வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 6 அக்டோபர், 2008

கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?

மின்மடல் விடுத்தவர்:- அந்தோணி பெர்னாண்டேசு.
வணக்கம். தாய் மொழியில் கற்பிக்கப்பட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் மாற்றியது நமது அரசு. இந்த மாறுதலுக்குச் சீன சமுகத்தினரிடமிருந்து பரவலான எதிர்ப்பும் வந்தது. இந்தத் திட்டத்தை ஆதரித்தது மலாய் மற்றும் இந்தியர்கள் மட்டுமே குரல் கொடுத்தது நாடறிந்த ஒன்று. சீனர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் இன்று, சீன பள்ளிகளில் இவ்விரண்டு பாடங்களும் சீனம் மற்றும் ஆங்கில மொழியில் நடத்தப்பட்டு வருகின்றது.

மூத்த தலைவர்களின் முடிவுகள் பிழை என்று கூறும் வகையில் இத்திட்டம் தற்பொழுது தாய்மொழிக்கே மாற்றப்படும் தருவாயில் இருக்கின்றது. இப்பாட திட்டம் மறுபடியும் தாய்மொழிக்கெ மாற்றப்படுமெயானால், தமிழ் மாணவர்களின் நிலை???? இந்தக் கூற்றைபற்றி தங்களின் கருத்து என்ன???

  • @ஆய்தன்:-
மதிகெட்ட நாட்டுத் தலைவர் ஒருவரின் சுட்டுவிரல் ஆணையாலும், அரசியல் அடிமைகள் சிலரின் அடிவருடும் ஆசையாலும் இந்த நாட்டின் கல்விக் கொள்கையே இன்று சீரழிந்து நிற்கிறது.

கணிதம் – அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கற்பிக்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, கோடானு கோடி வெள்ளி பாழாக்கப்பட்டு, ஒரு தலைமுறையின் அறிவுக் கண்கள் ஆறாண்டுகள குருடாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ள கொடுமை உலகிலேயே நமது நாட்டில்தான் நடந்துள்ளது.

'கண்கெட்டப் பிறகு கதிரவ வணக்கம்' என்பது போல கணிதம் – அறிவியலை மீண்டும் தாய்மொழியில் கற்பிப்பது பற்றி இப்போதுதான் புத்தி வந்தது போல அரசியலாளர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர்.

கணிதம் – அறிவியல் பாடமொழிச் சிக்கலில் மிகவும் தெளிவாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் மொழி, இனநலப் பாதுகாப்பு உணர்வுடனும் நல்லதொரு முடிவினைக் கண்டவர்கள் சீனர்கள்.

ஆனால், மதிகெட்ட மலேசியப் பெருங்குடி மக்களின் முட்டாள்தனமான முடிவை ஏற்றுக்கொண்டு பாழுங்கிணற்றில் மண்டியடித்து விழுந்தவர்கள் தமிழர்கள்! இல்லையில்லை, தமிழர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள்.

அந்த முட்டாள்தனத்தைப் பகிரங்கமாக ஒத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலைமைக்கு இன்று அந்த அரசியல் தலைவர்கள் ஆளாகி உள்ளனர். வீராப்பு பேசியவர்கள் இன்று குப்புற கவிழ்ந்து கிடப்பதைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இப்போதாவது, கணிதம் – அறிவியல் பாடங்களைத் தாய்மொழியிலேயே கற்பிக்க வேண்டும் என்று சீனர்களைப் போல அறிவான ஒரு முடிவுக்கு இவர்கள் வர வேண்டும்.

*தமிழ்ப்பள்ளிகளில் ஏன் கணிதம் – அறிவியல் பாடங்களைத் தமிழ்மொழியில் கற்பிக்க வேண்டும்?

௧.ஒரு குழந்தைக்குத் தொடக்கக் கல்வியை அதனுடைய தாய்மொழியில்தான் வழங்கவேண்டும் என்று ஐக்கியநாடுகள் அவையின் (United Nations) கல்விக் கோட்பாடாக இருக்கின்றது.

