வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 20 மே, 2008

வரம்பு மீறும் விரிவுரை முண்டம்!

  • >>>தமிழுயிருக்கு வந்த மின்னஞ்சல்...
தமிழுயிர் ஐயா ஆய்தன் அவர்களுக்கு வணக்கம்.

நான் பகாங்கு மாநிலம் குவாலா லீப்பிசில் உள்ள ஆசிரியர் பயிற்றகத்தில் ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றேன். இந்தப் பயிற்றகத்தில் பணியாற்றும் ஒரு தமிழ் விரிவுரையாளர் தமிழை இழிவாக பேசுகிறார். தமிழ் மொழி எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்பது போல பேசுகிறார். அதுமட்டுமல்லாமல், தூயதமிழ், நல்லதமிழ், தனித்தமிழ் என்று பேசுவது தேவையில்லாதது என்கிறார். மலாய்மொழி போல வேற்றுமொழி சொற்களை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ் சிறப்பாக இருக்கும் என்கிறார். ‘சுழியம்’ என்பதைவிட பூஜியம் என்பதுதான் நன்றாக புரிகிறது. எனவே, பூஜியம் என்றுதான் சொல்ல வேண்டும். சுழியம் என்பது யாருக்கும் புரியவில்லை என்கிறார்.

இத்தனையும் போதாது என்று, தமிழுக்கு சேவை செய்து தமிழை நன்றாக வளர்த்துவரும் உங்கள் குரல் என்ற மாத இதழை வாங்கவே கூடாது என்று எங்களைத் தடுக்கிறார். உங்கள் குரல் மிகவும் அருமையான ஒரு தமிழ் மாத இதழ். அந்த இதழைப் படித்துதான் நான் SPM மற்றும் STPM போன்ற தேர்வுகளில் தமிழ் மொழியில் சிறப்பாக தேர்ச்சி பெற்றேன். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான இதழைப்பற்றி வரம்பு மீறி இழிவாகப் பேசிகிறார். அதனுடைய தமிழ் கரடுமுரடானது என்றும், அன்றாட பழக்கத்திற்கு உதவாது என்றும் கூறுகிறார். அவரை எதிர்த்து பேச எங்களுக்குத் தைரியம் இல்லை. அதனால்தான் உங்களுக்கு இந்த மின்னஞ்சல் எழுதுகிறேன்.

அவருக்கு நல்ல பாடம் நீங்கள் தான் புகட்ட வேண்டும் ஐயா?

நன்றி வணக்கம்.
ஔவை.
குவாலா லீப்பிசு.

@ஆய்தன்:-
அன்புள்ள ஔவை, எமது தமிழ்ப்பாட்டி ஔவை அன்று தமிழை வளர்த்தெடுத்தாள்; இன்று அந்த ஔவையின் பெயரில் தாங்கள் தமிழைக் காத்து நிற்கிறீர்கள். முதலில், தங்களின் தமிழ் உள்ளத்தை வணங்கி மகிழ்கிறேன்.

தங்கள் மின்மடலில் விரிவுரையாளர் ஒருவர் மேற்கொண்டுவரும் தமிழ் எதிர்ப்பு வேலைகளைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளீர்கள். இப்படித்தான் நம் நாட்டில் மூளைக்கெட்ட – தமிழ்ச் சுரணைகெட்ட விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் அதிகம் பேர் இருக்கின்றனர்.

இவர்கள் என்னதான் தமிழ் படித்தார்களோ தெரியவில்லை? தமிழைப் பற்றி இவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை! இந்த அறிவுகெட்டவர்கள் ஏன்தான் தமிழ் கற்பிக்கிறார்களோ, அதுவும் தெரியவில்லை!

உங்கள் ஆசிரியர் பயிற்றகத்தில் உள்ள அந்த விரிவுரை முண்டத்திற்கும், அந்த முண்டத்தைப் போன்று இன்னும் நாட்டில் தமிழ் கற்பிக்கும் தமிழ்ச் சுரணைகெட்ட முண்டங்களுக்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் பொறுப்பைத் தமிழுயிர் அன்பர்களிடமே விடுகின்றேன். எனவே, தமிழுயிர் அன்பர்களே கண்டிப்பாகக் கண்டியுங்கள்!!!

பெற்றெடுத்த குழந்தையைப் பேணி வளர்த்து கல்வி, ஒழுக்கம், பண்பாடுமிக்க ஒரு மாந்தனாக வளர்த்தெடுக்கும் கடமையை நிறைவாகச் செய்யும் பொறுப்புள்ள ஒரு தாய்க்கு நிகராக, மொழிக்கு அரும்பணி செய்யும் ‘உங்கள் குரல்’ இதழைப் பழிப்பது என்பதும் பெற்ற தாயின் அடிவயிற்றில் எட்டி உதைப்பது என்பதும் ஒன்றே!!! பெற்ற மடியை எட்டி உதைப்பவன் உருப்படவே மாட்டான்!!!

