வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 25 டிசம்பர், 2008

தமிழ்ப் பற்றாளர்களைப் பழிப்பது நியாயமா?

*தமிழில் அன்னிய மொழிகளைக் கலக்காதே என்று தமிழ்ப்பற்றாளர்கள் சொன்னால்.. உடனே தமிழ்ப் பண்டிதர்கள் என்று முத்திரைக் குத்துவது..!

*அச்சு - ஒலி ஒளி - மின்னியல் ஊடகங்களில் தமிழைச் சிதைப்பவர்களைத் தமிழ்ப்பற்றாளர்கள் கண்டித்தால்.. உடனே தமிழ் வெறியர்கள் என்று பறைசாற்றுவது..!

*அறிவியலும் கணிதமும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் குரல் கொடுத்தால்.. உடனே பிற்போக்குவாதிகள் என்று பகடி பண்ணிவது..!

*எங்கும் – எதிலும் – எப்போதும் நல்லதமிழே பயன்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் அறிவுரை கூறினால்.. உடனே குறுகிய மனப்பான்மை என்று மட்டம் தட்டுவது..!

இப்படியாக, தமிழை முன்னிறுத்தி சிந்திக்கும் தமிழ்ப்பற்றாளர்களை ஏளனமும் இழிவும் செய்வதையே சிலர் ஆயுள்கால பணியாகச் செய்துவருகின்றனர்.

இவர்கள் யாரென ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்.

1.அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள்
2.அதிகார பலம் படைத்தவர்கள்
3.செல்வச் செழிப்பு கொண்டவர்கள்
4.பெரும் வணிகர்கள் - தொழில்முனைவர்கள்
5.சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள்
6.உயர்ப் பதவிகளில் இருப்பவர்கள்
7.ஆங்கில / மலாய் கல்விவழி முன்னேறியவர்கள்
8.தமிழர் அல்லாதவர்கள்
9.தமிழ் மொழியின உணவற்ற தமிழர்கள்
10.பிழைப்புக்காக மட்டும் தமிழைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்
11.ஏதேனும் ஒரு நயப்புக்காக நத்திப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள்
12.தமிழின் மீது தாழ்வுமனப்பாண்மை கொண்டிருப்பவர்கள்

என இப்படிப்பட்டவர்கள்தாம் காலந்தோறும் காலந்தோறும் தமிழையும் தமிழரையும் தமிழ்ப் பற்றாளர்களையும் ஏளனம் செய்து வருகின்றனர் – இழிவுபடுத்தி வருகின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் – தமிழர் பற்றி பேசுபவர்கள் வெறியர்கள்; தீவிரவாதிகள்; பிற்போக்குவாதிகள்; பழமைவாதிகள்; பிழைக்கத் தெரியாவர்கள்; காலத்திற்கேற்ப சிந்திக்காதவர்கள் என்றுதான் ஆழமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மொழி - இனத்துக்காகப் போராடுவதும் குரல்கொடுப்பதும் குறுகிய எண்ணம் என்று நம்பியும் மற்றவரை நம்பவைத்தும் வருகின்றனர்.

மேலே அடுக்கிச் சொல்லப்பட்ட அத்தனை பேரையும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்! அதற்குமுன் பின்வரும் செய்தியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்!!

"அறிவியல், கணிதம் ஆகிய இரு பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்தின் மீது நீதிமன்ற வழக்கு போடுவோம். எதிர்வரும் திசம்பர் 31க்குள் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்" என்று காபேனா (GAPENA) எனப்படும் மலாய் எழுத்தாளர் கூட்டமைப்பு கடந்த 24.12.2008இல் அறிவித்துள்ளது.

(மேல்விவரம் காண கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும்)

தமிழ்ப்பற்றாளர்களை மொழி வெறியர்கள் – தீவிரவாதிகள் – பழமைவாதிகள் – குறுகிய மனப்பான்மையர் என மட்டம் தட்டுகின்றவர்களை நாம் கேட்க விரும்பும் கேள்வி..!

மலாய்மொழியைக் காக்க தற்போது துடித்து எழுந்திருக்கும் 'காபேனா' என்ன மலாய்மொழி வெறியர்கள் இயக்கமா?

மலாய்மொழியின் தூய்மையைப் பேண துடிகின்ற 'காபேனா' என்ன மலாய்மொழி தீவிரவாத இயக்கமா?

மலாய்மொழியைக் கல்வி மொழியாக்க அரசாங்கத்தைக் கோரும் 'காபேனா' மலாய் பண்டிதர் இயக்கமா?

அறிவியலையும் கணிதத்தையும் மலாயில் கற்பிக்காவிட்டால் வழக்கு போடுவோம் என அரசாங்கத்தையே மிரட்டும் 'காபேனா' பிற்போக்கு இயக்கமா?

ஆங்கிலமும் அன்னியமொழிகளும் கற்றுவிட்டு – கையில் கொஞ்சம் காசுபணம் சேர்த்துவிட்டு – அரசாங்கம் பிச்சையாகப் போட்ட அதிகாரத்தை வைத்துக்கொண்டு வாய்கிழிய தமிழ்ப்பற்றாளர்களைப் பற்றி பழித்தும் இழித்தும் பேசும் நம்மின மேதாவிகள் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?


தாய்மொழி என்பது ஒருவரின் பிறப்புரிமை

சொந்த மொழியைப் பற்றி சிந்திப்பதும் – சொந்த தாய்மொழியை வளர்ப்பதும் – சொந்தத் தாய்மொழியைக் காப்பதும் ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமை அல்லவா?

சொந்த மொழியைக் கற்க மாட்டாதவன் – சொந்த மொழியயைக் கற்பிக்க மாட்டாதவன் – சொந்த மொழியைக் காக்க மாட்டாதவன் நல்ல அறிவும் தெளிவும் பெற்றவனா?

ஆகவே, தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் தொடங்கி இன்றுள்ள கொள்ளுப்பேரன் தமிழ்ப்பற்றாளன் வரையில் தமிழைக் காத்து நிற்பவர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

வாழையடி வாழையென வந்த தமிழ்மரபினரான தமிழ்ப்பற்றாளர்களைக் குருட்டுத்தனமாக இனி எவரும் ஏளனம் பேச வேண்டாம். காரணம்,

அவனவன் வாயாலன்றிப் பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப் பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியாலன்றிப் பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!

@ஆய்தன்:-
BAHASA JIWA BANGSA (மொழியே இனத்தின் உயிர்நாடி)

செவ்வாய், 23 டிசம்பர், 2008

தமிழோடு உயர்க தமிழ் இளைஞர் மணிமன்றம்


கடந்த 21-12-2008இல், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் 41ஆவது பேராளர் மாநாடு மிகச் சிறப்புற நடத்தேறியது. நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் ஐந்தாவது தலைவராக இருந்த திரு.பொன்னையா பிரம்பன் பதவி விலகிய வேளையில், நெகிரி மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திரு.முரளி புதியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மணிமன்றத்தைக் கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுத்தது, தமிழ் அலை சொற்போர் போட்டியை மாபெரும் அளவில் நடத்தியது, தமிழ்ப்பள்ளிகளுக்குக் குழந்தைகளை அனுப்பும் இயக்கத்தை முடுக்கிவிட்டது, நாடளாவிய நிலையில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தை மீண்டும் எழுச்சியுற வைத்தது, இடைநிலைப்பள்ளி பாடநூலில் மலேசியத் தமிழர்கள் பற்றிய இழிவான சொற்களை நீக்க போராடியது முதலானவற்றை மணிமன்றத்தின் முன்னாள் தலைவர் பொன்னையாவின் சாதனைகளாகக் குறிப்பிடலாம். தமிழ்க் குமுகாய நலன்கருதி அவர் மேற்கொண்ட பணிகள் பாராட்டப்பட வேண்டியவை - போற்றப்படவேண்டியவை.

என்ன செய்யப் போகிறார் முரளி?

தற்போது, புதிதாகத் தேர்வு பெற்றிருக்கும் முரளி மணிமன்றத்தில் தொடக்கக்கால சாதனைகளைப் போல அல்லது முன்னாள் தலைவர் பொன்னையா போல தமிழ் இளைஞர்களுக்கும் – தமிழுக்கும் – தமிழர்க்கும் என்ன செய்யப் போகிறார் என்பது சமுதாயத்தின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

திரு.முரளி தன்னுடைய தலைமைத்துவத்தில் மணிமன்றத்திற்குப் புதிய தோற்றத்தையும் புத்தெழுச்சியையும் ஏற்படுத்துவதோடு, "தமிழோடு உயர்வோம்" என்ற மணிமன்றத்தின் முழக்கத்தைச் செழிக்கச் செய்யவேண்டுமென தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

தமிழ் இளைஞர் மணிமன்றம் என்ற சத்திமிக்க பேரமைப்பு எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் – எவ்வித நயப்புக்கும் அடிமையாகாமல் – எந்த அரசியல்கட்சிக்கும் அடிவருடாமல் – எந்தவொரு தனிமனிதருக்கும் துதிபாடாமல் – எத்தகைய எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தமிழ் இளைஞர்களுக்காகவும் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகவும் குரல்கொடுக்க வேண்டும் – பணியாற்ற வேண்டும்.

நாட்டில் நாளுக்குநாள் நலிந்துகொண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தையும் இளைஞர்களாக வளர்ந்துவரும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் முதல் இலக்காகக் கொண்டு சீறிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

நாட்டில் தமிழுக்கும் – தமிழ்ப்பள்ளிக்கும் – தமிழ்க்கல்விக்கும் மணிமன்றம் தொடர்ந்து அரணாக இருந்து செயல்பட வேண்டும்.

தமிழ் இளைஞர்களிடையே தமிழ் மொழியின உணர்வை ஊட்டி - தமிழின வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக் காட்டி – தமிழிய மரபுகளை விளக்கிச் சொல்லி தமிழ் இளைஞர்களை தமிழினத்தின் உயர்வுக்கு உதவுகின்ற 'மாந்த மூலதனமாக' உருவாக்கிட வேண்டும்.

மலேசியத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம் தோன்றி ஏற்படுத்திய சிந்தனைப் புரட்சியும் மறுமலர்ச்சியும் மீண்டும் ஏற்பட வேண்டும். அதற்காக, புதியத் தலைவர் திரு.முரளி பல்லாற்றானும் பாடாற்றிட வேண்டும்.

நடந்துமுடிந்த பேராளர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஏட்டளவில் மட்டும் எழுதப்பட்டதாக இருத்துவிடக் கூடாது. அந்தத் தீர்மானங்கள் அனைத்தும் செயல்வடிவம் காண்பதற்கு அரயாது பாடுபட வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.

மேலே சொல்லப்பட்ட பல எதிர்ப்பார்ப்புகளோடு , தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் திருவாளர் முரளிக்குத் தமிழுயிர் மனமார்ந்த நல்வாழ்த்துகளை வழங்குகிறது.

@ஆய்தன்:-
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் (அதி:48 குறள்:471)

வெள்ளி, 19 டிசம்பர், 2008

ஓட்டம் 100 வகை:- வாங்க பார்க்கலாம்!

  • நாட்டின் முன்னணித் தமிழ்... மன்னிக்கவும் இந்திய தொலைக்காட்சி வண்ணவில் பெரும் பாடுபட்டு நடத்தும் மகா சிறப்பான இறுதிப் போட்டி நிகழ்ச்சி..

எங்கே:- சொகூரில்
எப்போது:- வரும் சனிக்கிழமை 20-12-2008
எத்தனை மணிக்கு:- எட்டு மணி முதல் விடிய விடிய கும்மாளம்

உங்கள் நெஞ்சங்களில் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கும் உள்ளூர் ஓட்டக்காரன்களும் ஓட்டக்காரிகளும் கும்பல் கும்பலாக வந்து ஓடுவார்கள்..!

நிறைய பணம் செலவுபண்ணி தம்மா துண்டு துணியில் உடைகளைப் போட்டுக்கொண்டு கவர்ச்சியாக குதித்து குதித்து ஓட்டம் போடுவார்கள்..!

மேலும்.. இடுப்பில் தூக்கிவைத்து ஓடுவது..
முதுகில் உப்புமூட்டை தூக்கி ஓடுவது..
அதிலும் குறிப்பாக பெண்கள் மாணாவாரியாக காலைத்தூக்கி ஓடுவது போன்ற ஓட்டங்கள் உங்களுக்காகவே காத்திருக்கின்றன..!

இத்தனைக்கும் ஒரே நிகழ்ச்சி



அதுமட்டுமல்ல இரசிகர்களே..

உங்கள் மனங்களில் எச்சில் தடவி ஒட்டிக்கொண்டிருக்கும் உங்கள் உயிருக்கும் உயிரான அறிவிப்பாளர்கள்.. முத்தமிழுக்கு ஒப்பான முத்தான மூன்று அறிவிப்பாளர்கள்.. அவர்களைக் நேரடியாகக் கண்டு அவர்களோடு கும்மாளமும்.. இடையிடையே குத்தாட்டாமும் போட நல்லதோர் வாய்ப்பு..!

கேட்க.. கேட்க தெவிட்டாத அறிவிப்புகளும்.., சிரிக்கச் சிரிக்க சலிக்காத நகைச்சுவைகளும்.. கடிகளும்.. வெடிகளும்.. நிறைய உள்ளன..!

கூடவே.. இரசிகர்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து வைத்திருக்கும் 'மப்பு'லுவின் கொப்புறுவும் நிறைய உண்டு..!

இடையிடையில், மண்ணின் மைந்தர்களின்
கால்பகுதி தமிழும் முக்கால் பகுதி ஆங்கிலமும் கலந்த கலக்கல் இசையும்
உங்கள் செவிகளில் தேனாகப் பாயும்..!

இப்படி வரலாற்றுச் சிறப்புகுரிய ஒரே ஒற்றை நிகழ்ச்சி..


இதுவெல்லாம் போதாது என்று..
உங்களுக்காகவே ஒரு சிறப்பு விருந்தினர் வருகிறார்.
மலேசியாவில் திறமையுள்ள நடுவர்கள் யாருமே இல்லாத காரணத்தால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மாபெரும் திரைப்பட நடிகர்.. உங்களுக்காகவே வருகிறார்..!

இதையெல்லாம் தவற விடலாமா?

வாழ்க்கையில் இப்படிப்பட்ட கும்மாளமும் கூத்தடிப்பும் எவ்வளவு முக்கியம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் இளைஞர்களே..!

உங்களுக்காவே..
உங்கள் மகிழ்ச்சிக்காகவே..
உங்கள் எதிர்கால முன்னேற்றத்தைக் கருதி..
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
"ஓட்டம் 100 வகை"

இறுதிப் போட்டிக்கு மறவாமல்.. தவறாமல் வாருங்கள்..!

உங்கள் குடும்பம் குட்டிகள்.. அக்கா தங்கை தம்பி எல்லாரையும் அழைத்து வாருங்கள்..! குடும்பத்தோடு.. கூட்டமாக சேர்ந்து... குத்தாட்டம் போடுவோம்..!

வர முடியாத இரசிகர்களே...
கவலையை விடுங்கள்! கண்ணீரைத் துடையுங்கள்!
உங்களுக்காகவே வண்ணவில் தொலக்காட்சியில்
நேரலையில் நிகழ்ச்சியைக் காட்டுவோம்..!

திடலில் நடக்கும் ஓட்டங்களையும்.. அறிவிப்பாளர்களின் கொட்டங்களையும்.. நிகழ்ச்சியைப் பார்க்கவரும் இரசிகர்களின் கொண்டாட்டங்களையும் மிக நெருக்கமாக.. எல்லாவற்றையும் பெரிசு பெரிசாகத் தொலைக்காட்சித் திரையில் காட்டுவோம்..!

நேரடியாக வர மறவாதீர்கள்..
தொலைக்காட்சியில் காண மறவாதீர்கள்..
ஆகா.. சிறந்த போட்டி நிகழ்ச்சி..


@ஆய்தன்:-
ஓடாதடா ஓடாதடா மனிதா – ரொம்ப
ஓட்டம் போட்டா ஓடஞ்சிடுவ மனிதா..!


தமிழில்தான் அறிவியல் கணிதம்:- ம.இ.கா முடிவு


"தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழிமொழியில்தான் கற்பிக்க வேண்டும்" மலேசியன் இந்தியன் காங்கிரசு (ம.இ.கா) நடுவண்(மத்திய) செயலவை முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

18-12-2008இல் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நடுவண் செயலவை கூட்டத்தில் இந்த முடிவு காணப்பட்டதாக கூறிய அவர், கடந்த 16-12-2008இல் புத்திராசெயாவில் நடந்த அறிவியல் கணிதப் பாடம் மீதான வட்டமிசை மாநாட்டிலும் ம.இ.காவின் சார்பில் இதே முடிவுதான் வலியுறுத்தப்பட்டதாகவும் டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகளின் உயர் அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் ஆகியோருடன் கடந்த 5-12-2008இல் ம.இ.கா ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையினர் "அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்கள்.

"தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எது நன்மை தருகின்றதோ அதுவே எங்களின் முடிவு" என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலமொழி எதிர்காலத்திற்கு அவசியம் என்றாலும்கூட தமிழ்ப்பள்ளிகளின் தோற்றமும், அடையாளமும் பாதிக்கப்படக் கூடாது. தமிழ்ப்பள்ளி - தமிழ்மொழியின் எதிர்காலம் கருதிதான் அறிவியல் கணிதப் பாடங்கள் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என ம.இ.கா. பரிந்துரைத்துள்ளது.

ம.இ.காவின் இந்த முடிவை மனிதவள அமைச்சரும் ம.இ.காவின் தலைமைச் செயலாளருமாகிய டத்தோ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கல்வியமைச்சர் டத்தோ ‚ இசாமுடின் துன் உசேனிடமும் பின்னர் அமைச்சரவையிலும் ஒப்படைப்பார். இவ்வாறு, டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு கூறியுள்ளார்.

ம.இ.காவின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்கள் மீண்டும் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்படும் நிலைமை ஏற்படுமானால், அது டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்கள் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் செய்யும் மாபெரும் கைமாறாக அமைவதோடு அவர்தம் புகழ் வரலாற்றில் கண்டிப்பாக இடம்பெறும்.

@ஆய்தன்:-
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல் (அதி:24 குறள்:233)

செவ்வாய், 16 டிசம்பர், 2008

அறிவியல், கணிதம் தமிழ்மொழியில் வேண்டும்


தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம், கல்வி சமூக நல ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-

மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ரெ.சு.முத்தையா அறிக்கை

மலாய் – சீன பள்ளிகளில் அவர்களின் தாய்மொழிகளில் பாடம் நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதுபோல, தமிழ்ப் பள்ளிகளிலும் தாய்மொழியில் கற்பிக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் நேரம் குறைந்து வருவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழ்மொழிக்கு மாற்ற வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே எந்தக் கல்வியையும் எளிதாக அறிந்துகொள்ளும் ஆற்றலைப் பெற்றிருப்பர் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்குச் செவிசாய்த்து அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்க வழிவிடவேண்டும்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தேசியத் தலைவர் பி.பொன்னையா அறிக்கை

அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியாம் தமிழிலேயே கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்பதில் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் உறுதியாக இருக்கிறது.

'தமிழோடு உயர்வோம்' என்பது மணிமன்றத்தின் மூலமந்திரமாகும். தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து நிலைபெறுவதற்குத் தாய்மொழிக் கற்றல் கற்பித்தல் மிக அவசியமாகும்.

ஒவ்வொரு மாணவனும் தனது தாய்மொழியில் அறியும் பாடங்களே பின்னர் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் அமையும். நாட்டிலுள்ள அனைத்து இந்திய அமைப்புகளும் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தமிழில் கறிபிக்க பேராதரவு வழங்க வேண்டும். அதோடு, அரசாங்கத்தின் பார்வைக்குக் கொண்டுசென்று அவ்விரு பாடங்களையும் தாய்மொழியில் கற்பிக்கக் குரல்கொடுக்க வேண்டும்.

தமிழ்ப்பாட பயிற்றுமுறை தமிழ்ப்பள்ளியில் குறைந்து வருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழ்ப்பள்ளி என்பது பெயருக்கு மட்டும் இருக்குமே தவிர, அங்கே தமிழ்மொழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பொன்னையா எச்சரித்துள்ளார்.

