வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

தமிழில் கலப்பு செய்யாதே!


பள்ளி சென்று படிக்காமல் - நீ
'ஸ்கூல்' போவது எதற்காக?

மிதிவண்டி ஏறி மிதிக்காமல் - நீ
'சைக்கிள்' ஓட்டுவது எதற்காக?

வணக்கம் சொல்லி வணங்காமல் - நீ
'நமஸ்காரம்' சொல்வது எதற்காக?

பூ பறித்து தொடுக்காமல் - நீ
'புஷ்பம்' பறிப்பது எதற்காக?

தூவல் இருக்கும் போதினிலே - நீ
தாவல் ஏனோ 'பேனா'வில்?

விசிறி காற்றுத் தருகையிலே - நீ
'பேனை'ப் போடுவது எதற்காக?

வீட்டில் சோறு இருக்கையிலே - நீ
தெருவில் 'சாதம்' கேட்பதுவோ?

அப்பா வீட்டில் இருக்கையிலே - நீ
ஊரில் 'டாடி' தேடுவதோ?

மொழியில் கலப்புச் செய்யாதே - தமிழ்
மொழியில் பிறமொழி சேர்க்காதே!
-தமிழ்ச்சிட்டு

@ஆய்தன்:
தமிழாய் மொழியாத தமிழ்வாய் கண்டால்
சீறி எழுவாய்! காரி உமிழ்வாய்!

சனி, 19 ஏப்ரல், 2008

மின்னல் தரும் அதிரடிச் செய்திகள்

>>>மின்னலின் முன்னாள் பணியாளர்கள் தமிழுயிருக்கு விடுத்த மின்னஞ்சல்:-
அன்புத்தமிழ் இதயங்களே, நம் நாட்டில் , தமிழ் தழைத்து வாழ்ந்த இந்நாட்டில் தமிழை அழிக்கக்கூடிய வகையில் , மொழியை கொலைசெய்யக்கூடிய அளவில் தமிழன் ஒருவனே தமிழுக்கு எதிரியாக (தமிழர்களின் அரவணைப்பில் செயல்படுவதாக ஏமாற்றி பாசாங்Ì செய்துகொண்டு ) , பொதுமக்கள் முன்னிலையில் நல்லவனாக வேடம் புனைந்து தமிழை அழித்துக்கொண்டிருக்கிறான். நம்பமுடியவில்லை....

கடந்த ஆகசுட்டு மாதம் 2005ஆம் ஆண்டு , மின்னல் பண்பலைத் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் இந்த தமிழ்/தமிழர் அழிவுப் பணியை மிக அமைதியாக அதேவேளை பொதுமக்களுக்கும் தெரிந்தே மேற்கொண்டு வருகிறான் . தினந்தோறும் வானொலியை கேட்போர் முன்னிலையிலேயே இந்த அழிவுப்பணி மிக கச்சிதமாக நடைபெற்றுவருகிறது. இது பெரிதும் வருத்தத்தை அளிக்கிறது.

ஏற்கனவே தனியார் (தமிழ் வானொலி எனக் கூறிக்கொள்ளும் மின்னல் வானொலி) தமிழை அழிக்க நாம் விட்டு விட்டோம். இப்போது அரசாங்க வானொலியும் தமிழ் அழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது , நாம் அளித்த வாக்குகளுக்கு சக்தி இல்லை என்பதைக் காட்டுகிறது. இனியும் தமிழ்/தமிழர் எதிரிகளை விட்டுவைக்கக்கூடாது. அப்படியே விட்டுவைத்தோமானால் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்பது மெய்ப்பட்டு நம் கண் முன்னேயே இந்த அழகு மொழி அழிக்கப்பட்டுவிடும். எனவே, திரண்டு இந்த அழிவைத் தவிர்க்க ஆவன செய்வோம்.

வானொலித் தலைவனாக இருக்கும் இந்தத் தமிழ்/தமிழினத் துரோகி செய்த சாதனைகளைக் காண்போம்:

அழகுத் தமிழ் பேசிய அறிவிப்பாளர்கள் காணாமல் போயினர்
இவர் பொறுப்பேற்றது ஆகசுட்டு 2005. செப்டெம்பர் தொடங்கி மு.சங்கர் மின்னலில் இல்லை. குமரன் காணாமல் போய்விட்டார். ராஜேசுவரியும் வேறு இடத்துக்கு பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார். இப்படி நற்றமிழில் உரையாடிய அறிவிப்பளர்களை வானொலி இழந்தது. இப்பொழுது முருகையா முத்துவீரனைக் கேட்க முடிவதில்லை. மீனாகுமாரி எத்தனையோ உருட்டல் மிரட்டல்களை சமாளித்து பின்னர் தனியார் வானொலிக்குச் சென்றுவிட்டார். விஜயன், சில்லாழி போன்றவர்களையும் தற்போது கேட்க இயலவில்லை. கவிராஜன் விளையாட்டு நிகழ்ச்சியில் மட்டுமே வருகிறார். ஜமுனா வேலாயுதம் வஞ்சிக்கப்பட்டார். தயாளன் சண்முகம் துரத்தப்பட்டார். இப்படி பல நல்ல அறிவிப்பளர்கள் இந்த தலைவனின் பதவிக்காலத்தின்போது காணாமற்போயினர்.

அடுத்த மொழிக்கு அரை மணி நேரம் கூட்டித்தந்த வள்ளல்
முன்பெல்லாம் இந்திப்பாடல்கள் காலை நேரத்தில் 9 மணி செய்திகளுக்குப் பின்னர் 20 நிமிடங்கள் ஒலித்தன. இப்போது மொழி அழிப்போன் தலைவனாக வந்த பிறகு காலை 10 மணிச் செய்திகளுக்குப் பிறகு 55 நிமிடங்கள் இந்திப்பாடல்கள் ஒலிக்கின்றன. நம் மொழிக்கு என்று இருந்த நேரத்தை அதிகம் பேர் கேட்காத மொழிக்கு ஒதுக்கியது ஏனோ?

அற்புதமான நிகழ்ச்சிகள் அகற்றப்பட்டன
மக்கள் நடுவே எனும் நிகழ்ச்சி பலருக்குப் பயனாக அமைந்தது. அதை அகற்றிய பெருமை இந்த தலைவனுக்கே சேரும். இலக்கிய நிகழ்ச்சிகள் சிறிது காலம் இல்லாமலேயே இருந்தன. இசையரங்கம் போன இடம் தெரியவில்லை. சிறுகதை காணாமல்போய்விட்டது. உல்லாச ஊர்வலம் அகற்றப்பட்டது. பலர் சம்பளம் பெற உதவியது இந்நிகழ்ச்சி; கலைஞர்கள் பலர் வாழ வழிவகுத்தது இந்நிகழ்ச்சி இந்தத்லைவனுக்கு மட்டும் கசந்தது.

