வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 30 செப்டம்பர், 2007

தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏற்படுத்திவிட்ட புயல் அடங்குவதற்குள் "தேசியப் பள்ளிகளில் தமிழ்மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்ற மேலும் ஒரு விவாதம் தமிழ் நாளிதழ்களில் மிகச் சூடாக நடந்து கொண்டிருக்கின்றது. ஆளும் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான ம.இ.காவும் பி.பி.பியும் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி மாறிமாறி அனல்பறக்க அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ்ப்பள்ளி என்ற தடத்திலிருந்து அரசியல் களத்திற்குப் போய்விட்ட இந்த விவகாரத்தைப் பற்றி தமிழுயிர் கருத்துரைக்க விரும்பவில்லை. ஆயினும், தமிழ்மொழியைத் தேசியப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கருத்தை ஒட்டி தமிழுயிர் தனது எண்ணங்களை இங்கே முன்வைக்க விரும்புகிறது.

மலேசியாவில் தற்சமயம் 523 பள்ளிகள் இருப்பதாகவும் அவற்றில் ஓரிலக்கத்து ஐயாயிரத்து அறுநூற்றுப் பதினெட்டு (105,618) மாணவர்கள் பயின்று வருவதாகக் கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேவேளையில் தேசியப் பள்ளிகளில் பயிலும் தமிழ் அல்லது இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உள்ளது. இந்த நிலையில், தேசியப் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாகுவது தமிழ்மொழியின் நீடுநிலவலுக்கு நல்லது என்னுமொரு கருத்தும் நிலவுகிறது. இக்கருத்தில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது? தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதால் அது வளர்ந்து விடுமா? காலத்திற்கும் நிலைத்திருக்குமா? இதனால் தமிழ்க் குமுகாயத்திற்கு நன்மையா? தமிழ்ப் பண்பாட்டுக்கும் சமயத்திற்கும் ஆக்கமா? ஆகிய வினாக்களுக்கு ஆழமான ஆய்வுகளின் மூலமாக விடைகளைக் காணவேண்டும்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குள், தமிழை ஏற்கனவே கட்டாயப் பாடமாக்கியுள்ள நமது அண்டை நாட்டையும் இணைத்துக்கொளவது மிக மிக அவசியமாகும். காரணம், தமிழைக் கட்டாயப் பாடமாக்கியதால் அந்நாட்டில் தமிழ்மொழி, இன, சமய, கலை, இலக்கிய, பண்பாட்டு, பாரம்பரிய, வரலாற்று அடையாளங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் பின்னடைவுகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. இதன் தொடர்பில், நமக்கு நிறைவளிக்கும் முன்னேற்றங்கள் எதுவும் பெரிதாக அங்கே நடந்துவிடவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆக, அதுபோன்றதொரு நிலைமை நாளை நம்நாட்டிலும் நிகழ வேண்டுமா என்பதைத் "தமிழைக் காட்டாயப் பாடமாக்க வேண்டும்" என்று போராடும் அன்பர்கள் தயவுகூர்ந்து சிந்திக்க வேண்டும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் எண்ணம் கல்வி அமைச்சுக்கே இல்லாதபோது நம்மில் சிலர் ஏன் அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வேண்டும்? இப்படியொரு திட்டம் நிகழுமானால் அது நிச்சயமாகத் தமிழைக் கருணைக் கொலை செய்வதற்கு ஒப்பானதாகும். தமிழைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் தொலை நோக்குத் திட்டத்திற்கு ஒப்பானதாகும். தமிழ் வரலாற்றில் குமரிக்கண்டத் தமிழ் அழிவுக்குப் பின்னர் நடைபெறும் மிக பெரிதான தமிழ் அழிவுக்கு ஒப்பானதாகும்.

தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதை விரும்பும் அன்பர்கள் தயவுகூர்ந்து கீழ்க்காணும் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என தமிழுயிர் தாழ்மையுடன் வேண்டுகிறது.

