வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 19 ஜூலை, 2008

அசுற்றோ:- தகவல் ஊடகமா? தரகர் ஊடகமா?


அசுற்றோ வானவில் தொலைக்காட்சி தமிழர்களின் அறியாமையை மூலதனமாக்கி, மூடநம்பிக்கைகளைப் பேரளவில் பரப்பி வருகின்ற கொடிய செயலைக் கண்டித்து, கடார மாநில, கூலிம் வட்டாரத்தில் இயங்கும் தியான ஆசிரமத்தின் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் எழுதியுள்ள கண்டனச் செய்தி இது. உண்மையான ஆன்மிகப் பணியை நேர்மையாக மேற்கொண்டுவரும் சுவாமிகளின் மனக்கொதிப்பைத் 'தமிழுயிர்' முழுமையாக ஆதரிக்கின்றது.

ஒரு காலக்கட்டத்தில் மக்களுக்கு நல்ல செய்திகளையும் உண்மையான விவரங்களையும் அள்ளித் தந்துகொண்டிருந்த ஊடகங்கள் இப்பொழுது தவறான கருத்துகளைப் பரப்பும் மலிவு சந்தைகளாக மாறி இருப்பது வருத்தத்துக்குரியது மட்டுமன்று; கண்டனத்துக்குரிய செயலும்கூட.

குறிப்பாக அசுற்றோ போன்ற ஒளியலை சாதனங்கள் கொஞ்சங்கூட மனசான்றே இல்லாமல் எளிய மக்களின் அறியாமையை மூலதனமாக்கி அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளை பகடைக் காய்களாக்கி மக்களைத் தப்பும் தவறுமாக வழி நடத்துகிறார்களே என்று மனம் குமுறுகின்றது.

அண்மைக் காலமாகச் சமயச் சான்றோர்கள், சமுதாயக் கேடயங்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி பெற்றவர்கள் என்ற போர்வையில் நிறைய போலி ஆசாமிகள், பொறுப்பற்ற சிற்றறிவாளர்கள், அறைகுறை சோசியர்கள், சராசரி சாமியார்கள் சமய தத்துவங்களைப் பற்றி வாய் வலிக்கப் பேசுகிறார்கள்.

திடீர் இரசவாத மருத்துவர்களும், அதிர்ஷ்டக்கல் விஞ்ஞானிகளும், வாக்குச் சுத்தமில்லா வாஸ்து நிபுணர்களும், நமது பாரம்பரிய சோதிட சாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத எண் கணித மேதைகளும், வேத விற்பன்னர்கள் போல பேசித் தொலைக்கிறார்கள். இவர்களைச் சிறுமைப்படுத்துவது நமது நோக்கமன்று. நமது பண்பட்ட பாரம்பரிய நற்சிந்தனைகள் சிறுமைப்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்தில் மனம் கொப்பளிக்கிறது.

இவர்கள் எதற்கெடுத்தாலும் தகடுகள் நல்லது; தாயத்துகள் நல்லது; 'லோக்கேட்'டுகள் வைத்துக்கொண்டால் அவை பாதுகாக்கும்; பிரமிடுகள் வைத்துக்கொண்டால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்; நவரத்தினக் கல்லை அணிந்துகொண்டால் பொன்னும் பொருளும் குவியும் என்று மக்களைப் புதுவகை மூடநம்பிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு அசுற்றோ வானவில் இடைத்தரகர்களாகச் செயல்படுவது அறுவறுக்கத்தக்க செயலாகப் படுகின்றது. அசுற்றோ என்ன தகவல் சாதனமா? அல்லது தரகர் சாதனமா? இதைப்பற்றி பொது மக்களும் வாளாவிருப்பது பெருத்த வேதனையைத் தருகின்றது.

