வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 29 செப்டம்பர், 2008

அசுற்றோவைப் பாராட்டலாம்! ஆனால்...

கடந்த 27.9.2008 காரி(சனி)க்கிழமை இரவு மணி 10.30க்கு அசுற்றோ வானவில்லில் 'அலாரம்' நிகழ்ச்சி 'தமிழும் தமிழரும்' என்ற தலைப்பில் ஒளிபரப்பானது.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உள்ளத்தைத் தொடுகின்ற வகையிலும், தமிழ்; தமிழன் என்கிற உணர்வைத் தட்டி எழுப்புகிற வகையிலும் வெகு சிறப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.

பெரும்பாலும் தமிழ் நிகழ்ச்சி என்ற பெயரில் குப்பைகளையும் கழிசடைகளையும் ஒளிபரப்பி தமிழ்க் குமுகாயத்தை சீரழித்து வரும் அசுற்றோவில் இப்படி ஒரு நிகழ்ச்சியா? என நம்ப முடியாத அளவுக்கு இந்த 'அலாரம்' நிகழ்ச்சி அமைந்திருந்தது.

தமிழ்மொழி - தமிழ் இனம்;
தமிழ்க் கலை - தமிழ்ப் பண்பாடு;
தமிழ்ப் பள்ளி - தமிழ்க் கல்வி
தமிழ்க் கணினி – தமிழ் ஊடகம்;
தமிழ்ச் சான்றோர்கள் – தமிழ் இயக்கங்கள்;
தமிழ் மாணவர்கள் – தமிழ்ப் பெயர்கள்;
என பல்வேறு கோணங்களில் மிக மிக அருமையான; காலத்திற்கு ஏற்ற கருத்துகள் அறிவான நிலையிலும் எழுச்சியான வகையிலும் பரிமாறப்பட்டன.

தமிழின் வழித்தடத்தை விட்டுவிட்டு தடுமாறிப் போய், தறிகெட்டுத் திரியும் இன்றையத் தமிழ் இளைஞர் கூட்டத்தைத் தட்டியெழுப்பி விழிப்புறச் செய்யும் 'தமிழ் மருந்து' நல்ல விருந்தாகப் பரிமாறப்பட்டது.

பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட தமிழ் மானமுள்ள ஐந்து இளையோர்களும் தமிழுக்கு ஆக்கமான ஏடல்களை (Idea) ஏரனமான (Logic) முறையில் முன்வைத்தனர்.

பத்தாயிரம் ஆண்டுகள் பழமைச் சிறப்பு வாய்ந்த செம்மொழித் தமிழின் தொப்புள் கொடி அறுந்துவிடாமல், அடுத்தத் தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்வதற்கு அறிவும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்ட எம் தமிழ் இளையோர் படை ஒன்று நாட்டிலே உள்ளது என்பதற்கு அந்த ஐந்து இளையோரும் நல்ல எடுத்துக்காட்டு!

அதோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்ப் பெரியார் ஐயா டத்தோ அஜி தசுலிம் முகம்மது இபுராகிம் அவர்களும்; இளம் தமிழ்ச் சிங்கம் ஐயா சி.ம.இளந்தமிழ் அவர்களும் மிக அழகாக; அருமையாகத் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து திக்கித் தடுமாறாமல்; ஆங்கிலம் கலக்காமல்; உளறிக் கொட்டாமல்; நல்ல முறையில் வழிநடத்தினார் தொகுப்பாளர். இந்த நிகழ்ச்சியை இவ்வளவு தரமாகத் தயாரித்து அளித்தவர் சற்குணன் சண்முகம்.

இந்தக் கூட்டணியில் உருவான 'தமிழும் தமிழரும்' என்ற அலாரம் நிகழ்ச்சிக்குத் 'தமிழுயிர்' மிக மகிழ்ச்சியோடு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றது.
அசுற்றோ வானவில் நினைத்தால் இதுபோல இன்னும் பல நிகழ்ச்சிகளை மாறுபட்ட கோணத்தில் படைக்கமுடியும். 'மக்கள் தொலைக்காட்சி'யில் தமிழையும் தமிழரையும் தமிழ்க் கலை, பண்பாடு, இலக்கியத்தை முன்னெடுக்க எப்படி எப்படியெல்லாம் புதுமையாக – திறமையாக – கவரும்படியாக நிகழ்ச்சியைப் படைக்கிறார்கள் என்பதைப் பார்த்தாவது 'வானவில்' தன்னைத் திருத்திகொள்ள முன்வர வேண்டும்.

சன் டீவி, எம்.டீவி, மெகா டீவி என்ற தமிழ் மானங்கெட்ட அலைவரிசைகளைப் பார்த்து 'ஈ அடிச்சான் காப்பி' போல வானவில்லும் கூத்தடிக்கக் கூடாது; இளைஞர்களைக் கூட்டி வைத்து கும்மாளமும், குத்தாட்டமும் போடக் கூடாது!

தமிழைக் கெடுக்கும் வகையிலும்; தமிழில் அன்னிய மொழிகளைக் கலப்படம் செய்தும் பேசக்கூடாது!

இளம் பெண்களையும்; திருமணம் முடித்த பெண்களையும் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போட வைத்து, அவர்களின் முன்னழகையும் பின்னழகையும் திரும்பத் திரும்பக் காட்டக் கூடாது!

இளையோர்களைக் கவர வேண்டும் என்பதற்காக மேல்நாட்டு பாணியில் உடையணிந்து சகிக்க முடியாத அளவுக்கு ஒப்பனைகள் (Make up) செய்து காட்டுக்கத்தல் கத்தி அறிவிப்புகள் செய்யக் கூடாது!

கல் வணிகர்களையும், எண் கணித மேதைகளையும், சோதிட ஞானிகளையும் கூட்டிவந்து பேசவைத்து தமிழர் சமுதாயத்தை இன்னும் மூட நம்பிக்கையில் ஆழ்த்தக் கூடாது!

அனைத்துக்கும் மேலாக, ஒரு பக்கம் மக்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் கேடுகெட்ட கழிசடை நிகழ்சிகளை வண்டி வண்டியாக படைத்துவிட்டு இன்னொரு பக்கம் வாழ்க்கைக் கல்வி, வாழ்வோம், விழுதுகள், குற்றப் பத்திரிகை, இலக்கிய மேடை இப்படி நல்ல நிகழ்ச்சிகளை நாங்கள் படைக்கிறோம் என்று குள்ளநடி வேடம் போட்டு நடிக்கக்கூடாது!!

தமிழுக்கும் தமிழருக்கும் ஆக்கமான ஒரு சில நிகழ்ச்சிகள் அசுற்றோவில் வருவதால் அசுற்றோவைப் பாராட்டலாம்தான்! ஆனால், 'சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது' என்று ஒரு பழமொழி உண்டு. அசுற்றோ இப்போதுதான் 'சாண்' அளவு ஏறியுள்ளது. ஆனால், இதற்கு முன்பு அது சறுக்கியது என்னவோ கிலோ மீட்டர் அளவுக்கு!!

@ஆய்தன்:
தமிழன் மனத்தைக் கெடுத்துவிட்டு – அந்தத்
தமிழனுக்கே புத்தி சொல்கிறது அசுற்றோ!
தமிழன் பணத்தை வாங்கிக்கொண்டு – அந்தத்
தமிழனுக்கே ஆப்பு வைக்கிறது அசுற்றோ!

ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

போட்டுத் தாக்கு - 4

@ஆய்தன்:
பாலியல் உணர்ச்சியைத் தூண்டாதே - தமிழ்
வாழ்வியல் மரபைக் கொல்லாதே!

திங்கள், 22 செப்டம்பர், 2008

நடிகை தொப்புளில் ஓடுகிறது நாளிதழ்

ஒருகாலத்தில் தமிழ் இனத்தின் உயர்வுக்கு மலேசியத் தமிழ் நாளிதழ்கள் பாடுபட்டன. ஆனால், இன்றோ நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டுவதுதான் நாளிதழ்களின் வேலையாக இருக்கின்றது. நடிகையின் தொடையையும் தொப்புளையும் காட்டிக் குப்பைத்தனமானச் செய்திகளைப் போடுகிற தமிழ் நாளிதழ்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள என்று மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா.திருமாவளவன் தலைநகரில் நடந்த (21.9.2008) பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையில் மிகக் கடுமையாகச் சாடினார்.

