வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 28 பிப்ரவரி, 2009

சன் டிவி, கலைஞர் டிவியைச் சுரணையுள்ள தமிழர் புறக்கணிப்போம்


சன் டிவி, கலைஞர் டிவியைப் புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் “தமிழர் விழிப்பு இயக்கம்” விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது:


இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது.

எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரும் கட்டாயமான கடமை தமிழர்களின் ஊடகங்களிற்கு இருக்கின்றது. தமிழினம் என்றுமில்லாதவாறு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இனப் படுகொலையை எதிர்த்தும், தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்தும் குரல் கொடுக்க வேண்டிய கடமை இந்த ஊடகங்களிற்கு இருக்கின்றது.

ஆனால் சில ஊடகங்கள் இந்தக் கடமையை மறந்ததும் அன்றி, எமது மக்களுக்கு எதிராகவும் செயற்பட்டும் வருகின்றன. சில ஊடகங்கள் எமக்கு ஆதரவு போன்று காட்டிக் கொண்டு, மறைமுகமாக தமிழினத்தின் போராட்டத்தை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.எமது மக்கள் படும் இன்னல்களையும,; போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளையும் இருட்டடிப்புச் செய்தும், எமக்கு எதிரான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், களியாட்ட நிகழ்வுகளை வழங்கி மக்களை திசைதிருப்பியும் வருகின்ற ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.

எமது மக்களின் அவலங்களை அம்பலப்படுத்தக் கூடிய, தமிழீழ மக்களிற்கு ஆதரவு திரட்டக் கூடிய வலுவும் வசதியும் இருந்தும் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றன இதற்கு மாறான வகையிலேயே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றன என்பதை உங்களுக்கு இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஈழத்தில் நடக்கின்ற அவலங்களை மட்டும் அன்றி, தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவாக மக்கள் கிளர்ந்து எழுகின்ற செய்திகளைக் கூட இந்தத் தொலைக்காட்சிகள் இருட்டடிப்புச் செய்து வருகின்றன. அண்மையில் ஈழத் தமிழர்களுக்காக திரு தொல் திருமாவளவன் அவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது, அது பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்தன.

எமக்காக தன்னை நெருப்புக்கு இரையாக்கி தியாகம் செய்த மாவீரன் முத்துக்குமாரன் பற்றிய செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து, ஊடக தர்மத்தையே காலில் போட்டு மிதித்தன. மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி நிகழ்விற்கு மக்கள் தன்னெழுச்சியோடு இலட்சக் கணக்கில் திரண்டனர். அரசியல்வாதிகளின் பிறந்த நாள் விழாக்களை முக்கியத்துவம் கொடுத்து செய்தி சொல்லும் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மாவீரன் முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் பற்றி ஒரு வரி கூடச் சொல்லவில்லை.

அத்தோடு சிங்கள இனவாதத்தோடு கைகோர்த்து நின்று இன அழிப்பில் நேரடியாகப் பங்கெடுத்து வரும் காங்கிரஸ் அரசை நியாயப்படுத்தும் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. தமிழின விரோதிகளை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று சித்தரிக்கும் கைங்கர்யத்தை எந்த வகையிலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது.

எமக்காக வீதியில் இறங்கிப் போராடுபவர்களைக் கொச்சைப்படுத்தியும், அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்புச் செய்தும், சிங்கள இனவாதத்திற்கு முண்டு கொடுப்பவர்களுக்கு வக்காலத்து வாங்கியும் வருகின்ற இந்த தொலைக்காட்சிகளை ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் ஆதரித்துக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக இந்த தொலைக்காட்சிகளை நாம் புறக்கணிப்போம்.

அன்பார்ந்த தமிழ் மக்களே! ஈழத்தில் உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி, சிங்களத்தின் கோர வெறியாட்டத்திற்குள் எமது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழ்நாட்டிலும் மற்றும் பல நாடுகளிலும் எமக்காக பல துன்பங்களுக்கு மத்தியில் பலர் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பல இளைஞர்கள் தம்மை தீக்கு அர்பணித்து விட்டு நிற்கின்ற இந்த வேளையில், இரண்டு தொலைக்காட்சிகளை தியாகம் செய்வது எமக்கு ஒன்றும் பெரிய விடயம் இல்லை. ஆகவே எவ்வித தயக்கமும் இன்றி இந்தத் தொலைக்காட்சிகளை முற்றாகப் புறக்கணியுங்கள்!

அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பல பங்களிப்புகளை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். தமிழினத்திற்கு எதிராக செயற்படும் இந்தத் தொலைக்காட்சிகளை புறக்கணிக்கும் போராட்டத்திற்கும் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உங்கள் வர்த்தக நிறுவனங்களில் இந்தத் தொலைக்காட்சிகளுக்கான அட்டைகளை விற்பதை நிறுத்துங்கள்! நீங்கள் மனது வைத்தால் எமது புறக்கணிப்புப் போராட்டம் விரைவில் வெற்றியடைந்து விடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி இரண்டையும் புறக்கணிப்பதோடு, சன் தொலைக்காட்சி தயாரிக்கும் படங்களையும் புறக்கணிக்கும் முடிவை நாம் எடுத்துள்ளோம். அந்த வகையில் சன் தொலைக்காட்சி தயாரிப்பில் வெளிவரும் படங்களை புலம்பெயர் நாடுகளில் இனிமேல் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, எதிரியின் செயற்பாடுகளுக்கு துணை போய்க்கொண்டிருக்கும் இந்தத் தொலைக்காட்சிகளுக்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவிக்கும் வண்ணம் நாம் விடுத்திருக்கும் இந்த போராட்ட அழைப்பை ஏற்று விரைந்து செயற்படும்படி அனைத்துத் தமிழ் மக்களையும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம்.

"ஒற்றுமையே வலிமை"
"வலிமையே வாழ்வு"

@தமிழர் விழிப்பு இயக்கம்
thamilarvilippuiyakkam2009@gmail.com
@ஆய்தன்:-
மொழி - இன நலம் கொஞ்சமும் இல்லாமல்
காசு பண்ணுவதே குறியென அலையும்
தொலைக்காட்சிகளைப் பார்க்க...
சூடு சுரணை இல்லாமல்...
மானம் ஈனம் இல்லாமல்...
நாக்கைத் தொங்கவிட்டு அலையும்
நாசமாய்ப் போனவர்களைத் திருத்துவதும்
நாயின் வாலை நிமிர்த்துவதும்
ஒன்றென அறிவதை அன்றி
வேறொன்றும் அறியேன் பராபரமே..!!

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

மலேசியத்தில் ஐ.நா முன்னிலையில் பேரணி

மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

உலக அமைதி முனைவகம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு கண்டனப் பேரணி இன்று 27.02.2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்றது.

அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையே! சிறிலங்கா இராணுவத்தின் தமிழினப் படுகொலையை உடனே நிறுத்து!

ஐக்கிய நாட்டு சபையே! தமிழினப் படுகொலையை உடனே நிறுத்த சிறிலங்கா இராணுவத்தை ஆணையிடு!

ஐக்கிய நாடுகள் சபையே! உமது அறிக்கைகள் தேவையில்லை! சிறிலங்கா அரசிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள்தான் தேவை!

ஐக்கிய நாடுகள் சபையே! "கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
தமிழீழத்தை அங்கீகரி!

போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு மக்கள் திரண்டிருந்தனர்.

தமிழர் இனப் பிரச்சினையை அரசியலாக்கும் குறிப்பிட்ட சில தலைவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பால் அடித்தும் தமது கால்களால் மிதித்தும் மக்கள் தமது எதிர்ப்பை, வெறுப்பை வெளிக்காட்டினர்.

மலேசியாவின் பல்லின மக்களைச் சார்ந்து மலாய், சீனம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகைகள் செய்யப்பட்டிருந்தன.

இரத்தம் தோய்ந்த குழந்தைகளின் உருவப்பொம்மைகளை தாங்கி "அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என கூடியிருந்தவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
உலக அமைதி முனைவகத்தின் பிரதிநிதிகள், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவைக் கையளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகராளிகள் உரிய பதில் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

@செய்தி: புதினம்

@ஆய்தன்:-
மலேசியத் தமிழன் குரல்
சிறிலங்கா காதில் விழட்டும்..
இந்தியா காதில் விழட்டும்..
ஐநா காதில் விழட்டும்..!
உலகம் விழிக்கட்டும்..!
தமிழினம் பிழைக்கட்டும்..!
தமிழ் ஈனம் ஒழியட்டும்..!

ஐ.நா.வில் முதல்முறையாகத் தமிழீழம் மலருகிறது

இன்று வெள்ளிக்கிழமை (27.02.2009) ஜ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகள் கூடி இலங்கை நிலைகுறித்து ஆராயவுள்ளன. இந்த முடிவானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையை அடுத்து அவசரமாக நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக இன்ர சிற்றி பிரசு(ICP) அறிவித்துள்ளது.

இன்று காலை இடம்பெறவிருக்கும் இக்கூட்டத்தைப்பற்றி இலங்கை அரசாங்கத்துக்கு ஜ.நா பாதுகாப்புச் சபை அறிவித்துள்ளது. வீட்டோ அதிகாரம் கொண்ட 5 அங்கத்துவ நாடுகளும், இம்முறை தமது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவாதத்திற்கு இடையூறு விளைவிக்காது என பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கான முன் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள விவாதமானது இலங்கை இனப்பிரச்சனையின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

பிரித்தானிய மற்றும் ஜரோப்பிய வாழ் தமிழர்களின் உச்சக்கட்ட போராட்டத்தின் பலனாகவே, ஐ.நா பாதுகாப்பு சபையில் இலங்கையின் நிலை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

@ஆய்தன்:-
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் - ஓயாத
அலைமேல் அலையடித்தால் இமயமும் இடியும்..!


