வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 23 அக்டோபர், 2008

சந்திராயன் சாதனைக்குப் பின்னால் ஒரு தமிழர்


இந்தியாவை உலக விண்வெளி அரங்கில் உயரிய இடத்தில் நிறுத்தும் வகையில் சந்திராயன் விண்கலம், 22-10-2008இல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி வருகிறது.

தவிர, உலகமெங்கும் வாழும் இந்தியர்களை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. அதோடு, இந்தியாவிலிருந்து (தமிழ்நாடு) வெளிநாடுகளில் குடியேறி வாழுகின்ற தமிழர்களும் இந்த்ச் சந்திராயன் சாதனையால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உண்மையில் சொல்ல வேண்டுமானால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், இந்தச் சந்திராயன் சாதனையின் பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார் என்பதுதான்.

உலகமே வியக்கும் வண்ணம், முதன் முறையாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கும் இந்தியாவின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருக்கிறார் என்பது உலகத் தமிழர்களின் தலையை உயர்த்தியுள்ளது.. நெஞ்சை நிமிர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.


உலகத்தின் பார்வையை ஈர்த்துள்ள அந்தச் சாதனைத் தமிழரின் பெயர் மயில்சாமி அண்ணாதுரை. இவர்தான் சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குனராகச் செயல்பட்டவர். அதோடு, சந்திராயன் விண்கலத்தை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்.



ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த அந்தத் தமிழ் வானியல் அறிவியலாளர் இன்று இமாலயச் சாதனை செய்திருப்பது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. அண்ணாதுரை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொத்தவாடி என்னும் ஒரு சிற்றூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் மயில்சாமி. கோவை அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பி.எசு.சி. (PSG) பொறியியல் கல்லூரிகளில் படித்தவர் விண்வெளி அறிவியலாளர் அண்ணாதுரை. 1982ம் ஆண்டு சிறீ அரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகப் பணியில் சேர்ந்தார்.

நிலவுக்குச் செயற்கைக் கோளை அனுப்ப வேண்டும் என்று வாச்பாய் தலைமையிலான முன்னனள் இந்திய மத்திய அரசு முடிவு செய்ததும் 'இசுரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நடுவம் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. இதற்காக உருவாக்கப்பட்ட தனிக் குழுவிடம் சந்திராயன் விண்கலத்தை வடிவமைக்கும் பொறுப்பு விடப்பட்டது.

இதுதொடர்பான குழுவின் தலைவராகவும் திட்ட இயக்குநராகவும் அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். சந்திராயன் திட்டத்தைச் செயல்படுத்த களத்தில் இறங்கிய அண்ணாதுரை, இரவு பகலாகத் தன்னை இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

விண்கலத்தின் முக்கிய பகுதிகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை இவரே தீர்மானித்தார். மொத்தமே இந்திய உரூபாய் 386 கோடியில் சந்திராயனை அண்ணாதுரை தலைமயிலான குழு உருவாக்கியது. இதுவே வெளிநாட்டில் தயாரிப்பதாக இருந்தால் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் இன்று உலக அரங்கில் கொடி கட்டிப் பறக்க முக்கிய காரணம் ஒரு தமிழரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அந்த வரிசையில் தற்போது சந்திராயன் பயணத்தை இந்தியா தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இன்னொரு தமிழரான அண்ணாதுரை அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கூறுகையில், "எங்களது குழந்தை நிலவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" என்றார் அண்ணாதுரை புன்னகையுடன்.

@ஆய்தன்:-
தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!
காலம் வரும் பாரடா!
உலகைப் புரட்டிப் போடடா!

6 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நன்கு உள்ளது. தகவலுக்கு நன்றி திரு.ஆய்தன்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம் ஐயா.

இது போலவே பல தமிழர்கள் தோன்றியுள்ளார்கள். அவர்களின் வரிசையில் அண்ணாதுரை அவர்கள் மற்றுமொரு மைல்கல். உலகத் தமிழர்களின் தன்மானம் காக்கப் பிறந்த தமிழன்.

தமிழன் சாதிக்கப் பிறந்தவன். சாதித்துக்கொண்டே இருப்பான். தொடரட்டும் அவர் சாதனைகள்..

ஐயா...
தமிழுயிர்...
தங்கள் கைவண்ணத்தில், சாதித்துக்கொண்டிருக்கிறது.. மிகவும் சிறப்பாகச் செதுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்.
தொடரட்டும் தங்களின் தமிழ்த்தொண்டு...

நான் தமிழுயிருக்குப் புதியவன்.. இது போல் மேலும் பல வலைப்பூக்கள் இருப்பது கண்டு பூரித்துப்போனேன்..

மேலும் பல தமிழ் ஆசிரியர்கள், தமிழ் மாணவர்கள், தமிழ் எழுத்தாளர்கள், ஆர்வளர்கள் படித்து, பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்.. தமிழன்.. தமிழியம்.. ஆகியவற்றை வாழ வைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை..