மானங்கெட்டத்தனமாக, தமிழனின் நாடி நரம்புகளை அழித்திட தமிழ்ச் செய்தித்தாள்கள் துணைபோகலாமா? தமிழன் உறங்கியது போதும். அவனை இன்னும் சினிமா மோகத்தில் ஆழ்த்த வேண்டாம். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இலக்கியம் என்பது தமிழ்ச் சினிமாதான். கூத்துக் கும்மாளமும், நடிகையின் தொடையும் தொப்புளும் தான் இவர்களின் மூலதனம். அரைகுறை ஆடையுடன் நடிகையின் படங்களை அரைப் பக்கத்திற்குப் போடுவதுதான் இவர்களது வேலை.

இதையெல்லாம் வெளியிட்டால்தான் மலேசியத் தமிழர்கள் படிப்பார்கள்; நாளிதழ் ஓடும் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த இனம் மிக வேகமாகச் சீரழிந்து கொண்டிருக்கிறது. அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாதா?

நடிகையின் படங்களைப் போடுவதற்கு அவள் என்ன செய்து கிழித்துவிட்டாள்? என்று நாம் கேள்வி கேட்க வேண்டும். அந்தக் கேவலமான படங்களைப் போடும் உங்கள் நாளிதழை வாங்க்கும் நாங்கள் என்ன மரமண்டைகளா? மாங்காய் மண்டைகளா? என்று கேட்க விரும்புகிறேன்.

நாளிதழ் நடத்துவோர் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் தானே? உங்கள் பிள்ளைகளும் மனைவியும் தாயும் பெண்கள் தானே? பெண்கள் தாய்மைக்குச் சமமானவர்கள் இல்லையா? அந்தப் பெண்ணையே கேவலப்படுத்திக் காட்டும் வேலையைத் தமிழ் நாளிதழ்கள் செய்யலாமா?

நாளிதழ் ஒருபக்கம் இருக்க தொலைக்காட்சியில் நடிகைகளின் குத்தாட்டத்தையும் கட்டிப்பிடித்து ஆடுகின்ற கொடுமையான காட்சிகளையும் மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லையா?

காசு கொடுத்து நாளிதழ் வாங்குகிறோம். தொலைக்காட்சி பார்க்கிறோம். இந்த மானங்கெட்டத் தனங்களைப் பார்க்கத்தானா? மானமுள்ள மனிதர்களாக இருந்திருந்தால் இவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள்.

இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக தறிகெட்டுப் போய் ஆடுவதற்கு ஒரு தொலைக்காட்சியில் அறுபதாயிரம் வெள்ளியை அள்ளிப் பரிசாகக் கொடுக்கிறார்கள். கூத்தையும் கும்மாளத்தையும் காட்டியே இந்த இனத்தை கெட்டுக் குட்டிச்சுவராக்கப் பார்க்கிறார்கள்.

நம்முடைய மொழி – இன – சமய உணர்வைப் பாதுகாப்பது நமது கடமையாகும். தமிழின உயர்வுக்குரிய வரலாற்று நூல்களையும் இலக்கியங்களையும் ஊடகத் தோழர்கள் நாடிப் படிக்க வேண்டும். இந்த இனத்தை நல்லபடியாக வடிவமைக்க வேண்டிய பொறுப்பும் பணியும் செய்தியாளர்களுக்கு உண்டு என இரா.திருமாவளவன் பலத்த கரவொலிகளுக்கு இடையில் பேசினார்.

@ஆய்தன்:-
சொந்த உடம்பை விற்கும் வேசி கேவலமானவள்...!
அடுத்தவள் உடம்பை விற்கும் நாளிதழ்கள்காரர்கள் வேசியை விட மகா கேவலமானவர்கள்!!!

புதன், 17 செப்டம்பர், 2008

தமிழ்ச் செம்மொழி நாள் நல்வாழ்த்து


இன்று தமிழ்ச் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு
நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

2004ஆம் ஆண்டு செப்தெம்பர் 17ஆம் நாள்
இந்திய நடுவணரசு தமிழைச் செம்மொழியாக
சட்டப்படி அறிவித்தது.

அதனையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும்
'தமிழுயிர்' தன்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.