வியாழன், 26 பிப்ரவரி, 2009

ஈழம்: ஐ.நாவைக் கண்டித்து மலேசியத்தில் பேரணி


ஈழத் தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து மலேசியாவில் நாளை (27.02.2009) கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் மனிதப் பேரலங்களும் கொடுமைகளும் நடந்தேறுகின்றன.


அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டைக் கண்டித்து மலேசியாவில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய நிலையில் போரை நிறுத்துவதே உடனடித் தேவையாகும். ஆனால், அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், இலங்கையில் என்னதான் நடக்கிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காப்பது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எங்கு எல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கு எல்லாம் அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் பணியாகும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இன்று வரையில் எந்தவொரு தீர்க்கமான முடிவினையும் முன்வைக்காமல் இருப்பது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலமே மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதைத் தடுப்பது மட்டுமின்றி இலங்கை முழுவதிலும் மனித உயிர்களையும் காப்பாற்ற முடியும்.

தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம், உணவு, மருந்து, குடிதண்ணீர், தமது சொந்த கிராமங்களுக்குப் பயமின்ற திரும்புதல் என்பனவே வன்னி மக்களின் உடனடிக் கவலைகளும் தேவைகளும் ஆகும்.

ஆனால், சிங்கள பேரினவாத அரசு மக்களை பயமுறுத்தியும், கொலை செய்தும், காயமுற வைத்தும் அடிப்படை தேவைகளை வழங்காமலும் மறுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே எரிகுண்டுகள், கிளசுடர் வகை கொத்துக்குண்டுகள் உட்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றது.

இவர்களை சாவின் விளிம்பில் இருந்து உலக மனித உரிமை காவலன் என பறைசாற்றிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபை மட்டுமே காப்பாற்ற முடியும்.
சாவின் விளிம்பில் நின்று கொண்டு போரின் துன்பத்தினைத் தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது நாகரீகமடைந்த மனித குலத்தின் அடிப்படை கடமையாகும்.

மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பதே உண்மையான மனித நேயமாகும்.

ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.
நம் தமிழ் உறவுகள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்புவது தமிழீழ மக்கள என்றென்றும் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும். நம் உறவுகளின் துயர் துடைக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சி ஈழத்தில் அமைதி மலரச் செய்யும் என நம்பலாம்.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள இப்பேரணி கீழ்க்கண்டவாறு நடைபெறும்:

தேதி:- 27. 02. 2009 (வெள்ளிக்கிழமை)
நேரம்:- நண்பகல் மணி 1.00 லிருந்து
இடம்:- ஐநா அலுவலகம், டாமன்சாரா ஐட்சு,
சாலான் டுங்குன், கோலாலம்பூர்.

மேல் விபரங்களுக்கு: தொலைபேசி எண் 03-26980622.

மேலும், இயக்கங்களில் பிரதிநிதிகள் பொதுமக்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளும்படி பத்திரிகை அறிக்கைகள் விடும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

@நன்றி: புதினம்

@ஆய்தன்:-
தமிழ் மக்கள் ஒன்றிணைவோம் - உயிர்த்
தமிழ் மண்ணை மீட்டெடுப்போம்..!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

உலகத் தமிழருக்குக் கேணல் ரூபன் கடிதம்


சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் - தாக்குதலுக்கு முன்னதாக - உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதத்தினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வெளியிட்டுள்ளனர்.

"தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்" என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

------------------------------------------------------------

15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

'மாவீரன்' முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இசுரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.
------------------------------------------------------------

@ஆய்தன்:-
உலகத் தமிழர்கள் ஓயாது குரல்கொடுப்போம்!
உலக உருண்டையில் ஒருதனி நாடு சமைப்போம்!

  • கேணல் ரூபனுக்குத் தமிழுயிரின் வீரவணக்கம்
@நன்றி: புதினம்

சனி, 21 பிப்ரவரி, 2009

அண்மைச் செய்தி:கொழும்புவில் வான்புலிகள் தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளன.

புத்தளம் கற்பிட்டி பக்கமாக கொழும்பு நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கொழும்பு நோக்கி வருவது கதுவீயில் அவதானிக்கப்பட்டதனையடுத்து சிறிலங்கா படையினரின் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் தன்னியக்கமாக இயங்கத் தொடங்கின.

கொழும்புக்குள் இரவு 9.30 மணியளவில் உள்நுழைந்ததாக தெரிவிக்கப்படும் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகப் பகுதியிலும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீதும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுகளை விசியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 28 போ் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


@விரிவான செய்தி: புதினம் / பதிவு / என்வழி

வியாழன், 19 பிப்ரவரி, 2009

கொல்லப்படுவது தமிழன் மட்டுமல்ல.. புத்தனும்தான்!!