கல்வி சமூக நல ஆய்வு நிறுவனத் (EWRF) தலைவர் வழக்கறிஞர் பசுபதி அறிக்கை

'தமிழே தமிழனுக்கு உயிராம்; அந்தத் தமிழனே தமிழுக்குத் தூக்குக் கயிறாம்' என்று கவிஞர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது இப்போது உண்மையாகிவிடும் போல் இருக்கிறது.

அரசாங்கமும் கல்வி அமைச்சும் காலம் தாழ்த்தாமல் அறிவியல் – கணிதப் பாடங்களைத் தாய்மொழியில் நடத்துவதற்குரிய ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும். எந்தவொரு பாடத்தையும் தய்மொழியில் படித்தால்தான் அந்தச் சிறுவயதில் மாணவர்களுக்கு விளங்கும். அதை வேற்றுமொழியில் படிக்கவைத்து விளங்கச் செய்வது கடினமாகும்.

கல்வி அமைச்சு குறிப்பிட்ட சிலரின் கருத்தை மட்டும் கேட்டுக்கொண்டிராமல், நாடிலுள்ள தமிழ் சார்ந்த அமைப்புகளின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தமிழ்க்கல்வி தொடர்பான சிக்கல்கள் குறித்து தமிழ்க் கல்விமான்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அரசியல்வாதிகளின் கருத்துகளைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதுவொரு தாய்மொழிச் சிக்கல் என்பதால் அரசாங்கம் இந்தியச் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
  • (நன்றி:மக்கள் ஓசை 16.12.2008)
@ஆய்தன்:-
வாய்மொழி பலவும் வழித்துணை யாகலாம்
தாய்மொழி என்பது தடயம் அன்றோ!
காலணி தொலைந்தால் வேறணி வாங்கலாம்
கால்களை இழந்தால் முடந்தான் ஆகலாம்

சனி, 13 டிசம்பர், 2008

காசி ஆனந்தன் நறுக்குகள் - 2

"தமிழைத் தொடுவதும் என் உயிரைத் தொடுவதும் ஒன்றே" எனக் கூறியவர் தமிழ்த் தேசியப் பாவலர் காசி ஆனந்தன்.

தமிழ்மொழி, தமிழினம், தமிழ்த் தாயகம் – இவற்றின் வாழ்வும் வளமும்தான் இவருடைய ஆளுமையின் ஆதாரம் என்பதில் ஐயமில்லை.



1.மாடு

ஆயிரம்
ஆயிரம்
ஆண்டுகள்

வண்டி
இழுகிறது...

கொம்பை
மறந்த
மாடு.


2.அறுவடை

திரைப்படச்
சுவரொட்டியைத்

தின்ற கழுதை
கொழுத்தது.

பார்த்த கழுதை
புழுத்தது.


3.புரட்சி

மாடியில் இருந்து
துப்பினால்
குடிசையில்
விழும்.

குடிசையில் நின்று
துப்பினால்
மாடியே
விழும்!


4.விளம்பரம்

விளம்பரம்.

குளிப்பாட்டி
அழுக்காக்குகிறான்
பெண்ணை...

தொலைக்காட்சியில்!


5. மந்தை

மேடை

"தமிழா..!
ஆடாய்
மாடாய்
ஆனாயடா நீ"
என்றேன்.

கை
தட்டினான்!


6.கண்ணோட்டம்

செருப்பைப்
பார்க்கையில்

நீங்கள்
அணிந்திருக்கிறவனின்
காலைப்
பார்க்கிறீர்கள்.

நான்
செய்தவனின்
கையைப்
பார்க்கிறேன்..!


@ஆய்தன்:-

நகரப்பெண்

ஒப்பனைப் பெட்டி
கைப்பேசி
மஞ்சள் பத்திரிகை
ஆணுறை

தோளில்
மாட்டிய
கைப்பையில்..!

வெள்ளி, 12 டிசம்பர், 2008

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு

இணையத் தமிழ் வாசகர்களுக்கோர் அறிவிப்பு!

எதிர்வரும் திசம்பர் 14-ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை), முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு தலைநகரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.


இச்சந்திப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

நாள் : 14 திசம்பர் 2008(ஞாயிற்றுக் கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00
இடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல் (செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)
தொடர்புக்கு :விக்னேஸ்வரன் - 012 5578 257 / மூர்த்தி - 017 3581 555


பி.கு:- புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படும்.

தமிழ் வலைப்பதிவர்களும் விருப்பமுள்ளவர்களும் நண்பர்களோடு வந்து கலந்து கொண்டு பயன்பெறவும்.

@ஆய்தன்:-

முதன் முறையாக ஏற்பாடாகி இருக்கும் இந்தச் சந்திப்பு வெற்றிபெற மனமார்ந்த நல்வாழ்த்துகள் தெரிவிப்பதோடு எல்லாம் வல்ல இறைவனின் பேரருளையும் இறைஞ்சுகிறேன்.

ஆழமான கருத்துகள் பரிமாற்றம் ஆகட்டும்..!
ஆக்கமான ஏடல்கள் செயல்வடிவம் காணட்டும்..!

கலந்துகொள்ள முடியாத இக்காட்டான நிலையில் இருக்கிறேன். ஏற்பாட்டாளர்கள் தயவுகூர்ந்து பொறுத்தருள்க!!

புதன், 10 டிசம்பர், 2008

தமிழ் நாளிதழ்களின் கோமாளிக் கூத்து


மலேசியத்தில் தமிழ் – தமிழர் தொடர்பான செய்திகளை அல்லது சிக்கல்களை முன்படுத்தி பல்வேறு வலைப்பதிவுகளில் வரும் தகவல்களைத் தமிழுயிரில் தொகுக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டது. அவ்வெண்ணத்தின் எதிரொளிப்புதான் 'அக்கம் பக்கம்' என்ற இந்தப் பகுதி. தமிழியம் தொடர்பான சிந்தனைக்குரிய பதிவுகள் இங்கே 'தொடுப்பாக' வழங்கப்படும். 'அக்கம் பக்கம்' இனி தொடராக அவ்வப்போது தமிழுயிரில் வரும். @(ஆய்தன்)

நூறுக்கு தொண்ணுற்று ஒன்பது தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.

குறிப்பாக தமிழ் பள்ளி தலைமை ஆசிரியர்கள். மேடை, வானொலி, தொலைக்காட்சியில் பேசும் தமிழ் மொழி அறிஞர்கள் பலர் தங்கள் குழந்தைகளை மலாய் பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

இன்று தமிழ் நாளிதல்களில் கண்டன அறிக்கை விடும் பல தலைவர்கள் தங்கள் குழந்தைகளை மலாய் மொழி பள்ளிக்கு அனுப்பியவர்கள்.

மலேசியாவில் இந்திய ஆய்வியல் துறை உள்ள ஒரே பல்கலைகழகம் என்று பீத்தி கொள்ளும் பல்கலைகழக விரிவுரையளர்கள், பேராசிரியர்கள் தங்கள் குழந்தைகளை எந்தப் பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கடமை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் இளைஞர் மன்ற தலைவர்கள், இந்து சங்க தலைவர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிக்கு அனுப்பினார்கள் என்று கேளுங்கள்.

தமிழ் பள்ளிகள் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லாத போது நம் நாட்டில் ஏன் தமிழ் பள்ளிகள் வேண்டும்???? (மேலும் படிக்க)

சனி, 6 டிசம்பர், 2008

சீனரைப் போல் தமிழன் சிந்தித்தால்...

மலேசியம் பல்லினம் வாழும் நாடு. அதில் மலாயர், சீனர், தமிழர்(இந்தியர்) மிகப்பெரிய இனங்களாவர். ஒவ்வொரு இனத்தாருக்கும் இந்த நாட்டில் தனிப்பட்ட அரசுரிமைகள் இருக்கின்றன.

அந்த அரசு உரிமைகளை முறையாகப் பெற்றுகொள்ள மலாய், சீன இனங்களைச் சார்ந்தவர்கள் மிகக் கவனமாகவும் – விழிப்பாகவும் – துணிவாகவும் – தொலைநோக்காகவும் இருந்து செயல்படுகின்றனர்.

மலாயரும், சீனரும் அவர்களின் தாய்மொழியை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் இனத்தை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் பள்ளிகளை விட்டுக்கொடுப்பதில்லை.
மலாயரும், சீனரும் அவர்களின் எந்தவொரு உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதில்லை.

ஆனால், நமது தமிழர்கள் மட்டும்
தாய்மொழியாகட்டும்
தமிழ் இனமாகட்டும்
கலை, பண்பாட்டு, சமய, இலக்கிய மரபுகளாகட்டும்
தமிழ்ப்பள்ளிகளாகட்டும்
தமிழ்க்கல்வியாகட்டும்
வேறு எந்த உரிமைகளாகட்டும்

இப்படி எதையுமே தற்காப்பது இல்லை! பேணுவது இல்லை!
இவை எதைப்பற்றியும் ஆழமாகவும் தொலைநோக்கோடும் சிந்திப்பதே இல்லை!
இவற்றின் தனித்தன்மைகளைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணுவதே இல்லை!

எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை ஆராய்ந்து பார்ப்போம்:-

1)அறிவியல் கணிதப் பாடங்களைத் தாய்மொழியிலும் கற்பிக்க மலாயரும் சீனரும் முடிவெடுத்து முனைப்புக் காட்டும் வேளையில் தமிழன் மட்டும் தாய்மொழிக் கல்வியைத் தட்டிக்கழிக்கிறான்.

2)மலாயரும், சீனரும் தங்களின் மொழிவழிப் பள்ளிகளுக்கே முதலிடம் கொடுக்கிறான். ஆனால், தமிழன் மட்டும் தமிழ்ப்பள்ளியைத் தட்டிக்கழித்து தேசியப்பள்ளியையும் சீனப்பள்ளியையும் நாடி ஓடுகிறான்.

3)மலாயரும் சீனரும் தங்களின் மரபுவழி கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பாடாற்றும் வேளையில், தமிழன் மட்டும் தன் சொந்தக் கலை, பண்பாட்டு, இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றாமல் இந்தியக் கலை, பண்பாட்டு, இலக்கியப் பணிகளில் ஈடுபாடு காட்டுகிறான்.

4)மலாயரும் சீனரும் தங்களது பள்ளிகள் இந்த நாட்டில் நிலைத்திருப்பதற்கு மிகத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழன் மட்டும் தன்னுடைய சொந்தத் தமிழ்ப்பள்ளியை இணைக்கலாமா? வாவாசான் பள்ளியாக மாற்றலாமா? அல்லது மூடியே விடலாமா? என்று சிந்திக்கிறான்.

