வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

கவிப்பேரரசு வைரமுத்துவுக்குக் 'கண்டனக் காவியம்'



எமது மலேசியத் தலைநகரிலே அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராசேந்திரன் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வந்தோமா.. தமக்கே உரிய பாணியில் பேசினோமா.. சொற்களை அடுக்கி கவிதையே பேச்சாக அரங்கேற்றினோமா.. என்று வைரமுத்து இருந்திருக்கலாம். வந்தவர் எல்லாரும் மதுவுண்ட வண்டுபோல வைரமுத்துவின் தமிழ் உண்டு மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால், வைரமுத்துவோ தேன்கூட்டில் கல்லெறிவது போல ஒன்றைச் செய்துவிட்டார். அன்றைய நிகழ்ச்சியில் பாடப்பெற்ற மலேசியக் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் பற்றி கருத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்.

"சுருக்கமாக இருக்க வேண்டும் தமிழ் வாழ்த்து
சடுதியில் (விரைவில்) பாடி முடிய வேண்டும் தமிழ் வாழ்த்து
மலேசியத்திற்கு இருக்க வேண்டும் ஒரே தமிழ் வாழ்த்து
எல்லாரும் பாடவேண்டும் ஒரே தமிழ் வாழ்த்து
இங்கேயே யாராவது இருந்தால்
எழுதச் சொல்லுங்கள் நல்ல தமிழ் வாழ்த்து
இல்லாவிட்டால் கவலை விடுங்கள்
இந்த வைரமுத்து தருகிறேன் தமிழ் வாழ்த்து
வேண்டுமென்றால் சொல்லுங்கள்
விரைவில் தருகிறேன் இசையும் போட்டு!!!

என்று சொற்களை அடுக்கி வைரமுத்து 'கருவாச்சிக் காவியம்' போல் கரகரத்தக் குரலில் முழங்கினார். அவருடைய அந்த முழக்கம் மலேசியத் தமிழர்களின் செவிப்பறைகளில் இடியாய் இறங்கியது. மலேசியத் தமிழர்களின் சீற்றம் ஈட்டியாய் மாறி வைரமுத்துவை நோக்கிக் கிளம்பியுள்ளது.

மலேசிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் எல்லாரும் வைரமுத்துவின் இந்தத் துடுக்கான பேச்சைத் துணிவோடு கண்டித்துள்ளனர்.

மலேசியத்திற்குத் தனியாக ஒரு தமிழ் வாழ்த்து எழுதித்தர வைரமுத்துவை யார் கேட்டது? இசையமைத்து தர யார் கேட்டது? மலேசியக் கவிஞர்கள் எழுதிய தமிழ் வாழ்த்துகளுக்கு என்ன குறை? மலேசியத்தில் தமிழ் வாழ்த்து எழுத பலர் இருக்கும்போது வைரமுத்துவுக்கு ஏன் இந்த வேலை? அவருடைய சொந்த நாட்டிலேயே தமிழ் வாழ்த்து எழுத வாய்ப்பில்லாத வைரமுத்துவுக்கு மலேசிய மண்ணில் இப்படி பேசம் துணிச்சல் எங்கிருந்து வந்தது? யாரால் வந்தது? என்றெல்லாம் பல கண்டனக் கனைகள் வைரமுத்துவுக்கு எதிராகப் புறப்பட்டுள்ளன.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எமது மலேசியத் பாவலர்களை, அறிஞர்களை, பற்றாளர்களை இழுவுபடுத்திவிட்டார். அதற்காக, கவிப்பேரரசுவைத் மிகவும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். வந்த நாட்டில் விருந்தினராக மட்டுமே அவர் நடந்துகொண்டிருக்க வேண்டும். அதைவிட்டு, அடுத்தவன் வீட்டில் நாட்டாண்மை செய்திருக்கக்கூடாது. இதற்காக, கவிப்பேரரசு தக்க விளக்கத்தை அளிக்க வேண்டும், மலேசியத் தமிழர்களின் புண்பட்ட மனங்களை ஆற்றுப்படுத்த வேண்டும், கவிப்பேரரசு உடனே இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

