வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 20 ஏப்ரல், 2009

மலேசியாவில் ஈழ ஆதரவு அமைதிப் பேரணி

இலங்கையின் போர்ச்சூழல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை ஒவ்வொரு நாளும் வெளிவரும் செய்திகளில் பார்த்து, படித்து மனம் கலங்கி வருகின்றோம். மக்கள் செறிந்து வாழும் 'பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசு அறிவித்த பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தனது இறுதிக்கட்டத் தாக்குதலை உலக நாடுகளின் கண்டனக் குரல்களை மீறி தொடங்கிவிட்டது. மேலும், கடந்த 3 மாதங்களில் 4,100-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 8,800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

தமிழர்களின் குரல்களை ஒட்டுமொத்தமாக நசுக்கி, நடந்துகொண்டிருக்கும் இந்த மனிதப் பேரவலத்திற்கு இந்தியாவே பின்னணியில் இருந்து செயற்படுவதாக உறுதிபடுத்தப்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ ஆயுதங்களையும் ஆலோசனையும், இராணுவ வல்லுநர்களையும் வழங்கி இனப்படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவும் கண்டனத்தைத் தெரிவிக்கும் நோக்கில் மலேசியாவில் மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாள்:- எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.04.09)

நேரம்:-பிற்பகல் 12:00 மணி முதல்

இடம்:- கோலாலும்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்


அமைதியான முறையில் நடைபெறவிருக்கும் இந்தக் கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் உலக மக்களின் கவனங்களை ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் நம் தமிழ் உறவுகளுக்காகப் போராட வேண்டிய மிக அவசியமான காலக்கட்டத்தில் நாமும் இருக்கின்றோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சொந்த இரத்தம் ஈழத்தில் பெருமளவில் சாகிற இந்த வேளையில் தமிழர்கள் என கூறிக்கொள்ளும் நாம் எதையும் செய்யாமல் விட்டால் வரலாற்றுப் பெரும்பழியை நாம் சுமக்க வேண்டி வரும்.

ஒருநாள் அவர்களுக்காக விடுமுறை எடுப்போம். பெருந்திரளாக இந்திய தூதரகம் முன் அணித்திரள்வோம்.

ஈழத் தமிழர்களைக் காக்க ஒட்டுமொத்த மலேசியத் தமிழர்களின் குரல்களைப் பதிவு செய்வோம். அதிரும் கண்டனக் குரல்களால் இந்திய அரசைக் கண்டிப்போம்.

நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத்தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்?

இந்தப் போரை இந்தியாவே பின்னணியில் இருந்து நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்ற வேளையில் இந்தியா அதற்கு சரியான விளக்கம் தராமல் மெளனம் காப்பது ஏன்?

தடைசெய்யப்பட்ட நச்சு வாயுக்குண்டுகளைச் சிறிலங்காவிற்கு வழங்குவது ஏன்?

ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணைப் போவது ஏன்? இந்திய நாட்டு வம்சாவளித் தமிழர்களான நமக்கு இந்திய அரசை நோக்கி கேள்வி கேட்க எல்லாவித தகுதியும் இருக்கிறது.

போரின் துன்பத்தினை தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது தவறாகாது.

மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பது தவறாகாது.

ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.

இன்றைய நிலையில் ஈழத் தமிழ் உறவுகளுக்கு நமது ஆதரவு குரல்கள் மிகத் தேவையானதாய் இருக்கின்றன.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புக்கள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணிதிரள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

@ஆய்தன்:-

பொங்கும் தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு - (பாரதிதாசன்)

3 கருத்துகள்:

ttpian சொன்னது…

வழக்கம்போல் முக திடீர் பல்டி!
பிரபா நன்பன் இல்லையாம்!
அது சரி....சொக்கத்தங்கம்....நன்பன்,தமிழனுக்கு எப்படி நன்பனாக இருக்க முடியும்?

இருமேனிமுபாரக் சொன்னது…

பேரணி நடக்கவேண்டிய இடம் சிரீலங்கா தூதரகத்தின் முன்புதானே தவிர இந்தியதூதரகத்தின் முன்பல்ல. அடித்துப்பறித்து சுதந்திரம் வாங்கித் தரும் நாடு இந்தியா இல்லை. இப்பொழுது அந்த வேலையை அமெரிக்காதான் செய்து கொண்டிருக்கிறது.அவர்களாகவும் அந்த வேலையை செய்வார்கள்,நீங்கள் பணம் கொடுத்தாலும் செய்து கொடுப்பார்கள்.. ஏன் முயற்சி செய்து பார்க்கலாமே!!

குமரன் மாரிமுத்து சொன்னது…

//அடித்துப்பறித்து சுதந்திரம் வாங்கித் தரும் நாடு இந்தியா இல்லை//

இருமேனிமுபாரக் அவர்கள் உரைத்ததைப் படித்தேன். உண்மைதான்; மறுக்கவில்லை. இந்தியாவை சுதந்திரம் வாங்கித்தரக் கோரி இந்தியத் தூதரகத்தின் முன் பேரணி நடத்தவில்லை. நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்தாது ஆலோசனை செய்ததைப் போல் பேரணி ஏற்பாட்டாளர்கள் அறிவிழிகளாகவும் இல்லை. தமிழர்களைக் கொன்றுகுவிக்கும் இலங்கை அரசுக்கு உடந்தையாக இந்தியா தனது ராணுவ, அரசியல் உதவிகளை செய்துவருவதை கண்டிப்பதற்காகவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தகவல்களை அறிந்து, தெரிந்து ஆராயாமல் மூக்கை நுழைத்து மடத்தனமான உபதேசங்களைச் செய்வதை நிறுத்துங்கள்.

//ஏன் முயற்சி செய்து பார்க்கலாமே!!//

உங்களுக்கு நெஞ்சில் ஈரம் இல்லை என்றால் மூடிக் கொண்டு இருங்கள். இந்த ஏளனம் வேண்டாம்... மனிதர்களாக மாற முயற்சியுங்கள்.