5)மலாயரும் சீனரும் பல்வேறு அரசு சார்பற்ற அமைப்புகள்வழி தங்கள் தாய்மொழிக் கல்வியைப் பற்றி ஆழமான ஆய்வுகளை நடத்தி முறையாக அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுசொல்கின்றனர்; ஏற்ற தீர்வுகளையும் காண்கின்றனர். தமிழக்கோ அப்படி எந்த ஒரு அமைப்பும் இல்லை. அப்படியே எதாவது தமிழ் அமைப்பு ஆய்வு நடத்தி அறிவிப்பு செய்தாலோ மொழிவெறி - இனவெறி எனத் தமிழனே குற்றம் சாற்றி காட்டிக்கொடுப்பான்.

இப்படியாக,
தமிழனுக்கு மட்டும் ஏன் இப்படி இந்த இழிந்த குணம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி முட்டாள்தனம்?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தன்னம்பிக்கையின்மை?
தமிழனிடம் மட்டும் ஏன் இப்படி தொலைநோகின்மை?

இந்த நாட்டில் – இனிவரும் காலத்தில் நமது தமிழ் மக்கள் நலமாகவும் நன்றாகவும் வாழ வேண்டுமானால், தமிழர்கள் சீனர்களைப் போல சிந்திக்க முற்பட வேண்டும்.

ஏனென்றால். சீனர்களும் தமிழர்களும் பூமிபுத்திராக்கள் அல்லர்; சீனர்களும் தமிழர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்ற குடிமக்கள்.
அதனால், தமிழர்கள் பூமிபுத்திராக்களைப் போல சிந்திப்பதைவிட சீனர்களைப் போல சிந்திப்பதே நல்லது - நலமானது - பாதுகாப்பானது.

ஆகவே, சீனர்கள் தங்கள் குடியுரிமையையும் - அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள உரிமைகளையும் தற்காத்துக் கொள்ள எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள் என்று பார்த்தாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!

குறிப்பாக, பின்வரும் உரிமைகளைப் பாதுகாக்க சீனர்கள் ஏன் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் – ஒன்றுபட்டு குரல் எழுப்புகிறார்கள் - உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள் என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்!

1)சீனப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டும். (தமிழ்ப்பள்ளி நிலைத்திருக்க வேண்டும் என்ற அக்கறை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை)

2)மூடப்படும் சீனப்பள்ளிகளின் உரிமத்தைப்(லைசன்சு) பயன்படுத்தி வேரொரு இடத்தில் புதிய பள்ளியைத் திறக்க வேண்டும். (இதுவரை மூடப்பட்ட எந்த ஒரு தமிழ்ப்பள்ளி உரிமத்தையும் பயன்படுத்தி புதியத் தமிழ்ப்பள்ளி கட்டப்படவில்லை)

3)சீனப்பள்ளிகள் பகுதி உதவி பெறும் (பந்துவான் மோடால்) பள்ளிகளாகவே இருந்துவிட வேண்டும். (தமிழ்ப்பள்ளிகள் அரசுப்பள்ளிகளாக மாறவேண்டும் என்று தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்)

4)தொலைநோக்குப் பள்ளியைச் (வாவாசான் பள்ளி) சீனர்கள் வரவேற்கவில்லை. (தமிழ்ப்பள்ளிகள் தொலைநோக்குப் பள்ளிகளாக இணைக்கப்பட வேண்டும் என தமிழர்கள் ஆசைப்படுகிறார்கள்)

5)அறிவியல் – கணிதப் பாடங்களை ஆங்கிலம் சீனம் ஆகிய இருமொழிகளில் கற்பிக்கை சீனர்கள் தக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டனர். (தமிழர்கள் இன்னும் கூட்டம் போட்டுச் சிந்தியோ சிந்தி என்று மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறார்கள்)


6)சீனர்களின் மளிகைக் கடை தொடங்கி பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் சீனமொழிக்கு முதலிடம் தருகின்றனர். (தமிழர்கள் மலாயையும் ஆங்கிலத்தையும் மட்டுமே நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

7)எவ்வளவு வசதி வந்தாலும் எந்த ஒரு சீனரும் தன்னுடைய தாய்மொழியையும் பள்ளியையும் மட்டும் விட்டுக்கொடுப்பதே இல்லை. (தமிழனுக்குக் கொஞ்சம் காசுபணம் சேர்ந்துவிட்டால் அவன் முதலில் ஒதுக்கித் தள்ளுவது தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் தான்)

8)ஒரு துண்டு அறிக்கை எழுதுவதாக இருந்தாலும் சீனர் தங்கள் தாய்மொழியில்தான் எழுதுகிறார்கள். (தமிழன் ஒரு மாநாடே நடத்தினாலும் மேடையில் ஒரு தமிழ் எழுத்தை எழுத மாட்டான்)

இப்படி இன்னும் பற்பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தமிழனிடன் மண்டிக்கிடக்கும் இத்தனைக் கோளாறுகளுக்கும் குளறுபடிகளுக்கும் அடிப்படைக் காரணங்கள் என்ன?

இந்த வினாவுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பைத் தமிழுயிர் அன்பர்களிடம் விடுகின்றேன். தமிழுயிர் அன்பர்களே.. தவறாமல் மறுமொழி கூறுங்கள்.

@ஆய்தன்:-
தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அவர்க்கொரு குணமுண்டு

செவ்வாய், 2 டிசம்பர், 2008

தாய்மொழிப் பள்ளியை மூடுங்கடா..!

மலேசியத்தில் தமிழ் - சீனப் பள்ளிகள் செயல்படுவதற்கு அரசியலமைப்பின்படி முழு உரிமை உள்ளது. இருப்பினும், டத்தோ முக்ரிசு மகாதீர் "தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும்" என்று 1-12-2008இல் பேசியுள்ளார். அதனைக் கண்டித்து..


அப்பன் மவனே
அப்பன் மவனே
அறிவிருக்கா உனக்கு?
வரலாற்றுத்
தெளிவிருக்கா உனக்கு?

தமிழ்ப்பள்ளியை மூடு
சீனப்பள்ளியை மூடு
கூப்பாடு போடலாமா?
மலிவான
விளம்பரத்தைத் தேடலாமா?

ஒற்றுமை வேண்டும்
ஒற்றுமை வேண்டும்
தொடக்கப் பள்ளியிலா?
இல்லையந்த
இடைநிலைப் பள்ளியிலா?

குட்டிப்போட்ட பூனையாய்
குட்டிப்போட்ட பூனையாய்
தொடக்கப்பள்ளியைச் சுற்றலாமா?
மூவினத்தின்
இடைநிலைப்பள்ளியை மறக்கலாமா?

*நீ வெற்றிபெற
நீ வெற்றிபெற
எங்களை அழிக்கலாமா?
உனக்கிந்த
ஈனப்புத்தி வரலாமா?

நாங்கள் பேசினால்
நாங்கள் பேசினால்
எல்லாமே இனவாதமா?
நீங்கள்
பேசினால் தேசியவாதமா?

இப்படிக் கண்டித்தால்
இப்படிக் கண்டித்தால்
எங்களை மிரட்டுவீர்கள்..!
இல்லாவிட்டால்
ஐ.எசு.ஏவைக் காட்டுவீர்கள்..!

ஏனிந்த பொல்லாப்பு.. நமக்கேனப்பா வம்பு..!

*(அம்னோ இளைஞர் பகுதி தலைவர் போட்டியில்)

கீழே உள்ள சுட்டிகளைத் தட்டி மலேசியாஇன்று செய்திகளைப் படிக்கவும்.

1.தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்

2.தமிழ்ப்பள்ளிகள்: அப்பனைப் போல பிள்ளை

@ஆய்தன்:-
"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.." என்று இந்நேரம் முக்ரிசின் தந்தை பாடிக்கொண்டிருப்பார்.

ஞாயிறு, 30 நவம்பர், 2008

வாக்கெடுப்பு (5) முடிவு


தமிழர்கள் தங்கள் மொழி இன வரலாற்றை
அறிய விரும்புகின்றனர்?


ஆம்:- 42%

இல்லை:- 58%


@ஆய்தன்:-

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத மானங்கெட்டவர்கள் அதிகமாக இருக்கும் ஓர் இனம் உலகில் உண்டென்றால், அது தமிழினமாகத்தான் இருக்கும்.


அதனாலேயே, தான் ஒரு தமிழன் என்று அறியாமல் – புரியாமல் – தெரியாமல் தன்னைத் திராவிடன் என்றும் – இந்தியன் என்றும் தமிழர்களே சிலர் சொல்லிக் கொள்கிறார்கள்.

மொழி இன வரலாற்றை அறிந்த தமிழர்களில் ஒரு பகுதினர்தாம் இன்னமும் தமிழினத் தொப்புள்கொடி அறிந்துவிடாமல் பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களால் மட்டுமே இன்னமும் உலகத்தில் தமிழினம் – தமிழ்மொழி வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் மிகையன்று.

தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறியாத நிலையிலும் – அறிந்துகொள்ள விரும்பாத நிலையிலும் இன்று தமிழர்கள் பலவகையிலும் தாழ்ந்து போயிருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, அன்னிய மொழி, இன, பண்பாடு, கலை, நாகரிகத்திற்கு அடிமைகளாகவும் அடிவருடிகளாகவும் பெரும்பான்மைத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மொழி இன வரலற்றை அறியாத இந்தக் குருட்டுத்தமிழர்கள், ஆரியம் - சமற்கிருதம் - வட இந்தியாவுக்குச் சொந்தமான வரலாறு, மொழி, சமயம், பண்பாடு, கலை, இசை, உடை, உணவு, இலக்கியம் ஆகியவற்றை எல்லாம் தங்களுக்குச் சொந்தனமானது – தமிழருக்குச் சொந்தமானது என நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் தன்னுடைய சொந்தக் கால் இருப்பதே தெரியாமல் செயற்கைக் காலில் நின்றுகொண்டிருக்கிறனர்.

எவ்வளவு பெரிய பரிதாபம்!! எவ்வளவு பெரிய அறியாமை!!