1.தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையும். 2.மாணவர்கள் குறைந்தால் இயல்பாகவே தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும். 3.இப்போது இருக்கும் 523 தமிழ்ப்பள்ளிகள் படிப்படியாகக் குறைந்து ஒருகாலக் கட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பள்ளிகள் மட்டுமே மிஞ்சும். 4.தலைமையாசிரியர் என்ற துறைத்தலைவர் பொறுப்பில் இருக்கும் தமிழர் அல்லது இந்தியரின் எண்ணிக்கை படிப்படியாகக் கணிசமாகக் குறையும். 5.தமிழ்ப்பள்ளிக் கண்காணிப்பாளர், மொழி அதிகாரி, உதவி இயக்குநர் முதலான உயர்ப்பொறுப்புகள் காணாமல் போகும். 6.தமிழ்மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையம், தேர்வு வாரியம், பாடநூல் பிரிவு, ஆய்நர் பிரிவு முதலானவற்றில் உள்ள தமிழ்மொழிக்குரிய பிரிவுகளும் உயர் பொறுப்புகளும் இல்லாமல் போகும். 7.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகம் முதலிய உயர்க்கல்விக் கழகங்களில் தமிழைப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழ்ப் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் காலப்போக்கில் குறையும். 8.ஆசிரியர் பயிலகம், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ் விரிவுரைஞர், பேராசிரியர், இணைப்பேராசிரியர் முதலான பொறுப்புகளும் தமிழின் பெயரால் இயங்கும் உயர்ப்பதவிக்கான இருக்கைகளும் காணாமல் போகும். 9.தற்போது தமிழ்மொழியில் கற்பிக்கப்படும் வட்டாரக் கல்வி, நன்னெறிக் கல்வி, வாழ்வியல் திறன், உடற்கல்வி, நலக்கல்வி, குடிமையும் குடியுரிமைக் கல்வியும், இசைக்கல்வி, கலைக்கல்வி முதலான பாடங்களும் பாடநூல்களும் இல்லாது போய்விடும். 10.தமிழ்ப் பள்ளிகளுக்கான மேற்கண்ட பாடநூல்களை எழுதும் அதிகாரிகளுக்கு வேலை இல்லாமல் போகும்; அப்பாடநூல்களை ஆச்சிடும் பல தமிழ் நிறுவனங்களும் பதிப்பகங்களும் முடங்கிப்போகும். 11.தமிழ்ப்பள்ளிகள் குமுகாய பண்பாட்டு நடுவங்களாகச் செயல்படும் நிலை கெட்டுப் போகும். 12.தேவார வகுப்பு, சமய வகுப்பு, திருக்குறள் வகுப்பு, கலைமகள் வழிபாடு, பொங்கல் விழா, தேர்வுக்கால சிறப்பு பூசை, கல்வி யாத்திரை முதலான சமயப் பணிகள் ஆற்றி ஆன்மிக வளர்ச்சிக்கும் வித்திடும் தமிழ்ப்பள்ளிகளின் அரும்பணிகள் அழிந்துபடும். 13.தமிழ் மக்களே முழுவதுமாக ஆட்சி செய்யும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிருவாக வாரியங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள் ஆகியவை பூண்டோடு காணாமல் போய்விடும். 14.தமிழ்பள்ளி மாணவர்களுக்காகச் சில சிறப்பான கல்வித் திட்டங்களை மேற்கொண்டுவரும் இந்தியர் அரசியல் கட்சிகள், தமிழர்/இந்தியர் சார்ந்த அரசு சார்பற்ற இயக்கங்கள், பொது இயக்கங்கள் ஆகிய தரப்புகளின் பங்களிப்பும் பணிகளும் முடங்கிப் போகும். 15.கபடி, சிலம்பம் முதலான தமிழ் விளையாட்டுகளைப் பேணிக்காத்துவரும் சில தமிழ்ப்பள்ளிகள் இல்லாமல் போகும்; தமிழ் விளையாட்டுகள் மறைந்துபோகும். 16.தமிழ்மொழி சார்ந்து நடைபெறும் மொழிப் போட்டிகள், திருக்குறள் போட்டிகள், திருமுறை ஓதும் போட்டிகள், மாணவர்த் திறன் போட்டிகள் முதலானவற்றின் தளங்கள் தகர்ந்துபோகும். 17.தொல்காப்பியம், நன்னூல், திருக்குறள், தேவாரம், திருவாசம் முதலிய இன்னும்பல அருமை நூல்களின் அடிபடையில் இன்று தமிழ்ப்பள்ளியில் இயங்கும் தமிழ்மொழி காணாமல் போய் குமுகவியல் மொழி (social language) ஆட்சி பெறும். இதனால், தமிழின் தரம் குறைந்துபோய்; உண்மை அடையாளம் மாறிப்போய்; இறுதியில் அழிந்துபடும். 18.தமிழ்மொழியில் ஏற்படும் சிதைவும் மாற்றங்களும் தமிழ் இனத்தின் அடையாளத்தை உருமாற்றிவிடும்; கலை பண்பாட்டை உருமாற்றிவிடும். இதற்கு நம்மோடு நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் உடன்பிறப்புகளான 'மலாக்கா செட்டிகளே' நற்சான்று. 19.தமிழ்மொழி திரிந்தோ அல்லது சிதைந்தோ போகுமானால் இந்த இனமும் தன்நிலை மாறிப்போய் வேறு மொழியாகவும் வெவ்வேறு இனமாகவும் பிரிந்து போகும். இதற்கு, தமிழினத்திலிருந்து பிரிந்துபோன தமிழ்த் தோழமை இனத்தாரான தெலுங்கரும், மலையாளிகளும், கன்னடர்களும் சான்று. 20.தமிழ்மொழி நம் இனத்தின் உயிர் என்பதால் மொழியின் சிதைவும் அழிவும் பத்தாயிரம் ஆண்டுக்கும் குறையாத தமிழ் இனத்தின் அடிச்சுவட்டையே அழித்துவிடும். இதற்கு, இந்தோனிசியா, மியான்மார், மொரிசியசு, பிஜி, இரியூனியன் முதலான நாடுகளில் வாழும் தமிழர்களே சான்று. 21."மரபு திரிபின் பிறிது பிறிதாகும்" என்ற தொல்காப்பியர் கூற்றுக்கு ஏற்ப தமிழ்ப்பள்ளியிலும், தமிழ்மொழியிலும், தமிழினத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் ஏற்படும் திரிபுகள் இறுதியில் உலக வரலாற்றில் தொன்மை இனமாகிய தமிழினத்தின் பேரழிவுக்கே வித்திடும். 22."தமிழ் எம் உயிர்; தமிழ்ப்பள்ளி எம் உடல்" என்று முழங்கி மலேசியத்தில் தமிழை நிலைபெறச் செய்த தமிழவேள் கோ.சா ஐயா அவர்களின் திருக்கூற்றின்படி தமிழ்ப்பள்ளி என்ற உடல் அழித்தால் தமிழ் என்ற உயிர் அழியும்! தமிழ் அழிந்தால் தமிழினமே அழியும்! தமிழின அழிவுக்கு இட்டுச் செல்லும் எந்த ஒரு திட்டத்தையும் வழிமொழிந்து அடுத்து வரும் ஏழேழு தலைமுறையின் சாபத்திற்கு இன்றைய தலைமுறை ஆளாக வேண்டாம்.