௨.கணிதம் – அறிவியலை ஆங்கிலத்தில் கற்பித்தால் குழந்தைகளின் ஆங்கிலமொழி ஆற்றலை வலுப்படுத்திவிடலாம் என்பது முற்றிலும் தவறான ஒரு அணுகுமுறையாகும்.

௩.கணிதமும் அறிவியலும் திறன் பாடங்கள் (Skill Subject). திறன் பாடங்களைப் புரியாத ஆங்கில மொழியில் கற்பித்தால் மாணவரின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆங்கில மொழியறிவும் மட்டுப்படுகிறது.

௪.எந்த ஒரு மொழியையும் அந்த மொழியாகத்தான் கற்பிக்க வேண்டுமே தவிர, கணிதம் – அறிவியல் போன்ற திறன் பாடங்களின் வழியாக ஒரு மொழியைக் கற்பித்துவிட முடியாது.

௫.உலக அளவில் அறிவியல் துறையில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ள செருமானியம், உருசியா, கொரியா, சீனா, சப்பான் முதலான நாடுகளில் கணிதம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் அவர்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன.

௬.நமது தாய்மொழியாகிய தமிழில் கணிதம் – அறிவியல் பாடங்களைச் சிறப்பாக கற்பிக்க முடியும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கணிதம் – அறிவியலைத் தாய்மொழியில் படித்தால் கணிதக் கோட்பாடுகளையும் அறிவியல் கருத்துருக்களையும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள்.

௭.இந்திய நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த அணுவியல் ஆய்வாளர் அப்துல் கலாம் அவர்கள் தம்முடைய தொடக்கக் கல்வியைக் குறிப்பாகக் கணிதம் – அறிவியலை தமிழ்மொழியில்தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் – அறிவியல் பாடங்களைத் தமிழ்மொழியில் கற்பித்தால் ஏற்படப்போகும் நன்மைகள் என்ன?

1.தமிழ்ப்பள்ளி என்ற தனி அடையாளம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
2.தமிழ்ப்பள்ளிகளின் முகாமையான பாட மொழியாகத் தமிழே நிலைபெறும்.
3.தமிழ்மொழிக்கான அரசுரிமைகள் மீட்கப்படும்; நிலைப்படுத்தப்படும்.
4.இந்நாட்டில் தமிழ்மொழியை நிலைப்படுத்தவும் வலுப்படுத்தவும் உறுதியான அடித்தளம் உருவாகும்.
5.மற்ற இரு மொழிகளுக்கு இணையாக அறிவியல் துறைசார் ஆக்கங்கள் தமிழிலும் நடைபெறும்.
6.கணிதம் – அறிவியல் பாடநூல்கள் அரசு செலவில் தமிழிலேயே அச்சிடப்படும்.
7.கணிதம் – அறிவியல் பாடநூல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்படும்.
8.கணிதம் – அறிவியல் பயிற்சிநூல்கள் உருவாக்குவதற்கும் பரப்புவதற்கும் நம்மவர்களின் பதிப்பகங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டும். நம்மவர் பதிப்பகங்கள் வளர்ச்சி பெறும்.
9.அரசுப் பாடநூல்கள், தனியார் நிறுவனப் பயிற்சி நூல்கள் எழுதும் ஆசிரியர்களுக்கு ஓரளவு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
10.கணிதம் – அறிவியல் தேர்வுகளைத் தமிழில் அணியப்(தயார்)படுத்துவதற்கு தமிழாசிரியர்களுக்கு வாய்ப்பு உண்டாகும்.
11.தமிழ்ப்பள்ளிகளுக்கான கணிதம் – அறிவியல் தேர்வுகளை நடத்தவும் கண்காணிக்கவும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படலாம்.
12.தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்குத் தமிழாசிரியர்களின் தேவை பெருகும்.
13.நமது மாணவர்களின் தேர்வுத் தாள்களை நமது ஆசிரியர்களே திருத்தி மதிப்பெண்கள் போடுவார்கள்.
14.கணிதம் – அறிவியல் தொடர்பான ஆயிரமாயிரம் கலைச்சொற்கள் அழிவிலிருந்து பாதுகாக்கப்படும். மேலும், புதுப்புதுக் கலைச்சொற்கள் உருவாகும்.
15.கணிதம் – அறிவியல் பாடங்களுக்கான துணைநூல்கள், மேற்கோள் நூல்கள், கலைச்சொல் அகராதிகள் ஆகிய உருவாகும்.
16.கணிதம் – அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியருக்கான வேலை வாய்ப்புகள் நமது இளையோர்களுக்கே கிடைக்கும்.
17.தனியார் கல்வி நிறுவனங்கள், சிறப்புக் கல்வி (Tuition) நடுவங்களில் கணிதம் – அறிவியல் பாடங்களைக் கற்பிக்கும் வேலை வாய்ப்புகள் நம்மவர்களுக்கே கிடைக்கும்.
18.தாய்மொழியில் கணிதம் – அறிவியல் பாடங்களைப் படிப்பதால் மாணவர்களின் அறிதலும் புரிதலும் சிறப்பாக இருக்கும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (அதி:47 குறள்:467 )