கழுத்தறுபட்ட முதியவள்
கதறும் குழந்தை
புத்தருக்குத் தூக்கு..!

xxxxxxxxxxxxxxxxxxxx

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

குருதியில் சிதறுகிறது
புத்தன் வளர்த்த
அமைதி

xxxxxxxxxxxxxxxxxxxxx

கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி

xxxxxxxxxxxxxxxxxxxxx

சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!

xxxxxxxxxxxxxxxxxxxxxx

யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!

xxxxxxxxxxxxxxxxxxxx

இரத்தத்தில் மிதக்கிறேன்
காகிதம் கொண்டுவா
கவிதைகள் பிறக்கட்டும்

xxxxxxxxxxxxxxxxxxxxx

வழியில்லாத பாதையில்
வலியைச் சுமந்தபடி செல்கிறது
புத்தரின் போதனைகள்

xxxxxxxxxxxxxxxxxxxxx

கதறக் கதறக் கற்பழித்து
அப்பெண்ணோடு கொல்லப்பட்டான்
புத்தன்

xxxxxxxxxxxxxxxxxxxxx

யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்..!

xxxxxxxxxxxxxxxxxxxxxx

புத்தனைச் செவிடாக்குகிறார்கள்
துப்பாக்கிச் சத்தங்களால்
புத்தனைக் குருடாக்குகிறார்கள்
கண்முன்னே கொல்லப்படும் சிசுவால்
புத்தனை ஊமையாக்குகிறார்கள்
காலால் மிதிக்கப்படும் மனிதநேயத்தால்
புத்தனைக் கொல்லுகிறார்கள்
ஒரு இனத்தை அழிக்கும் ஆயுதத்தால்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

@நன்றி:குழந்தை ஓவியம்

@ஆய்தன்:-

ஈழத்து மண்ணில்

எமது தமிழின உறவுக்கு

இத்தனைக் கொடுமைகள்

நடக்குமென்று தெரிந்துதான்

கண்களை மூடிக்கொண்டாயா புத்தனே..!!!

வியாழன், 12 பிப்ரவரி, 2009

நாளையே விடுதலை!

  • எழுக தமிழனே! இனநலம் கருதுக!
    கொழுந்துவிட் டெரியும்உன் குலைக்கனல் பெருக்குக!
    உன்றனை விடுதலைக் கொப்புவித் திடுக!
    பின்வரும் தமிழருன் பெற்றியைப் புகழ்வர்!
    வடக்குக் கதவினை இறுக்கிப் பூட்டுக!
    இடக்குசெய் ஆரிய இனக்கொழுப் புருக்குக!
    இழிவுக்குத் தீ வை! ஏற்றப் படியமை!
    அழிவுசெய் அடிமைத் தளைகளை உடைத்தெறி!
    உணர்வுகொள்! உறுதிகொள்! உயிரைப் பணயம் வை!
    தினவுத் தோள்களால் வெற்றியைத் திருப்பு!
    நாளையே விடுதலை நண்ண.
    காளையே! களிற்றின் கன்றே! கனல்கவே!

    (பாவலரேறு பெருஞ்சித்திரனார்-1969)

@ஆய்தன்:-
எழுக தமிழனே..! ஈழநலம் கருதுக..!
நாளையே விடுதலை விடியும்.!

சனி, 7 பிப்ரவரி, 2009

மலேசியாவில் இலங்கைத் தமிழர் தீக்குளித்து பலி

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படுவதால் மனமுடைந்த இலங்கை இளைஞர் மடைராசா (வயது 28) தீக்குளித்துப் பரிதாபமாகப் பலியானார். தீக்குளிக்கும் முன் தமிழ்நாட்டிலிருக்கும் வைகோ வழியாக ஒபாமாவுக்கு வழங்குவதற்காக உருக்கமான ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துள்ளார்.

6-2-2009 மலேசிய நேரப்படி காலை 6.30 மணியளவில் சிரம்பான், தம்பின் ரகாங் சாலையில் உள்ள ஒரு கடைவரிசையின் கீழ்த்தளத்தில் இந்தப் பரபரபான சம்பவம் நிகழ்ந்தது.

இளைஞர் மடைராசா கடந்த ஒரு வாரமாக இலங்கைப் போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை நாளிதழ் செய்திகளில் படித்து மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவுக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஒரு நாட்குறிப்பும் (டைரி) அதனுள் அவரின் உருவப்படம், கடப்பிதழ் ஆகியவை இருந்தன.

கூடவே, அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அந்த நாட்குறிப்பில் இருந்தது. அக்கடிதத்தில், இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் வரவும், உடனடி பேச்சுவார்த்தை நடத்தவும், அப்பாவித் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, நார்வே தூதுவர் சான் ரிக்சன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ ஆகியோர் அவருடன் சென்று இலங்கைச் சிக்கலைக் களைய உதவ வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்தன.

மேலும், அந்தக் கடிதத்தை வைகோவிடம் ஒப்படைக்கவும், அதனைப் பின்னர் ஒபாமாவிடம் கொடுத்து இலங்கை அப்பாவித் தமிழர்களும், பச்சிளங் குழந்தைகளும் மடிவதிலிருந்து தடுப்பதற்கு உதவ வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

கன்னெய்யை (பெட்ரோல்) உடல் முழுவதும் ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாக நம்பப்படும் இச்சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சிக்குள்ளான வாடகி(டாக்சி) ஓட்டுநர் கே.இரவிசந்திரன் உடனடியாகத் தீயை அணைப்பதற்குக் குடிநீரை ஊற்றியும் எவ்வித பயனும் இல்லாமல் அவர் அல்றியவாறு தரையில் விழுந்து துடித்தார்.

