வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

கைப்பேசியில் தமிழ் - மலேசியாவில் சாதனை


இன்றைய மின்னியல் உலகத்தில் கைப்பேசியின் ஆதிக்கம் ஒவ்வொரு மணித்துளியும் வளர்ந்துகொண்டே போகிறது. கைப்பேசியில் பரிமாறப்படும் குறுஞ்செய்தி மக்களின் நவின தொடர்பு ஊடகமாக காலூன்றி வருகிறது. இந்தக் குறுஞ்செய்தியைத் தமிழிலேயே பரிமாறிக்கொள்ள முடியாதா என்று தமிழர்கள் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்த காலக்கடத்தில் 'வாராது வந்த மாமணியாக' தற்போது தமிழ்க் குறுஞ்செய்தி சேவை மலேசியத்தில் அறிமுகமாகியுள்ளது.

தமிழ்மொழி வரலாற்றில் மேலும் ஓர் அருஞ்சாதனையாக அமைந்திருக்கும் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை, முரசு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியத்தின் முன்னணி நாளேடான மலேசிய நண்பனின் ஒத்துழைப்புடன் முரசு செல்லினம் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை கடந்த 5-4-2008இல் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்மொழியில் ஆகக் கடசியாக நிகழ்ந்துள்ள மாபெரும் வளர்ச்சியாகத் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை கருதப்படுகிறது. ஒரு காலத்தில் பனை ஓலைகளில் தொடங்கிய தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகள், செப்பேடுகள், தாள்கள் என பல்வேறு வடிவங்களில் தொடர் வளர்ச்சிகண்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் கணினித் திரையில் தடம்பதித்து இன்று கைப்பேசியில் கொடிநாட்டிப் பட்டொளிவீசி பறக்கிறது.

தமிழ்மொழியின் இந்த மாபெரும் வெற்றி, தமிழை உலகமொழிகளுக்கு நிகராக உயர்ந்து நிற்க வைத்துள்ளது; தமிழர்களைப் பெருமையடையச் செய்துள்ளது; உலக இனங்களுக்கு நிகராகத் தமிழர்களாலும் புதிய தொழில்நுட்பங்களைப் படைக்க முடியும் என்பதைப் பறைசாற்றியுள்ளது.

ஆங்கிலேயரின் தொழிநுட்பத்தைப் பிச்சை வாங்கிப் பிழைத்துக்கொண்டிருக்கும் சில மொழிகளுக்கு இடையில் தமிழ்மொழி தனக்கெனத் தனியாகத் தொழிநுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த அரிய சாதனையை முத்தெழிலன் என்ற ஒரு மலேசியத் தமிழர் உருவாக்கியிருக்கிறார் என்பது பெருமையிலும் பெருமையாகும்.

உலகம் கண்டுவரும் எந்தவொரு முன்னேற்றத்திற்கும் ஈடுகொடுத்து தமிழால் முன்னேற முடியும்; தமிழுக்கு அந்தத் தகைமை உண்டு எனபது மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. தமிழன் முயன்றால் தமிழால் சாதனை படைக்க முடியும்; தமிழில் சாதனை செய்ய முடியும் என்பதற்கு இந்த முரசு செல்லினம் தமிழ்க் குறுஞ்செய்தி சேவை ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும். இது, தமிழ் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய அரிய சாதனையாகும்.

தமிழ்மொழிக்கு மிக உயர்ந்த பெருமையைத் தேடித்தந்துள்ள முரசு நிறுவனம், திரு.முத்தெழிலன், மலேசிய நண்பன் நாளிதழ் ஆகிய தரப்பினருக்குத் தமிழுயிர் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

@ஆய்தன்: வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் நிகராகச் செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்ய வேண்டும். (பாரதிதாசன்)

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அண்மையில் ஒரு கைத்தொலைப்பேசியை இந்தியாவில் (தமிழ்நாட்டில்) வாங்கினேன். அது நோக்கியா 3110 ரகத்தை சார்ந்தது. இதில் தமிழ்மொழி (default) ஆக உள்ளது. இதின்வழி தமிழிலேயே குறுஞ்செய்திகளை அனுப்பலாம். குறுஞ்செய்தி பெறப்படும் கைத்தொலைப்பேசியிலும் தமிழ்மொழி இருந்தால் செல்லினம் போல மிகுதியான கட்டணம் செலுத்தாமல் வழக்கம்போல் உள்ள கட்டணத்திலேயே குறுச்செய்திகளை அனுப்பலாம்.
-அறிவன்

பெயரில்லா சொன்னது…

மேலும் அது Unicode அமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது. USB Cable வழி இணைக்கும்போது தமிழிலேயே விளக்கங்களை காணலாம். இவ்வேளையில் தமிழையும் இணைத்திருக்கும் Nokia நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். -அறிவன்