வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2007

தமிழை மறந்த தமிழ் வாத்தி!


தமிழ் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய பெண் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் பற்றிய செய்தி ஒன்று எமக்கு மின்னஞ்சல் வழி வந்திருந்தது. அந்தத் தமிழ் வாத்தி தம் குழந்தைக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா? 'ரோமனேஸ்வர்யா' என்பதுதான். இந்தப் பெயர் எந்த மொழி என்று அந்தத் தமிழ் வாத்தியும் அவர் மனைவியாகிய தமிழ் வாத்திச்சியும் அறியாமலா போனார்கள்? இவர்களின் ஆங்கில மோகம் அவமானத்திற்குரியது அல்லவா? இவர்களின் அன்னிய மொழி அடிமைப் புத்தி நகைப்புக்குரியது அல்லவா? தாய்மொழி மீது உயர்வெண்ணம் இல்லாத இவர்களின் தன்மானம் கேள்விக்குரியது அல்லவா? தமிழ் போட்ட பிச்சையில் இடைநிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியர்களாகப் பணிபுரியும்(கூலிக்கு மாறடிக்கும்) இந்த இரண்டு தமிழ் வாத்தி இணையரின் மொழிப்பற்றை என்னவென்று சொல்லுவது? தன்னுடைய அரத்தத்திற்கு(இரத்தம்) பிறந்த குழந்தைக்குக்கூட நல்ல தமிழ்ப்பெயரை வைக்கத் தெரியாத அல்லது துணிவில்லாத இந்தத் தமிழ் வாத்திகள், அவர்களிடம் படிக்கும் எமது தமிழ் மாணவர்களுக்கு தமிழைக் கற்பிப்பது எங்ஙணம்? அல்லது அவர்கள் கற்பிப்பது தமிழாகத்தான் இருக்குமா? கொஞ்சம்கூட தாய்மொழி உணர்வோ பற்றோ இல்லாத இவர்களைப் போன்ற தமிழ் வாத்திகள் நிறையவே உள்ளார்கள் நம் நாட்டில். தாய் மொழிக்கான 'தார்மீக' பொறுப்பிலிருந்து தவறியிருக்கும் இவர்களைப் போன்றோர் தமிழால் பிழைப்பு நடத்துவது வெட்கக்கேடானது! தமிழ் வேண்டாம்; ஆனால் தமிழால் ஆயிரக்கணக்கில் வரும் ஊதியப்பணம் மட்டும் வேண்டுமா இவர்களுக்கு? இப்படி ஒரு கேவலமான பிழைப்பு தேவையா?

சமுதாயத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தமிழ் ஆசிரியர்களே இப்படி பாமர மக்களைப் போல அறியாமையையும் ஆற்றாமையையும் கொண்டிருப்பது அவலத்திற்குரிய செய்தியாகும். மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி மொழிநலக் குருடர்களாக இருப்பது வேதனைக்குரியதாகும். போலியான நாகரிகத்தை நம்பி, படித்த பட்டப் படிப்பையும் அறிவையும் தன்மானத்தையும் விற்றுவிட்ட இதுபோன்ற தமிழ் வாத்திகள் எமது குமுகாயத்திற்குத் தேவையில்லை.

மேலே குறிப்பிட்ட தமிழ் வாத்திகளின் குருட்டுப் புத்திக்கும் அறிவுகெட்ட தனத்திற்கும் இன்னொரு எடுத்துக்காட்டும் உண்டு. அந்தக் குழந்தையின் பெயரைத் திரைச்சீலையில் பெரிதாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தார்களாம் இப்படி! ROOMANESHHWARRYA. இதனை எப்படித்தான் சரியாக படிப்பதோ தெரியவில்லை. குழந்தையின் பெயரில் கணியமும்(ஜாதகம்) எண்கணிதமும் புகுந்து விளையாடியிருக்கிறது என்பது மட்டும் நன்றாக புரிகிறது. படித்த தமிழன் புத்தி ஆரிய-ஆங்கில மலக்குழியில் சிக்கிச் சின்னபின்னமாகி போய்க்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.  • ஆய்தன் : நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள்! நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்.தமிழுயிர் தரமான செய்திகளை வழங்குகிறது.நம் நாட்டு தமிழ் சம்பந்தமான நடப்புகளை நயமாக தரும் தமிழுயிரை வாழ்த்துகிறேன். தமிழ் வாத்தியார்கள் சிலருக்கு இந்த செய்தி நல்ல சூடு. முதலில் தமிழ் ஆசிரியர் பெருமக்களுக்கே தமிழ் அறியாமல் உணர்ச்சியில்லாமல் இருப்பது வெட்கக்கேடு. தமிழ் ஆசிரியர் தமிழ் உணர்ச்சி பெற்றால் தமிழ் இனம் உயர்ச்சி பெறும்.

அன்புடன்,
தமிழ் நேசன்,
சிரம்பான்