வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 27 பிப்ரவரி, 2009

மலேசியத்தில் ஐ.நா முன்னிலையில் பேரணி

மலேசியாவில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு கண்டனப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

உலக அமைதி முனைவகம் ஏற்பாடு செய்த இக்கவனயீர்ப்பு கண்டனப் பேரணி இன்று 27.02.2009 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணி தொடக்கம் 3:00 மணிவரை நடைபெற்றது.

அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேரணியில் கலந்து கொண்ட மக்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையே! சிறிலங்கா இராணுவத்தின் தமிழினப் படுகொலையை உடனே நிறுத்து!

ஐக்கிய நாட்டு சபையே! தமிழினப் படுகொலையை உடனே நிறுத்த சிறிலங்கா இராணுவத்தை ஆணையிடு!

ஐக்கிய நாடுகள் சபையே! உமது அறிக்கைகள் தேவையில்லை! சிறிலங்கா அரசிடம் இருந்து தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள்தான் தேவை!

ஐக்கிய நாடுகள் சபையே! "கண்ணைத் திறந்து பலியாகும் தமிழனைப் பார்"
தமிழீழத்தை அங்கீகரி!

போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு மக்கள் திரண்டிருந்தனர்.

தமிழர் இனப் பிரச்சினையை அரசியலாக்கும் குறிப்பிட்ட சில தலைவர்களின் உருவப்படங்களுக்குச் செருப்பால் அடித்தும் தமது கால்களால் மிதித்தும் மக்கள் தமது எதிர்ப்பை, வெறுப்பை வெளிக்காட்டினர்.

மலேசியாவின் பல்லின மக்களைச் சார்ந்து மலாய், சீனம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகைகள் செய்யப்பட்டிருந்தன.

இரத்தம் தோய்ந்த குழந்தைகளின் உருவப்பொம்மைகளை தாங்கி "அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும்" என கூடியிருந்தவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
உலக அமைதி முனைவகத்தின் பிரதிநிதிகள், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையிடம் மனுவைக் கையளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிகராளிகள் உரிய பதில் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

@செய்தி: புதினம்

@ஆய்தன்:-
மலேசியத் தமிழன் குரல்
சிறிலங்கா காதில் விழட்டும்..
இந்தியா காதில் விழட்டும்..
ஐநா காதில் விழட்டும்..!
உலகம் விழிக்கட்டும்..!
தமிழினம் பிழைக்கட்டும்..!
தமிழ் ஈனம் ஒழியட்டும்..!

கருத்துகள் இல்லை: