வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 16 ஆகஸ்ட், 2008

காசி ஆனந்தன் நறுக்குகள் - 1


ஒரு விடுதலைப் போராட்டத்தின் நடுவில் ஓயாத அலைவுகள் – சிறைச்சாலைகள் – தலைமறைவுப் பொழுதுகள் – உசாவல்கள் – கடல்கடந்த பாய்ச்சல்கள் – இவற்றின் இடைய்ல், ஒயாது தமிழ்மொழி – தமிழ் இனம் – தாய்மண் பற்றுடன் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் உரிமையைப் பெற்றுத் தருவதற்காகவும் உணர்ச்சி நிறைந்த கவிதைகளையும், சிந்தனைக் கனல் சுடரும் கட்டுரைகளையும், சிந்திக்கத் தூண்டும் குறுங்கதைகளையும் படைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் காசி ஆனந்தன்.

கவிஞர் காசி ஆனந்தன் மனித நேயம் மிக்கவர்; மனிதர்கள் மனிதர்களாக வாழ வேண்டும்; தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று விடுதலையானவர்களாக அன்போடும் அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர். அதற்காகப் போராடுபவர்.

கவிஞர் காசி ஆனந்தன் படைப்புகள் கூர்மையானவை; வேகமும் உணர்ச்சியும் கொண்டவை; உண்மையின் ஒளி பொருந்தியவை; சிந்திக்கத் தூண்டுபவை; போலித்தனங்களையும் பொய்மைகளையும் வெளிச்சப்படுத்துபவை. சொல்லிலும் செயலிலும் – இலக்கியப் படைப்புகளிலும் – வாழ்க்கைச் செயல்பாடுகளிலும் – மாறுபாடு இல்லாது, வாழ்க்கையையே போராட்டமாகக் கொண்டு செயலாற்றி வரும் ஓர் உண்மை மனிதனின் இதய ஒலிகள் அவை.

'கவிஞர் காசி ஆனந்தன் நறுக்குகள்' எனும் நூலில் இலக்கியச்செல்வர் வல்லிக்கண்ணன் எழுதியுள்ள மேற்கண்ட சிறப்புரையை அறிமுகவுரையாகக் கொண்டு, கவிஞர் காசி ஆனந்தனின் உணர்ச்சிப் பொங்கும் நறுக்குகளை 'தமிழுயிர்' தொடராக வெளியிட உள்ளது.

எமது மலேசியத் தமிழரிடையே மொழி – இன சிந்தனைகளை எழுப்புவதற்கும், எழும்பிய சிந்தனைகளை சரியாகக் கட்டமைப்பதற்கும் இந்த 'நறுக்குகள்' துணைநிற்கும் என 'தமிழுயிர்' நம்புகிறது. 'காசி ஆனந்தன் நறுக்குகள்' தொடரின் முதல் பகுதியை இனி தொடர்ந்து படியுங்கள்.

1. மனிதன்

இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்

'பசு பால் தரும்'
என்கிறான்.

காகம்
இவன் வடையை
எடுத்தால்
'காகம்
வடையைத் திருடிற்று'
என்கிறான்.

இப்படியாக
மனிதன்...


2. இலக்கியம்

களத்தில்
நிற்கிறேன்...

என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.

தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?

வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!


3. மானம்

உன்
கோவணம்
அவிழ்க்கப்பட்டதா?

அவன்
கைகளை
வெட்டு!

கெஞ்சி வாங்கி
கோவணம்
கட்டாதே...

அம்மணமாகவே
போராடு..!

@ஆய்தன்:-

மலேசியத்தில்
விழித்தெழுந்து
எழுச்சியுடன்
அணிதிரண்டு
போராடுகிறான்
தமிழன்...

இந்தியன்
நலனுக்காக..!

4 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

நல்ல கவிதைத் தெரிவுகள்

பெயரில்லா சொன்னது…

அருமையான கவிதை வரிகள்
மலேசியத் தமிழருக்கும் பொருந்தும் .தமிழன் தமிழனாக வாழாதவரை தமிழனிடத்தில் மாற்றம் வராது.நல்ல முயற்சி தொடர்க.

தமிழுறவுடன்
ஒளியரசன்
கடாரங்கொண்டான்

பெயரில்லா சொன்னது…

உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அவர்களின் நறுக்குகளை வாசித்து மகிழ்ச்சி கொண்டேன். அவருடைய நறுக்குகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

மிகவும் சிறப்பான புத்தகம்... முன்பு படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு நறுக்குகளும் 'நச்'சென்று இருக்கும்... மேலும் எழுதுங்கள்...