தமிழ்ச் செம்மொழி நாள் நல்வாழ்த்துகள்.
நன்றி:- திருத்தமிழ்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

கவிப்பேரரசு வைரமுத்துவுக்குக் 'கண்டனக் காவியம்'



எமது மலேசியத் தலைநகரிலே அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வந்தோமா.. தமக்கே உரிய பாணியில் பேசினோமா.. சொற்களை அடுக்கி கவிதையே பேச்சாக அரங்கேற்றினோமா.. என்று வைரமுத்து இருந்திருக்கலாம். வந்தவர் எல்லாரும் மதுவுண்ட வண்டுபோல வைரமுத்துவின் தமிழ் உண்டு மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால், வைரமுத்துவோ தேன்கூட்டில் கல்லெறிவது போல ஒன்றைச் செய்துவிட்டார். அன்றைய நிகழ்ச்சியில் பாடப்பெற்ற மலேசியக் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பற்றி கருத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்.

"சுருக்கமாக இருக்க வேண்டும் தமிழ் வாழ்த்து
சடுதியில் (விரைவில்) பாடி முடிய வேண்டும் தமிழ் வாழ்த்து
மலேசியத்திற்கு இருக்க வேண்டும் ஒரே தமிழ் வாழ்த்து
எல்லாரும் பாடவேண்டும் ஒரே தமிழ் வாழ்த்து
இங்கேயே யாராவது இருந்தால்
எழுதச் சொல்லுங்கள் நல்ல தமிழ் வாழ்த்து
இல்லாவிட்டால் கவலை விடுங்கள்
இந்த வைரமுத்து தருகிறேன் தமிழ் வாழ்த்து
வேண்டுமென்றால் சொல்லுங்கள்
விரைவில் தருகிறேன் இசையும் போட்டு!!!

என்று சொற்களை அடுக்கி வைரமுத்து 'கருவாச்சிக் காவியம்' போல் கரகரத்தக் குரலில் முழங்கினார். அவருடைய அந்த முழக்கம் மலேசியத் தமிழர்களின் செவிப்பறைகளில் இடியாய் இறங்கியது. மலேசியத் தமிழர்களின் சீற்றம் ஈட்டியாய் மாறி வைரமுத்துவை நோக்கிக் கிளம்பியுள்ளது.

மலேசிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் எல்லாரும் வைரமுத்துவின் இந்தத் துடுக்கான பேச்சைத் துணிவோடு கண்டித்துள்ளனர்.

மலேசியத்திற்குத் தனியாக ஒரு தமிழ் வாழ்த்து எழுதித்தர வைரமுத்துவை யார் கேட்டது? இசையமைத்து தர யார் கேட்டது? மலேசியக் கவிஞர்கள் எழுதிய தமிழ் வாழ்த்துகளுக்கு என்ன குறை? மலேசியத்தில் தமிழ் வாழ்த்து எழுத பலர் இருக்கும்போது வைரமுத்துவுக்கு ஏன் இந்த வேலை? அவருடைய சொந்த நாட்டிலேயே தமிழ் வாழ்த்து எழுத வாய்ப்பில்லாத வைரமுத்துவுக்கு மலேசிய மண்ணில் இப்படி பேசம் துணிச்சல் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? என்றெல்லாம் பல கண்டனக் கனைகள் வைரமுத்துவுக்கு எதிராகப் புறப்பட்டுள்ளன.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எமது மலேசியத் பாவலர்களை, அறிஞர்களை, பற்றாளர்களை இழுவுபடுத்திவிட்டார். அதற்காக, கவிப்பேரரசுவைத் மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். வந்த நாட்டில் விருந்தினராக மட்டுமே அவர் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதைவிட்டு, அடுத்தவன் வீட்டில் நாட்டாண்மை செய்திருக்கக்கூடாது. இதற்காக, கவிப்பேரரசு தக்க விளக்கத்தை அளிக்க வேண்டும், மலேசியத் தமிழர்களின் புண்பட்ட மனங்களை ஆற்றுப்படுத்த வேண்டும், கவிப்பேரரசு உடனே இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கவிப்பேரரசு அவர்களுக்கு ஒரு விளக்கம்:-