தகாத வார்த்தைகளை பயன்படுத்திய தலைவன்
‘நான் சனியன், என்னைத் தொட்டவனை விடமாட்டேன்’ , ‘ சௌக்கிட் ரோட்டில் சென்று வேலை செய்யலாம் நீங்களெல்லாம்‘, ‘இந்த ஆண் அறிவிப்பளர்கள் எல்லாம் சேலை கட்டிக் கொள்ளலாம்’ , ‘மின்னலிலிருந்து வெளியேற்றப்பட்டால் நாய் கூட உங்களை மதிக்காது’ . ‘ பணத்துக்கு அலையாதீர்கள்’ , ‘ நான் நல்ல பெற்றோருக்குப் பிறந்தவன், நீங்கள் எப்படியோ’ , ‘நான் உங்களை இíகிருந்து போகச் சொல்ல மாட்டேன், நான் செய்யும் கொடுமைகளில் நீங்களே ஓடிவிடுவீர்கள்’ இப்படிப் பலவகையாகப் பேசி பண்பற்ற முறையில் நடந்து கொள்ளும் தலைவன் எப்படித் தமிழை வாழவைக்க முடியும். (நாகரிகம் கருதி இன்னும் சில இணைக்கப்படவில்லை)

இறைவணக்கமும் தமிழ்வாழ்த்தும் நிறுத்தப்பட்டன
முந்தைய தலைவர் காலத்தில் ஒவ்வொரு சந்திப்பிலும் கூட்டத்திலும் தொடக்கத்தில் இறைவணக்கமும் தமிழ்வாழ்த்தும் ஒலித்தன. இந்தத் தலைவன் வந்த பிறகு அவை அகற்றப்பட்டன.

காலை நிகழ்ச்சியில் அரை மணி நேர தத்துவப் பாடல்கள் நிறுத்தப்பட்டன
காலை நிகழ்ச்சியில் காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை ஓரிரு பக்திப்பாடல்களும் தத்துவப் பாடல்களும் ஒலியேற்றம் கண்டு வந்தன. இந்தத் தலைவன் வந்த பிறகு காலையிலேயே காதல் பாடல்கள் ஒலிக்கின்றன.

தனியார் வானொலியைப் பின்பற்றுங்கள்
‘என்ன அறிவிப்பு செய்கிறீர்கள்? நல்ல தமிழில் பேசினால் யார் கேட்பார்கள்? தனியார் வானொலியைப் போன்று பேசுங்கள் என அறிவிப்பளர்களை வற்புறுத்தி வானொலிப் பாரம்பரியத்தை அழித்த பெருமை இந்தத் தலைமைக்கே சேரும்.

தனித்தமிழ் பண்பாட்டை அழித்த அசுரன்
தூய தமிழைக் கேட்க முடிந்த காலம் ஒரு காலம். இப்போது தமிழினூடே ஆங்கிலம் அதிகம் ஒலிக்கிறது. என்ன பண்பாடு இது? தாராளமாக் ஆங்கிலத்தைப் பயன்படுத்துங்கள் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்லது. எவன் கேட்பான் நம்மை என்ற ஆணவம் . அண்மைய விளம்பரங்களைக் கேட்டீர்களா? எத்தனை ஆங்கில வார்த்தைகள் கலக்கப்பட்டுள்ளன. கலங்கியது மொழி மட்டுமல்ல மொழிக்கு உரிய இனமும்தான். இப்படியே ஒரு காலத்தில் அது தமிழ் வானொலியாக இருக்காது. பிற மொழி வானொலியாகிவிடும்.

தன் பலவீனங்களைக் களைய பிறரை குற்றம் சுமத்துதல்
தனக்குள்ளே ஆயிரம் ஓட்டைகளை வைத்துக்கொண்டு அடுத்தவர் மீது குற்றம் சுமத்துவது இந்தத் தலைவனுக்கு கை வந்த கலை. தான் எடுத்த அறிவிப்பாளர்கள் தமிழ் பேசத் தடுமாறிக்கொண்டிருக்கும்போது, செய்திகள் சரியாக வாசிக்கப்படுவதில்லை எனக் குறை கூறி தடுமாற்றங்களை குறிப்பெடுத்து மேலிடத்தில் கொடுத்து வந்தது தன் தவற்றை மறைக்கவே. விளையாட்டு நிகழ்ச்சி சரியில்லை என அதையும் குறை கூறி வம்பளந்தது பெரிய கதை. இசுலாமிய நிகழ்ச்சிப் பிரிவிலும் வம்பு. இப்படி எல்லாரிடமும் பிரச்சைனைகள் கொடுத்து தமது பிரச்சனையை மூடி மறைத்துக்கொள்ளவே என்பது தெளிவு.

அரிச்சுவடி தெரியாதவர்களெல்லாம் அறிவிப்பாளர்கள்
அறிவிப்ப்பாளர்களை கூர்ந்து கேளுங்கள். மிகச் சிலரைத் தவிர்த்து , பொதுவாக எல்லருமே நல்ல தமிழ் பேசத்தெரியாதவர்கள். பலருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. இப்படிப் பட்டவர்களையே அறிவிப்பளர்களாகத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆட்டிப்படைப்பது இந்தத் தலைவனின் வேலை. வேலைக்கு ஆளெடுப்பது வெளியே தெரியாது. இரகசியாமாகப் பலர் வந்தனர். பலர் போயினர். குறுந்தகவல் மூலம் யாராவது பணிக்கு ஆள் எடுப்பார்களா? இந்தத் தலைவனால்தான் முடியும். புதியவர்களை எடுக்கும் பணி அனுபவம் மிகுந்த சிறந்த அறிவிப்பாளர்களாலேயே பெரும்பாலும் நடத்தப்படும். ஆனால் இங்கே உருப்படியாக ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம் நேர்முகம் நடத்துகிறார்கள், பயிற்சி அளிக்கிறார்கள். அதைப்போலவே அறிவிப்புத் தரமும் நிகழ்ச்சிகளின் தரமும் இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

அழைக்கும் நேயர்களை தவிர்ப்பது
மக்களிடம் பேசி குறைகளைக் கண்டறிந்து திருத்திக்கொள்வது நல்ல தலைவனுக்கு அழகு. ஆனால் இங்கே, யார் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாலும் பதில் கிடையாது. எல்லாரையும் சந்திப்பதும் கிடையாது.

யார் சொல்லி நாம் கேட்பது என்ற ஆணவம்
பத்திரிகைகள் எதை வேண்டுமானாலும் எழுதட்டும், நேயர்கள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும். நாம் செய்வதே சரி. அதையெல்லம் பெரிது படுத்த வேண்டாம் என அறிவிப்பளர்களிடம் சொல்லி, தான் சொல்வதையே செய்யச் சொல்லி வற்புறுத்துவது. பிறர் கருத்துக்கு மதிப்பளிப்பது கிடையாது.