இப்படிப்பட்ட மூடத்தனமான நம்பிக்கையின் காரணமாக தமிழையும் தமிழின மரபுகளையும் எதிர்க்கவும் துணிகின்றனர் – வேரோடு அழித்துவிட முயற்சியும் செய்கின்றனர்.

இப்படி, சொந்தக் கண்ணையே குத்திக் குருடாக்க யாராவது முனைவார்களா?

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை அறிந்திருக்கிறதோ, அந்த இனமே தன்னம்பிக்கை கொண்ட இனமாக இருக்கும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை உயர்த்திப் பிடிக்கிறதோ, அந்த இனமே தன்மானத்துடன் வாழும்.

எந்த ஓர் இனம் தன்னுடைய சொந்த மொழி இன வரலாற்றை முன்னெடுக்கிறதோ, அந்த இனமே தலைநிமிர்ந்து முன்னேறும்.
மொழி இன வரலாறு அறியாமல் கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் என எப்படி முன்னேறினாலும் அது முழுமையான முன்னேற்றமாக அமையாது.

வெள்ளி, 28 நவம்பர், 2008

ஓகக்(யோகா) கலைக்குத் தடை

இதற்குத் தடை..!

உடலை ஓம்பி
உள்ளொளி பெருக்கி
உயிரை வளர்க்கும்
உயரியக் கலையாம்
ஓகக் கலைக்குத் தடையாம்..!

இதற்கு விடை..?

உடலைக் குலுக்கி
உணர்ச்சியைப் பெருக்கி
உள்ளத்தைக் கெடுக்கும்
உலுத்தக் கலையாம்
குலுக்கல் ஆட்டத்திற்கு என்ன விடையாம்?


இதையெல்லாம் கேள்வி கேட்டால்...
இனவாதம் என்பார்கள்!
எகிறிப் பாய்வார்கள்!

ஏனிந்த பொல்லாப்பு.. நமகேனப்பா வம்பு..!

பின்குறிப்பு:- வரும் 29-11-2008இல், இந்தோனேசியாவின் கவர்ச்சிப் புயல் இனுல் டாராதிசுதா என்ற குலுக்கல் ஆட்டக்காரியின் 'டங்டுட்' எனப்படும் இடுப்பாட்டும் குத்தாட்ட நிகழ்ச்சி இதே நாட்டில் புக்கிட் சாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.


@ஆய்தன்:-
சிரிப்பு வருது.. சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலைப் பார்த்து சிரிப்பு வருது

செவ்வாய், 25 நவம்பர், 2008

புதியத் தமிழனாய் எழுந்துவிட்டேன்

மலேசியத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த நாள் 25-11-2007. இன்றோடு ஓராண்டு நிறைபெறும் அந்தப் போராட்ட நினைவலைகளில் முகிழ்த்த உரைவீச்சு இது.



விடுதலைக் கிடைத்தும்
விடியாத மூஞ்சியாய்
ஐம்பது ஆண்டுகள்
வீணாய் கழித்தேன்!

வெந்ததைத் தின்னுவோம்
விதிவந்தால் சாகுவோம்
இதுவே வாழ்க்கையென
இயல்பாய் வாழ்ந்தேன்!

எனக்கும் உரிமையுண்டு
எதற்கும் வழியுண்டு
இதனை நம்பியே
ஏமாந்து இருந்தேன்!

எங்கும் அச்சம்
எதிலும் அச்சம்
எதிர்த்து எதனையும்
கேட்கவே அஞ்சுவேன்!

தலைவர் சொல்வதும்
ஊடகம் பேசுவதும்
உண்மையே என்றெண்ணி
ஊமையாய் கிடந்தேன்!

அறியாமைக் குட்டையின்
ஆழத்தில் படுத்திருந்தேன்
அச்சுறுக்கை மணியோசை
அலறலில் துடித்தெழுந்தேன்!

நவம்பர் இருபத்தைந்து
நாள்காட்டிக் காட்டியது
நானிருந்த சிறைக்கதவு
நாதாங்கிக் கழன்றியது!

தூங்கி வழிந்தவனைத்
தூக்கிநிறுத்திய பொன்னாள்
ஏங்கிக் கிடந்தவனை
எழுப்பிவிட்ட நன்னாள்

எனதுரிமை சொல்லவந்த
ஏற்றமிகு திருநாள்
என்னருமை இனப்பிறப்பை
எடுத்துரைத்த ஒருநாள்

எழுந்துவிட்டேன் கண்திறந்தே
எகத்தாளரை எதிர்கொள்ள
துணிந்துவிடேன் மனந்திறந்தே
தொல்லையரை வென்றெடுக்க

ஓயமாட்டேன் இனிமேல்
உரிமைகளை மீட்காமல்
சாயமாட்டேன் இனிமேல்
சந்ததியை காக்காமல்

@ஆய்தன்:-
தமிழினம் வீழும்போதெல்லாம் அதனைத் தாங்கிநிற்கவும் தூக்கிநிறுத்தவும் இயற்கையே முன்னின்று வீரத்தமிழரை வீறுகொண்டு எழச்செய்துள்ள வரலாறு ஆகக் கடைசியாக மீண்டும் இங்கே எங்கள் மலேசியத்திலும் நிகழ்ந்துள்ளது..!

தமிழினம் சாயாது..! தமிழோசை ஓயாது..!!

ஞாயிறு, 23 நவம்பர், 2008

சாலைப் பெயர்ப்பலகையில் தமிழ்

கீழே படத்தில் இருப்பது என்ன என்று கவனித்துப் பாருங்கள்..!



கடந்த 21-11-2008இல், மலேசியா – பினாங்கு மாநிலத்தில் திறந்துவைக்கப்பட்ட சாலைப் பெயர்ப்பலகைதான் இது!

மக்கள் கூட்டணி அரசாங்கம் பினாங்கைக் கைப்பற்றிய பின்பு, நீதியாகவும் நடுநிலையாகவும் மேற்கொண்டுவரும் பல்வேறு அதிரடித் திட்டங்களில் இப்படி பன்மொழிகளில் சாலைப் பெயர்ப்பலகை அமைக்கும் திட்டமும் குறிப்பிடத்தக்கது.

பினாங்கின் தலைநகரான சோர்ச்சுடவும் (Georgetown) உலகத் தொல்நகரமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அந்நகரத்தில் உள்ள முக்கியச் சாலைகளின் பெயர்ப்பலகைகளில் மலாய், ஆங்கிலம், சீனம், சாவி ஆகிய மொழிகளோடு தமிழ்மொழியும் பயன்படுத்தப்படும் என மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் அறிவித்தது.

இந்த அறிவிப்பானது, மலாய்க்காரர்கள் மத்தியில் மாபெரும் எதிர்ப்பு அலையைக் கிளப்பியது. பினாங்குச் சட்டமன்றம் தொடங்கி நாடாளுமன்றம் வரையில் இதுபற்றி கடுமையான விவாதங்கள் நடைபெற்றன.

அதுமட்டுமா? பல்வேறு மலாய் அமைப்புகள் காவல்துறையில் புகார் செய்தன – உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தன – சாலை மறியல், கண்டனப் பேரணி என எதிர்ப்புகள் காட்டின.


இத்தனையையும் மீறி, பினாங்கு மாநில அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அதிரடியான நடவடிக்கைக்கு மாநில அரசு கொடுத்துள்ள சில வலுவான காரணங்கள்:-

1)சாலைப் பெயர்ப்பலகைகள் அமைக்கும் பொறுப்பு மாநில ஆட்சிக்கு உட்பட்டது.
2)தொல்நகரம் என்ற உலகப் புகழுக்கு ஏற்றதாக உள்ளது.
3)பினாங்கிற்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு வழிகாட்டுவது.
4)நாட்டின் அதிகாரப்படியான மொழிகளை அங்கீகரிப்பது.
5)சொகூர் போன்ற பிற மாநிலச் சாலைப் பெயர்ப் பலகைகளிலும் தேசிய சுற்றுலாத் தளங்களின் பெயர்ப்பலகைகளிலும் பன்மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6)இத்திட்டமானது நாட்டின் தேசியமொழிக் கொள்கைக்கு எதிரானது அன்று.

எது எப்படியோ! பினாங்கு மாநில அரசு தான் சொன்னதைச் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் செயல்படுத்தி உள்ளது. இதனால், நாட்டின் மிகப்பெரிய இனங்களாகிய சீனர்களும் தமிழர்களும் (வெளிப்படையாகப் பலரும் – மறைமுகமாகச் சிலரும்) மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!

இதில், தமிழர்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் மற்றொரு சங்கதியும் உண்டு தெரியுமோ?

Lebuh Acheh – Acheh Street என்பதை

லெபோ ஆச்சே அல்லது ஆச்சே ஸ்திரிட்
என்று தமிங்கிலத்திலோ அல்லது கிரந்த எழுத்திலோ எழுதாமல்
'ஆச்சே வீதி'
என்று தமிழில் எழுதி
தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ள பினாங்கு அரசைத்
தமிழுயிர் மனமார வாழ்த்துகிறது.


பினாங்கு அரசுக்கு ஒரு வேண்டுகோள்

அடுத்து நீங்கள் வைக்கின்ற ஒவ்வொரு பெயர்ப்பலகையிலும் தமிழ் தமிழாக இருக்கட்டும்! தமிங்கிலமும் கிரந்தமும் ஒதுங்கி நிற்கட்டும்!!
**முக்கியக் குறிப்பு:-
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இதே பினாங்கில் பன்மொழிப் பெயர்ப்பலகைகள் இருந்தன. அவை படிப்படியாக ஓரங்கட்டப்பட்ட வரலாறு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் – தக்கச் சான்றோடு (நிழற்படம்) தமிழுயிருக்குத் தெரிவிக்கவும்.

@ஆய்தன்:-
உண்மையான மலேசியாவின் உருவாக்கத்திற்கு
இதுவொரு முன்னுரை ஆகட்டும்!

புதன், 19 நவம்பர், 2008

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடி விடலாமா?

வசந்தராவ் என்னும் பெயரிய அன்பர் ஒருவர் "தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடலாம். ஆனால் ஒரு விதி.." (Seal The Tamil Schools With A Condition) என்ற தலைப்பிட்டு தம்முடைய 'பங்சா மலேசியா' வலைப்பதிவில் கடந்த 12-11-2008இல் எழுதியுள்ளார்.

இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ந்துபோன தமிழன்பர்கள் பலர் தமிழுயிருக்கு மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுத்திருந்தனர். அதோடு, அந்த வலைப்பதிவருக்குத் தக்க பதிலைக் கொடுக்குமாறும் கேட்டிருந்தனர்.

முதலில், இந்தச் செய்தியை எமக்கு அறியச் செய்த அத்துணை தமிழன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவர்களின் தமிழ்ப்பற்று உள்ளங்கள் செழித்தோங்கட்டும்!

'பங்சா மலேசியா' வலைப்பதிவர் அன்பர் வசந்தராவ் எழுதிய பதிவில் முக்கியக் கருத்தாக அவர் சொல்லியிருப்பது இதுதான்.

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடிவிடலாம். ஆனால், தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட வேண்டும். (Tamil schools should close down but with condition that Tamil made compulsory to all Tamil students.)

(முழுக் கட்டுரையைப் படிக்க படத்தைச் சொடுக்கவும்)



அன்பர் வசந்தராவ் எழுதியிருக்கும் கருத்து புதியது அல்ல. ஏற்கனவே, இதே கருத்து கல்வியாளர் இராமசுப்பையா தலைமையில் ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டது. தமிழ் மக்களிடையே இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தக் கருத்து அப்படியே முடங்கிப் போய்விட்டது.

பின்னர், அவ்வப்போது இந்தக் கருத்து தலைதூக்கிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் மரண அடி வாங்கிக்கொண்டு படுத்துக்கொண்டது. ஆகக் கடைசியாகக் கடந்த 2007இல் இதே கருத்தை ஓர் அரசியல் தலைவர் முன்வைத்தார். ஆனாலும், அவரும்கூட தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றாரே தவிர, தமிழ்ப் பள்ளிகளை மூடச் சொல்லவில்லை.

இத்தனைக்கும் மேலாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் 'தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்' என்று பேசி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வரலாறு ஒன்று கடந்த 2007இல் நடந்தது.

இப்படியாக, "தமிழ்ப்பள்ளிகளை மூடு! தமிழைக் கட்டாயமாக்கு" என்ற அந்த இத்துப்போன 'பீரங்கிக் குண்டு' ஒவ்வொரு முறையும் சமயலறையில் முள்ளங்கித் தண்டாக அவிந்து போனது.

இப்படிப் புளித்துப்போன வரலாறு ஒருபுறம் இருக்க, அன்பர் வசந்தராவ் மீண்டும் அதே பழைய பல்லவியைத்தான் பாடியுள்ளார். அதனால்தான், தொடக்கத்திலேயே இது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்டிருந்தேன்.

இருந்தாலும், அன்பர் வசந்தராவ் அவர்களுக்குச் சில செய்திகளைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதால்தான் இவ்வளவும் எழுதுகிறேன்.

கடந்த 2007இல் நான் எழுதிய இரண்டு பதிவுகளை இதற்குப் பதிலாக வைக்கிறேன். (கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.)

பதிவு 1:- தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?

பதிவு 2:- தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

ஆக, அன்பர் வசந்தராவ் அவர்களும், அவரை ஒத்தக் கருத்துள்ள அன்பர்களும் ஏனையத் தமிழன்பர்களும் அதனைப் படித்து தெளியுமாறு வேண்டுகிறேன்.

அதோடு, அன்பர்கள் தவறாமல் மறுமொழிகளை எழுதுமாறு வேண்டுகிறேன்.

இறுதியாக ஒரு செய்தி. தமிழ்ப்பள்ளியை மூடிவிடலாம் என்ற அடிப்படையற்றக் கருத்தை முன்வைத்த அன்பர் வசந்தராவ் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், தமிழ்ப்பள்ளியில் படிக்காவிட்டாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் தமிழைக் கற்றதற்காகவும்; தமிழ்மொழி இந்த நாட்டில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும்; இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருவதற்காகவும் அவருக்குச் சின்னதாய் ஒரு பாராட்டு.

@ஆய்தன்:-
தமிழ்ப்பள்ளிகளை மூடுவதும் – தமிழன்
தனக்குத் தானே குழிப்பறிப்பதும் ஒன்றே!

ஞாயிறு, 16 நவம்பர், 2008

சிறீலங்காவைக் கண்டித்து மலேசியத் தமிழர்கள்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கடந்த 14-11-2008இல் பிற்பகல் 2மணி அளவில், மலேசியத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் ஏறக்குறைய இரண்டாயிரம் தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தினர்.

மலேசியத் தமிழர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள், அரசு சார்பற்ற இயக்கங்கள், சமுக அமைப்புகள், தமிழ்ப்பற்றாளர்கள், தனியாட்கள் என பல்வேறு தரப்பு தமிழ் மக்கள் அணிதிரண்டு வந்து இந்தக் கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.

கடந்த 2007இல் நவம்பர் 25ஆம் நாள் நடந்த மாபெரும் உரிமைப் போராட்ட பேரணியில் சற்றேறக்குறைய ஐம்பதாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டு நாட்டை மட்டுமல்லாது உலகத்தையே அதிரவைத்த வரலாறு படைத்தனர். அதன்பிறகு, அதிகமான தமிழர்கள் ஒன்றுகூடிய மாபெரும் கண்டனப் பேரணியாக இந்தப் பேரணி அமைந்தது.

"ஈழத்தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்".
"அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை அரசை எதிர்த்து மாபெரும் கண்டனப் பேரணி"
போன்ற பதாகைகளைக் காணமுடிந்தது.

"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே" என்று வானமே அதிரும் வகையில் உரக்க முழக்கமிட்டனர்.

இறுதியில், இலங்கைத் தூதரக அதிகாரிகளிடம் கண்டனத் தீர்மானம் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் கொலைவெறிபிடித்த சிறீலங்கா அரசுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட முன்னணித் தலைவர்கள் சிலரின் முழங்கங்கள் பின்வருமாறு:-

1)துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்:- நாட்டில் கடசி, இயக்கம், மொழி, இனம் ஆகிய வேற்றுமைகளை மறந்து மலேசியத் தமிழர் அனைவரும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது முறையாக நாம் நமது ஒற்றுமையைக் காட்டி உள்ளோம். இந்த ஒற்றுமை தொடர்ந்தால் மலேசியத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் யாரும் அசைக்க முடியாது.

2)மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் ரெ.சு.முத்தையா:- ஈழத்தில் நடக்கும் வன்கொடுமைகளை கண்டு மானமுள்ள தமிழர்கள் இனி பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இனியும் தமிழன் உதைபடுவதைவிட அவன் உயர்வதற்குரிய வழிகளைக் காண வேண்டும். தமிழ் ஈழம் மலரும் நாளே தமிழர்களின் துயர் தீரும் நாளாகும்.

3)மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா.திருமாவளவன்:- உலக வரலாற்றில் சொந்த மக்களை சித்திரவதை செய்யும் கொடிய அரசாங்கம்; இறையாண்மை பேசிக்கொண்டே நாட்டு மக்களை பட்டினிப் போட்டுக் கொல்லும் வஞ்சக அரசாங்கம் இலங்கை அரசாங்கமாகத்தான் இருக்கும்.

4)உலகத் தமிழர் நிவாரணநிதி மையத் தலைவர் வழக்கறிஞர் பசுபதி:- இலங்கை அரசாங்கம் பகிரங்க பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழர் படுகொலை, பொதுமக்கள் சித்திரவதை போன்ற மனித உரிமை அத்துமீறல்களை உடனே அந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

5)மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர் பி.பொன்னையா:- இலங்கை அரசாங்கம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்தும் வரையில் மலேசியத் தமிழர்கள் யாரும் இலங்கைப் பொருள்களை வாங்கக் கூடாது. குறிப்பாக, ஏர் லங்கா ஏர்லைன்சு விமானச் சேவை, சிறீகங்கா தேயிலை போன்றவற்றை புறக்கணிக்க வேண்டும்.

6)உலகத் தமிழர் மாமன்றப் பொதுச் செயலர் எசு.பி.மணிவாசகம்:- "மாடியிலிருந்து துப்பினால் குடிசையில் விழும். ஆனால், குடிசையிலிருந்து துப்பினால் மாடியே விழும்" என்று ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் கூறியது விரைவில் நடக்கப் போகிறது. மலேசியத் தமிழர்களின் இந்த உணர்வுப்பூர்வமான கண்டனம் அதிபர் இராசபக்சேவை தட்டியெழுப்ப வேண்டும். தமிழர்களுக்கு இன்னல் என்றால் ஒவ்வொரு தமிழனும் துடித்தெழ வேண்டும்.

7)தமிழர் உதவும் கரங்கள் சமூக இயக்கத் தலைவர் முரளி:- சொந்த நாட்டிலேயே அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டிக்கும் வகையிலும், மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றும் எங்கள் இயக்கத்தினர் ஒருநாள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொள்கிறோம்.

மலேசியத் தமிழர்களின் இந்தக் கண்டனக் குரல் சிறீலங்கா அரசின் மரத்துப்போன காதுகளுக்கு எட்டவேண்டும்..!

ஈழத் தமிழர்களுக்காக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் வெளிப்படுத்தும் கண்டனக் குரல்கள் சிங்கள மரமண்டைகளைத் தட்ட வேண்டும்..!

உலகத் தமிழர்களின் அழுகையும் கண்ணீரும் சிறீலங்கா கொலைவெறியர்களின் இரக்கமற்ற இதயத்தைப் பிளந்துப் போட வேண்டும்..!


@ஆய்தன்:-
இயற்கையும் இறைமையும் இருப்பது உண்மையென்றால்...
தமிழரின் இன்னல்கள் மறைந்து போகட்டும்!
தமிழரின் துயரங்கள் தொலைந்து போகட்டும்!
தமிழரின் விடுதலை விரைவில் வரட்டும்!
தமிழரின் தனிநாடு தமிழீழம் மலரட்டும்!

செவ்வாய், 11 நவம்பர், 2008

இலங்கைக்கு எதிராகக் கண்டனப் பேரணி



இலங்கை அரசு அந்நாட்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தி வரும் போரால் இலட்சக் கணக்காக மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்கு நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து போரை நிறுத்தக் கோரும் பேரணி இலங்கை தூதரகத்தின் முன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.11.2008) நடபெறவிருக்கிறது.