இத்தனை விளைவுகளையும் இன்னும் விரிந்துச் செல்லும் பற்பல விளைவுகளையும் தீர்க்கமாகச் சிந்தித்தப் பிறகுதான் "தேசியப் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவது" பற்றி எவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். உண்மையாகவே தமிழ்பள்ளி; தமிழ்மொழி நலம் நாடுவோர் கண்மூடித்தனமாகக் கருத்துகளைச் சொல்லிக் கொண்டிராமல் ஆழமான ஆய்வுகளின் அடிப்படையில் பேசுவதே நலம்.

  • ஆய்தன்: தேசியப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதைச் சிந்திக்கும் மூளைகள் இடைநிலைப்பள்ளிகளில் இதனைச் செய்ய முனைந்தால் தமிழுக்கு ஆக்கம் விளையுமே! இதனைச் சிந்திக்கவும் பேசவும் எவரும் துணிவதில்லையே! ஏன்? ஏன்?

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளிகள் தமிழரின் அடையாளம். தேசியப்பள்ளிகளில் தமிழைக்கட்டாயப் பாடமாக்கினால் மட்டும் தமிழ் வாழாது. மாறாக தமிழ்ப்பள்ளிகளின் உண்மை அடையாளத்தை இழக்கச் செய்யும் என்ற தமிழுயிரின் கருத்து முற்றிலும் உண்மையே. அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்கும் தமிழுக்கும் தயங்காது குரல் கொடுத்துவரும் தமிழுயிர்கு நமது பாராட்டுகள்.
தேசியப் பள்ளிகளில் தமிழ்க்கட்டாயப்பாடமாக்கப்பட்டால் தமிழ்ப்பள்ளிகள் அழிவதோடு மட்டுமல்லாமல் தமிழரின் பண்பாடும் கலையும், வரலாறும் அழியும் என்பது உண்மை.

ஆகவே, தேசியப்பள்ளிகளில் தமிழைக்கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்ற அன்பர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வது நல்லது.

என்றும் தாய்தமிழ்ப்பணியில்,

தமிழ்ச்சித்திரன்
பேரா

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த மிகத் தெளிவுமிக்க சிந்தனையைத் தங்களின் தமிழுயிர் வழங்கியுள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவரும் படித்து மனத்தில் நிறுத்த வேண்டிய செய்தி இது. தமிழைக் கட்டாயப் பாடமாக்கிவிட்டால் தமிழ்மொழி வாழும்.. வளரும் என்பதெல்லாம் ஒரு மாயைதான் என்பதைத் தாங்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். தமிழுயிரின் தமிழ்ப்பணி மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி. பாராட்டுகள்.