உள்ளூர் பாடல்கள்
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் குறைந்தது ஓர் உள்ளூர் பாடல் ஒலிபரப்பப்பட்டு வந்ததை, உள்ளூர் பாடலே வேண்டாமென்று நிறுத்தியது இந்தத் தலைமை. பின்னர் பல குறைகூறல்கள் எழுந்தபின் ஏதோ ஒரு காரணத்துக்காக திரும்ப உள்ளூர் பாடல்களை நாளுக்கு 15 நிமிடங்கள் ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு பாடல் என்றால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 50-60 நிமிடங்களுக்கு நல்ல உள்ளூர் பாடல்கள் தேர்ந்தெடுத்து ஒலிபரப்பப்பட்டு வந்தது. இப்போது 15 நிமிடங்கள் எந்த மூலை?

பழைய பாடல்கள் எங்கே?
இரவு 11.15 என்றால் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் வானொலி அருகில் அமர்ந்து பழைய பாடல்களைக் கேட்ட காலம் போயே போய்விட்டது இந்தத் தலைவன் வந்தபின். இப்போது பழைய பாடல்களை அபூர்வமாகவே ஒலிக்கின்றன. பழைய பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என கட்டளை வேறு அனைவருக்குமா?

உள்ளூர் கலை தொடர்பான செய்திகள் ஓரங்கட்டப்பட்டன
உள்ளூர் பாடல் தொகுப்பு வெளியீடு, உள்ளூர் நாடக வெளியீடு போன்றவை குறித்த பேட்டிகள் பின்னிரவு 12.15க்கு தள்ளப்பட்டன. ( மிகக் குறைந்த நேயர்கள் கேட்கும் பின்னிரவு நேரத்தில்) செவ்விசை சித்தர் ரெ.சண்முகம், மலேசிய வாசுதேவன் போன்றோருக்கும் இதே நிலை. ஆனால் அதே வேளை சினிமா நடிகர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் என்றால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் அதிகமான நேயர்கள் கேட்கும் நண்பகல் வேளை. ஏன் இந்தப் பாரபட்சம்? உள்ளூர் இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய பேட்டி என்றால் பல விசாரிப்புகள் , பல ஆவணங்கள் தேவை. இதே சினிமா தொடர்பிலானது என்றால் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. விமான நிலையத்திலிருந்து நேரே நிலையத்துக்கு வந்து பேட்டி கொடுக்கலாம். நமக்கு மதிப்பு அவ்வளவுதான். நம்மை மதிக்கத்தெரியாதவர்கள் மிதிக்கப்பட வேண்டாமா?

உத்தமமான நிலையத்தை ஊழல் நிலையமாக்கியது
இந்த வானொலிக்கு எனத் தனி மதிப்பும் மரியாதையும் இருந்து வந்தது. இந்தத் தலைவன் வந்த பின் அனைத்தும் விலை பேசப்பட்டது? குயில் விழா எவ்வளவு பணத்தைப் பெற்றுத் தந்தது? பணம் எங்கே போனது? அர்சியல் தலைவர்களை வைத்துக்கொண்டு சில கலை நிகழ்ச்சிகள் பெரிய செலவில் நடத்தப்பட்டன? கணக்கு எங்கே? இப்படி வானொலியை ஊழல்மயமாகியது இன்றைய தலைமை.

கண்ணியமான அறிவிப்புத் தொழிலை கன்றாவியாக்கியது
அறிவிப்பாளர்கள் சமுதாயத்தில் போற்றப்பட்டு வந்தவர்கள். ஓர் தகுதிநிலையைப் பெற்றிருந்தவர்கள். அவர்களை தெருத் தெருவாக ஆடவைத்தது இன்றைய தலைமை. கண்ணியமான பணிக்கு களங்கம் விளைவிக்கப்பட்டது.

சுழியத்தை ஒழித்த சுழியம்
சுழியம் என்ற நல்ல தமிழ் சொல்லை அறிவிப்பாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அதற்கு, முந்தைய தலைமையும் ஆதரவு தந்தது. ஆனால், இந்த தலைவன் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சுழியம் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நல்ல தமிழுக்கு எப்போதுமே இந்த தமிழர் துரோகி எதிரிதான்.

இந்தத் தலைவன் தலைமைக்கு வந்தது முதல், சிறு சிறு சிக்கல்கள் தோன்றத் தொடங்கின. பின்னர் நாளாக நாளாக சிக்கல்கள் பூதாகரமாக உருவெடுக்கத் தொடங்கின. வானொலிக்குள்ளேயே பற்பல பிரச்சினைகளினால் ( இந்தத் தலைவனது அடக்குமுறை தாங்க இயலாமல்) பற்பல பிரிவுகள் உருவெடுத்தன. அதில் சிலர் இந்தத் தலைவனது கொடுமை தாங்க இயலாமல், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். சாது மிரண்டால் காடு கொள்ளாதல்லவா? அதனை இந்த சுயநலவாதியால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. யாரும் எதிர்ப்பதோ, கேள்வி கேட்பதோ இந்த வானொலித் தலைவனுக்குப் பிடிக்காது. எனவே எதிர்க்குரல் கொடுத்தவர்களுக்கு சாவு மணி அடிக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கொண்டிருந்த வேளையில், சரியாகப் பட்டது ‘ சமுதாயத்தின் தலைவிதியை மாற்றிய பேரணி’.

மகேந்திரன், மீனாகுமாரி, விஜயன், சில்லாழி, கவிராஜன் , ஜமுனா, தயாளன் ஆகியோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டார்கள் எனக் கதையைத் திரித்தான் இந்த பரிவுமிக்க தலைவன். அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இவை அனைத்தும் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.
பேரன்புடையீர், சமுதாயத் துரோகத்துக்குச் சாவு மணி அடிப்போம். மெல்லத் தமிழ் இனிச் சாக நாம் வழி அமைத்துக்கொடுக்கக்ககூடாது. நம் காலத்தில் தமிழ் அழிந்ததாக இருக்கவேண்டாம்
வீறு கொண்டு எழுங்கள் நன்னெஞ்சங்களே! எழுமின் விழிமின் கருதிய கருமம் கைகூடும்வரை உழைமின்!
@ஆய்தன்: நல்லதமிழ்ப் பேசும் மின்னலை மீட்டெடுக்க 'தமிழுயிர்' விரும்புகிறது.

'கேக்' தின்னும் 'கிரந்த' வெறிவுரைஞன்


>>>தமிழுயிர் அன்பரின் மின்னஞ்சல்:-

வணக்கம், ஐயா.
நான் பயிலும் கல்விக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவர் தமிழ்மொழியில் பயன்படுத்தப்பட்டு வரும் கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டை மிகவும் வழியுறுத்திக் கொண்டு வருகிறார். மேலும் கிரந்த எழுத்துகளை மாற்றுவதற்கு தமிழ்மொழிக்கு உரிமை இல்லை எனக் கூறுகிறார். எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ‘கேக்’ என்ற சொல்லைத் தமிழ்மொழியில் அணிச்சல் என்று கூறக்கூடாது என்று விமர்சனம் செய்து வருகிறார். இதுபோன்ற பல ஆங்கில சொற்களைத் தமிழ்படுத்தக் கூடாதென்று வலியுறுத்தி வருகிறார். நன்றி.

