌ன்பது கு‌றி‌ப்‌பி‌‌ட‌த்த‌க்கது.

*இது மானங்கெட்ட தமிழன் கதை:-

இரசினிகாந்தின் இந்த இரட்டை வேடத்தனத்தைக் கண்டித்து நடிகர் சரத்குமார், சத்தியராசு, விசய.டி.இராசேந்தர் போன்றோர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். அதே வேளையில், திரைப்படத்துறை சார்ந்த இயக்குநர் கே.பாலசந்தர், பி.வாசு முதலான நயவஞ்சக நரிக்கூட்டத்தினர் சிலர் கன்னடக்காரரான இரசினிக்கு ஆதரவாக வக்காளத்து வாங்கி பேசியுள்ளனர். இதைவிட மகா கொடுமை, "என் இனியத் தமிழ் மக்களே" என முழங்கும் இயக்குநர் பாரதிராசா கூட தமிழன் காலை வரிவிடும் வகையில் இரசினிக்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ்மானமும் தமிழ் உணர்ச்சியும் மழுங்கிப்போன தமிழ்நாட்டு மக்கள் கூட்டங்கூட்டமாகச் சென்று 'குசேலனைப்' பார்க்கின்றனர். என்ன வெட்கக் கேடு? என்ன ஒரு கேவலம்? என்ன ஒரு கேனத்தனம்?

கன்னட இன, மொழி, மாநிலத்தைச் சேர்ந்த நடிகன் இரசினி தன்னுடைய சொந்த நலனுக்காக தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் முன்னிலையில் நயவஞ்சகமாக நாடகமாடுகிறார். இதுகூட (புரிந்தும்) புரியாத தமிழ்நாட்டு மழுங்காண்டித் தமிழன் அவரைப் பெரிய மனிதராக்கிவிட்டு, அவருடைய படங்களுக்குப் பாலபிசேகம் செய்து, கையெடுத்து கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். எவன் எவனோ தமிழ்நாட்டுத் தமிழன் முதுகில் ஏறி மிதிக்கிறான். அதற்கெல்லாம் சூடு சுரணையின்றி தமிழ்நாட்டுத் தமிழனும் ஏமாந்துபோய் குனிந்து கொடுக்கிறான்.

என்ன கொடுமை ஐயா இது!!! கன்னடத்தானுக்கு இருக்கும் மொழிப்பற்றும் இனப்பற்றும் தமிழனுக்கு இல்லையா? கன்னடத்தானைப் பார்த்தும்கூட தமிழன் திருந்தவே மாட்டானா? எவன் எவனோ வந்து ஏறி மிதித்தாலும் ஏமாற்றிப் பிழைத்தாலும் தமிழனுக்குப் புத்தி வராதா?

@ஆய்தன்:-
தமிழ்நாட்டுத் தமிழனுக்குச் சூடு சுரணை இருந்தால்..
உலகத் தமிழனுக்கு மானம் ஈனம் இருந்தால்..
மலேசியத் தமிழனுக்கு உணர்ச்சியும் உறுதியும் இருந்தால்..
'குசேலன்' படத்தைப் புறக்கணிக்க வேண்டும்!
'குசேலன்' படத்தை இரசினியின் கடைசி தமிழ்ப்படமாக ஆக்கவேண்டும்!
'சூப்பர் சுட்டாரை' மீண்டும் அவர் நாட்டுக்கே விரட்டியடிக்க வேண்டும்!

சனி, 2 ஆகஸ்ட், 2008

மலேசியத் தமிழரின் 10 தாழ்வு எண்ணங்கள்


1.தமிழ்ப்பள்ளியில் படிப்பதைக் காட்டிலும் தேசியப் பள்ளியில் அல்லது சீனப் பள்ளியில் பயின்றால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

2.தமிழன் என்று சொல்லுவதைக் காட்டிலும் இந்தியன்; இந்து என்று சொன்னால்தான் பெருமையும் சிறப்பும் உண்டாகும்.

3.தமிழ் மரபை – பண்பாட்டைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இந்திய – இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் செல்வாக்கு உயரும்.

4.தமிழைக் காட்டிலும் வடமொழியில் இறைவழிபாடு, பூசை, சமய நிகழ்வு ஆகியவற்றைச் செய்தால்தான் முழுமையான பலனை அடைய முடியும்.

5.தமிழ்மொழி, இனம், கலை, இலக்கியம் பற்றி அறவே சிந்திக்காமல் இருந்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

6.தமிழ்க் குழந்தைகளுக்குச் சமற்கிருத மொழியில் அல்லது புரியாத மொழியில் அல்லது பொருளே இல்லாத புதுமையான பெயரைச் சூட்டினால்தான் புகழ் உண்டாகும்.

7.மொழிநலம் பற்றி அறவே கவலையில்லாமல், எண் கணித முறைப்படி பெயர்களை மாற்றிக் கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

8.வீட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி பள்ளி, பல்கலைக்கழகம், குமுகம், அரசியல் நிகழ்ச்சிகள் வரையில் தமிழைவிட மற்றைய மொழிகளில் அல்லது கலப்புமொழியில் நடத்தினால்தான் சிறப்பாக அமையும்.

9.தமிழ் நாளேட்டைப் படிப்பத்தைவிட மலாய், ஆங்கில நாளேடுகளைப் படித்தால்தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

10.அச்சு, மின்னியல் சார்ந்த தமிழ்த் தகவல் ஊடகங்கள் கலப்புத் தமிழில் செயல்பட்டால்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும்.


@ஆய்தன்:-
தமிழா.. மலேசியத் தமிழா மாறிவிடு! -தமிழைத்
தாய்த்தமிழை உயர்த்திப் பிடித்துவிடு!

போட்டுத் தாக்கு - 3


@ஆய்தன்:-
அரகுறை ஆடையுடன் ஆடுவதும்.. ஆங்கிலம் கலந்து பாடுவதும்தான் மலேசியத் தமிழ்க்கலையா? கலை என்ற பெயரில், தமிழைக் கொலைசெய்யும்.. காமத்தை வளர்க்கும்.. கேவலமான 'மண்ணின் மைந்தர்கள்' ஒழிந்து போகட்டும். தமிழ்க்கலையை வளர்க்க முடியாவிட்டாலும், இருக்கின்ற நவின கலையைப் பண்பாட்டு வரைமுறைக்கு உட்பட்டு வளர்க்கும் கலைஞர்களை வாழ்த்துவோம்.. வளர்த்தெடுப்போம்..!