நீங்கள் கருத்துச் சொன்ன அந்தத் தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதியவர் எமது நாட்டில் மிக மிகத் தேர்ந்த பாவலர். தமிழே மூச்சாக.. உயிராக வாழ்பவர். தமிழின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் தாளாது பணிசெய்பவர். நீங்கள் காசு பணத்துக்காகத் தமிழை எழுதுகிறீர்கள். ஆனால், இவர் தம்முடைய கைப்பொருளையும் இழந்து தமிழுக்காக எழுதுபவர். நீங்கள் தமிழுக்குள்ளே ஆங்கிலத்தையும் அன்னிய மொழியையும் கலப்படம் செய்து எழுதுவீர்கள். இவர் அறவே மொழிக்கலப்பு செய்யாமல் தமிழின் 'கற்பை' காத்து நிற்பவர். திரைப்படப் பாடலில் வைரமுத்து என்ற பாடலாசிரியன்தான் இருக்கின்றான்; . உண்மையான வைரமுத்துவை என்னுடைய கவிதையில் பாருங்கள் என்று நீங்கள் சொல்லாடல் செய்து மயக்குபவர். இவர் எழுதும் பாடலிலும் சரி கவிதையிலும் சரி உண்மையான இவர் மட்டுமே முழுமையாக இருப்பார். திரைப்பட உலகோடு தொடர்பு இருப்பதால் சில சமயங்களில் நீங்களும் நடிப்பீர்கள். இவர் எப்போதும் எந்தச் சூழலிலும் எதற்காகவும் எந்த நயப்பிற்காகவும் நடிக்காதவர். உங்களுக்குப் பாடலில் ஒரு முகம்; கவிதையில் ஒரு முகம்; நாவலில் ஒரு முகம்; மேடையில் ஒரு முகம். இவர் இதழாசிரியர், பாவலர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், தொல்காப்பிய அறிஞர் என்ற பல தளங்களில் பணியாற்றினாலும் ஒரே முகம்தான்.

மலேசியத்தில் 'உங்கள் குரல்' மாத இதழை முற்றிலும் நல்லதமிழில் வெளியிடும் இதழாசிரியராக, மிகச் சிறந்த; தேர்ந்த பாவலராக, தமிழ் இலக்கண அறிஞராக, தொல்காப்பிய அறிஞராக, தமிழகத்திலும் இல்லாத அளவில் உலகிலேயே முதல் முறையாக வெளிவந்த தமிழ்ச் செம்மொழி மலரைத் தனியொருவராக முயன்று வெளியிட்ட மாபெரும் சான்றாளராக; தகைமையாளராக இருக்கின்ற நல்லார்க்கினியர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ் வாழ்த்தைக் கேட்டுவிட்டு கருத்துச் சொல்வதற்கு உங்களுக்கு (மன்னிக்கவும்) தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு கவிஞரின் உள்ளமும் உணர்வும் எப்படிப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. குமுகாயத்தில் நடக்கும் குளறுபடிகளைத் தன்னுடைய கூர்மையான எழுதுகோளால் குத்திக் கிளித்து கிளர்ச்சி செய்து இறுதியில் நீதியை, நியாயத்தை, அறத்தை நிறுவவேண்டிய பாவலகளின் எழுத்தில் சினமும், சீற்றமும், கலந்தே இருக்கும். அத்தகைய உணர்வோடு, எங்கள் கவிஞர் ஐயா உங்கள் கவித்திறம் பற்றி எழுதிய ஒரு பாடலை இங்கே 'தமிழுயிர்' தருகிறது.

வானம் உங்களுக்குப் போதிமரமாக இருக்கலாம்; நாளும் உங்களுக்கொரு செய்தி சொல்லலாம். ஆனால், கொஞ்ச நேரம் எங்கள் கவிஞர் ஐயாவின் இந்தப் பாடலைப் போதிமரமாக நினைத்து அருகில் வாருங்கள்; அது உங்களுக்கு ஒரு செய்தியல்ல ஓராயிரம் செய்தி தரும்.

(இந்தப் பாடலை 'மணமகளே மருமகளே வாவா' என்ற திரைப்பாடல் மெட்டில் பாடலாம்)

பல்லவி

வயிரமுத்து வயிரமுத்து வாவா – நல்ல
வரவிருக்கும் மலைசியத்தில் வாவா!
மயிரைக் கட்டி மலையிழுக்க வாவா – புது
வடுகப்பட்டிக் கதையெழுதி வாவா!