ஞாயிறு, 11 மே, 2008

**அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்**


'அம்மா' என குழந்தை அழைக்கும் தமிழ்கேட்டு
அகம் மகிழ்ந்திடும் அன்னையர்க்கும்...

'மம்மி' என அழைத்தால் பிணமென்று பொருள்கண்டு
மனம் பதைத்திடும் அன்னையர்க்கும்...

அழகுத் தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டி
அருந்தமிழ் போற்றும் அன்னையர்க்கும்...

தலைவாரி பூச்சூடி தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளையைத்
தமிழ்கற்க அனுப்பும் அன்னையர்க்கும்...

விருந்தினர் வருகையில் வணக்கம் சொல்லி
வரவேற்கும் சிறுவரின் அன்னையர்க்கும்...

தமிழ்க்குடும்பம் வாழும் தமிழ்வீட்டில் தமிழ்ப்பேசும்
தமிழ்க்குழந்தை ஈன்ற அன்னையர்க்கும்..

திருக்குறள், தேவாரத் திருவாசகத் திருப்பாடல்கள்
தித்திக்கும் தமிழ்ப்பாலரின் அன்னையர்க்கும்...

வாழையடி வாழையென வந்த தமிழ்ச்சான்றோர்
வரலாறு புகட்டும் அன்னையர்க்கும்...

தமிழனுக்குப் பிறந்த தமிழனடா நீயென
தமிழுணர்ச்சி ஊட்டும் அன்னையர்க்கும்...

தமிழனென்று சொல்லி தலைநிமிர்ந்து நில்லடா என
தன்னம்பிக்கை வளர்க்கும் அன்னையர்க்கும்...

தமிழுயிரின் தலைவணங்கிய வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..
அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்.

வண்டவாளம்..!(3) அலார அறிவிப்பாளன்


பெயர்:- கொலைச்செல்வன்

தொழில்:- அசுட்றோ வானவில் அலாரம் நிகழ்ச்சி அறுவிப்பாளரு

தொழில் தகுதி:- ஒளறி ஒளறி தமில் பேசணும்; ஒழுக்கங்கெட்ட தனமாக நடந்துக்கணும்; ஒழுங்கா இருக்கும் இளைஞரைக் கெடுக்கணும்.

கல்வித் தகுதி:- தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் மறந்து போகிற அளவுக்கு படித்திருக்கேன்.

தமிழ்த் தகுதி:- என்னோட மம்மி(பிணம்)தான் தமில் சொல்லிக் கொடுத்திச்சி.


பொழுது போக்கு:- கேடு கெட்ட இளைஞர்களை தேடிப் பிடிப்பது

அறிவிப்பாளர் ஆனதற்குக் காரணம்:- என் வயித்த பார்த்தா தெரியலயா? எல்லாம் வயித்து பொழப்புதான்!

அலாரம் நிகழ்ச்சியின் நோக்கம்:- இளைஞர்களை நாரடிக்கும் கேவலங்கள், கோணங்கித் தனங்கள், நாய்த்தனங்கள், நரித்தனங்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது.

அடிக்கடி சொல்வது:- அலாரம் தொடர்ந்து அடிக்கும்..

எரிச்சல் செய்வது:- காலையில் குறட்டைவிட்டு தூங்கும்போது அலாரம் அடிப்பது.

வெறுப்பு ஏற்றுவது:- எங்க அப்பன் தமிழன் என்பது.

@ஆய்தன்:-
அலாரம் தொடர்ந்து அடித்தால் இன்னும் அதிகமான இளையோர்கள் நாறிப்போவதும்.. நாசமாகிப் போவதும் உறுதி! அலாரத்தைத் தலையிலே தட்ட வேண்டும்!

சனி, 3 மே, 2008

தென் ஆப்பிரிக்கத் தமிழன் கதை!!!


தமிழன் இல்லாத நாடில்லை என்பது உண்மை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவிலும் மிகப்பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் பல அண்டுகளுக்கு முன்னர் தென் ஆப்பிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர்கள்.

இன்று மூன்றாம் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தங்களின் மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றை மறந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். சொந்த மொழி, இனம், சமயம், பண்பாடு, கலை, இலக்கியம் ஆகிய அனைத்தும் கண்முன்னாலேயே செத்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாததுபோல வாழ்ந்து வருகிறார்கள்.

தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் இன்று தாய்மொழியாம் தமிழை மறந்தவர்களாக உள்ளனர். ஓர் இனத்தின் உயிர் என மதிக்கப்படும் தாய்மொழியை மதிக்கத் தெரியாதவர்களாக இருந்து வருகின்றனர். தாய்மொழியை மறந்துபோனதால் இன்று சொந்த இனத்தின் அடையாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவில் 6ஆம் வகுப்பு வரை தமிழைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழ் வானொலி இருக்கிறது. ஊடகங்களில் தமிழுக்கென்று இடம் இருக்கிறது. பல தமிழ் அமைப்புகள் இயங்கிவருகின்றன. மேலும், அரசாங்கம் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. நாடாளுமன்றத்தில் ஊடகத் துறை அமைச்சராகத் தமிழர் ஒருவர் இருக்கின்றார்.

தமிழுக்கும் தமிழருக்கும் இத்தனை உரிமைகளும் சலுகைகளும் இருந்தபோதிலும், அங்குள்ள தமிழர்கள் மொழி, இனப் பற்று இல்லாத காரணத்தினால் அனைத்தையும் இழந்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்கத் தமிழர்கள் தமிழ்க்கல்வியை மதிப்பதில்லை; தமிழ்மொழியைப் போற்றுவதில்லை. அங்குத் தமிழ் ஆர்வலர்கள் இல்லை. தமிழ் வகுப்புகளில் தமிழ் மாணவர்களைவிட ஆப்பிரிக்க இனச் சிறுவர்கள் ஆர்வமுடன் தமிழ் கற்று வருகின்றனர் என்பது கொடுமையாக உள்ளது. தமிழ் இயக்கங்கள் அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் ஒரு குறிப்பிட்ட மக்களே வந்திருந்து ஆதரவு தருகின்றனர். அவ்வாறு வருபவர்களும் நிகழ்ச்சி முடிந்த கையோடு தமிழையும் மறந்து விடுகின்றனர். வானொலி நேயர்களில் 90 விழுக்காடு பேர்கள் தமிழைவிட இந்திப் பாடல்களையும் அன்னியமொழிப் பாடல்களையும் தங்களின் விருப்பப் பாடல்களாக விரும்பிக் கேட்கின்றனர்.

மேலேயுள்ள அத்தனை விவரங்களையும் மனவேதனையோடு தெரிவித்திருக்கிறார் குறுகியக் கால வருகை மேற்கொண்டு மலேசியத்திற்கு வந்திருக்கும் ஆப்பிரிக்கத் தமிழரான திரு.சக்தி முரளிதரன்.

@ஆய்தன்:-
ஒவ்வொரு மனிதனும் இறக்கின்றான – அவன்
இருப்பவன் கண்களைத் திறக்கின்றான் என ஒரு பாடல் உள்ளது.
மொழியின சமய பண்பாட்டு மரபுகளை மறந்து செத்துக் கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்கத் தமிழரைப் பார்த்தாவது எமது மலேசியத் தமிழர் திருந்தட்டும். இல்லையேல், இன்றைய ஆப்பிரிக்கத் தமிழர் நிலை நாளைய மலேசியத் தமிழருக்குக் கண்டிப்பாக வந்துவிடும்.
எச்சரிக்கை!!!

தமிழா.. தமிழா.. எழுந்திரு..!


“இந்த நாட்டில் நம்மைப் பார்த்து சிறுபான்மை இனம் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று நம்மைப் பார்த்து பயந்து ஒளிகிறார்கள். உங்களில் நான் ஒருவன் என்ற உணர்வு தமிழனுக்கு வேண்டும். இறைவன் ஒருவனே நமக்கெல்லாம் தலைவன். அவன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு தினமும் வழிபாடு செய்யுங்கள். நமக்கு இனி வெற்றிதான்.” என்று பங்கோரில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடந்த கூட்டு வழிபாட்டில் இண்டிராப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தனேந்திரன் உணர்ச்சி பொங்க பேசினார்.

இனிவரும் காலத்தில் தமிழர்கள் பின்பற்றுவதற்கு 5 கட்டளைகளைப் பிறப்பித்துள்ளோம்.

1.ஒவ்வொரு தமிழரும் (இந்தியரும்) தங்களை வாக்காளராகப் பதிவுசெய்ய வேண்டும்.
2.ஒவ்வொரு தமிழ் வாழ்விணையரும் (தம்பதியரும்) குறைந்தது 5 பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
3.தமிழ்ப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும். இதனைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நமது கலை பண்பாடு தமிழ்க்கல்வி கற்றால்தான் தெரியும் – புரியும்.
4.ஒரு தமிழன் இன்னொரு தமிழனைப் பார்த்தால் இன்முகம் காட்டிப் பழக வேண்டும்.
5.முறையான இறைவழிபாடு தமிழனிடம் இருக்க வேண்டும்.

