தமிழில் கலப்பு செய்யாதே!
பள்ளி சென்று படிக்காமல் - நீ
'ஸ்கூல்' போவது எதற்காக?
மிதிவண்டி ஏறி மிதிக்காமல் - நீ
'சைக்கிள்' ஓட்டுவது எதற்காக?
வணக்கம் சொல்லி வணங்காமல் - நீ
'நமஸ்காரம்' சொல்வது எதற்காக?
பூ பறித்து தொடுக்காமல் - நீ
'புஷ்பம்' பறிப்பது எதற்காக?
தூவல் இருக்கும் போதினிலே - நீ
தாவல் ஏனோ 'பேனா'வில்?
விசிறி காற்றுத் தருகையிலே - நீ
'பேனை'ப் போடுவது எதற்காக?
வீட்டில் சோறு இருக்கையிலே - நீ
தெருவில் 'சாதம்' கேட்பதுவோ?
அப்பா வீட்டில் இருக்கையிலே - நீ
ஊரில் 'டாடி' தேடுவதோ?
மொழியில் கலப்புச் செய்யாதே - தமிழ்
மொழியில் பிறமொழி சேர்க்காதே!
-தமிழ்ச்சிட்டு
@ஆய்தன்:
தமிழாய் மொழியாத தமிழ்வாய் கண்டால்
சீறி எழுவாய்! காரி உமிழ்வாய்!
7 கருத்துகள்:
வணக்கம் என்பது தமிழ் அல்ல...
ஆரியர்களின் கலப்பிற்கு முன்பு 'வாழிய' என்ற சொல் உபயோகத்தில் இருந்தது. அரசனை கண்டால் வாழிய இளங்கோ என்றே கூறுவார்கள்.
வணக்கம் என்பது ஒருவன் மற்றொருவனுக்கு வணங்கி போவதைக் குறிக்கிறது. ஒருவரை வாழ்த்துவதற்கும் வணங்குவதற்கும் வித்தியாசங்கள் உண்டு.
உதாரணத்திற்கு., ஆங்கிலேயர்கள் 'குட் மார்நிங்', இக்காலை பொழுது நல்லதாகுக என சொல்கிறான். தமிழன் மட்டும்தான் ஒருவனை ஒருவன் வணங்க வேண்டுமேன நினைக்கிறான். இது மாறினால் நல்லது.
அன்பர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஆய்தன் பதில்:-
வாழிய, வாழி, வாழ்க முதலான சொல்லாட்சிகள் பழந்தமிழர் வாழ்வில் இருந்தன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும், 'வணக்கம்' என்று தற்காலத்தில் தமிழர் வழங்கிவரும் சொல்லாட்சியும் மிக நன்றான ஒன்றே.
வணக்கம் என்று ஒருவரைப் பார்த்து கைகூப்பி சொல்லுவது ஒருவகையான அடிமைப்படுத்தம் என்றும், வணக்கத்திற்குரியவன் இறைவன் மட்டுமே மனிதனல்ல என்றும்; பிறரை வணங்குவது தேவையற்றது என்றும் சிலர் கருதுகின்றனர்.
இவ்வாறு கருதுவதே முற்றிலும் தவறானது என்பது சிலரின் கருத்தாக உள்ளது.
ஆகவே, இதனைப் பற்றி தமிழுயிர் அன்பர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
@ஆய்தன்
ஐயா ஆய்தன் அவர்களே, கனிந்த வணக்கங்கள்.
தமிழர்கள் பிறரை நோக்கி வணங்கும் பண்பானது அவர்களுடைய மன முதிர்ச்சியைக் காட்டுவதாக நான் நினைக்கிறேன். தமிழர்களின் தொன்மையான இறைவழிப்பாட்டை எடுத்துக் கொண்டால், அவர்கள் இறைவனை இயற்கை வடிவில் கண்டு வணங்கினார்கள். காலவோட்டத்தில் தமிழர்களின் பண்பாட்டு முதிர்ச்சியின் வெளிப்பாடாக, இறைவனை ஒவ்வொரு மனிதருக்குள்ளேயும் அவர்கள் காண தொடங்கியிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத்தான், தமிழர்கள் அனைவரும் ஒவ்வொருவரையொருவர் கைக்கூப்பி தன்னடக்கத்தோடு வணக்கம் கூறிக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். இது ஒரு பண்பாட்டு முதிர்ச்சி அடைந்த நாகரீகத்தில் மட்டுமே காணக்கிடக்கும் ஒரு சிறந்த பண்பாக நான் கருதுகிறேன்.