கண்ணிகள்

திரைவளர்க்கும் இசைமயக்கம் உங்கள் நாட்டிலே – அது
தெருவரைக்கும் செவிக்கிழிக்கும் எங்கள் நாட்டிலே!
நரையருக்கும் கிறுகிறுக்கும் உன்றன் பாட்டிலே – கால்
நடைகளுக்கும் வெறிபிடிக்கும் எங்கள் நாட்டிலே!

'இது' துடிக்கும் 'அது' வெடிக்கும் உன்றன் பாட்டிலே – நல்ல
இளைஞருக்கும் தலைதெறிக்கும் எங்கள் நாட்டிலே!
'எது'வரைக்கும் எறும்புமொய்க்கும் உன்றன் பாட்டிலே – என்று
இளமகளிர் குலைநடுக்கம் எங்கள் நாட்டிலே!

குண்டுகுண்டு மாங்காய் விற்கும் உன்றன் பாட்டிலே – பெண்
குளித்தநீரைக் குடித்திருப்பாய் நீயும் வீட்டிலே!
பண்டுயர்ந்த பண்பணைத்து பறக்கும் காற்றிலே – உன்
பாட்டினைப்போல் வேட்டுமுண்டோ தமிழர் ஏட்டிலே!

உனையழைத்து விருந்துவைத்து மாலை போடுவோம் – உன்
உரைமடுத்துச் சிறகடித்து விண்ணில் பாடுவோம்!
வினைமுடித்துப் பணமுடிப்பை ஏந்தி வணங்குவோம் – நீ
விறைத்துகொண்டால் பதைபதைத்து மேலும் வழங்குவோம்!

உன்தமிழில் மயங்கிப்புதுக் கவிதை பழகுவோம் – உன்
உருவத்திலே தமிழணங்கைக் கண்டு தொழுகுவோம்!
என்றுவந்த போதுமுன்னை ஏத்திப் புகழுவோம் – உன்
இருப்பைவங்கிக் கணக்கினிலே ஏற்றி மகிழுவோம்!

கவியரசு பட்டமுன்றன் கனத்தைக் கூறுமா? – பின்பு
கலைஞர்தந்த பேரரசும் கணக்கில் தேறுமா?
புவியரசே கிடத்தபோதும் உனக்குப் போதுமா? உன்னை
போலினிமேல் ஒருகவிஞன் பிறக்க லாகுமா?

@ஆய்தன்:
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
"கருடா சௌக்கியமா?"
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்கியமே" கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...

சனி, 13 செப்டம்பர், 2008

நாகரிகத் தமிழச்சிக்கு வெட்கமில்லை!

செய்தி வழங்கியவர்:- இளவேனில்

ஐயா, அண்மையில் நம் அரசாங்க விளம்பரம் ஒன்றில் கண்ணுற்ற ஒரு காட்சி எனக்கு எரிச்சலூட்டியது. ருக்குன் நெகாரா, மலேசியரின் வாழ்க்கை முறை எனும் விளம்பர படத்தில் மூன்று இன பெண்கள் காட்சி தருகிறார்கள். அவர்களில் இருவர் தத்தம் கலாசார உடை அணிந்திருக்க, மற்ற ஒரு பெண்ணோ கொப்பூழ் தெரிய கையில்லா ஆடை ஒன்றை அணிந்து இருக்கிறாள். நெற்றியில் திலகம் இல்லை. இவள் யார்? மலேசியாவின் மூவினத்தில் ..தமிழினமும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அது மாறிவிட்டதோ? தயை கூர்ந்து விளக்குங்கள்.


@ஆய்தன்:-

இளவேனில், தாங்கள் படத்தோடு விடுத்த செய்திக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறேன். நம்முடைய தமிழினத்தில் நடக்கின்ற ஆனால், பலரும் கண்டும் காணாமலும் இருக்கின்ற ஒரு செய்தியை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இனநலம் பண்பாட்டு நலம் கண்முன்னே சீரழிவதைக் கண்டு பொங்கி எழுந்துள்ள உங்கள் தமிழ் மனம் வாழ்க!

தமிழினத்தின் பெருமைகளையும் பண்பாட்டையும் காக்கவேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழ்ப் பெண்களிடம் இருக்கிறது. பழங்காலம் முதற்கொண்டு இன்றுவரையில் மரபுவழிச் சார்ந்த தமிழ்க் கலை, பண்பாடு, உடை, உணவு முதலான பலவற்றை இன்றைய நாள்வரையில் அரணாக நின்று காத்து வருபவர்கள் தமிழ்ப் பெண்களே.. தமிழச்சிகளே என்றால் மிகையாகாது.