>>>தமிழுயிரின் பதிலடி:-

தான் பயிலும் கல்விக்கழகத்தில் தமிழுக்கு எதிராக நிகழ்ந்துள்ள கொடுமையை மிகவும் துணிவோடும் தமிழ்நலம் பேணும் தூய உள்ளத்தோடும் வெளிப்படுத்தியுள்ள அந்தத் தமிழன்பரைத் தமிழுயிர் மனதாரப் பாராட்டுகிறது.

நல்லதமிழ்ச் சொற்களின் ஆக்கத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தமிழ்மொழியில் கிரந்த எழுத்துகளின் பயன்பாட்டை மிகவும் வலியுறுத்தி வருகின்ற அந்தக் 'கேக்' தின்னும் 'கிரந்த' வெறிவுரையாளரின் மதிகெட்ட; மானங்கெட்டத் தனத்தை என்னவென்று சொல்லுவது. தமிழன் உருவில் நடமாடும் அந்தக் 'கருப்பு ஆரிய' விரிவுரையாளனிடம் தமிழுயிர் சில கேள்விகள் கேட்க விரும்புகிறது:-

1.'கேக்' என்பதைத் தமிழ்ப்படுத்தத் தேவையில்லை என்று கூறும் அந்த வீனாய்ப்போன வெறிவுரைஞனுக்குத் தமிழில் உருவாகிக் கிடக்கும் ஆயிரக்கணக்கான கலைச்சொற்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

2.எந்த ஒரு புதிய சொல்லுக்கும் நிகராக நல்லதமிழ்ச் சொற்களைப் படைத்துக்கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதை அவர் அறியவில்லையா?

3.கிரந்த எழுத்துகளை மாற்றுவதற்குத் தமிழ்மொழிக்கு உரிமை இல்லை என்பதை அறிந்துள்ள அந்த அறிவாளிக்கு, வேற்றுமொழியான கிரந்தத்தைத் தமிழில் புகுத்த எந்த உரிமையும் இல்லை என தெரியவில்லையா?

4.தமிழ்ச் சொற்களைப் பிறமொழிகளில் ஒலிக்கும்போது தப்பும் தவறுமாக மற்ற மொழிக்காரர்கள் ஒலிப்பதைப் பற்றி எந்த வருத்தமும் கொள்ளாத கிரந்தப் பித்தர்கள், தமிழில் பிறமொழிகள் மாற்றமாக ஒலிக்கும்போது வருத்தப்படுகிறார்களே அது ஏன்?

5.பிறமொழிச் சொற்களைத் தமிழ் மரபோடு ஒலித்தால் அந்த மொழிக்குச் சொந்தக்காரர்களை விட இவரைப் போன்ற 'தமிழர்கள்' சிலர் அதிகம் வேதனைப்படுவதும் வக்காளத்து வாங்குவதும் ஏன்?

6.தமிழைத் தாழ்த்திப் பேசத் துணியும் அந்த விரிவுரைஞன் உண்மையிலேயே பிறப்பால் தமிழனா?

தன்னுடைய தாய்மொழியைத் தாழ்த்தி பிற மொழியை உயர்த்தும் ஒருவனுக்கும்; தன்னுடைய தாயைக் கேலவப்படுத்தி பிற பெண்களை உயர்த்திப்பேசும் ஒருவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அணிச்சல் என்பது 'கேக்' என்ற அயற்சொல்லுக்கு நிகரான இனிய தமிழ்ச்சொல். பள்ளிப் பாடநூலில் கூட இச்சொல் இடம்பெற்று உள்ளது. இப்படி, தமிழில் புதிய சொற்களை உருவாக்கி தமிழ்மொழியை வளப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டிய அந்தத் தமிழ் விரிவுரையாளன் வெட்டித்தனமாகத் தமிழைப் பழிப்பதும் தமிழின் வளர்ச்சியைக் கெடுப்பதும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்மொழி போடும் பிச்சைப் பணத்தில் பிழைத்துக்கொண்டிருக்கும் அந்த விரிவுரையாளன் மொழிப்பற்றும் மொழிஉணர்வும் இல்லாத 'வெறுமாண்டி' எனத் தெளிவாகத் தெரிகிறது. அவருடைய கருத்துகளை அவரிடம் பயிலும் மாணவர்கள் கேட்கக்கூடாது. நல்லதமிழ் உணர்வுள்ள மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டிய தமிழ் விரிவுரையாளரே தமிழ்மொழியை இழிவுப்படுத்துவது கேவலமான செயலாகும். இப்படியொரு அறிவுகெட்ட விரிவுரையாளரிடம் பயிலும் மாணவர்கள் எப்படி தமிழுக்கு ஆக்கமாகச் செயல்படுவார்கள்?

நம் நாட்டுக் கல்விக் கழகங்களில் இப்படிப்பட்ட மொழிக்கேடர்கள் விரிவுரையாளர்களாகவும் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வருவதைத் தமிழுயிர் நன்கறியும். வேளை வரும் போது அவர்களுடைய முகத்திரையத் தமிழுயிர் கிழித்தெரியும். அதற்கு உதவியாக, கல்விக்கழகங்களில் பயிலும் நல்லதமிழ் உணர்வுள்ள மாணவர்கள் தமிழுயிருக்குச் செய்திகளை வழங்க வேண்டும்.

@ஆய்தன்: "சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே; அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்ற பாரதியின் பாட்டை முதலில் எமது நாட்டு ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

திங்கள், 14 ஏப்ரல், 2008

சித்திரைப் பிறப்பு தமிழ்ப் புத்தாண்டா?


தமிழருக்குப் புத்தாண்டு எது?
தைத்திங்களா? அல்லது சித்திரையா?

விக்கிரமாதித்த ஆண்டு - வடஇந்திய ஆண்டு
சாலிவாகன ஆண்டு - மற்றொரு இந்திய ஆண்டு
வைசாகி – பஞ்சாபியருக்குப் புத்தாண்டு
தீபாவளி – குசராத்தியருக்குப் புத்தாண்டு
பங்காப்த – வங்காளியருக்குப் புத்தாண்டு
குடிபத்வா – மராட்டியருக்குப் புத்தாண்டு
உகாதி – தெலுங்கருக்குப் புத்தாண்டு
விசு – மலையாளிகளுக்குப் புத்தாண்டு
சனவரி – ஆங்கிலேயருக்குப் புத்தாண்டு
இசிரி – முசுலிம்களுக்குப் புத்தாண்டு
பன்னிரு விலங்காண்டு – சீனருடைய ஆண்டு
நிப்பண்ணா – புத்த சமயத்தவருடைய ஆண்டு
மகாவீரர் ஆண்டு – சமணருடைய ஆண்டு

இப்படி எல்லாருக்கும் இருக்கிறது
தனியொரு ஆண்டு
தனித்தனிப் புத்தாண்டு

தமிழருக்குப் புத்தாண்டு எது?
தைத்திங்களா? அல்லது சித்திரையா?