உடனே மருத்துவமனை அவசரப் பிரிவிற்குத் தகவல் கொடுத்து மருத்துவ வண்டி அங்கு வருவதற்குள் மடைராசாவின் உயிர் அமைதியாக அடங்கிவிட்டதாக இரவிசந்திரன் மிகுந்த துயரத்துடன் கூறினார்.

@ஆய்தன்:-
எத்தனை உயிர்கள் இப்படிப் போகும் – தமிழீழம்
எழுந்தால் மட்டுமே இத்தனை வலிகளும் போகும்!!

கொலைவெறி சிறிலங்கா - கபடதாரி இந்தியா: மலேசியாவில் கண்டனப் பேரணி


அப்பாவித் தமிழர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவத்தைக் கண்டித்து..

தமிழர்களைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் செயல்படும் சிறிலங்காவுக்குத் துணைபோகும் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து..

மலேசியாவில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. 6.2.2009இல் கோலாலும்பூரில் உள்ள இந்தியத் தூதரத்தின் முன்னிலையில் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மாண்புமிகு பி.இராமசாமி தலைமையில் ஏறக்குறைய 2000 தமிழர்கள் ஒன்றுகூடி மறுப்பு அறிக்கையை இந்தியத் தூதுவரிடம் வழங்கினர்.

இந்தக் கண்டனப் பேரணி பற்றிய விரிவான செய்திகளையும் படக்காட்சிகளையும் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்.

1.மலேசியாஇன்று

2.திருத்தமிழ்

3.புதினம்




@ஆய்தன்:-

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை; எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே..! -பெருஞ்சித்திரனார்

வியாழன், 5 பிப்ரவரி, 2009

உலகமெங்கும் ஒரே உணர்வு.. ஈழ விடுதலை உணர்வு!

இலங்கையில் தற்போது நடந்துவரும் சிங்களவரின் கொலைப்பாதகப் போர் உலக நாடுகள் - அரசியல் தலைவர்கள் - சமயப் பெரியவர்கள் - மனிதநேயப் பணியாளர்கள் - ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதிலும் குறிப்பாக, உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் - தமிழுறவுகள் உள்ளங்களையும் உணர்ச்சிகளையும் மிக மிக ஆழமாகவே பாதித்து உள்ளது.

இலங்கையில் நடக்கும் கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும்; வரலாறு காணாத மனிதப் பேரவலத்தை கண்டித்தும் - உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் பேரணிகள் நடந்துவருகின்றன.

இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்குப் பல்வேறு நாடுகளில் வாழும் உலகத் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கண்டன மறியலையும் - அமைதிப் போராட்டத்ததயும் - கவன ஈர்ப்பு போராட்டத்தையும் - மனித சங்கிலி ஊர்வலத்தையும் - இன்னும் பிற நடவடிக்கைகளையும் பாரிய அளவில் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு, உலகமெங்கும் முன்னெடுக்கப்படும் தமிழீழ ஆதரவுப் போராட்டங்களைத் தொகுத்தெடுத்து இந்தப் பதிவை இடுகின்றேன். இதில் எமது கவனக்குறைவினால் நான் இணைக்கத் தவறிய செய்திகள் இருப்பின், அருள்கூர்ந்து பொருத்தருள்வதோடு உடன் சுட்டிக்காட்ட அன்போடு வேண்டுகிறேன்.

1.இலண்டனில் வரலாறு காணாத கண்டனப் பேரணி

2.ஐ.நா முன்னிலையில் ஆர்ப்பரித்த தமிழர்கள்
















19.சென்னையில் மாணவர்கள் சாலை மறியல்

20.நியுசிலாந்தில் தமிழர் கண்டனப் பேரணி

21.இந்திய அரசைக் கண்டித்து 6.2.2009இல் மலேசியாவில் பேரணி

@ஆய்தன்:-
கெடல் எங்கே தமிழர் நலம் - அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க..! -புரட்சிக்கவி பாரதிதாசன்

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

ஈழக் கொடுமை:- மலேசியத் தமிழர் தற்கொலை


இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கும் செய்திகளை நாளிதழ்களில் படித்துவிட்டு மனமுடைந்துபோன தமிழ் இளைஞர் ஸ்டீவன் சுமையுந்தின்(லாரி) முன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

நெஞ்சை நெகிழவைக்கும் இந்தக் கொடூர சம்பவம் 2.2.2009 காலை 9.30 மணியளவில் மலேசியாவில். சொகூர் மாநிலம், ஊலுதிராம் என்னும் ஊரில் நடந்தது.

சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த அவ்விளைஞர் திடீரென அங்கு வேகமாக வந்த சுமையுந்தின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக சொகூர் நடுவண் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஸ்டீவன் செகதேசன் (வயது 29) கடந்த பத்து நாள்களாக பித்துப் பிடித்தவர் போல் காணப்பட்டதாகவும் அவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் ஈவி இரக்கமின்றி கொன்று குவிப்பதை பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்து மிகுந்த மனவருத்தமும் ஆழ்ந்த துன்பமும் அடைந்திருந்ததாக அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்காக தானும் ஒருநாள் உயிரைக் கண்டிப்பாகத் துறப்பேன் என்று நண்பர்களிடம் அவர் கூறிவந்துள்ளார்.

திருமணமான இவருக்கு மனைவி உண்டு. இவரின் இந்தத் தற்கொலை மலேசியத் தமிழர்களை அதிர்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளது. அன்னாரின் நல்லுடல் இன்று 3.2.2009 பிற்பகல் 3.00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.

@செய்தி:- மலேசிய நண்பன் நாளிதழ்

குறிப்பு:- இப்படிப்பட்ட தற்கொலைகளில் தமிழ் மக்கள் யாரும் தயவுசெய்து ஈடுபட வேண்டாம் என தமிழுயிர் வேண்டுகிறது.

@ஆய்தன்:-
ஒவ்வொரு தமிழனும் இறக்கின்றான் - அவன்
இருப்பவன் கண்களைத் திறக்கின்றான்

திங்கள், 2 பிப்ரவரி, 2009

மலேசியத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்


சிறி லங்காவில் படுகொலை செய்யப்பட்டுவரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அத்தமிழ் இன அழிப்பிற்கு ஆதரவு வழங்கும் இந்திய அரசின் கொள்கையைக் கண்டித்தும், தமிழ் நாட்டு இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்தார். உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமாருக்கு நேற்று மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் சிங்கள அரசாங்கம் தமிழ் இனத்தைப் படுகொலை செய்து வருகிறது. சிறி லங்கா அரசின் அப்படுகொலையை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ் இனத்திற்கு துரோகம் இழைத்து விட்டார். இந்திய அரசாங்கம் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்குத் தேவையான ஆயுதங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.

ஈழத்தில் நடக்கும் தமிழினப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும். தாயகத் தமிழர்கள் தமிழின மானம் காக்கப் புறப்பட வேண்டும். அதற்காக தமிழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாற வேண்டும் என்று அறைகூவல் விடுத்து தன்னையே தீப்பிழம்பாக்கிக் கொண்டார் முத்துக்குமார்.

முத்துக்குமார் செய்த தியாகம் “தமிழினப் போராட்டம் தொய்வடையாது, ஓயாது என்பதை உறுதிப்படுத்துகிறது”, என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வில் இரங்கல் உரையாற்றிய உலகத் தமிழர் நிவாரண அறவாரியத்தின் அறங்காவலர் சி. பசுபதி கூறினார்.

சுமார் 300 பேர் கலந்து கொண்ட முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு நேற்று இரவு மணி 8.30 க்கு கோலாலம்பூர் சோமா அரங்கத்தில் நடைபெற்றது.
இரங்கல் உரைகளுக்கிடையே தியாகி முத்துக்குமாருக்கு மரியாதையும் வீரவணக்கமும் தெரிவிக்கும் கவிதைகள் வாசிக்கப்பட்டன.

சிங்கள ஆட்சியாளரின் கபட நாடகம்

தமிழினப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஓடுக்க வேண்டும், தமிழர்களை அழிக்க வேண்டும் என்று சிங்கள அரசு நடத்தும் போரை எதிர்த்துப் போராடுகிறார் தலைவர் பிரபாகரன் என்று பசுபதி கூறினார்.


“தலைவர் பிரபாகரன் அவருடைய மாவீரர் தின உரையில் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். ஆனால், இந்திய அரசாங்கம் சிங்கள அரசுக்கு ஆதரவான, தமிழினப் போராட்டத்திற்கு எதிரான கொள்கையை பின்பற்றி வருகிறது”, என்று அவர் கூறினார்.

சிறி லங்கா அரசு நடத்திக் கொண்டிருக்கும் போரில் பொதுமக்கள் தாக்கப்படவில்லை; அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது; வழங்கப்படும் பாதுகாப்பிற்கு குறுக்கே நிற்பது புலிகள்தான், என்று பரப்புரை செய்து நாடகமாடி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

“ஈழத் தமிழ் மக்கள் படுகொலையை நிறுத்த முன்வராமல் அக்கொலைக்கு ஆதரவு அளிக்கும் இந்திய அரசையும், தமிழக மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசையும் கண்டித்து, தமிழர்களின் மானம் காக்க, ஈழத் தமிழர்களின் உயிரையும் உரிமையையும் காக்க தமிழக மக்கள் எழுச்சி பெற வேண்டும், உலகத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்பதற்காக தீக்குளித்தார் தமிழக இளைஞர் முத்துக்குமார். அவ்வீரனுக்கு நாம் இன்று வீரவணக்கம் செலுத்துகிறோம்”, என்று பசுபதி கூறினார்.