அதனால் தான், "மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்" என்றும், "பெண்ணின் பெருந்தக்க யாவுள?" அதாவது "பெண்ணைவிட பெருமைமிக்கது ஏது?" என்று தமிழ்ச் சான்றோர் பெருமக்கள் தமிழ்ப் பெண்களைப் புகழ்ந்து பெருமை சேர்த்துள்ளனர்.

"அச்சம், மடம், நாணம்.. பயிர்ப்பு" என்று பெண்ணினத்திற்கே தனிப் பண்பாட்டை உருவாக்கி போற்றி வளர்த்த இனம் நமது தமிழினம். இப்படிப்ப ஒரு சிறப்புமிக்க பண்பாட்டுக்கு உரிய தமிழ்ப் பெண்கள்.. தமிழச்சிகள் (சிலர்) இன்று எப்படி மானங்கெட்டு மதிகெட்டு இருக்கிறார் என்பதற்கு இந்தச் செய்தி நல்ல ஆதாரம். சொந்த இன மரபை.. இன பண்பாட்டை மறந்து இன்றையத் தமிழச்சிகள் தறுதலைகளாய் அலைகிறார்கள் என்பதற்கு இந்தச் படம் நல்ல சான்று. மொத்தத்தில், நாகரிக பித்துப்பிடித்த தற்காலத் தமிழச்சிகளுக்கு வெட்கம்.. மானம்.. சூடு சுரணை.. எல்லாமே குறைந்துவிட்டது.

இன்றையத் தமிழ்ப் பெண்களுக்கு.. தமிழச்சிகளுக்கு (அவர்கள் மொழியிலேயே சொல்ல வேண்டுமானால் மோர்டன் இந்தியன் கேர்ல்ஸ் - modern indian girls) தெரிந்த பண்பாடு என்ன தெரியுமா?

அரைகுறை ஆடையில் அலைவதே அச்சம்!
மார்ப்பைக் காட்டித் திரிவதே மடம்!
நடிகைகள் போல நாறிப் போவதே நாணம்!
பளபள உடம்பைப் படமாகக் காட்டுவதே பயிர்ப்பு!

இந்த மானங்கெட்டச் சிறுக்கிகளைச் சொல்லி என்ன பயன்! இவர்களைப் பெற்று இப்படியெல்லாம் மானங்கெட்டத் தனமாக வளர்த்தெடுத்தார்களே ஆத்தாவும் அப்பனும்.. அவர்களை அடிக்கவேண்டும்! எதிலே அடிக்கலாம்.. நீங்களே முடிவு செய்யுங்கள்!!

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

வினை தீர்க்கும் விநாயகருக்கு வந்த வினை!


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் காரிமுகத்து தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா!


விநாயகக் கடவுளரைப் பற்றி தமிழ்மூதாட்டி ஔவை பாடியதாகச் சொல்லப்படும் செய்யுள் இது. விநாயகர் தமிழர்களின் கடவுளாக இல்லாத போதிலும் அவரைப் பழந்தமிழர்கள் பழித்தது இல்லை! ஆனால், மொழி, இன, சமய வரலாறு எதுவுமே அறியாத இன்றைய அறிவுகெட்டத் தமிழர்கள், விநாயகரைக் முழுமுதற் கடவுளராக ஏற்றுக்கொண்டு விட்டனர். அப்படித் தமிழர்களின் கடவுளாகி போய்விட்ட விநாயகரை இன்றையத் தமிழர்கள் எப்படி மதிக்கிறார்கள் தெரியுமோ?

இப்போதுதான் முடிந்த விநாயகர் சதுர்த்தி நாளன்று, ஔவை பாடியது போல பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் மட்டுமல்ல இன்னும் கொள்ளுக்கட்டை, பழம், தேங்காய், பொங்கல், கரும்பு என என்னவெல்லாமோ படைத்து, மனமுறுக பூசை செய்து, மன்றாடி வரம் வேண்டி, கூட்டமாகக் கும்பலாகச் சேர்ந்து ஊர்வலம் நடத்தி, பசனைப் பாடல்களைப் பாடி ஆடி ஓடி ஓடோடி போய் இறுதியில் பத்தர்கள் செய்தது என்ன தெரியுமா?