தை என்பது பொங்கல்
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டு
என்கிறது ஒரு கூட்டம்!

தைதான் தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை இந்துப் புத்தாண்டு
என்கிறது இன்னொரு கூட்டம்!

தை எல்லாத் தமிழருக்கும் புத்தாண்டு
சித்திரை இந்துத் தமிழருக்குப் புத்தாண்டு
என்கிறது வேறொரு கூட்டம்!

இப்படி மூன்று கூட்டங்கள்
முட்டி மோதி மூக்குடைகின்ற
முட்டாள்தனம் வேரெங்குமே இல்லை!
மூலைகெட்டத் தமிழினம் சிந்திப்பதே இல்லை!
சித்திரை தமிழ்ப் புத்தாண்டு என்றால் – அது
சார்ந்திருக்கும் 60ஆண்டுக் கணக்கும்;
சோதிடக் குறிப்பும்; சமயச் சார்பும்
தமிழில் இல்லை! தமிழருடையது இல்லை!

சித்திரை இந்துப் புத்தாண்டு என்றால் – அதனை
வடநாட்டார், ஆந்திரர், கேரளர் கன்னடர் ஆகிய
வேறெந்த இந்துவும் நம்புவதில்லை!
புத்தாண்டாக நினைப்பதுவும் இல்லை!

தமிழரின் புத்தாண்டாய் சித்திரை வந்தது
தமிழ்ப் பகைவர் செய்துவிட்ட வேலை!
ஆரியரால் நேர்ந்த வரலாற்றுப் பிழை!
தமிழனை முடக்கும் இரும்புச் சிறை!

ஆதிகாலம் தொடங்கி தமிழனுக்குப் புத்தாண்டு
தைத் திங்கள் முதல் நாள் என்றே
ஐந்நூறு சான்றோர்கள் ஒன்றுகூடி
1921-இல் முடிவெடுத்தனர்;
1972-இல் நடைமுறைப்படுத்தினர்;
2008-இல் சட்டத்தை மறுவுறுதிப்படுத்தினர்.

பத்தன்று நூறன்று பன்னூறன்று
பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தை முதல் நாள் பொங்கல் நன்னாள்
என்று புத்தாண்டை நிறுவி புரட்சிக்கவி பாட்டெழுதினார்.

இத்தனைக்குப் பிறகும் தமிழர் மயங்கலாமா?
எதுதான் புத்தாண்டு என கலங்கலாமா?
தமிழர்க்குப் புத்தாண்டு தைதான் என்றே
கொண்டாடுவோம்! தமிழ்வெல்ல ஒன்றாகுவோம்!

@ஆய்தன்: தை முதல் நாளே தமிழர்க்குப் புத்தாண்டு;
திருவள்ளுவர் ஆண்டே தமிழர்க்குத் தொடராண்டு!

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

தெலுங்கர் - மலையாளிகளுக்குத் தனிச்சலுகை தரவேண்டும்


மலேசிய தெலுங்கு சங்கம் (ம.தெ.ச) கடந்த 5-4-2008இல் உகாதி சந்தடி நிகழ்ச்சியை நடத்தியது. அந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய ம.தெ.சவின் தேசியத் தலைவர் தெலுங்கர்களுக்குத் தனி வானொலி, தொலைக்காட்சி அலைவரிசையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ம.தெ.சவின் இந்தக் கருத்தைத் தமிழுயிர் முழுமையாக ஆதரிக்கிறது. அதேபோல், மலையாளிகளுக்கும் தனியாக வானொலி, தொலைக்காட்சியோடு கல்வி, கலை, பண்பாட்டு வாய்ப்புகளையும் சலுகைகளையும் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் எனத் தமிழுயிர் முன்மொழிகிறது.

இதன் வழியாக, தெலுங்கு, மலையாள மக்களின் மொழி, கல்வி, கலை, இலக்கியங்களுக்குப் பாதுகாப்பு கிட்டும். அதேவேளையில், மலேசியத் தமிழ் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அனைத்து உரிமைகளும் சலுகைகளும் முழுமையாக தமிழருக்கே கிடைப்பதற்கான சூழலும் ஏற்படும். இதனால், தமிழின் வளர்ச்சியையும் தமிழரின் வளர்ச்சியையும் மேலும் வேகப்படுத்த முடியும் எனத் தமிழுயிர் நம்புகிறது.

தற்போது உள்ள நடைமுறையில் இந்தியர் என்ற பெயரில் தமிழர், தெலுங்கர், மலையாளிகள், சீக்கியர் என பல்வேறு இனத்தவரையும் ஒருங்கிணைத்து எல்லா வாய்ப்பும் சலுகையும் உரிமையும் வழங்கப்படுகிறது. அப்படி இல்லாமல், இனிமேல் தமிழரைத் தனியாகவும் தமிழரல்லாத மற்றைய இந்தியரை தனித்தனிப் பெயரிலோ அல்லது இந்தியர் என்ற பெயரிலோ பிரித்து வைத்து அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். இப்படிச் செய்வதால்:-

1. தமிழர் – இந்தியர் என சுட்டப்படாமல், தமிழர் என்றே சுட்டப்படுவர்
2. இனம் – இந்திய இனம் என்றில்லாமல், தமிழினம் என்றாகும்
3. கலை – இந்தியக் கலை என்றில்லாமல், தமிழ்க்கலை என்றாகும்
4. பண்பாடு – இந்தியப் பண்பாடு என்றில்லாமல், தமிழ்ப்பண்பாடு என்றாகும்
5. உடை – இந்திய உடை என்றில்லாமல், தமிழ் உடை என்றாகும்
6. உணவு - இந்திய உணவு என்றில்லாமல், தமிழ் உணவு என்றாகும்
7. விழா - இந்தியர் விழா என்றில்லாமல், தமிழ்விழா என்றாகும்
8. வானொலி – இந்திய வானொலி என்றில்லாமல், தமிழ் வானொலி என்றாகும்
9. நிகழ்ச்சி – இந்திய நிகழ்ச்சி என்றில்லாமல், தமிழ் நிகழ்ச்சி என்றாகும்
10. தலைவர் – இந்தியர் தலைவர் என்றில்லாமல், தமிழ்த் தலைவர் என்றாகும்
11. மாணவர் - இந்திய மாணவர் என்றில்லாமல், தமிழ் மாணவர் என்றாகும்
12.நிறுவனம் – இந்தியர் நிறுவனம் என்றில்லாமல், தமிழர் நிறுவனம் என்றாகும்


இப்படியாக, பொருத்தமில்லாத இந்திய, இந்தியர் என்ற அடைமொழியைத் தூக்கி எரிந்துவிட்டு தமிழ், தமிழர் என்ற மரபுவழியான பெயரைத் தாங்கிக் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகும். தமிழர்தாம் ஒற்றுமை உணர்வு கருதி தங்களை இந்தியர் என்று சொல்லிக்கொள்கிறார்களே தவிர தமிழரல்லாத மற்றவர் அவ்வாறு சொல்வதில்லை. மாறாக, தங்களைத் தெலுங்கர், மலையாளி, சீக்கியர் என்றே சொல்லிக்கொள்கின்றனர்.