கவிப்பேரரசு அவர்களுக்கு ஒரு விளக்கம்:-

நீங்கள் கருத்துச் சொன்ன அந்தத் தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதியவர் எமது நாட்டில் மிக மிகத் தேர்ந்த பாவலர். தமிழே மூச்சாக.. உயிராக வாழ்பவர். தமிழின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் தாளாது பணிசெய்பவர். நீங்கள் காசு பணத்துக்காகத் தமிழை எழுதுகிறீர்கள். ஆனால், இவர் தம்முடைய கைப்பொருளையும் இழந்து தமிழுக்காக எழுதுபவர். நீங்கள் தமிழுக்குள்ளே ஆங்கிலத்தையும் அன்னிய மொழியையும் கலப்படம் செய்து எழுதுவீர்கள். இவர் அறவே மொழிக்கலப்பு செய்யாமல் தமிழின் 'கற்பை' காத்து நிற்பவர். திரைப்படப் பாடலில் வைரமுத்து என்ற பாடலாசிரியன்தான் இருக்கின்றான்; . உண்மையான வைரமுத்துவை என்னுடைய கவிதையில் பாருங்கள் என்று நீங்கள் சொல்லாடல் செய்து மயக்குபவர். இவர் எழுதும் பாடலிலும் சரி கவிதையிலும் சரி உண்மையான இவர் மட்டுமே முழுமையாக இருப்பார். திரைப்பட உலகோடு தொடர்பு இருப்பதால் சில சமயங்களில் நீங்களும் நடிப்பீர்கள். இவர் எப்போதும் எந்தச் சூழலிலும் எதற்காகவும் எந்த நயப்பிற்காகவும் நடிக்காதவர். உங்களுக்குப் பாடலில் ஒரு முகம்; கவிதையில் ஒரு முகம்; நாவலில் ஒரு முகம்; மேடையில் ஒரு முகம். இவர் இதழாசிரியர், பாவலர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், தொல்காப்பிய அறிஞர் என்ற பல தளங்களில் பணியாற்றினாலும் ஒரே முகம்தான்.

மலேசியத்தில் 'உங்கள் குரல்' மாத இதழை முற்றிலும் நல்லதமிழில் வெளியிடும் இதழாசிரியராக, மிகச் சிறந்த; தேர்ந்த பாவலராக, தமிழ் இலக்கண அறிஞராக, தொல்காப்பிய அறிஞராக, தமிழகத்திலும் இல்லாத அளவில் உலகிலேயே முதல் முறையாக வெளிவந்த தமிழ்ச் செம்மொழி மலரைத் தனியொருவராக முயன்று வெளியிட்ட மாபெரும் சான்றாளராக; தகைமையாளராக இருக்கின்ற நல்லார்க்கினியர் கவிஞர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்களின் தமிழ் வாழ்த்தைக் கேட்டுவிட்டு கருத்துச் சொல்வதற்கு உங்களுக்கு (மன்னிக்கவும்) தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு கவிஞரின் உள்ளமும் உணர்வும் எப்படிப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. குமுகாயத்தில் நடக்கும் குளறுபடிகளைத் தன்னுடைய கூர்மையான எழுதுகோளால் குத்திக் கிளித்து கிளர்ச்சி செய்து இறுதியில் நீதியை, நியாயத்தை, அறத்தை நிறுவவேண்டிய பாவலகளின் எழுத்தில் சினமும், சீற்றமும், கலந்தே இருக்கும். அத்தகைய உணர்வோடு, எங்கள் கவிஞர் ஐயா உங்கள் கவித்திறம் பற்றி எழுதிய ஒரு பாடலை இங்கே 'தமிழுயிர்' தருகிறது.