முத்துக்குமாருக்கு நாம் வீரவணக்கம் செலுத்துவது உண்மையென்றால், ஈழத் தமிழர்களுக்கான நமது போராட்டம் தொடர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த பசுபதி, வரும் வெள்ளிக்கிழமை பெப்ரவரி 6 ஆம் தேதி டூத்தா சாலையில் (ஜாலான் டூத்தா) இருக்கும் இந்தியத் தூதரகத்தின்முன் நடைபெற விருக்கும் இந்திய அரசிற்கு எதிரான ஆட்சேபக் கூட்டத்தில் கலந்துகொள்ள பெரும் திரளாக வருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

நம் இதயத்தில் முத்துக்குமார்

தமிழக இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து இறக்கவில்லை. நமது நெஞ்சங்களில் தீப்பிழம்பாக நிறைந்துள்ளார். “நாம் நாதியற்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு இனி அந்த நிலை கிடையாது என்று பரைசாற்றியிருக்கிறார், முத்துக்குமார்”, என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழ் நெறிக் கழகத்தின் ஆலோசகர் தமிழ் அழகன் கூறினார்.

தமிழகத்தின் மூலைமுடுக்களில் எல்லாம் இளைஞர்கள் உணர்ச்சியால் உந்தப்பட்டுள்ளனர். தமிழகம் பழையத் தமிழகமாக இருக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளார் முத்துக்குமார் என்று அவர் கூறினார். “சலுகை கேட்கும், மனு கொடுக்கும் இனமாக நாம் இருந்து வந்துள்ளோம். அந்த நாடகம் இனி நடத்த முடியாது”, என்றாரவர்.

“அரசியல் விடுதலை, தமிழ் ஈழம் பிறப்பு, இவைதான் நமது எதிர்காலம்.”
“இது பிரபாகரன் காலம். போராடுவது புலிகளின் பங்குமட்டுமல்ல. நமக்கும் பங்குண்டு என்பதை முத்துக்குமார் நிரூபித்துள்ளார். தனது உயிரைக் கொடுத்து தமிழர்களைத் தட்டி எழுப்பியுள்ளார்”,
என்று தமிழ் அழகன் கூறினார்.

ஆணையாத தீபமாய் தொடர்ந்து போராடுவோம்

இன்றையச் சூழ்நிலையில், தமிழ் ஈழப் போராட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அது தோல்வியல்ல. நாம் தொடர்ந்துப் போராடுவோம் என்று மலேசியத் திராவிடக் கழகத்தின் தலைவர் ரெ.சு முத்தையா கூறினார்.
“முத்துக்குமாரின் தியாகத்தை மதிக்கிறோம், தலை வணங்குகிறோம். ஆனால், தமிழன் எரிந்து கொண்டே போகக்கூடாது, ஏனென்றால் ஆள் இல்லாமல் போய்விடும்”, என்றாரவர்.

“பிரபாகரனுக்கு நாம் உதவ வேண்டும். போராட்டத்திற்கு நாம் உதவ வேண்டும் என்ற நமது எண்ணத்திற்கு முத்துக்குமார் புத்துயிர் ஊட்டியுள்ளார்”, என்று அவர் மேலும் கூறினார்.

தமிழன் மீண்டும் எழுச்சி பெறக்கூடாது என்பது பலரின் விருப்பம். அக்கருத்தை முறியடிக்க பொதுமக்கள் எழுச்சி பெற வேண்டும். இந்நாட்டு தமிழர்களுக்கும் ஆபத்து உண்டு என்று அவர் எச்சரித்தார்.

வெளிநாட்டிலிருந்து, வீட்டிலிருந்து ஆதரவு

தமிழ் ஈழ மக்கள் சிங்கள இனவெறியை எதிர்த்துப் போராடும் திண்மையை விவரித்த மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வுத்துறை ஆய்வாளர் குமரன், ஈழப் புலிகளுக்கு ஆதரவு தேவைப்படுகிறது என்றார்.

உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடமிருந்து ஈழப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்பார்ப்பது ஆயுதங்கள் அல்ல, பொருள் அல்ல. உலகத் தமிழர்களிடமிருந்து பிரபாகரன் கோருவதெல்லாம் “இருக்கும் நாட்டிலிருந்து, வீட்டிலிருந்து ஆதரவுக் குரல் கொடுங்கள்”, என்பதுதான் அவரின் கோரிக்கை என்று குமரன் கூறினார்.

தலைவர் பிரபாகரனின் கோரிக்கைக்கு தமிழக முத்துக்குமார் புத்துணர்வு அளித்துள்ளார்; உணர்சி அலைகளைத் தூண்டி விட்டுள்ளார் என்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் தெரிவித்த குமரன் கூறினார்.

குமரன் ஒன்றை நினைவு கூர்ந்தார், "போராட்டம் நடந்து கொண்டிருக்கும் ஈழத்தை விட்டு பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். சுகமான, வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வாழ்கின்றனர். நம்முடைய நாட்டிலும் அவ்வாறான சூழ்நிலை இருக்கிறது.”