எனவே, அவர்களுக்குத் தனி வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், கல்வி வாய்ப்பு என அனைத்து வகையான சலுகைகளையும் கொடுத்து நீக்கிவிட்டால், இனிமேல் தமிழர் தங்களைத் தமிழர் என்று நெஞ்சுயர்த்திச் சொல்லிக்கொள்ளலாம். இந்தியர் என்று ஊரான் வீட்டுப் பெயரில் ஒளிந்துகொண்டு வாழும் இழிவான நிலை இனி இருக்காது. இதனால், அனைத்து வகையிலும் தமிழுக்கும் தமிழருக்கும் மிகச் சிறந்த பாதுகாப்பு கிடைப்பதோடு மாபெரும் முன்னேற்றமும் உண்டாகும்.

@ஆய்தன்: தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற வரலாறு உண்மை உலகுக்குத் தெரிய தமிழர் தங்களை இந்தியர் என்று சொல்வதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

கைப்பேசியில் தமிழ் - மலேசியாவில் சாதனை


இன்றைய மின்னியல் உலகத்தில் கைப்பேசியின் ஆதிக்கம் ஒவ்வொரு மணித்துளியும் வளர்ந்துகொண்டே போகிறது. கைப்பேசியில் பரிமாறப்படும் குறுஞ்செய்தி மக்களின் நவின தொடர்பு ஊடகமாக காலூன்றி வருகிறது. இந்தக் குறுஞ்செய்தியைத் தமிழிலேயே பரிமாறிக்கொள்ள முடியாதா என்று தமிழர்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்த காலக்கடத்தில் 'வாராது வந்த மாமணியாக' தற்போது தமிழ்க் குறுஞ்செய்தி சேவை மலேசியத்தில் அறிமுகமாகியுள்ளது.

தமிழ்மொழி வரலாற்றில் மேலும் ஓர் அருஞ்சாதனையாக அமைந்திருக்கும் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை, முரசு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியத்தின் முன்னணி நாளேடான மலேசிய நண்பனின் ஒத்துழைப்புடன் முரசு செல்லினம் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை கடந்த 5-4-2008இல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியில் ஆகக் கடசியாக நிகழ்ந்துள்ள மாபெரும் வளர்ச்சியாகத் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை கருதப்படுகிறது. ஒரு காலத்தில் பனை ஓலைகளில் தொடங்கிய தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், தாள்கள் என பல்வேறு வடிவங்களில் தொடர் வளர்ச்சிகண்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் கணினித் திரையில் தடம்பதித்து இன்று கைப்பேசியில் கொடிநாட்டிப் பட்டொளிவீசி பறக்கிறது.

தமிழ்மொழியின் இந்த மாபெரும் வெற்றி, தமிழை உலகமொழிகளுக்கு நிகராக உயர்ந்து நிற்க வைத்துள்ளது; தமிழர்களைப் பெருமையடையச் செய்துள்ளது; உலக இனங்களுக்கு நிகராகத் தமிழர்களாலும் புதிய தொழில்நுட்பங்களைப் படைக்க முடியும் என்பதைப் பறைசாற்றியுள்ளது.

ஆங்கிலேயரின் தொழிநுட்பத்தைப் பிச்சை வாங்கிப் பிழைத்துக்கொண்டிருக்கும் சில மொழிகளுக்கு இடையில் தமிழ்மொழி தனக்கெனத் தனியாகத் தொழிநுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரிய சாதனையை முத்தெழிலன் என்ற ஒரு மலேசியத் தமிழர் உருவாக்கியிருக்கிறார் என்பது பெருமையிலும் பெருமையாகும்.

உலகம் கண்டுவரும் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் ஈடுகொடுத்து தமிழால் முன்னேற முடியும்; தமிழுக்கு அந்தத் தகைமை உண்டு எனபது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. தமிழன் முயன்றால் தமிழால் சாதனை படைக்க முடியும்; தமிழில் சாதனை செய்ய முடியும் என்பதற்கு இந்த முரசு செல்லினம் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது, தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அரிய சாதனையாகும்.

தமிழ்மொழிக்கு மிக உயர்ந்த பெருமையைத் தேடித்தந்துள்ள முரசு நிறுவனம், திரு.முத்தெழிலன், மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினருக்குத் தமிழுயிர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

@ஆய்தன்: வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் நிகராகச் செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்ய வேண்டும். (பாரதிதாசன்)

தமிழன்னை மகுடத்தில் தொழிநுட்ப முத்து


செம்மொழியான தமிழ்மொழிக்கு மற்றொரு மகுடம் வைத்தாற்போல தமிழ்க்கணினி உலகில் முதலிடம் வகிக்கும் முரசு நிறுவனம் தமிழில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளது. கைப்பேசி பயன்பாட்டில் முரசு செல்லினம் இசைப் பதிப்புச் சேவையை ஏற்படுத்தி வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது முரசு நிறுவனம்.

உலகின் முதல் தமிழ்க் குறுஞ்செய்தி சேவையை இந்நிறுவனம் 2005ஆம் ஆண்டில் சிங்கையில் அறிமுகப்படுத்தியது. பின்னர் மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பமாகிய இந்த முரசு செல்லினம் இசைப் பதிப்பு அறிமுகமாகிறது.

இது தமிழ்கூறும் நல்லுலகில் உருவெடுத்துள்ள புதிய தொழில்நுட்பமாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் இனிமேல் கைப்பேசியிலேயே திருக்குறள், தேவார, திருமுறை அருட்பாடல்களைக் கேட்கலாம்; பாடல் வரிகளைப் படிக்கலாம்; பாடியும் மகிழலாம்.

இந்த முரசு செல்லினம் இசைப் பதிப்பானது கைப்பேசியில் இயங்கும் ஒரு செயலி. பாடல்களைப் பதிவிறக்கம் செய்யும் பணியை எளிதாக்கக் கூடியது. ஆன்மிக அருட்பாடல்களை உள்ளடக்கியது. திருக்குறளைக் கைப்பேசிவழி பரப்பக்கூடியது. தமிழ்மறையாம் திருக்குறள் கருத்துகளையும் தமிழ்த் திருமுறைப் பாடல்களையும் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்களிடையே கொண்டு சேர்க்கக் கூடியது. பதிவிறக்கம் செய்யப்பட்ட அருட்பாடல்களை வேண்டும் போதெல்லாம் ஒலிக்கச் செய்யலாம். பாடல் ஒலிக்கும்போது திரையில் தோன்றும் பாடல் வரிகளைப் பாடியும் மகிழலாம். இதுவே முரசு செல்லினம் இசைப் பதிப்பின் தனிச்சிறப்பாகும்.