ஏற்கனவே நம் தமிழ் மக்கள் மூடச்சடங்குகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இவர்களுக்குப் போதிக்க வேண்டியது தன்னம்பிக்கையை வளர்க்கும் அடிப்படை இறை நம்பிக்கை. இதை விடுத்து சட சத்தியான பிரபஞ்ச சத்தியையே இறை சத்தியாக முன்மொழிந்து பத்தர்களைக் குழப்புவது நம்முடைய ஆழ்ந்த இறைச்சிந்தனைக்கு இழுக்கு. நாட்டின் இறையாண்மைக்கும் பழுது. சிற்சத்திக்கும் அருட்சத்திக்கும் வேறுபாடு அறியாதவர்கள் தத்துவ ஞானத்தைப் போதித்தால் இப்படித்தான் அபத்தமாக போய் முடியும்.

இனியும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு முன்னால் அசுற்றோ பொறுப்பாளர்களும் தணிக்கைக் குழுவினரும் சமய சான்றோர்களைக் கலந்தாலோசித்து ஒளிபரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

@ஆய்தன்:-
சோதிடம், வாஸ்து, எண்கணிதம்; நவரத்தினம்; ஓமம்; பிரமிடு என்ற பெயர்களில் சில களவாணிகளால் உண்மைச் சமயமும் இறை நம்பிக்கையும் கண்முன்னே கற்பழிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சமய இயக்கங்கள் தூங்கிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? ஒரு காலத்தில் சமயத் தலைவர்கள் சடங்கு, சம்பிரதாய, சமய விளக்கம் அளித்த நிலைமை மாறிப்போய், இன்று நவரத்தின வியாபாரி, ஊதுவத்தி வணிகர், வாஸ்து விற்பனையாளர், எண்கணித 'ஏஜெண்டு' என ஏமாற்றுப் பேர்வழிகள் வாய்கிழிய விளக்கம் அளிகின்றனர். படித்தத் தமிழ் முண்டங்களும் படிக்காத தமிழ் தண்டங்களும் ஏமாறுவதற்கு அணியமாக(தயாராக) இருக்கும்வரை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்!!!

  • மூலம்: செம்பருத்தி மாதிகை - சூலை 2008

இனியத் தமிழில், இனி வானூர்தித் தகவல்

'மலேசியன் ஏர்லைன்சு சிசுட்டம்' (MAS) எனப்படும் மலேசிய வானூர்தி நிலையம் தன்னுடைய வாடிக்கையாளர் தகவல் நடுவத்தில் (Call Centre) தமிழ்மொழியை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தமிழ்ப் பயன்பாடு கடந்த 12.7.2008 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இனி, தமிழர்களும் தமிழ்ப்பேசும் வாடிக்கையாளர்களும் தமிழ்மொழியில் வானூர்தித் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


மலேசிய வானூர்திப் போக்குவரத்துத் தொடர்பான அனைத்து விவரங்களும் தகவல்களும் இனிமேல் தமிழிலேயே வழங்கப்படவுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி மட்டுமல்ல. மலேசிய வானூர்தி நிலையத்தில் மற்றைய மொழிகளுக்கு ஈடாகத் தமிழுக்கும் இடம் வேண்டும் என்று பல்லாண்டு காலமாக எமது மலேசியத் தமிழர் அமைப்புகள் முன்னெடுத்த முறையான நடவடிக்கைகளுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகவும் இதனைக் கருதலாம்.

மலேசிய வானூர்திப் போக்குவரத்துத் தொடர்பான தகவல்களைத் தமிழில் பெறுவதற்கு 1300883000 என்ற இலவய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். வார நாள்களில் காலை 8.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரையிலும், வார இறுதி நாள்களில் (சனி - ஞாயிறு) காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரையிலும் தமிழில் பேசி விவரமும் விளக்கமும் பெறலாம்.

ஆக, பலகாலம் காத்திருந்து இப்போதுதான் நம்முடைய தமிழுக்குக் கிடைத்திருக்கும் இந்த அருமையான வாய்ப்பைத் தமிழர்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலேசிய வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்தும் ஒவ்வொரு மலேசியத் தமிழரும் இனி இந்தத் தமிழ்ச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். அதோடு, மலேசியத்திற்கு வந்து போகும் தமிழகம், இலங்கை, சிங்கை உள்ளிட்ட அயலகத் தமிழர்கள் அனைவரும் இனிமேல் வானூர்தித் தகவல்களைப் பெற இந்தத் தமிழ்ச் சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பைத் தமிழர்கள் பயன்படுத்தாமல் போனால், வானூர்தி வாடிக்கையாளர் எவரும் தமிழ்ச் சேவையைப் பயன்படுத்துவதில்லை என்ற கரணியத்தைக் காட்டி மிக விரைவிலேயே தமிழ்ச் சேவைப் பிரிவை இழுத்து மூடி விடுவார்கள்.