நீங்களே பாருங்கள்!!!

வினை தீர்க்கும் விநாயகருக்கு வந்த வினைகண்டு, நல்லோர்கள்.. உண்மை பத்தர்கள்.. ஆன்மிக அன்பர்கள் உள்ளமெல்லாம் கண்டிப்பாக வேதனையில் அழும்!

கல்லாகட்டும்.. மண்ணாகட்டும்..
சாணியாகட்டும்.. சந்தனமாகட்டும்..
சிலையாகட்டும்.. சித்திரமாகட்டும்..

எதுவாக இருந்தாலும் கடவுளாக மதித்து கைக்கட்டி; வாய்பொத்தி; மந்திரம் ஓதி; திருநீறு பூசி விழுந்து விழுந்து வணங்கும் பத்தர் பேர்வழிகளுக்குப் பத்தி(பக்தி) இருக்கின்ற அளவுக்குப் பகுத்தறிவு இல்லை.. அறவே இல்லை என்பதற்கு இதனைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
பத்தியின் பெயரால் நடக்கும் இந்த அவலங்களைத் தடுக்கப் போவது யார்?
பத்தியின் போர்வைக்குள் தலைவிரித்தாடும் பித்தலாட்டங்களைக் கண்டிப்பது யார்?
பத்தியின் முகமூடி அணிந்து நடமாடும் பிற்போக்கு எண்ணங்களை மாற்றப் போவது யார்?

@ஆய்தன்:-
பத்தி இருந்தால் போதுமா – தமிழா
பகுத்தறிவு வேண்டாமா?
உனக்குப் பகுத்தறிவு வேண்டாமா?
பத்தியோடு பகுத்தறிவு இருந்தால் – தமிழா
பழிவந்து சேர்ந்திடுமா?
உனக்குப் பழிவந்து சேர்ந்திடுமா?

திங்கள், 1 செப்டம்பர், 2008

தமிழினத் தலைவரே.. தமிழரைக் காப்பீரா?

சின்னச் சிறு பிஞ்சு
இவள் செய்த பாவம் என்ன?
அவள் கண்களைப் பாருங்கள்..



உங்களைப் பார்த்துத் தான் கேட்கிறாள்
நாதியற்ற ஒரு தமிழனுக்குப் பிறந்ததைத் தவிர
இவள் செய்த பாவம் என்ன?


இரத்தமும் சதையுமாக
இந்திய அரசு கொடுத்த பணத்தில்
கொத்திக் குதறிய
சிறிலங்காவின் எறிகணைகள்...!



உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த
இந்த வெள்ளைத் தோல் அம்மணிக்கு இருக்கும்,
மனிதாபிமானம் உங்களுக்கு ஏன் இல்லாது போனது?



மல்லாந்து கிடக்கும் இவள்
வளர்ந்து உங்களைப் பற்றி
எப்படிக் கவிதை புனைவாள்?
ஈழத் தமிழர் சரித்திரம்

உங்களை எங்கனம்
பதிந்து கொள்ளும்?





நீங்கள் உலகத் தமிழ்த் தலைவரா?
பெரியார் அண்ணா வழி வந்த திராவிடத் தலைவனா?
தமிழ் கூறும் நல் உலகில் உங்கள் யோக்கியதை என்ன?
இன்னும் எத்தனை காலம் தான் மவுனமாக இருப்பீர்கள்?
கறுப்புக் கண்ணாடிகள்
உங்கள் கண்களை மறைத்தனவோ
இல்லை உங்கள் வஞ்சனமோ
தமிழன் என்னும் உறவும் வேண்டாம்
திராவிடன் என்னும் அடையாளமும் வேண்டாம்
மனிதம் என்னும் ஒரு துளி ஈரமும்
உங்கள் நெஞ்சை இளக வைக்கவில்லையா?
நீங்கள் நினைத்தால் உங்கள் ஒரு சொல்லால்
இதனை நிறுத்தலாம்,
சொல்வீர்களா....?

**நன்றி:- தாய் நாடு


@ஆய்தன்:-
நெஞ்சு பொறுக்குதில்லையே...!