தொழில்நுட்பத்தின் வழி தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி நா.ஜெயசுப்பிரமணியம் அவர்களையும் முரசு நிறுவனத்தின் நிறுவனரும் நிருவாகியுமான முத்தெழிலன் அவர்களையும் தமிழுயிர் மனமார பாராட்டுகிறது.

உலகம் வியக்கும் மின்னியல் தொழிநுட்பத்தில் தமிழுக்கும் தனிச்சிறப்பான தகுதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் முத்தெழிலன் அவர்களுக்கு உலகத் தமிழர் அனைவரும் நன்றியும் பாராட்டும் கூறவேண்டும். தமிழால் முடியாது; தமிழுக்கு எதிர்காலம் கிடையாது; தமிழ் அறிவியலுக்கு ஆகாது என்பன போன்ற மூடக்கருத்துகளையும் முட்டாள்தனங்களையும் அடித்து நொறுக்கும் வகையில் புதிய வகை தொழில்நுட்பத்தைத் தமிழ்மொழியில் ஏற்படுத்தி மாபெரும் சாதனையைப் படைத்திருக்கும் முத்தெழிலன், ஜெயசுப்பிரமணியம் ஆகியோரை நினைந்து தமிழ்க்கூறும் நல்லுலகம் கண்டிப்பாகப் பெருமைபட வேண்டும்.

இன்றையக் கணினி, இணையம், கைப்பேசி உலகில் தமிழையும் தூக்கி நிறுத்தியதோடு, அறிவியல் தொழில்நுட்பத் துறையில் உலக மொழிகளுக்கு நிகராகத் தமிழன்னையை அமரவைத்திருக்கும் இந்த அரிய சாதனை எமது மலேசியத்தில் நிகழ்ந்திருப்பது மலேசியத் தமிழரின் மொழி மாண்பையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது. உலகம் முழுவதும் தமிழும் தமிழரும் எழுச்சிபெற்று வருகின்ற இன்றைய நாளில், கைப்பேசி உலகத்தை அதிர வைத்திருக்கும் இந்த அரிய சாதனை தமிழரிடையே தன்னம்பிக்கையையும் தமிழ்நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது உறுதி.

@ஆய்தன்: எல்லாச் செயலும் தமிழால் முடியும்! தமிழால் முடியாதது எதுவுமில்லை! தமிழனால் முடிந்தால் தமிழால் முடியும்!

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வேண்டும்

நாட்டின் விடுதலைக்கு முன் அரசாங்கத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் தமிழ்மொழிக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அது சிறிது சிறிதாக மறைந்துவிட்டது என்று பாடாங் செராயைச் சேர்ந்த மூத்த அரசியளாளர் இலெட்சுமணன் என்ற காடுராஜா கூறியுள்ளார். இந்தச் செய்தி 31.3.2008 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது.

எடுத்துக்காட்டாக, பொருளகம், அஞ்சலகம் மற்றும் மற்ற மற்ற அரசு அலுவலகங்களில் எல்லாம் தமிழ் எழுத்தைப் பயன்படுத்திய பொழுது வயதான நம் பெரியோர்கள் சொந்தமாகவே படித்துப் பயனடைந்தார்கள். தங்கள் சிக்கல்களுக்குத் தமிழிலேயே தீர்வு கண்டனர். மேலும், எல்லா அலுவலகங்களிலும் பரவலாகத் (இந்திய)தமிழர்கள் வேலை செய்து வந்தனர். ஆனால், காலப் போக்கில் தமிழ்ப் பணியாளர்கள் குறையக் குறைய நம் தமிழ்மொழியும் எழுத்தும் அங்கு மறைந்துவிட்டது.

மீண்டும் தமிழைப் பரவலான நிலையில் நிலைநிறுத்த அரசாங்கம் முயல வேண்டும் என அவர் தம்முடைய அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.


  • ஆய்தன்: மலேசிய நடுவண் அரசு அலுவலகங்களில் தமிழ் காணாமல்போய் பலகாலம் ஆகிவிட்டது. மலாய் ஆன்கிலத்திற்கு அடுத்து சீன மொழிக்கு வானூர்தி நிலையம், பொருளகம் முதலான இடங்களில் உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், ஏதுங்கெட்ட நம்முடைய தமிழ்மொழி மட்டும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழின் பெயரால் இயங்கும் பொது இயக்கங்கள் இதற்கான செயல்பாடுகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். குறிப்பாக, கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் புதிதாகப் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள 'மக்கள் முன்னணி' அரசாங்கம் மாநில ஆட்சி அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழையும் இடம்பெறச் செய்யவேண்டும். 18 கோரிக்கைகளை முன்வைத்துள்ள இண்டிராப்பு குழுவினரும், அரசியல் சுனாமியையை ஏற்படுத்திய மக்கள் சக்தி குழுவினரும் 'மக்கள் முன்னணி'யின் மாநில அரசுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். உரிமை போராட்டம் நடத்தும் இண்டிராப்பும், மக்கள் சக்தியும் தமிழுக்கும் சேர்த்துப் போராட வேண்டும். செய்வார்களா?

தமிழைத் தீய்க்கிறது மின்னல் வானொலி


தமிழ்மொழியின் பெயரால் ஊழியமும் ஊதியமும் பெற்றுக்கொண்டு தமிழ் என்னும் தேமதுர தேக்கு மரவேரில் வெந்நீரை ஊற்றுகின்ற வேலையை தமிழ்ப்பகைவர் பலரும் செய்துவருகின்றனர். இவ்வேளையில் மின்னல் எப்.எம் எனப்படும் மின்னல் பண்பலையும் தமிழ் அழிப்பில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மின்னலில் நல்லதமிழ் இனி தேவையில்லை. பேச்சு மொழியோ, வழக்கு மொழியோ, ஆங்கிலம் மலாய் கலந்த கலப்பு மொழியோ எதை வேண்டுமானாலும் பேசலாம். எந்த ஒரு வரைமுறையும் இல்லாமல் தட்டுத் தடுமாறி ஏதோ பெயருக்குத் தமிழ் பேசத் தெரிந்தால் போதும் எவர் வேண்டுமானாலும் வானொலியில் பேசலாம்; அறிவிப்பாளராக ஆகலாம் என்ற நிலை உருவாகி வருகின்றது. நல்லதமிழில் பேசும் அறிவிப்பாளர்களை ஓரங்கட்டிவிட்டு கலப்புமொழியில் உளறிக்கொட்டும் அரைவேக்காடு அறிவிப்பாளர்களைப் பணிக்கு அமர்த்தும் ஆபத்து வந்துகொண்டிருக்கிறது.