மலேசிய வானூர்திகளைப் பயன்படுத்தும் எமது இனிய மலேசியத் தமிழர்களே.. உலகத் தமிழர்களே.. நமது உயிர்த்தமிழைக் காக்கும் கடமையை மறந்து விடாதீர்கள்!!

@ஆய்தன்:-
வானூர்தி நிலைய அறிவிப்புகள் தமிழில் வருவது எப்போது?
வானூர்தி நிலைய அறிவிப்பு பலகைகளில் தமிழ் வருவது எப்போது?

சனி, 5 ஜூலை, 2008

மானங்கெட்ட செயலுக்கு மன்னிப்பு ஒரு கேடா?


கடந்த 28.6.2008இல் பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில், "பாம்பையும் இந்தியரையும் கண்டால் முதலில் இந்தியரை அடிக்க வேண்டும் என்று ஒரு பழமொழி இருக்கிறது" என அமிடா ஒசுமான் என்ற சட்டமன்ற உறுப்பினர் பேசியுள்ளார். இவருடைய இந்தத் தன்மூப்பான பேச்சு தமிழ் மக்களிடையே மிகப்பெரிய சீற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள தமிழர் சார்ந்த அரசியல், பொது இயக்கங்கள், தனியாட்கள் என பல தரப்பினரும் தங்களின் எதிர்ப்பைப் பகிரங்கமாகக் காட்டினர். இதனையடுத்து, பேரா மாநில சுங்கை ரப்பாட் சட்டமன்ற உறுப்பினருமான அப்பெண்மணி தமிழ் மக்களிடத்தில் மன்னிப்புக் கோரினார். மேலும், மாநில அம்னோ கட்சியும் பகிரங்க மன்னிப்பைக் கோரியது. தமிழரைச் சிறுமைப்படுத்தியுள்ள அந்தச் சட்டமன்ற உறுப்பினரைத் தமிழுயிரும் மிக வன்மையாக கண்டிக்கிறது.
  • இந்தியரைப் பாம்பென்பார்
    எதிர்கண்டால் அடியென்பார்
    இனவெறுப்பை மூட்டிவிடும்
    ஈனரைத் தாக்கு வீரே!

    படித்த இனமென்பார்
    பண்பாளர் தாமென்பார்
    பகையுணர்ச்சி ஏற்படுத்தும்
    பாவிகளைத் தாக்கு வீரே!

    ஓட்டுக்கேட்டுக் கால்பிடிப்பார்
    ஓடிவந்து உதவிடுவார்
    உடனிருந்து உயிர்கொல்லும்
    ஓநாயைத் தாக்கு வீரே!

    மானங்கெட்டச் செயல்புரிவார்
    மன்னிப்பும் கேட்டுவைப்பார்
    மடத்தனத்தில் ஊறிக்கிடக்கும்
    மடைச்சியைத் தாக்கு வீரே
    !
  • ~ஆக்கம்:- ஆய்தன்~
@ஆய்தன்:-
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
-பாவேந்தர் பாரதிதாசனார்