வானம் உங்களுக்குப் போதிமரமாக இருக்கலாம்; நாளும் உங்களுக்கொரு செய்தி சொல்லலாம். ஆனால், கொஞ்ச நேரம் எங்கள் கவிஞர் ஐயாவின் இந்தப் பாடலைப் போதிமரமாக நினைத்து அருகில் வாருங்கள்; அது உங்களுக்கு ஒரு செய்தியல்ல ஓராயிரம் செய்தி தரும்.

(இந்தப் பாடலை 'மணமகளே மருமகளே வாவா' என்ற திரைப்பாடல் மெட்டில் பாடலாம்)

பல்லவி

வயிரமுத்து வயிரமுத்து வாவா – நல்ல
வரவிருக்கும் மலைசியத்தில் வாவா!
மயிரைக் கட்டி மலையிழுக்க வாவா – புது
வடுகப்பட்டிக் கதையெழுதி வாவா!

கண்ணிகள்

திரைவளர்க்கும் இசைமயக்கம் உங்கள் நாட்டிலே – அது
தெருவரைக்கும் செவிக்கிழிக்கும் எங்கள் நாட்டிலே!
நரையருக்கும் கிறுகிறுக்கும் உன்றன் பாட்டிலே – கால்
நடைகளுக்கும் வெறிபிடிக்கும் எங்கள் நாட்டிலே!

'இது' துடிக்கும் 'அது' வெடிக்கும் உன்றன் பாட்டிலே – நல்ல
இளைஞருக்கும் தலைதெறிக்கும் எங்கள் நாட்டிலே!
'எது'வரைக்கும் எறும்புமொய்க்கும் உன்றன் பாட்டிலே – என்று
இளமகளிர் குலைநடுக்கம் எங்கள் நாட்டிலே!

குண்டுகுண்டு மாங்காய் விற்கும் உன்றன் பாட்டிலே – பெண்
குளித்தநீரைக் குடித்திருப்பாய் நீயும் வீட்டிலே!
பண்டுயர்ந்த பண்பணைத்து பறக்கும் காற்றிலே – உன்
பாட்டினைப்போல் வேட்டுமுண்டோ தமிழர் ஏட்டிலே!

உனையழைத்து விருந்துவைத்து மாலை போடுவோம் – உன்
உரைமடுத்துச் சிறகடித்து விண்ணில் பாடுவோம்!
வினைமுடித்துப் பணமுடிப்பை ஏந்தி வணங்குவோம் – நீ
விறைத்துகொண்டால் பதைபதைத்து மேலும் வழங்குவோம்!

உன்தமிழில் மயங்கிப்புதுக் கவிதை பழகுவோம் – உன்
உருவத்திலே தமிழணங்கைக் கண்டு தொழுகுவோம்!
என்றுவந்த போதுமுன்னை ஏத்திப் புகழுவோம் – உன்
இருப்பைவங்கிக் கணக்கினிலே ஏற்றி மகிழுவோம்!

கவியரசு பட்டமுன்றன் கனத்தைக் கூறுமா? – பின்பு
கலைஞர்தந்த பேரரசும் கணக்கில் தேறுமா?
புவியரசே கிடத்தபோதும் உனக்குப் போதுமா? உன்னை
போலினிமேல் ஒருகவிஞன் பிறக்க லாகுமா?

@ஆய்தன்:
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
"கருடா சௌக்கியமா?"
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்
எல்லாம் சௌக்கியமே" கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது...

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வந்த இடத்தில் கவிப்பேரரசு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார் என்று நினைக்கிறேன். நம் நாட்டு அறிஞர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்ட அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் கண்டனம் மிகவும் சரி என்றுதான் நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நண்பரே... சரியாக சொன்னீர்கள்... எனது தளத்தையும் ஒரு எட்டு பாருங்க... பெரிய அரசியலே நடக்குது...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//இங்கேயே யாராவது இருந்தால்
எழுதச் சொல்லுங்கள் நல்ல தமிழ் வாழ்த்து
இல்லாவிட்டால் கவலை விடுங்கள்
இந்த வைரமுத்து தருகிறேன் தமிழ் வாழ்த்து
வேண்டுமென்றால் சொல்லுங்கள்
விரைவில் தருகிறேன் இசையும் போட்டு!!! //

இங்கேயே யாராவது இருந்தால்
எழுதச் சொல்லுங்கள் நல்ல தமிழ் வாழ்த்துன்னு தெளிவா சொல்லியிருக்காரு. நீங்க சொல்லும் சீனி நைனா என்பவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதை உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் பாடக் கூடிய ஒரு தமிழ்தாய் வாழ்த்தை எழுத வேண்டும் என்று தானே சொல்லியிருக்கிறார் வைரமுத்து? இங்கேயே யாராவது இருந்தால் எழுதச் சொல்லுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். அவர் ஒன்றும் சீனி நைனா அவர்களின் தமிழ்தாய் வாழ்த்தை குறை சொல்லவில்லையே? தமிழ்தாய் வாழ்த்து சுருக்கமாய் இருக்க வேண்டும் என்று தானே சொல்லியிருக்கிறார்? இதை ஏன் இப்படி குறை கூறி ஏன் நம் தமிழ் இனத்தின் பாரம்பரிய குணமாண ஒற்றுமையின்மையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றுதான் எனக்கு புரியவில்லை.

ஆதவன் சொன்னது…

விக்னேஷ்,
தங்கள் தளத்தைப் பார்வையிட்டேன். காரைக்கிழார் ஐயாவின் கண்டன அறிக்கையை வெளியிட்டு நல்ல பணி செய்துள்ளீர்கள். பாராட்டுகிறேன்.

தமிழகத்தை நாம் பெரிதும் மதிக்கிறோம். அதற்காக நம்முடைய தன்மானத்தை விட்டுக்கொடுக்க முடியுமா என்ன?

ஆதவன் சொன்னது…

ஜோசப் பால்ராஜ்,

உங்களை முதல் முறையாக எனது வலைப்பதிவில் காண்கிறேன். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை புரியுங்கள்.

"இங்கே யாராவது இருந்தால்..." என்றால் என்ன பொருள்? இல்லை என்பதாக எடுத்துக் கொள்ள இடமுண்டு அல்லவா?

"நான் எழுதித் தருகிறேன்.. இசையமைத்துத் தருகிறேன்" என்றால் அதில் அவருடைய தலைக்கணம் கொஞ்சம் தெரிகிறது. அதனைத்தான் கண்டிக்கிறோம்.

மற்றபடி வைரமுத்து மீதோ அவருடைய கவிதைகள் மீதோ எனக்கும் மலேசியத் தமிழர்க்கும் எந்தப் பகையும் கிடையாது. (அவருடைய திரைப்படப் பாடல்கள் இந்த விதிக்கு அடங்கா!)

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

கவிப்பேரரசு அவர்களுக்கு எதிராக மலேசியத் தமிழர் சார்பில் கண்டணம் தெரிவித்திருக்கும் தமிழுயிரை பாராட்டுகிறேன். அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்திய நம் நாட்டு எழுத்தாளர் சங்கத்தை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?

கவிப்பேரரசின் தமிழில் மயங்கியவர்களில் நானும் ஒருவன். அதற்காக, அவர் சொல்லுவதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ள முடியுமா?

தமிழ் நாட்டுக்கு வெளியே பாடுவதற்குத் தனியாக ஒரு தமிழ் வாழ்த்தை எழுதித் தர அவரை யாரும் கேட்கவில்லை. இருப்பினும், இருக்கின்ற மிகச் சிறந்த தமிழ் வாழ்த்துகளுக்கு இணையாக ஒன்றை அவர் எழுத விரும்பினால் அதற்கும் யாரும் தடை போடப் போவதில்லை.

எனவே, கவிப்பேரரசு தாராளமாக ஒரு மிகச்சிறந்த தமிழ் வாழ்த்தை எழுதட்டும்; முன்னணி இசையமைப்பாளரைக் கொண்டு இசை அமைக்கட்டும்.

கவிப்பேரரசு அவர்களின் தமிழ் வாழ்த்துக்கு மனோன்மணியனார், பாரதியார், பாரதிதாசனார், பாவாணர், பெருஞ்சித்திரனார் முதற்கொண்ட தமிழ்ப் பெரியார்களின் பாடலுக்கு இருக்கின்ற தனித்தன்மையும் தெய்வத்தன்மையும் இருந்தால் காலத்தால் நிற்கும்! கல்வெட்டாய் நிலைக்கும்! உலகத் தமிழர் ஊர்களிலும் உள்ளத்திலும் நீங்காமல் ஒலிக்கும்!

ஆக, கவிப்பேரரசு தாராளமாக வாழ்த்துப் பா எழுதலாம்!

பெயரில்லா சொன்னது…

//அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்திய நம் நாட்டு எழுத்தாளர் சங்கத்தை ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே?//

ஆமோத்திக்கிறேன்... அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தப் போது ... விருந்து வழங்கிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தை விட்டு விட்டீர்களே...

ஆதவன் சொன்னது…

//கவிப்பேரரசு அவர்களின் தமிழ் வாழ்த்துக்கு, தமிழ்ப் பெரியார்களின் பாடலுக்கு இருக்கின்ற தனித்தன்மையும் தெய்வத்தன்மையும் இருந்தால் காலத்தால் நிற்கும்! கல்வெட்டாய் நிலைக்கும்! உலகத் தமிழர் ஊர்களிலும் உள்ளத்திலும் நீங்காமல் ஒலிக்கும்!//

சுப.நற்குணன் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.

ஆதவன் சொன்னது…

இனியவள் புனிதா,

அது என்னவோ தெரியவில்லை நம் மலேசிய எழுத்தாளர் சங்கத்திற்கு வைரமுத்துவை விட்டால் தமிழகத்தில் வேறு யாரையும் தெரியாதோ? இவர்கள் அவரையும் அவர் இவர்களையும் மறி மாறி அழைப்பதும் விருது கொடுப்பதும் விருந்து கொடுப்பது...!! வேடிக்கையாக உள்ளது.

வருகைக்கு மிக்க நன்றி.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதுகிறேன். ஆனால், தமிழுயிரைத் தொடர்ந்து படித்துதான் வருகிறேன்.

வைரமுத்துவின் தன்மூப்பான பேச்சுக்கு நல்ல பதிலடி உங்கள் சொல்லடி! வைரமுத்துவுக்கு இதனை எப்படியாவது அனுப்ப வேண்டும். அவர் இதற்கு சரியான பதில் சொல்லத்தான் வேண்டும்.

வைரமுத்து பாட்டைவிட அவருக்கு நீங்கள் கொடுத்திருக்கும் பாட்டு கூ...ள்!

-சித்தன் சிவாசி

Expatguru சொன்னது…

"கவியரசு" என்றால் நினைவுக்கு வருவது கண்ணதாசன் மட்டுமே. தன்னைத்தானே "கவிப்பேரரசு" என்று கூறிக்கொள்பவர்கள் "ஓ போடு" போன்ற குப்பை பாடல்களை எழுதி காசு பண்ண தான் முடியுமே தவிர வேறு எதுவும் உருப்படியாக செய்ய முடியாது.

பெயரில்லா சொன்னது…

கவியரசே நீ தமிழுக்கு அரசல்ல....அரசு என்றவுடன் தலை கனத்து விட்டதா....
மானம் மரியாதை மிச்சம் இருந்தால் ...மறுபடியும் எங்கள் நாட்டிற்கு நூல் வெளியீடு,கவிதை ,காவியம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே வராதே.விளங்குதா? கருவாச்சி காவியமே

மு.வேலன் சொன்னது…

மலேசிய வாழ் நம்மவருக்கும் இது ஒரு பாடம்.
நம்மூர் புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராகக் வைரமுத்து, ஏன்? மலேசியாவில் இல்லாத எழுத்தாளர்களா; கவிப்பேரரசுகளா?