இலங்கை அரசாங்கப் படையினரின் குண்டுவீச்சு மற்றும் பீரங்கித் தாக்குதலால் இலங்கை தமிழர்கள் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர். உணவு, குடிநீர், இருக்க இடம் இன்றி தவிக்கின்றனர். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு அல்லல் படுகின்றனர்.


இலங்கை இனவாத அரசால் கொல்லப்பட்டு, அழிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படையில் உதவியும் ஆதரவும் வழங்க வேண்டிய நமது கடமையாகும்.

>> மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்

நன்றி:- மலேசியா இன்று
@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு..!
தமிழருக்காக ஒன்றுபடு..!
தமிழின விடுதலைக்காக ஒன்றுபடு..!

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!


உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனை
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு இந்தப் பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே வாய்த்த தலைவிதியா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

குருதியில் அடிக்கடி நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும் எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலைய முடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்த
வெளிச்சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகங்களையார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்க முடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

ஆளும் கட்சிகள் ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும் கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில் எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள் உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய் விடுதலை கேட்கிறோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

-தமிழன், நோர்வே
யாழ்.கொம்

@ஆய்தன்:-
உலகம் முழுவதும்
உண்மைத் தமிழன்
ஒவ்வொருவனும்
ஒவ்வொரு நாளும்
ஈழத் தமிழனை நினைத்துப் பார்க்கிறோம்!

தமிழ்ப்பள்ளிக்கு அனுக்கிரகம் தேவையா?

**மின்மடல் விடுத்தவர்:-மனோ, மஞ்சோங் மாவட்டம், பேரா.

ஐயா அவர்களே, ஒரு பள்ளியில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) மாணவர் ஆண்டு விழா நடைபெறுகிறது. அந்த விழாவினைப் பல பள்ளிகள் 'பரிசளிப்பு விழா' என்ற பெயரில் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்தப் பள்ளியிலோ 'அனுக்கிரக நாள்' என்று அறிவித்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இது சரிதானா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். 'அனுக்கிரக நாள்' என்பது தமிழ்ச் சொல்லா? விளக்கம் பெற விரும்புகிறேன்.

@ஆய்தன்:-

பரிசளிப்பு விழா என்பது நல்லதமிழ்ச் சொல்லாட்சி. பல பள்ளிகளில் பல காலமாக இந்தப் பெயரில்தான் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இப்போது 'அனுக்கிரக நாள்' என்று தாங்கள் குறிப்பிடுவது புதிய செய்தியாக உள்ளது. இப்போதுதான் இப்படி ஒன்றைக் கேள்விப்படுகிறோம்.

'அனுக்கிரஹம்' என்பது வடமொழிச் சொல். அதற்கு, அருள், இறையருள், கருணை, என்று பொருள். பரிசளிப்பு விழாவுக்கு 'அனுக்கிரக நாள்' என்று சொல்லுவது சிறிதும் பொருந்துவதாக இல்லை. அந்தச் சொல்லைப் பள்ளி நிகழ்ச்சிக்கு எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு வேளை மலாய்மொழியில் 'அரி அனுகெரா' (Hari Anugerah) என்று கூறுவதை அப்படியே அனுக்கிரக நாள் என்று சொல்லுகிறார்கள் போலும். 'அனுகெரா' என்பதை மலாயில் பரிசு, விருது, கொடை போன்ற பொருள்களில் ஆழ்கின்றனர். அதற்காக, ஈ அடிச்சான் காப்பி போல அதை அப்படியே பயன்படுத்த வேண்டுமா என்ன?

பரிசளிப்பு விழா என்று நல்லதமிழ்ச் சொல் இருக்கும் போது 'அனுக்கிரக நாள்' எதற்கு? கனி இருக்கும் போது எவராவது காயைத் தின்பார்களா? அந்தப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஒருவருக்குக் கூடவா இது தெரியவில்லை?

தமிழைப் படித்துக் கொடுப்பவர்களே தமிழை விட்டுவிட்டு இப்படி சமற்கிருதச் சொல்லைப் பயன்படுத்தலாமா? மலக்குட்டையில் போய் மீன் பிடிக்கலாமா?

தமிழை வளர்க்க வேண்டிய இடத்தில் செத்த வடமொழியை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆசிரியர்களை அறிவிலிகள் என்று திட்டினால் நம்மீது சீற்றமடைவார்கள். அதனால், இப்போதைக்கு அறியாமைக்காரர்கள் என்று சொல்லி வைப்போம்!!

"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதை
தொழுது படித்திடடி பாப்பா" என்ற பாரதியின் பாட்டை முதலில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். நாட்டின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக விளங்கும் கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் அண்மையில் இதே பரிசளிப்பு நிகழ்ச்சி 'நேர்த்திநிறை நாள்' என்ற பெயரில் நடந்ததாக நாளிதழில் செய்தி வந்தது.

'நேர்த்திநிறை நாள்'. என்ன அருமையான தமிழ்ப் பெயர் பாருங்கள். தமிழ்ப் பள்ளி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! தமிழ்ப்பள்ளியானது நமது தாய்த்தமிழை இப்படித்தானே முன்னெடுக்க வேண்டும்!

பெயரோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவேந்தலாகப் (அஞ்சலியாக) படைத்து புதுமையும் சாதனையும் படைத்துள்ளனர். தமிழ் அறிஞர்களைப் போற்றும் தலைமுறையை வளர்த்தெடுக்கும் நல்ல பணியைச் செய்திருக்கும் இப்பள்ளி பாராட்டுக்கு உரியது.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த முன்மாதிரி என்று துணிந்து கூறலாம். தமிழ்ப்பள்ளி என்ற அடையாளத்தைக் காத்துநிற்கும் அப்பள்ளித் தலைமையாசிரியரையும் ஆசிரியர்களையும் தமிழுயிர் மதிப்போடு வணங்குகிறது.

புதன், 5 நவம்பர், 2008

மலேசியத் தமிழர்கள் சிறீலங்காவைக் கண்டிக்கிறோம்


இலங்கை தமிழர்கள் படும் இன்னல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகின்றன. அப்பாவி தமிழ் பொது மக்கள் மீது தொடர்ச்சியாக இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடப்படுவதால் சொந்த நாட்டிலேயே 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு மலேசிய தமிழர்களின் ஆதரவினையும் - இலங்கையில் தொடரும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் நோக்கிலும் மலேசியாவின் வட மாநிலத் தமிழ் - தமிழர் சார்ந்த பொது அமைப்புகள் (பினாங்கு கெடா பேராக் பெர்லீசு மாநிலங்கள்) சார்பில் கடந்த நவம்பர் 1ஆம் நாள் ஒரு கண்டனக் கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் வட மாநில தமிழ் இயக்கங்களில் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு தமது கண்டனத்தினை வெளிப்படுத்தினர். பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பி.இராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்களான திரு. இராயர், திரு. இரவீந்திரன், மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசிய உதவித் தலைவரான ச.த.அண்ணாமலை, தமிழ்நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளவன், ஐபிஎப் கட்சியின் உதவித் தலைவர் திரு. மதியழகன் என பல அமைப்புகளின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

எழுச்சி உரைகளில் என்ன சொன்னார்கள்:-

சட்டமன்ற உறுப்பினர் திரு. இராயர் அவர்கள், "ஈழத் தமிழர் சிக்கல் என்பது உலகத் தமிழர்கள் சிக்கலாகும். இதனை மனித நேய முறையில் நாம் அணுக வேண்டும். பலமுறை ஈழத் தமிழர் சிக்கல் மலேசிய நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்" என்றார் அவர்.


மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் தொடர்ந்து தனது சிறப்புரையில், "வரலாற்று ரீதியான ஈழத் தமிழர்கள் தாய் மண் தமிழீழம். தமிழர்களின் தனித்துவ அடையாளம் அந்த மண். ஈழத் தமிழர்கள் குடியேறிகளாக இருந்திருந்திருந்தால் ஈழத்தின் இடப்பெயர்கள் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை. தூய தமிழ்ப் பெயர்களை இடப்பெயர்களாக கொண்டிருக்கும் ஈழம் தலைமுறை தலைமுறையாக தமிழர்கள் வாழ்ந்த மண் அது. கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ் மக்கள் அடைந்து வரும் துன்பங்களுக்குத் தனிநாடு கிடைத்தாலொழிய வேறு வழியில்லை. தமிழ்நாடு இச்சிக்கல்களின் தொடர்ந்து சரியான முடிவெடுக்க நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மலேசிய தமிழர்கள் ஈழத் தமிழர் சிக்கல் தீர உதவ வேண்டும், என்றார் அவர்.


தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பி. இராமசாமி ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலை குறித்த தனது வன்மையான கண்டனத்தினை வெளிப்படுத்தினார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையில் சிங்களவர்கள் தான் வந்தேறிக் குடிகள். தமிழர்களுக்குப் பதில் அவர்கள்தான் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இலங்கை இராணுவம் உடனடியாக இனப்படுகொலையை நிறுத்தியாக வேண்டும். அதற்கு கட்சிகள், அமைப்புகள், நாடுகள் வேறுபாடின்றி உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். வல்லரசு நாடுகள் ஆயுத உதவிகள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மலேசிய அரசாங்கம் எங்களை தீர்மானங்களை நிராகரித்தாலும் தொடர்ந்து குரல் எழுப்புவதை நிறுத்தமாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட்டார்.

இக்கண்டன கூட்டத்தில் 8 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

கடந்த 37 ஆண்டுகளாக, குறிப்பாக இலங்கைத் தீவின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும்:

1.கண்மூடித் தனமான இராணுவ நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும்.

2.விடுதலைப் புலிகளை அழிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில், ஒட்டுமொத்த ஈழத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தமிழ் இன அழிப்பு படுகொலையைச் சிறிலங்கா அரசு முற்றாக நிறுத்த வேண்டும்.

3.ஐ.நாவின் மாந்த நேய - மனித உரிமை விதிகளை மதித்து ஏற்று, அதன் அடிப்படையில் சிறீலங்கா அரசு நடந்துகொள்ள வேண்டும் என கண்டிப்பாக வலியுறுத்துகின்றோம்.

4.சிறிலங்கா என்பது ஒரே நாடு என்றும் - அதில் வாழும் எல்லா இன மக்களும் அனைத்து வகையான உரிமைகளையும் பெறத் தகுதி உள்ளவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிறிலங்கா அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக பொருளாதார, மருத்துவ, உணவுத் தடைகளை நடைமுறைப்படுத்தி ஈழத் தமிழர்களை அழித்து வருவதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

5.சிறிலங்கா - ஐ.நாவின் உறுப்பு நாடு என்பதாலும், ஐ.நா என்பது, உலக மக்களின் நலனுக்கு - அமைதிக்கு - வளர்ச்சிக்கு பொறுப்பேற்றுள்ள உலக அமைப்பு என்பதாலும் - ஐநாவின் பொதுச்செயலர் உயர்திரு. பான் கீ முன் ஈழத்தில் நடக்கும் படுகொலைகள் மற்றும் மாந்த நேயத்திற்கு முரணான செயல்களைத் தடுத்து நிறுத்தும் வண்ணம் உடனே உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

6.பாகிஸ்தான், பாலஸ்தீனம் போன்ற உலக நாடுகளில் இனப் படுகொலைக்கு எதிராக துணிந்து குரல் கொடுக்கும் மலேசிய அரசாங்கம், அதேபோல் ஈழத் தமிழர் இனப் படுகொலையைக் கண்டித்து சிறீலங்கா அரசாங்கத்தையும் வலியுறுத்தியும்- கோலாலம்பூரில் இருக்கும் சிறிலங்கா தூதுவரையும் அழைத்து பேச வேண்டுகிறோம்.

7.தமிழ் இன அழிப்பைத் தொடர்ந்து நடாத்தி வரும் சிறிலங்கா அரசுக்கு: படையியல், பொருளியல் , ஆயுத, தொழில் நுட்ப உதவிகள் செய்துவரும் இந்தியா - சீனா, பாக்கிஸ்தான், ஈரான், இசுரேல், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யப்பான் மற்றும் பிற உலக நாடுகள் அனைத்தையும் உடனடியாக சகல உதவிகளையம் நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

8.தமிழ் ஈழத்தில், சொல்லொணாத் துன்பத்தில் சிக்குண்டுள்ள நம் தமிழ் உறவுகளுக்கு மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எல்லா வித உதவிகளையும் செய்வோம் என் உறுதியளிக்கிறோம்.

தமிழர் போராட்டம் மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து உதவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் இக்கண்டன கூட்டம் நிறைவுபெற்றது.
நன்றி: செய்தி.காம்

@ஆய்தன்:-
தனித் தமிழ் ஈழம் மலரும் - உலகத்
தமிழர்கள் தாகம் கண்டிப்பாய் தீரும்!

திங்கள், 3 நவம்பர், 2008

அறிவியல், கணிதம் படிக்க ஆங்கிலமா?



(அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் கற்பிக்க 6 வருடங்களுக்கு முன்பு நமது அரசு முடிவெடுத்தது. அப்போதே இந்தத் திட்டத்தைத் அறிவு கண்கொண்டு பார்த்து எதிர்த்தவர்கள் பலர். ஆனால், அன்றைய நாட்டுத் தலைமை எவருடைய கருத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இந்தத் திட்டத்தை அமுலாக்கியது. இன்றைய தலைமையோ இந்தத் திட்டத்தைத் தொடருவதா இல்லையா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அன்று மனம் வருந்தி எழுதிய இந்தக் கவிதையைப் பலரால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால், இன்று படிக்கும்போது ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், வரியும் உள்ளத்தைத் தொடுகிறது!!)
  • பினாங்கிலிருந்து தமிழன்பர் திருமாமணி எம்.ஏ இக்கவிதையைத் தமிழுயிருக்கு விடுத்துள்ளார்.
*** விடியல் ***


ஆங்கிலத்தால் விஞ்ஞானம் அடைந்திடலாம் என்றெண்ணி
அரசுவேலை நடக்குதிங்கே தெரியுமா?
ஆங்கிலத்தைப் பள்ளியிலே அடுக்கடுக்காய்ப் புகுத்துவதால்
அன்னைமொழிக் கென்னாகும் புரியுமா?

விஞ்ஞான விடியலுக்கு மெல்லமெல்லத் தாய்த்தமிழை
விட்டுவிட்டுப் பார்த்திருக்க முடியுமா?
அஞ்ஞானம் விஞ்ஞானம் அத்தனையும் தாண்டியதே
அன்னைமொழி தானொன்று தெரியுமா!

அறிவியலுக்கு கேற்றபடி அருந்தமிழைப் பக்குவமாய்
ஆக்குவதே விடியலுக்கு விடையாம்
அறிவியலை, கணிதத்தை அப்படியே பிறமொழிக்குக்
கொடுத்துவிட்டு நிற்பதுமடக் கொடையாம்!

சரியாக முடிவெடுக்கத் தவறிவிட்டால் வருமழிவைத்
தடுப்பதற்குத் தலைவர்களே முடியுமா?
அறிவுலகம் கண்டுஅதைச் சரிபடுத்த முன்வந்தால்
அவர்களையும் தடுத்துவிட்டால் விடியுமா!

பள்ளியிலே தமிழின்றேல் படிப்படியாய்த் துறைதோறும்
துறைதோறும் தமிழின்றிப் போகுமே!
வெள்ளிப்பணச் சீனரைப்போல் கொள்கையிலே நில்லாக்கால்
விடியலிங்குத் தமிழருக்குத் தூரமே!

"எசு" வென்றும் "எல்" லென்றும் இடையளவுக் கேற்றபடி
உடுக்கின்றோம் ஆடைகளைச் சரியாய்
"எசு" சாரே எனத்தானே ஏவலுக்கு நம்தலைமை
இருக்கிறது மொழிநலத்தில் பொதுவாய்!

ஒன்றுபட்டச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு தான்என்னும்
ஒருவரிங்கே எடுப்பதுதான் முடிவா?
தொன்றுதொட்டே இப்படித்தான் தொடருகிறோம் நம்சரிதை
தொடுவானில் வெள்ளியெனும் விடிவா?

வேற்றுமொழிக் கிசைந்துவிட்டு மேடையிலே மட்டும்தமிழ்
மீட்டெடுப்புக் கொள்கையுரைச் சேவையா?
தோற்றவுடன் கோட்டையினை எழுப்புகிறப் படைத்தலைவன்
சொல்லுங்கள் நமக்கிங்கே தேவையா?


-ஆக்கம்:- திருமாமணி (முதுகலை) எம்.ஏ, பினாங்கு

@ஆய்தன்:-
வேலியில் போகும் ஓனானை எடுத்து
வேட்டிக்குள் விட்டுக்கொள்ளும் தலைவர்கள்
எமது மலேசியத்தில் அதிகமுங்கோ!!

ஞாயிறு, 26 அக்டோபர், 2008

தமிழர் வாழ்வில் தீபஒளி உதயமாகட்டும்


@ஆய்தன்:-

தமிழோடு வாழும்
எண்ணம் உதயமாகட்டும்..!
தமிழராய் வாழும்
உள்ளம் உதயமாகட்டும்..!
உரிமைகள் கேட்கும்
உணர்வு உதயமாகட்டும்..!
விடுதலை வழங்கும்
தீபஒளி உதயமாகட்டும்..!

வியாழன், 23 அக்டோபர், 2008

சந்திராயன் சாதனைக்குப் பின்னால் ஒரு தமிழர்


இந்தியாவை உலக விண்வெளி அரங்கில் உயரிய இடத்தில் நிறுத்தும் வகையில் சந்திராயன் விண்கலம், 22-10-2008இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி வருகிறது.

தவிர, உலகமெங்கும் வாழும் இந்தியர்களை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. அதோடு, இந்தியாவிலிருந்து (தமிழ்நாடு) வெளிநாடுகளில் குடியேறி வாழுகின்ற தமிழர்களும் இந்த்ச் சந்திராயன் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தச் சந்திராயன் சாதனையின் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பதுதான்.

உலகமே வியக்கும் வண்ணம், முதன் முறையாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கும் இந்தியாவின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருக்கிறார் என்பது உலகத் தமிழர்களின் தலையை உயர்த்தியுள்ளது.. நெஞ்சை நிமிர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.


உலகத்தின் பார்வையை ஈர்த்துள்ள அந்தச் சாதனைத் தமிழரின் பெயர் மயில்சாமி அண்ணாதுரை. இவர்தான் சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குனராகச் செயல்பட்டவர். அதோடு, சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்.



ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த அந்தத் தமிழ் வானியல் அறிவியலாளர் இன்று இமாலயச் சாதனை செய்திருப்பது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அண்ணாதுரை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி என்னும் ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மயில்சாமி. கோவை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பி.எசு.சி. (PSG) பொறியியல் கல்லூரிகளில் படித்தவர் விண்வெளி அறிவியலாளர் அண்ணாதுரை. 1982ம் ஆண்டு சிறீ அரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகப் பணியில் சேர்ந்தார்.

நிலவுக்குச் செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என்று வாச்பாய் தலைமையிலான முன்னனள் இந்திய மத்திய அரசு முடிவு செய்ததும் 'இசுரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நடுவம் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட தனிக் குழுவிடம் சந்திராயன் விண்கலத்தை வடிவமைக்கும் பொறுப்பு விடப்பட்டது.

இதுதொடர்பான குழுவின் தலைவராகவும் திட்ட இயக்குநராகவும் அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். சந்திராயன் திட்டத்தைச் செயல்படுத்த களத்தில் இறங்கிய அண்ணாதுரை, இரவு பகலாகத் தன்னை இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

விண்கலத்தின் முக்கிய பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இவரே தீர்மானித்தார். மொத்தமே இந்திய உரூபாய் 386 கோடியில் சந்திராயனை அண்ணாதுரை தலைமயிலான குழு உருவாக்கியது. இதுவே வெளிநாட்டில் தயாரிப்பதாக இருந்தால் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் இன்று உலக அரங்கில் கொடி கட்டிப் பறக்க முக்கிய காரணம் ஒரு தமிழரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அந்த வரிசையில் தற்போது சந்திராயன் பயணத்தை இந்தியா தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இன்னொரு தமிழரான அண்ணாதுரை அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கூறுகையில், "எங்களது குழந்தை நிலவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" என்றார் அண்ணாதுரை புன்னகையுடன்.

@ஆய்தன்:-
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
காலம் வரும் பாரடா!
உலகைப் புரட்டிப் போடடா!