தமிழ்ப்பள்ளி அறவாரியம் தமிழ்க்கல்விக்கு அரணாகட்டும்

எமது மலேசியத்தில் தற்போது 523 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் 150 பள்ளிகள் முழு அரசு உதவிபெறும் பள்ளிகளாகவும், எஞ்சிய 373 தமிழ்ப்பள்ளிகள் பகுதி உதவிபெறும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. எமது நாடு விடுதலையடைந்து 50ஆண்டுகளைக் கடந்தும்கூட 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் இன்னமும் அரசின் முழு உதவிபெறாமல் இருப்பதானது வருத்தமளிக்கும் செய்திதான். ஆயினும், அரசின் முழு ஆதரவு இல்லாமல் குற்றுயிரும் குலையுயிருமாக எமது தமிழ்ப்பள்ளிகள் தள்ளாடித் தத்தளித்து உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்த 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை துணையமைச்சர் மாண்புமிகு தோ.முருகையா அண்மையில் வெளியறிவிப்புச் செய்தார். அறிவிப்புச் செய்ததோடு நின்றுவிடாமல் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார் துணையமைச்சர்.

அந்தவகையில், கடந்த 29.6.2008ஆம் நாளில் கோலாலம்பூர் புத்திரா உலக வாணிக நடுவ(மைய)த்தில் குமுகாயத்தைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மிகப்பெரிய அளவில் கலந்துரையாடலை நடத்தினார். அந்தக் கலந்துரையாடலில் 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' அமைப்பதற்கு அனைவரும் கொள்கையளவில் ஒத்துக்கொண்டனர்.

இந்த அறவாரியத்தின் கீழ் 10 மில்லியன் மலேசிய வெள்ளி பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும். அதோடு, வெள்ளிக்கு வெள்ளி என்ற அளவில் தமிழ் மக்கள் வழங்கும் ஒவ்வொரு வெள்ளிக்கு ஈடாக அரசிடமிருந்து மானியம் கோரப்படும். இந்த அறவாரியத்தின் செயற்குழுவில் பல்வேறு பொது இயக்கங்களின் நிகராளிகள் நியமிக்கப்படுவர்.

'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' மூலம் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை ஏந்து(வசதி)கள் மேம்படுத்தப்படும். தமிழ்ப்பள்ளிகளில் படித்து மேல்படிப்புக்குச் செல்லும் மானவர்களுக்குக் கல்வி உதவிநிதி வழங்கப்படும். மேலும், நாட்டிலுள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளையும் முழு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இப்படியாக, 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவை அத்தனையும் பேச்சளவில் மட்டும் இருந்துவிடாமல் மிக விரைவிலேயே செயல்வடிவம் காணவேண்டும் என்பது தமிழுயிரின் அவாவாகும்.

இத்தனைக்கும் மேலாக, இந்தத் 'தமிழ்ப்பள்ளி அறவாரியம்' கலந்துரையாடலில் எம்மைப் பெரிதும் கவர்ந்த விடயம் ஒன்று உண்டு. அதாவது, இந்த நிகழ்ச்சியில், மக்கள் முற்போக்குக் கட்சியின் (பிபிபி) துணையமைச்சர் தோ.முருகையாவோடு, ம.இ.காவின் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், கெராக்கான் கட்சி துணையமைச்சர் எ.கோகிலன் என மூன்று கட்சிகளைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள் ஒன்றாக இணைந்து ஒரே மேடையில் சமுதாயத்திற்காக ஒன்றுசேர்ந்திருப்பது பாராட்டுக்குரிய நிகழ்வாகும். (படத்தைப் பார்க்க)


எமக்குத் தெரிந்தவரையில், மலேசிய வரலாற்றில் இப்படி வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கட்சி வேறுபாடுகளைத் தூக்கியெறிந்துவிட்டு குமுகாய நலனுக்காக அதுவும் தமிழ்ப்பள்ளி நலனுக்காக ஒன்றுபட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்றால் அது மிகையாகாது.

எமது தமிழினத் தலைவர்களின் இந்த ஒற்றுமையும்.. இந்த புரிந்துணர்வும்.. இந்த நல்லிணக்கமும் என்றென்றும் தொடர வேண்டும். முன்னாள் தலைவர்கள் சிலரின் தன்னலப் போக்கினால் எமது தமிழ்க் குமுகாயம் அவதிப்பட்டது... பிளவுப்பட்டது... நட்டப்பட்டது... எல்லாமே போதும்..! போதும்..!