சுழியம் என்ற நற்றமிழ்ச் சொல்லை அழித்துவிட்டு 'பூச்சியம்' என்ற வடமொழியை வாழவைத்துக் கொண்டிருக்கும் திமிரில் மின்னல் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நல்லதமிழ்ப் பேசி அருமையாக நிகழ்ச்சிகளை வழிநடத்தி நேயர்களைக் கவர்ந்திழுத்த அறிவிப்பாளர்கள் சிலரை வேறு பிரிவுக்கு மாற்றிவிட்டு; இன்னும் சிலரை பணியிலிருந்து நீக்கிவிட்டு மின்னல் இப்போது அடாவடித்தனம் செய்து கொண்டிருக்கிறது. கேட்பாரும் மேய்ப்பாரும் இல்லாமல், எவருக்கும் பதில்சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஆணவத்தில் தன்மூப்பாக மின்னல் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

24 மணி நேரமும் சினிமா பாடல்; சினிமா செய்தி; சினிமா சினிமா என்று திரைத்துறை குப்பைகளையே ஒலிபரப்பி வருகிறது. பழையப் பாடல்கள் இனி மின்னலில் ஒலிபரப்பாகா. புதிய அறிவிப்பாளர்கள் கலப்புமொழியில் பேச வற்புறுத்தப்படுகிறார்கள். மலேசியத் தமிழ் வானொலியின் 62 ஆண்டுகால வரலாற்றில் எப்போதுமே இல்லாத அளவுக்கு இப்போது 'Meet you guys' என்று அறிவிப்பு வருகிறது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கு 'Food – Fun – Dance – Fair' என்று ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்படுகிறது. இளைஞர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதுதான் மின்னலின் நோக்கமாம். அதனால், பெரியவர்களும் நல்ல தமிழ் உணர்வாளர்களும் இலக்கிய நயம் கொண்டவர்களும் இனநலம் கொண்டவர்களும் மின்னலுக்கு தேவையில்லையாம். இப்படியெல்லாம் பல கொடுமைகள் தமிழ் வானொலியான மின்னலில் நடந்துவருகின்றன.

இத்தனை கேடுகளும் கொடுமைகளும் கோளாறுகளும் மின்னலில் நடைபெறுவதற்கு முக்கியக் காரணம் அதனுடைய தலைமைதான். தாறுமாறாகத் தமிழ்ப் பேசி இராகா வானொலி முதல் இடத்தைப் பிடித்து விட்டதாம். அதனால் மின்னலிலும் கொச்சைத் தமிழில் பேசி கொடி நாட்ட போகிறார்களாம் கோமாளிகள். மின்னலில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் குறைமதியாளர்களைப் பலரும் கண்டித்து வருகின்றனர்.

மலேசியத் திராவிடர் கழகத்தின் கண்டனம்.
"தமிழர்களுக்குத் தமிழ்தான் விழியும் செவியும் ஆகும். இந்த நாட்டு சாலையோரங்களில் ஆங்காங்கே 'Bahasa Jiwa Bangsa' என்று விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்னலில் தற்காலத் தலைவர் நின்று நிதானமாகப் படிக்க வேண்டும். தாங்கள் வகிக்கும் பொறுப்பைப் பயன்படுத்தி மொழிக்கு உரம் இடவேண்டுமேயன்றி ஊறு விளைவிக்கக் கூடாது" என்று மலேசியத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் இரெ.சு.முத்தையா கண்டித்துள்ளார்.

தங்கத் தமிழ் மணிமன்றத்தின் கண்டனம்
"இந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களில் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் தமிழர்கள்தான். ஆகவே, மலேசியத் தமிழர்களுக்காத்தான் மின்னல் வானொலிப் பிரிவு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளதே தவிர இராசசேகரன் தன் விருப்பம் போல் செயல்படுவதற்காக அல்ல" என்று மலேசியத் தங்கத்தமிழ் மணிமன்றத் தலைவர் சு.வை.லிங்கம் கண்டித்துள்ளார்.

தமிழுயிர் அன்பர் இளஞ்சித்திரன் கண்டனம்
ஒரு காலத்தில் மலேசியாவில் தமிழ் வளர்ச்சிக்குப் பாடாற்றிய இந்த வானொலி இன்று தமிழை அழித்தொழிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. நன்றாகத் தமிழ்ப்பேசி நிகழ்ச்சிகளை வழிநடத்திய திறமையான அறிவிப்பாளர்களை முடக்கிப் போட்டுவிட்டது இந்த வானொலி. கொழுத்த யானை தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல வானொலி தலைவர் செயல்பட்டு வருகின்றார். மொழி, இன உணர்வற்ற ஒரு தனி மனிதனின் செயலால் 200 ஆண்டுகள் பாரம்பரியமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க மலேசியத் தமிழினத்தின் அடையாளங்கள் அழிந்து போவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. மொழியின் மீது நம்பிக்கையற்ற தனியாள் ஒருவரின் தன்மூப்பான செயலால் எதிர்காலத் தலைமுறைக்கு நல்லதமிழ் போய்ச்சேராமல் தடைவிதிக்கப்படுகிறது. தமிழை வாழவைக்க வேண்டிய வானொலி தலைவர் தமிழை அழித்துக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.


தமிழுயிர் அன்பர் இளையவேல் கண்டனம்
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக மின்னல் எப்.எம் வானொலி இப்போது ராகா வானொலியைப் பார்த்து தன்னுடைய தனி அடையாளத்தை இழந்து வருகிறது. மின்னலுக்கு என்று தனியான - தரமான நேயர்கள் கூட்டம் எப்போதுமே உண்டு என்பது அதன் தலைவருக்குத் தெரியாமல் போய்விட்டதா? மின்னலின் தீவிர நேயர்கள் படித்தவர்கள்; பண்பாளர்கள்; நல்லன விரும்பிகள்; தமிழ்ப் பற்றாளர்கள் என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.



மலேசியத் தமிழ் மக்களுடன் கடந்த 62 ஆண்டுகளாகப் பின்னிப் பிணைந்துள்ள பாசத்திற்குரிய மின்னல் வானொலி இப்படி இன்னலை ஏற்படுத்தக்கூடாது. தமிழ்மொழி வளர்ச்சியில் மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ள மின்னலின் தன்மூப்பான செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொடக்கக் காலத்தில் மலாயா வானொயாக இருந்து பின்னர் ரங்காயான் மேரா, வானொலி ஆறு என்ற பல்வேறு பெயர்களில் தமிழ்மொழிக்கு மகுடம் சூட்டிய இந்த வானொலி இப்போது தமிழை அழிக்க முனைந்திருப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இரா.பாலக்கிருஷ்ணன், மருத்துவர் பூபாலன் போன்றோர் தலைமையில் நல்லதமிழை முன்னெடுத்த மின்னல் வானொலியின் தற்காலத் தலைவர் சிந்தித்து செயல்பட வேண்டும் எனத் தமிழுயிர் கேட்டுக்கொள்கிறது.


  • ய்தன்: தூங்குகின்ற தமிழர்கள் இருக்கும்வரை மின்னல் தமிழுக்குச் செய்யும் இன்னல்கள் ஓயப் போவதில்லை.