13 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

அருமையான ஆய்வுக் கட்டுரை. கணிதம், அறிவியல் மீண்டும் தாய்மொழியில் கற்பிக்கப்படப்போவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இனியும் அந்த தலைவன் சொல்கிறான், இந்த தலைவன் சொல்கிறான் என்று கேட்டு மூடத்தனமாக தாய்மொழியையும், தமிழ் மாணவர்களையும் காவு கொடுக்காதிருக்க வேண்டும்!

அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கும் திட்டம் தமிழ்ப் பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது அரசியல்வாதிகளின் நடவடிக்கை மட்டுமல்ல. சில பொறுப்பற்ற தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர்களும் இதற்கு உடந்தை.

ஆறாண்டுகளுக்கு முன்பு, சொகூரில் சாமிவேலுவின் தலைமையில் சொகூர் தலைமையாசிரியர்கள் அனைவரையும் ஒன்றுகூட்டி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார்கள்.

அறிவியல், கணிதம் ஆங்கிலத்தில் போதிக்கப்பட வேண்டுமா என்று கேட்டதற்கு, அத்திட்டத்திற்கு ஆதரவாக இரு தலைமையாசிரியர்களைத் தவிர்த்து மற்ற அனைவருமே கையை உயர்த்தினர். வெட்கக் கேடு!

இனி இதுபோன்ற மூடத்தனங்கள் அவையில் அரங்கேறுவதைத் தடுத்திட நல்ல துடிப்புள்ள தலைமையாசிரியர்கள் முன்வர வேண்டும்.

மலைநாட்டில் அடுத்தத் தலைமுறை உரிமைகளைத் தட்டிக் கேட்கும் சமுதாயமாக உருவாகி வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இனிவருங்காலங்களில் மொழிவேரைப் பிடுங்கும் அரசாங்கக் கொள்கைகளையும் அதனைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும் வேரோடு சாய்த்து மொழியைக் காப்போம்..!

பெயரில்லா சொன்னது…

உண்மையான கருத்தும்கூட...
அனுபவத்தில் கூறுகின்றேன்!
வருடாந்திர கருத்துக்கணிப்பே இதற்கு சான்று. அதிக பணமும் நேரமும் செலவழித்து தயாரிக்கப்படும் பாடத்திட்டங்கள் முழுமையான வெற்றி காண்கிறதா என்பது இங்கு கேள்விக்குறியே!!!

Unknown சொன்னது…

ஆரம்ப காலந்தொட்டே ஆசிரியர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இல்லை. மதித்தவர் யார்? வழியில் போன ஓணானை மடியில் எடுத்து விட்டுக் கொண்டு குத்துதே குடையுதே என பிற இனம் குதித்தாலும் நம் மடியிலும் மதியிலும் சுரணை கிலோ என்ன விலை தான்..

Sivaganapathy சொன்னது…

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

"கணிதமும் அறிவியலும் தமிழில் படித்தால் ஏறுமா?"...மண்டைக்கு ஏறுவது ஒரு பக்கம் இருக்கட்டும்....

முதலில் ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் தமிழ் பள்ளிக்கு சென்று படிப்பார்களா? ....முதலில் இதை சாதிப்போம் பிறகு மற்றவற்றை அல்லது மற்றவர்களை குற்றம் கூறுவோம் ...