இனியேனும், தனிப்பட்ட கருத்துகளை.. தன்னல எண்ணங்களை.. கட்சி வேறுபாடுகளை.. அரசியல் நோக்கங்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைத்துத் தலைவர்களும் இந்த நாட்டில் ஏமாளியாக வாழ்ந்துவரும் எமது தமிழ் மக்களைக் கைதூக்கிவிட கைகோர்த்து நிற்கவேண்டுமென தமிழுயிர் வேண்டுகிறது. இந்த வேண்டுகோள் நடுவணரசு ஆளுங்கட்சித் தலைவர்களுக்கும் சில மாநிலங்களின் ஆளுங்கட்சி தலைவர்களுக்கும் சேர்த்துதான்.

@ஆய்தன்:-
எந்தக் கட்சியில் நீ இருந்தாலும்
இனத்தை மறந்திடாதே - தமிழா
இனத்தை மறந்திடாதே.!

விடுதலை செய்திடுக! அல்லது நீதிமுன் நிறுத்திடுக!



(“எங்கிருந்தோ வந்தான்” எனும் மகாகவி பாரதியாரின் பாட்டிசையில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது)



இங்கிருந்தே வந்தார்! “இண்ட்ராப்பு(*1)” யாமென்றார்!
இங்கிவரை நாம்பெறவே என்னதவம் செய்துவிட்டோம்!
அம்மா! அம்மம்மா! - இங்கிருந்தே வந்தார்!

நூற்றாண்டில் பாதியய்யா! ஐம்பது போனதய்யா!
மாற்றாந்தாய்ப் பிள்ளைகள்போல் மாறி மருகிநொந்தோம்!
எங்கள் இனமானம் காக்கவந்தீர் வாழ்கநீவீர்!
உங்கள் விடுதலைதான் வெற்றிபெறும் வாழ்கவாழ்க! (இங்கிருந்தே வந்தார்! )

இந்தியரின் வாய்ப்பிங்கே பத்துவிழுக் காடென்றார்
அஞ்சுக்குப் பத்து பழுதெனினும் தந்துவந்தார்!
“நீக்கம்; இனவிகிதம் இல்லையினி!(*2)” என்றாரே!
தேக்கமாய்ப் போனதய்யா எல்லாமே போனதய்யா!
தொட்ட இடமெல்லாம் தட்டுப்படும் என்பதுபோல்
தொட்ட துறையெல்லாம் தட்டுக்கெட்டுப் போனதென்ன?
கேள்வி பலப்பலவே யாரே விடைசொல்வார்!
வேள்வி தொடங்கிவைத்தீர்! இண்ட்ராப்பே வாழியவே! (இங்கிருந்தே வந்தார்! )

எங்கள்தமிழ்ப் பள்ளிகளோ கழுதைதேய்ந்த கட்டெறும்பு
“பந்துவான் மோடாலாம்(*3)” பிச்சைபோல் ஈவாராம்!
கல்விநெறி சொல்லுங்கால் எல்லாம் சமமென்பார்
நம்பள்ளி என்றாலே கோயில்போல் மானியமாம்!
பன்னாட்டு மக்களிங்கே வேலைசெய்தே வாழுகின்றார்
இந்நாட்டு மக்களின்னும் “மை கார்டு(*4)” தேடுகின்றோம்!
நாள்தோறும் நல்ல அறிக்கைகள் செய்திகளாம்
கூழ்போல மக்களதை உண்டிடவோ தின்றிடவோ (இங்கிருந்தே வந்தார்! )

பாதை புரியாமல்; சோதி தெரியாமல்பேதையர்;
ஆயிரம்பல் லாயிரம்பேர் இன்னும்!
இதுபோல எத்தனையோ அத்தனையும் மாற
புதுப்பாதை தந்தவரே பாண்டவரே வாழியவே!
எங்கள் இனநிமிர்வை; இன்ப மலேசியத்தே
எங்கும் ஒளிச்சுடரை ஏற்றிவைத்த தங்கங்களே!
உங்கள் உயர்பணியை வன்முறை என்பவரார்?
பொங்கு தமிழினத்துச் சிங்கங்களே வாழியவே! (இங்கிருந்தே வந்தார்! )