கடுந்தொனியில் கண்டனம்

முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தி இரங்கல் உரையாற்றிய தொழிலதிபர் சாமுவேல்ராசு மற்றும் தமிழ் நெறிக் கழகத்தின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கே உரித்தான சிம்மக் குரலில் சிறி லங்காவில் நடந்து கொண்டிருக்கும் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்தனர்.
தமிழக அரசையும், இந்திய அரசையும் மிகக் கடுமையாகச் சாடினர். தமிழக முதல்வர் ஒரு கோழை என்றார் சாமுவேல்ராசு. அவர் தமிழனே அல்லர் என்று இடித்துரைத்தார் திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற ஒரு தமிழக இளைஞரின் தியாகம் உலகமுழுவதிலுமுள்ள தமிழர்களின் உணர்வுகளைத் தட்டி விட்டுள்ளது. தீக்குளிப்பதற்குமுன் முத்துக்குமார் எழுதியிருந்த அவரின் சாசனம் முழுவதையும் வாசித்து தனது கருத்தை வெடித்துக் கொட்டிய திருமாவளவன், “நாம் இனிமேல் இந்தியர்கள் அல்லர்; நாம் தமிழர்கள்”, என்று இடிமுழக்கம் செய்தார்.

காப்பாரிலும் வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது

தீக்குளித்த தமிழக இளைஞர் முத்துக்குமாருக்கு சிலாங்கூர், காப்பார் நகரிலும் வீரவணக்கம் செலுத்த்ப்பட்டது. காப்பார் மாரியம்மன் ஆலையத்தில் மாலை மணி 7.30 க்கு தொடங்கிய வீரவணக்க நிகழ்வில் தமிழ் அறவாரியத்தின் நிருவாக இயக்குநர் இளந்தமிழ் சிறப்புரை ஆற்றினார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் இந்நிகழ்வுக்கு தலைமையேற்று முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினார். இறுதியாக, முத்துக்குமாருக்கு வீரவணக்கம் கூறி, நன்றியுரை வழங்கினார் நகராட்சிமன்ற உறுப்பினர் எல். சேகரன்.

@ஆய்தன்:-
தமிழா ஒன்றுபடு!
தமிழால் ஒன்றுபடு!
தமிழுக்காக ஒன்றுபடு!
தமிழர் நலனுக்காக ஒன்றுபடு!
தமிழீழ விடுதலைக்காக ஒன்றுபடு!
  • நன்றி: மலேசியாஇன்று.காம்

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

ஈழத்திற்கு வாக்களிக்க விரல்கள் நீளட்டும்..


தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற கோர யுத்தத்தினால் இறந்து மடிகின்ற நமது இரத்த உறவுகளைப் பாதுகாப்பது தொடர்பான கருத்துக் கணிப்பினைக் கனடாவைச் சேர்ந்த இராணுவ ஊடகம் ஒன்று மேற்கொள்கின்றது.

நமது தொப்புள்கொடி உறவுகளின், நமது இரத்த உறவுகளின் உயிர்களினைப் பாதுகாக்க நீங்கள் விரும்பின் உடனடியாக விரைந்து செயற்படுங்கள்.

உலகங்கெங்கும் பரந்து வாழுகின்ற உறவுகளே!

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உடனடியாக 0014162604005 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு எமது உறவுகளைப் பாதுகாக்க விரும்பின் அறிவுறுத்தல் (Option) ஒன்றினை ( 1) அழுத்தவும்.

காலம் தாமதிக்காமல் உடனே விரைந்து செயற்படவும். ஒரே குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானலும் வாக்களிக்காலம். ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.

இந்த விடயத்தை உடனடியாக உங்கள் நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்! நேற்று இடம்பெற்ற எறிகணை மற்றும் பல் குழல் உந்துகணைத் தாக்குதலில் (12) பன்னிரண்டு சிறுவர்கள் உட்பட (32) முப்பத்திரண்டு பேர் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அழுத்துங்கள் உங்கள் தொலைபேசிகளை! பதியுங்கள் உங்கள் வாக்குகளை! திறவுங்கள் உலகின் விழிகளை!

Hi Every One! please vote for ceasefire in SriLanka. Please dial 0014162604005 and press one. This vote been canadian army media. Please act soon... And pass the message to every one you know. Please...Please vote now and safe our people. Evan last night 32 been killed including 12 kids on ariel bombing.

@ஆய்தன்:-

மண்மீட்புச் சமர்களத்தில்
உடன்பிறப்புகளைக் காப்பாற்ற
உங்கள் உயிர்கள் வேண்டாம்...
உடனே நீளட்டும்....
உங்கள் விரல்களாவது!!!!!!
  • நன்றி:-தமிழ் மதுரம்

பி.கு:- இந்த வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டுவிட்டதாக அறியப்படுகிறது -(ஆய்தன் 2.2.2009 மாலை மணி 5.30)