நன்றி.
பகலை 'மார்னிங்' என்கிறான்
இரவை 'நைட்' என்கிறான்
உணவை 'புட்' என்கிறான்
உறவை 'லவ்' என்கிறான்
பணத்தை 'மனி' என்கிறான்
பிணத்தை 'பாடி' என்கிறான்
இனிப்பை 'சுவிட்' என்கிறான்
இசையை 'மியுசிக்' என்கிறான்
கடையை 'சாப்' என்கிறான்
கோயிலை 'டெம்பல்' என்கிறான்
அனைத்திலும் ஆங்கிலம் கலக்கிறான்
அன்னைத்தமிழை ஐயகோ கொல்கிறான்
ஆணவம் கொழுத்து அலைகிறான்
அயலவன் போல நடிக்கிறான்
சொந்த மொழியை அழிக்கிறான்
சுரணைக் கெட்டு வாழ்கிறான்!
தமிழனென்று இவனைச் சொல்லாதே
தருதலைக்குப் பிறந்திருப்பான்..!
தமிழன்பன்,
இனியன்,
இரவூப்பு, பகாங்கு
அன்புடையீர், நல்ல பணி.
இத்தளத்தை அறியத்தந்த திரு.சதீசு குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
ஆய்தன் அவர்களின் வணக்கம் குறித்த கருத்து மிகச்சரி.
ஆரியக் கலப்பினால் நமக்குப் பல தீங்குகள் உண்டாயின. நம்முடைய மொழிவளங்களுக்கு "இது ஆரியத்ததோ?" என்ற ஐயத்தையும்
அது கொடுத்தது என்பதுதான் உச்ச கட்ட கொடுமை.
வணக்கம் என்பது நம்முடையதுதான்.
அது மட்டுமல்ல; வணக்கத்திற்கே இலக்கணமும் நம்மிடையே உண்டு.
நண்பர்கள், வெளியோர்கள், உறவுகள் ஆகியோரை வணங்கும்போது நமது கைகள் நெஞ்சில் குவிந்திருக்க வேண்டும்.
உயர்ந்தவர்களை, நம்மை விடப் பெரியவர்களை, மதிக்கத்தக்கவர்களை
வணங்கும்போது, குறிப்பாக ஆசான், குரு ஆகியவர்களை நெற்றிக்கு குவித்து வணங்க வேண்டும்.
இறைவனை வணங்குதற்கு
கரங்களை சிரத்திற்கு மேல் குவித்து வணங்க வேண்டும். சிவனடியார்கள்
அப்படிச் செய்தலைக் காண்க.
திருவாசகம் - சிவபுராணத்தில்
'கரங்குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!'
என்று சொல்வதையும் காண்க.
மிக்க மகிழ்ச்சி.
அடியேனின் வலைப்பதிவையும்
இச்சுட்டியையும் காண்க.
http://nayanam.blogspot.com/2008/04/1-faqs-part-1.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
வாழ்க உங்கள் பணி..
வணக்கம்
தமிழர்கள் உயர்ந்த பண்பாட்டுக்கு உரியவர்கள். ஆகவே, வணக்கம் என்பது தூய தமிழ்ச்சொல்லே. வணக்கம் என ஒருவரைப்பார்த்து நாம் சொல்கிறபோது அது அடிமைத்தனத்தைக் குறிக்கிறது என்பது ஏற்புடைய கருத்தாக இல்லை.
நமது பண்பாடு தொன்மையான பண்பாடு. தான் மதிக்கின்ற அனைத்தையும் கைகூப்பி வணங்குகின்ற பழக்கம் பழந்தமிழரிடையே உள்ளதை நம்மால் அறிய முடிகிறது. ஆதி அந்தம் இல்லா இறைவனையும் வணங்குவதும் இது போலத்தான். ஆகவே வணக்கம் சொல்வது பிறருக்கு அடிமை அல்ல பிறரை மதித்தல், போற்றுதல் என்பது எனது கருத்து
அன்புடன்
அருள்மாறன்
கருத்துரையிடுக