விடுதலை செய்திடுக! இல்லையெனில் ஐவர்(*5)செய்த
கெடுதலைச் சொல்லிநீதி முன்னே நிறுத்திடுக!
விடுதலை செய்திடுக! இன்னே அவர்செய்த
கெடுதலைச் சொல்லிநீதி முன்னே நிறுத்திடுக! (இங்கிருந்தே வந்தார்! )


~ கரு. திருவரசு, மலேசியா. ~
  • விளக்கக் குறிப்பு:-
*1.இண்ட்ராப்பு:- (இந்து உரிமை மீட்புக் குழு) என்பது திரு.வேதமூர்த்தி, உதயகுமார் உடன்பிறப்புகளோடு, சில வழக்குரைஞர்களும் சேர்ந்து திட்டமிட்டு அமைத்துக் கொண்ட “ஆந்தியர் உரிமை மீட்புக்குழு”, அரசியல் கலப்பில்லாத ஒரு பணிக்குழு.

*2.“நீக்கம்:- இனவிகிதம் இல்லையினி! என்றாரே” அதாவது, ஆன விகிதம் ஆனிமேல் ஆல்லை, அந்த முறை நீக்கப்படுகிறது எனும் அரசு அறிவிப்புக்கு முன், நாட்டு மக்களை மலாய் மக்கள், சீன மக்கள், இந்திய மக்கள், இதர மக்கள் என நான்கு பிரிவாகக்கொண்டு (இப்பொழுதும் அப்படித்தான்) அவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

*3.பந்துவான் மோடால்:- (Bantuan Modal) இந்த நாட்டில் அரசு நடத்தும் எல்லாப் பள்ளிக்கூடங்களும் ஆரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1. பந்துவான் புன்னோ Bantuan Penuh, 2. பந்துவான் மோடால் Bantuan Modal. அதாவது முழு உதவிபெறும் பள்ளிகள், பகுதி உதவிபெறும் பள்ளிகள். தமிழ்ப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கடந்த 50 ஆண்டுகளாகவே பகுதி உதவிபெறும் இரண்டாவது பிரிவிலேயே இருக்கின்றன.

*4.“மை கார்டு”:- (My Kad) இது மலேசியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசு வழங்கும் அடையாள அட்டை. இந்தோனேசியா, பாக்கிசுத்தான், பங்களாதேசு போன்ற பல நாடுகளிலிருந்து முறையாகவும் கள்ளத்தனமாகவும் இங்கே குடியேறியுள்ளவர்கூட ஆந்த அட்டையை எப்படியோ பெற்றிருக்கிறார்கள். நாடு விடுதலை பெற்றபிறகு இங்கேயே பிறந்த மலேசிய இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் இன்னமும் “மை கார்டு” இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

*5 ஐவர்;- “இந்தியர் உரிமை மீட்புக்குழு”வைச் சேர்ந்த ஐந்துபேர். இவர்களை மலேசிய அரசு “இசா” (Internal Security Act)எனும் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் சிறையில் வைத்துள்ளது. இசா என்பது வழக்கு, விசாரணை எதுவும் ஆல்லாமல் கால வரையின்றிக் காவலில் வைப்பதற்கு வகைசெய்யும் சட்டமாகும்.

@ஆய்தன்:-
எமது மலேசியத்தின் மிகச் சிறந்த பாவலர்களுள் ஒருவர் வண்ணக்கவிஞர் கரு.திருவரசு. பாவலர் ஐயா அவர்கள், உள்ளத்தை நெகிழ வைக்கும் இந்த அருமையான கவிதையை அனுப்பி தமிழுயிரைப் பெருமைபடுத்தி இருக்கிறார். பாவலர் ஐயா போன்ற பெரியோர்களும் எமது தமிழுயிரைப் படித்து வருகின்றனர் என்பதை அறிகையில் மிகவும் மகிழ்வு அடைகிறேன். பாவலர் கரு.திருவரசு ஐயா அவர்களை நன்றியோடு வணங்கி மகிழ்கிறேன்.