திருக்குறள் பள்ளிப் பாடமாகட்டும்!
உலகம் போற்றும் வாழ்வியல் நூலான திருக்குறளைத் தொடக்கப் பள்ளிகளில் தனிப்பாடமாகப் பயிற்றுவிக்க வகை செய்யும்படி கல்வியமைச்சுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத் தேசியத் தலைவர் மு.மணிவெள்ளையன் தெரிவித்துள்ளார். புனித நூலான திருக்குர்ஆன், பைபிள் நூல்களின் வரிசையில் உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூலாகத் திருக்குறளும் திகழ்கிறது. திருவள்ளுவர் இதனைத் தமிழில் இயற்றி இருந்தாலும் இதிலுள்ள 1330 அருங்குறட்பாக்களுள் எந்த இடத்திலும் தமிழ், தமிழர் என்னும் சொற்களைப் பயன்படுத்தாமல் 'மாந்தர்' போன்ற மாந்த இனத்தைப் பொதுவாகச் சுட்டும் சொற்களையே பயன்படுத்தி இருக்கின்றார். எனவேதான், இனம் கடந்து; சமயம் கடந்து; நாடு கடந்து உயர்ந்த கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள் என்று ஆன்றோரும் சான்றோரும் அழுத்தம் திருத்தமாக உரைத்து வருகின்றனர்.
ஆகவே, தமிழர்களையும் தமிழைப் படித்துவரும் இந்தியர்களையும் பொறுத்தவரையில் அவர்களுக்கு வாழ்வியல் நூலாகவும் நன்னெறி நூலாகவும் விளங்கும் திருக்குறள், தொடக்கப்பள்ளிகளில் பாடநூலாக அமைந்தால், எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்வு நல்வாழ்வாக அமையும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.
(நன்றி: மலேசிய நண்பன் நாளிதழ் 6 ஆகத்து 2007 தலையங்கம் சில மாற்றங்களுடன்)
- ஆய்தன் : ஐயா மு.மணிவெள்ளையனார் செயற்கரிய இப்பணியினைச் செய்துமுடிக்க எல்லாம்வல்ல இறைமை அருள்செய்ய வேண்டுகிறேன்.
1 கருத்து:
இது என்ன? அப்படின்னா மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் தற்போது திருக்குறள் பாடத்திட்டத்தில் இல்லையா?
உங்கள் பதிவின் settings - site feed - allow blog feeds - full என்று தர இயலுமா?
கருத்துரையிடுக