தமிழோடு உயர்வோம்.

வாழ்க தமிழ்.. வளர்க தமிழ் இனம்..

நன்றி. வணக்கம்.

தமிழ்க்குமரன்
கோல கெட்டில்,
கடாரம்.

பெயரில்லா சொன்னது…

saatanai tamilan vaalga!

-maniraj, subang.

Sathis Kumar சொன்னது…

2015-ல் முதல் இந்தியனை நிலவுக்குக் கொண்டுச் செல்லும் திட்டத்தினை பரிசீலித்து வருகிறது. அவ்விந்தியன் ஒரு தமிழனாக இருந்தால் நமக்குப் பன்மடங்கு மகிழ்ச்சியே..

தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) சொன்னது…

ஈழத்தமிழ் மக்கள் படுகொலைக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம்.
கடந்த 22-10-2008 அன்று,சை லேங் பார்க்,பிறையில் உள்ள ஜசெக பணிமனையில் வடக்கு மாநிலங்களை சேர்ந்த தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகளின் பிரதிநிதிகளோடு நடத்தப்பட்ட சந்திப்பிற்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கை கீழ் வருமாறு :-

மிகக்கடுமையாக,கண்மூடித்தனமாக,முப்படைகளையும் கள்மிரக்கி தமிழ் ஈழ மக்களை படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்தையும்,அதற்கு துணைபோகும் இந்திய அரசாங்கத்தையும் எதிர்த்து இந்த கண்டனப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வீடுகள்,பள்ளிக்கூடங்கள்,பொது மண்டபங்கள், கோயில்கள்,விளைச்சல் நிலங்கள் என பரந்த நிலையில் குண்டு அழிக்கும் சிறி லங்கா அரசிற்கு பாடம் கற்பிப்போம்.

இந்த படை நடவடிக்கையினால் எல்லாவற்றையும் இழந்து,சாலை ஓரங்களிலும்,மர நிழலிலும்,காய்ந்த வயிற்றோடும்,ஒரு வேளை சோற்றுக்கும் வழியின்றி அடுத்து என்ன நடக்குமோ என்று அஞ்சி, வயது முதிர்ந்த பெரியோரும்,வயிற்றில் கருவை சுமந்த தமிழ் தாய்மார்களும்,பள்ளி மாண்வர்களும் என ஒட்டுமொத்த தமிழ் மக்களும் பேரவலத்தை எதிர்கொண்டு தவிக்கின்றனர்.எனவே நமது தமிழ்ச் சொந்தங்களை காக்க

தமிழ் உணர்வுள்ள அனைவரும் குடும்பத்தோடு வருக!!
தமிழரின் துயர்போக்க அலையென திரண்டு வருக,வருக!!
தமிழரெல்லாம் ஒன்றிணைவோம்,பகைவர்தமை வென்றிடுவொம்!!

நாள் : 01-11-2008 (சனிக்கிழமை)
நேரம் : இரவு 7.30 மணிக்கு மேல்
இடம் : டேவான் சிறி மாரியம்மன்,பட்டவொர்த்.
ஏற்பாடு : வட மாநிலங்களின் தமிழ்,தமிழர் சார்ந்த அமைப்புகள்

இக்கண்,

சத்தீஸ் முணியாண்டி,
ஏற்பாட்டுக்குழு செயலாளர்

( மேல் விவரங்களுக்கு : சத்தீஸ் 016-4384767 / குணாளன் 013-4853128)

*இம்முயற்சிக்கு பெரும் ஆதரவாக இருந்தவர்கள் :-

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ப.இராமசாமி
ஜனநாயக செயல் கட்சி
உலக தமிழர் நிவாரண நிதி
மலேசிய தமிழ்நெறி கழகம்
மலேசிய திராவிடர் கழகம்
தமிழ் இளைஞர் மணிமன்றம்
இந்து இளைஞர் இயக்கம்
மக்கள் சக்தி நண்பர்கள்
பட்டவொர்த் மாரியம்மன் ஆலயம்
பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
மற்றும் பல தமிழ்,தமிழர் சார்ந்த் அமைப்புகள்

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

//உலகமே வியக்கும் வண்ணம், முதன் முறையாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியிருக்கும் இந்தியாவின் வெற்றிக்குப் பின்னால் ஒரு தமிழர் இருக்கிறார் என்பது உலகத் தமிழர்களின் தலையை உயர்த்தியுள்ளது.. நெஞ்சை நிமிர்த்தியுள்ளது என்றால் மிகையில்லை.// என்று ஆய்தன் அவர்கள் கூறியுள்ள கருத்து மிகவும் உண்மையானது.

இந்தச் சாதனையை நினைத்து தமிழர் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும். கூடவே, தமிழின் மீது நம்பிக்கையும் கொள்ள வேண்டும்.

நம்புங்கள்..
தமிழனால் சாதனை செய்ய முடியும்!
தமிழனால் புதுமை செய்ய முடியும்!
தமிழனால் புரட்சி செய்ய முடியும்!