வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 1 அக்டோபர், 2007

கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா?


'சிறந்த இசை' வழங்கும் தனியார் வானொலி நிலையம் அண்மையில் நடத்திய 'கலக்கல் காலை பங்கி பயணம்' என்ற நிகழ்ச்சி தமிழ் மக்களை மிகஞ்சுளிக்க வைத்துவிட்டது. இதில் நடத்தப்பட்ட போட்டியில் வழங்கப்பட்ட புதுமையான பரிசுதான் இதற்குக் காரணம். வெற்றி பெறுகின்றவர் அறிவிப்பாளருடன் விருந்துக்குப் (dating) போவதுதான் அந்தப் 'பரிசு'. தமிழ்ப் பண்பாட்டை முற்றிலும் கேவலப்படுத்தும் இப்படியொரு போட்டியும் பரிசும் தேவையா? தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்திப் பெண்ணடிமைக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சியைத் தமிழுயிர் வன்மையாகக் கண்டிக்கின்றது. அந்த வானொலியாருக்காகத் தமிழுயிர் வழங்கும் ஆகா சிறந்த பாடல் இதோ! கேளுங்கள் மகிழுங்கள்!

இராகான்னு ஒரு வானொலி கேளுங்க – அதில்
தெறிக்குது தமிழ்ப் பண்பாடு பாருங்க!

பங்கி பயணம்னு நிகழ்ச்சி பேருங்க – அதில்
பொண்ணுங்க மானம்தான் நாறுங்க!

போட்டின்னு பேருசொல்லி நடத்துறான் – அதில்
பரிசுன்னு விருந்து ஒன்னு கொடுக்கிறான்!

பொண்ணுக்கூட ஆம்பிள போகுறான் – விருந்துக்கு
ஆண்கூட பொம்பளயும் போகுறாள்!

எங்கேடா படிச்சானுங்க இந்தப் பண்பாடு – இதை
வெளியில சொன்னாக்கா வெட்கக்கேடு!

எவனுங்கடா அந்த அறிவிப்பாளரு – அந்த
வெள்ளைக்காரனா இவனுங்கள பெத்தவரு!

பொறுக்கீங்க போட்டிக்குப் போகலாமா? – நம்ம
பொண்ணுங்க புத்தியும் மேயலாமா?

  • ஆய்தன்:பண்பாடும் நாகரிகமும் இல்லாதவை விலங்கும்; பேய்பிடித்த பைத்தியமும் தான்!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கலக்கல் காலையா? ஒலப்பல் காலையா? பாட்டு அருமை ஐயா! அந்தத் தனியார் வானொலி நிலையத்தார் பாணியிலேயே நல்ல 'வாங்கல்' இது. சமயங்களில் பண்பாகச் சொல்லப்படும் கருத்துகளைச் சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பொருட்டாகக் கருதுவது இல்லை. மாறாக, இவ்வாறு கொடுக்கப்படும் 'சூடு' நன்றாக வேலை செய்கிறது. தமிழுயிர் பணி சிறக்கட்டும்.

தமிழுயிரோடு தமிழ்ப்பணி செய்ய விரும்பும்,
இளஞ்சித்திரன், வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

எத்தனையோ முறை பலர் குரல் கொடுத்தும் செவின் காதில் ஊதிய சங்காக கண்டும் காணாமல் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் சீரழித்து வரும் கேடு கெட்ட தனியார் வானொலியும், அதில் தமிழையே மூலதனமாக்க் கொண்டு பணியாற்றி பணம் பண்ணிக்கொண்டே தமிழுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் கேடு செய்து கொண்டு வரும் மானம் கெட்ட தமிழ் அறிவிப்பாளர்களை இனமானப் பாவலன் காசி ஆனந்தன் வழியில்
" வெள்ளைக்காரன்தான் இவனுங்களுக்கு அப்பனா " என்று கேட்டிருப்பது உண்மையில் வரவேற்கத் தக்க ஒன்றை.தாய் தமிழையும் தமிழ் பண்பாட்டையும் கேவலப்படுத்தித்தான் வயிறு வழக்க வேண்டும் என்றால் அதற்கு வேறு எங்காவது பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.தாய் தந்த தாய் மொழியைப் பழிப்பது.தாயை பழிப்பதைவிட இழிவானது.இந்த மானம் க்ட்ட அறிவிலி அறிப்பாளர்களை அழைத்து பொது நிகழ்ச்சிகளை நடத்துவது அதைவிட மானம் கெட்ட தனம்.இதை விழா நடத்துவோர் முதலில் உணர வேண்டும்.
தொடரட்டும் தமிழுயிரின் பணி-அது தமிழ் எங்கள் உயிருக்கும் மேலென்று நிறுவட்டும்
" கெடலெங்கே தமிழின்நலம்
அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்க"

அன்புடன்,
தமிழின் சிறு தொண்டன்,

எழிலோவியன்,பாரிட் புந்தார்,வெள்ளி மாநிலம்

பெயரில்லா சொன்னது…

செவிடனுக்குக் கூட கேட்டிடும் சங்கின் ஒலி.. இவர்களுக்கு ம்ஹ்ம்! நவீனம் எனும் பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து இவர்கள் வீட்டுப் பெண்களுக்கும் பொருந்துமோ..?
இவர்களைச் சொல்லியும் ஒன்றுமில்லை. இதை வரவேற்க ஒரு பெருங்கூட்டமே நாட்டில் அலைகிறதே அதையும் தடுக்க வேண்டும். வளருட்டும் உங்கள் பணி.

இனியன், பினாங்கு.

பெயரில்லா சொன்னது…

இந்த ராகா வானொலிக் காரனுங்க சரியான உதை கொடுக்க ஆள் இல்லாம அலையிறானுங்க. அந்த குறையை தமிழுயிர் தீர்த்து வைத்து உள்ளது. அவனுங்க ஸ்டைலிலேயே நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கியிருக்கீங்க! சூப்பர்!(சும்மாதான் ஆங்கிலம் கலந்து எழுதுகிறேன்) நல்லதமிழ் உள்ளங்களில் எல்லாம் இப்போது கூ...ள்! இந்தப் பாட்டுக்கு மெட்டு போட்டு அன்புள்ள மாறன் பாட அதை புன்னகை பூ கீதா படம் எடுக்க... எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை பண்ணிப் பருங்கோ..! சூப்பரோ சூப்பர்மா!
-சித்தன் சிவாஜி