சீனர்கள் அவர்களின் பலம் மொழி... பிறகு பொருளாதாரம் ...அதனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தலைவறையோ அல்லது அரசியல் கட்சியையோ நம்பி வெக்கம் கெட்ட பிழைப்பு பிழைக்கவில்லை. சீனர்களுக்கு என்று ஒரு அரசியல் எதிர்கட்சி எப்பொழுதுமே குரல் கொடுக்கும் ..ஆனால் இந்தியர்கள் அப்படியா ?

நாம் மலேசியா இந்தியர்கள் (தமிழர்கள்) தமிழ் பள்ளி சென்று படிப்பதில் மிகவும் குறைந்த அல்லது வறுமையின் பிடியில் உள்ளவர்களே படிக்கிறார்கள். பிறகு எப்படி எதிர்த்து போராட முடியும் ? ஒரு பக்கம் போராடினால் ஒரு பக்கம் இன்னும் மற்ற இன அல்லது மொழி பள்ளிக்குதானே செல்கிறார்கள்
ஒரு தனி தமிழன் தன் சொந்த மொழியையே உதரித்தல்லும்பொழுது ஒரு அரசாங்காத்துக்கு என்ன வருத்தம் .... சமூகத்தலைவர்த்தான் என்ன பண்ண முடியும்

முதலில் நாம் நமக்குள்ளே ஒரு மொழி உரிமை போராட்டம் நடத்த வேண்டும் ...

HINDRAF போன்ற அமைப்புகள் இன்று நம் மொழிக்காக போராடி வெற்றி பெற்றால் ஒழிய மற்ற பறிபோன மற்ற உரிமைகளை மறுபடியும் பெற முடியும்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களைத் தமிழில் கற்பிக்க வேண்டியதன் அடிப்படைக் காரணங்களையும், அதனால் விளையும் நன்மைகள் பற்றியும் மிக ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்.

6 ஆண்டுகளுக்கு முன்னால், முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த முடிவினால் நமது மாணவர்களுக்கும் மொழிக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் சொல்லி மாளாது.

தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பாடமொழியாக இருந்த நிலை மாறிப்போய் பயிற்று மொழியாக இப்போது வந்துவிட்டது. தமிழ்ப்பள்ளியில் தமிழைவிட பிற மொழிகளே அதிகமாகப் படிக்கப்படும் பரிதாபமான நிலைமை ஏற்பட்டுவிட்டது.

நீண்ட காலப் பார்வையில், இதனால் தமிழ்ப்பள்ளிகளில் அடையாளம் மாறிப்போய் இறுதியில் தற்போது இருக்கின்ற 523 பள்ளிகளும் காணாமல் போகலாம்.

சீனர்களைப் போல் சொந்த மூளையில் சிந்திக்கும் ஆற்றலும் சொந்த மொழியில் சிந்திக்கும் அறிவும் நம் தமிழ் மக்களுக்குக் குறிப்பாகத் தமிழ்(இந்திய)த் தலைவர்களுக்கு வேண்டும்.

அடுத்தவன் மூளையைக் கொண்டு சிந்திப்பதும் ஆங்கில மொழியில் சிந்திப்பதும் எப்போதுமே தமிழுக்கும் தமிழினத்திற்கும் கலை, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திற்கும் பெரிய தீங்காகவே அமையும்.

அரசியல் தலைவர்களும், ஆங்கில அடிமைகளும், அன்னியர்களின் அடிவருடிகளும் இனியாவது மொழி, இனம், சமயம் தொடர்பான சிக்கல்களைத் தெளிவாகவும், தொலைநோக்குப் பார்வையுடனும், தாய்மொழி பற்றுடனும் பார்க்க வேண்டும் - சிந்திக்க வேண்டும்.

இன்றைய தலைமுறையில் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நாளைய நமது தலைமுறையைப் பெரிதும் பாதித்து விடலாம். அடுத்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மாபெரும் 'உரிமைப் போராட்டம்' நடைபெறும் நிலைமைக்கு நமது குழந்தைகளைத் தள்ள வேண்டாம்.

நமது குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு நிகழ்காலத்தில் சரியான; உறுதியான முடிவுகளை செய்ய வேண்டியது பிறந்த இனத்திற்குச் செய்யத்தக்கக் கட்டாயமான கடமையாகும்!

Sathis Kumar சொன்னது…

அன்பு ஆய்தன் அவர்கட்கு,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/

கோவி.மதிவரன் சொன்னது…

வணக்கம் வளம் பெற வாழ்த்துகள்

தமிழ்ப்பள்ளியின் இன்றைய நடப்புச் சிக்கலை மிக அழ்காகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் கட்டுரையாளர். உண்மையில் சீனர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கள் மொழியைக் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் தமிழ்ப்பள்ளிகளின் காவலன் என்று கூறிக்கொள்ளும் நாம் தான் இன்னும் பேசா ஊமைகளா இருந்து வருகின்றோம்.

மிக எளிமையா கணிதச் சொற்களான கூட்டல், கழித்தல், வகுத்தல், போன்ற சொற்கள் இன்றைய நமது தமிழ்மாணவர்களுக்கு விளங்கவில்லை என்பது வியப்புக்குரிய ஒன்று. சோற்றுகாகவும் பட்டத்திற்காகவும், பணத்திற்காகவும், தனது இனத்தையும், மொழியையும் சுலபமாக விட்டுக்கொடுக்கின்ற போக்கு மாறுதல் வேண்டும்.
தமிழ்ப்பள்ளிகளை மீட்க மலேசியத் தமிழர்கள் ஒன்றுபடுதல் வேண்டும்

தமிழ் எங்கள் உயிர்
தமிழ்ப்பள்ளி எங்கள் உடல்.

பெயரில்லா சொன்னது…

கணிதமும் அறிவியலும் ஆங்கிலத்திற்குப் போனதால் நம் தமிழ்ப்பள்ளியின் அடையாளம் முற்றிலும் மாறிவிட்டது.

ஆய்தன் சொல்லுவது போல, தமிழ் பாடமொழியாக இருந்த காலம் மறைந்துபோய், தமிழ் வெறும் பயிற்றுமொழியாக மட்டுமே நம் தமிழ்ப்பள்ளியில் இருக்கிறது. இது மிகவும் பரிதாப நிலைதான்.

இப்படி ஒரு நிலைமைக்குக் காரணம் நமது சாதனை தலைவர்கள், அரசியல் சுயநலவாதிகள், தமிழ்ச் சுரணைகெட்ட தலைமையாசிரியர் என்றால் மறுப்பதற்கில்லை.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் செம்பருத்தி இயக்கம், மலேசியத் திராவிடக் கழகம், தமிழ்நெறிக் கழகம் போன்ற இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பைக் காட்டின. இந்தத் திட்டம் தமிழ்ப்பள்ளிக்கு பேராபத்தாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தனர்.

ஆனால், அதனை அதிகாரத்தில் இருந்தவர்கள் மதிக்கவே இல்லை. அவசரப்பட்டு செய்து இன்று ஆபத்தில் மாட்டிக்கொண்டார்கள்.

சூகூய் என்ற சீன கல்வியாளர்கள் அமைப்பு மட்டும்தான் கடைசிவரை போராடி வெற்றி பெற்றது.

தங்கள் தாய்மொழியைக் காக்க சீனர்கள் அரசாங்கத்தையும் அன்றைய பிரதமர் துன் மகாதீரையும் நேரடியாக எதிர்த்துப் போராடி இறுதியில் வெற்றியும் பெற்றனர்.

இந்த மாதிரி மொழி உணர்வும், இனப் பற்றும் நமது தமிழர்களுக்கும் கண்டிப்பாக இருந்திருந்தால் நமக்கு இந்த பரிதாப நிலை வந்திருக்காது.

ஆய்தன் பட்டியல் போட்டதுபோல பல நன்மைகளும் சலுகைகளும் ஆக்கங்களும் நமக்கு கிடைத்திருக்கும்.

ம.இ.கா தலைவர்தான் தன்னுடைய அரசியல் இலாபத்திற்காக மகாதீருக்கு மண்டியிட்டு துணைபோனார் என்றால், தமிழ்ப்பள்ளி தலைமையாசியர்கள் 500 பேர் கூட்டம் கூடி செக்கு மாடுகள் போல தலையாட்டி பொம்மை போல பேசா மடந்தை போல நடந்து கொண்டார்களே அவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?