அன்புடன்,
இளஞ்சித்திரன், வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

" எகத்தாளமாக நடந்தததால் குப்புற விழுந்த ஒருவன் மூக்குடைப்பட்டு குறுதி வழிய நீன்றானாம். அவனைப் பார்த்து ஏளனமாக எள்ளிய சிலரிடம் தனது தவற்றை மறைப்பதற்காக அவன் வானத்தை அன்னார்ந்துப் பார்த்து ஏதோ ஒரு வியப்பான காட்சியைக்கண்டு களிப்பதைப் போல் நடித்தானாம்.ஊர் மக்கள் அப்படி என்னய்யா வானத்தில் தெரிகிறது என்றார்களாம்.விழுந்தவன் சொன்னானாம் அதோ அங்கே கடவுள் தெரிகிறார் என்று.கடவுளா எங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே என்று மக்கள் சொன்னார்களாம். நீங்களும் விழுந்து பாருங்கள் தெரிவார் என்றாரனாம். மக்களும் விழுந்து மூக்குடைபட்டதுதான் மிச்சம். கடவுள் தெரியவில்லையாம்" அப்படி ஒரு காலத்தில் தமிழை வெறுத்து தமிழை படிக்காமல் புறந்தள்ளியதால் இன்று தங்களின் முகவரியை இழந்ததது மட்டுமல்லாமல் தங்கள் சரவடிகளின் அடையாளத்தையும் இழந்து அவதிப்படும் சில அரை வேக்காடுகள் உலறும் உலறல்தான் " தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற பிதற்றல்.ஆகவே இவர்களில் மிகப் பலருக்கு இன்னமும் தாய் மொழியின் அவசியம் புரியவில்லை.தங்களின் தன்னல நயப்பையும் விடவும் முடியவில்லை.தாங்கள் அடைந்துவிட்ட இழப்புகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் இயலவில்லை.எனவே தாய் மொழி பற்றில்லா இவர்களை என்றும் ஒரு பொறுட்டாகவே ஏற்கக் கூடாது. எனவே,இவர்களின் தொலை நோக்குப் பார்வையில்லா கருத்துக்களில் சில மதில் மேல் பூனைகள் ஏமார்ந்துப் போகாமல் இருக்க சான்றுகளுடன் தாங்கள் வழங்கியுள்ள சாட்டையடியை பெரிதும் போற்றுகிறேன்.தங்களின் தமிழ்ப்பணிக்கு எமது மனநிறைந்தப் பாராட்டுகள்.தொடரட்டும் தங்களின் தமிழ்ப்பணி.

அன்புடன்,

எழிலோவியன், பாரிட் புந்தார், பேராக்கு.

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளி சிக்கலைபயும் தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்றும் பேசுகின்ற அரசியல்வாதிகள் தங்களின் கருத்துகளை ஒருமுறை படித்தால் நல்ல தெளிவு உண்டாகும். மிகவும் ஆழமான சிந்தனைகளை வழங்கி உள்ளீர்கள். இந்த மாதிரியான சிந்தனை நிறைய பேருக்கு இல்லை. சிந்திக்க வைக்கும் தமிழுயிர் கூ..ள்! -சித்தன் சிவாஜி

பெயரில்லா சொன்னது…

ஆய்தன் ஐயா அவர்களே, வணக்கம்.
தமிழைக் கட்டாயப் பாடமாக்கும் திட்டம் குறித்த தங்களின் ஆழமான பார்வை சிந்திக்கத்தக்கது. நம் தமிழ்க் குமுகாயக் கல்வியாளர்களும் அரசியலாளர்களும் பொது இயக்கப் பொறுப்பாளர்களும் ஒன்றுகூடி தாங்கள் முன்வைத்துள்ள கருத்துகளை விவாதிக்க வேண்டும்.

தமிழுயிர் வலைப்பதிவின் வழி தாங்கள் படைக்கும் செய்திகள் பயனானவை! சிந்தனைகளைக் கிளறுபவை! செயலாக்கத்திற்கு வித்திடுபவை என்றால் மிகையாகா! தங்களின் தமிழ்ப்பணிக்கு என்னுடைய தோள்களையும் இணைத்துக் கொள்ளவும்.

இணையம் என்னும் இன்றைய தொழில்நுட்பத்தில் இணைந்து இனியத் தமிழை வளர்த்தெடுப்போம்!

நன்றி, வணக்கம்.
திருத்தமிழ்ப் பணியில்,
சுப.நற்குணன்
www.thirutamil.blogspot.com

பெயரில்லா சொன்னது…

j'entrave keupouik de s'que t'as gratté sur ton site.alors jme venge
MOUAHAHA!