@ஆய்தன்:
முதலில், தமிழ் – தமிழர் உணர்வு பற்றி பேசியிருக்கின்ற அன்பர் தனேந்திரன் அவர்களைத் தமிழுயிர் வணங்குகிறது. காரணம், இந்தியர் – இந்து என்ற உணர்வு எமது மக்களிடையே பெருகியுள்ள அளவுக்குத் தமிழ் – தமிழர் என்ற உணர்வு பெருகவில்லை அல்லது பெருக்கப்படவில்லை. இதனால், எதிர்காலத்தில் மலேசியத்தில் தமிழரின் மொழி, இன, சமய, கலை, பண்பாட்டு வரலாறுகளும் சுவடுகளும் மறைந்துபோகும் பயங்கரம் நிகழக்கூடும். இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்தியர் – இந்து என்ற உணர்வைக் காட்டிலும் தமிழ் – தமிழர் என்ற உணர்வே பெரிதும் பயன்படும். இந்த உண்மையின் அடிப்படையில் அன்பர் தனேந்திரன் முன்வைத்துள்ள கருத்துகள் சிந்திக்கக்கூடியனவாக உள்ளன.

எமது மலேசியத் தமிழரிடையே தற்போது புதிய எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டிருப்பது உண்மையே. 2007 நவம்பர் 25ஆம் நாளுக்குப் பின்னர் எமது தமிழினத்தில் ஏற்பட்டுள்ள வரலாற்றுத் திருப்பமாக இதனைக் குறிப்பிடலாம். ஆனால், இந்த எழுச்சியும் விழிப்புணர்ச்சியும் இந்தியர் – இந்து என்ற வட்டத்திற்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பதாக கருதுகிறேன். இந்தியர் – இந்து என்ற உணர்ச்சியுடன் நாம் தமிழர்; நம் தாய்மொழி தமிழ் என்ற உணர்ச்சியும் பொங்கியெழ வேண்டும்.

மொழியால் தான் ஓர் இனம் அடையாளம் காட்டப்படும். அரசியல் சட்டப்படி நாம் அனைவரும் இந்தியர்கள் எனச் சுட்டப்பட்டாலும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதால் நாம் தமிழர்கள் என்பதை மறக்கலாகாது. இந்தியர் – இந்து என்ற உணர்ச்சியை மட்டுமே மக்களிடையே விதைத்துவிட்டு தமிழ் – தமிழர் என்ற உணர்ச்சியைச் சாகடித்துவிடக்கூடாது. மாறாக, தங்களை இந்தியர் – இந்து என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க்கும் இளையோரிடையே தமிழ் உணர்வையும் தமிழர் என்ற உணர்ச்சியையும் ஊட்ட வேண்டும். அந்தக் கடமையை நன்றாக உணர்ந்து செயல்பட்டிருக்கும் தமிழன்பர் தனேந்திரன் அவர்களைத் தமிழுயிர் பாராட்டுகிறது. அதேவேளையில், நமது தமிழரிடையே குறிப்பாக, இளையோரிடையே தமிழ் உணர்வை தொடர்ந்து ஊட்டிவருமாறு அவரைத் தமிழுயிர் வேண்டுகிறது.

இந்தியர் என்பது வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த அடையாளம். ஆனால், பரம்பரை பரம்பரையாக நாம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர். எனவே, ஆங்கிலேயன் வைத்த இரவல் பெயரில் நீண்ட காலம் வாழ்ந்துவிட முடியாது. நமது மரபுவழியான உண்மைப் பெயரை மீட்டெடுத்து அதனையே உயர்த்திப்பிடிக்க வேண்டும். தமிழ் – தமிழர் என்ற உணர்ச்சியே எதிர்காலத்தில் நமக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும். உலக உருண்டையில் தமிழருக்குத் தனிநாடு அமையும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இனி நாம் அன்னியர் பெயரில் குளிர்காயத் தேவையில்லை. நமது சொந்த அடையாளத்தோடு; சொந்த பெயரோடு எழுந்திட வேண்டும்.

தமிழனென்று செல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!

எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!

வாக்கெடுப்பு(3) முடிவு


மலேசியத் தமிழர்களிடையே தமிழ் உணர்வு பெருகி வருகிறது.


ஆம்:- 88%

இல்லை:- 12%

தெரியவில்லை:- 0%


@ஆய்தன்:
தமிழ் உணர்வு உள்ளவரை தமிழன் உயிர் வாழ்வான்!