இப்படி ஒரு அருமையான ஆய்வை எழுதியுள்ள ஆய்தன் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தக் கட்டுரையை அச்செடுத்து பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

பெயரில்லா சொன்னது…

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது சான்றோர் அருளிய வாக்கு.

என்றைய தினம் நம் பிள்ளைகள் எண்களையும் அறிவியலையும் ஆங்கிலத்தில் பயில ஆரம்பித்தார்களோ.. அன்றே தமிழுக்கு சாவுமணி அடிக்க ஆரம்பிக்கப்பட்டு விட்டது..!?

கணிதமும் அறிவியலும் மீண்டும் தமிழில் உயிர்பெற்று வர எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாண்டு நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தேர்வு எழுதியதைப் பார்க்க மிகவும் வேதனையாய் இருந்தது..!

பாவம் அவர்கள்..!!???

அன்புடன்,

அழகுமதி,
ரவாங்கு, சிலாங்கூர்.

பெயரில்லா சொன்னது…

அன்று! அன்று! அன்று!
எண்களைக் கண்டவன்
எழுத்துகள் ஆக்கியவன்
இயற்றமிழ் செய்தவன்
இசைத்தமிழ் பாடியவன்
கூத்துத்தமிழ் ஆடியவன்
தமிழன்!தமிழன்!தமிழன்!

இன்று! இன்று! இன்று!
மொழியற்ற ஊமையாய்
இசையறியா பேதையாய்
அறிவற்ற உயிரியாய்
அடிமை விலங்கினமாய்
ஏதுமற்ற ஏதிலியாய்
தமிழன்!தமிழன்!தமிழன்!

அன்பன்: இனியன்,
இரவூப்பு, பகாங்கு.

பெயரில்லா சொன்னது…

மானமுள்ள தமிழர்களும் தமிழ் இயக்க தலைவர்களும் தமிழ்ப்பள்ளி ஆசிரியகளும் படிக்க வேண்டிய நல்லதொரு ஆய்வுக் கட்டுரை இது.

நன்றி! வணக்கம்!

இக்கண்,
விஷ்வநாதன் நாராயணன்,
தெலுக் பங்லிமா காராங்.

இரா. வசந்த குமார். சொன்னது…

மன்னிக்கவும். ஒரு சிறு திருத்தம் கூற விரும்புகிறேன்.

திரு. அப்துல் கலாம் அவர்கள் வகித்த பதவியின் பெயர் அதிபர் அல்ல; குடியரசுத் தலைவர் என்பதே! இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்பதை இந்தியக் கண்ணோட்டத்தில் கண்டால் தங்களால் அறிய முடியும் என்று நம்புகிறேன்.

நன்றி!

பெயரில்லா சொன்னது…

என் மகள் படித்த தமிழ்ப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வழி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். சாமிவேலு ஏற்றுக்கொண்டார் என்பதற்காக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பள்ளியின் தலைமையாசிரியை கேட்டுக்கொண்டும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதனால் சாமிவேலுவிடம் இக்கூட்டத்தை அனுமதித்தற்கு தலைமையாசிரியை வாங்கிக் கட்டிக்கொண்டார். இந்நிலைக்குக் காரணம் சாமிவேலுதான். மாற்றியாகிவிட்டது. சாமிவேலுவுக்கு பயந்து நாமும் சும்மா இருந்துவிட்டோம். பிள்ளைகளும் படிக்க தொடங்கிவிட்டார்கள். அதனால் தமிழ்ப்பள்ளி அடையாளம் இழந்துவிட்டது என்பதற்கில்லை. தமிழ்மொழி பின்தங்கிவிட்டது என்பதற்கும் இல்லை. மலாய் மாணவர்களை விட தமிழ் மாணவர்களுக்கு அதிக சிக்கல்களும் இல்லை. தொடர்புடைய பெற்றோரைவிடுத்து அவரவர் கருத்து கூறுவது எளிது. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி முறையான, நேர்மையான ஆய்வின் பிறகு முடிவு எடுப்பது சிறப்பாக இருக்கும். - அழகன்