வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

ஞாயிறு, 10 மே, 2009

உதயாவின் விடுதலையும்; புதியதோர் விடியலும்

2007 திசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சரியாக 514 நாள்கள் தைப்பிங் தடுப்பு முகாமில் காவலில் வைக்கப்பட்டிருந்த மலேசியத் தமிழர்(இந்தியர்) உரிமைப் போராளி உதயக்குமார் 9-5-2009 பிற்பகல் மணி 2.55க்கு விடுவிக்கப்பட்டார்.

உரிமைப் போராளி உதயக்குமார் விடுதலையான மறுகனமே இடம்பெற்ற அதிரடியான அறிவிப்புகளும் நிகழ்வுகளும் இதோ:-

அதிரடி 1:- என்னை மன்னிக்கவும். இந்த விடுதலைக்காக நான் நன்றி சொல்ல விரும்பவில்லை.
அதிரடி 2:- என்னிடம் வழங்கப்பட்ட நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டாலும் கட்டாயமாக மறுத்துவிட்டேன்.
அதிரடி 3:- நிபந்தனைக் கடிதத்தில் கையொப்பமிட மறுத்ததால் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து காவல் வாகனத்தில் குண்டுக்கட்டாக தூக்கிப்போட்டு வெளியேற்றினர்.
அதிரடி 4:- நான் எந்தத் தவறும் செய்யவில்லை; அதனால், எந்த நிபந்தனைக் கடித்தத்திலும் நான் கையொப்பமிட அவசியமில்லை.
அதிரடி 5:- அவர் எந்த ஊரில் காலடி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டதோ, அந்த ஊருக்கு, சிறம்பானுக்கு, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வீர வரவேற்பு வழங்க, ராசாவிலுள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்று சேர்ந்தார்.
அதிரடி 6:- நான் இலண்டனில் உள்ள வேதமூர்த்தியுடன் எதிர்காலத் திட்டம் பற்றி பேசுவேன். ஆதரவாளர்கள் கோருவதுபோல் ஒரு கட்சி தோற்றுவிப்பதற்கான உணர்வுகள் வலுவாக இருக்குமானால், நாங்கள் நிச்சயமாக அது பற்றி தீவிரமாகச் சிந்திப்போம்.
அதிரடி 7:- இண்ட்ராப் புகழ் பெற்றிருப்பதால் சிலர் அதனை பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். ஒரு நகைச்சுவை இருக்கிறது: சீனர்களுக்கு “சிண்ட்ராப்” மற்றும் ஜெமமா இஸ்லாமியாவுக்கு “ஜிண்ட்ராப்” போன்றவை உருவாக்க வேண்டுமாம்.
அதிரடி 8:- தன்முன் மண்டியிட்டு தன்னுடைய காலைத் தொடவும் முத்தமிடவும் எத்தனித்த ஆதரவாளர்களை அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதிரடி 9:- உதயகுமாரை யார் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும், அவர் ஆண்டவனாக இருந்தாலும் கூட, விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர்.
அதிரடி 10:- எவ்வளவு இன்னல்கள் வந்த போதிலும் தன்னுடைய போராட்டம் தொடரும்; அதைத் தடுப்பதற்கு அதிகாரவர்க்கத்தை அனுமதிக்கப் போவதில்லை.
@ஆய்தன்:-
பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியில் வா..
எளியயென உன்னை இகழந்தவர் நடுங்க
புலியென செயல்செயப் புறப்படு வெளியில்.. (புரட்சிக்கவி பாரதிதாசன்)

கருத்துகள் இல்லை: