தமிழ் அழிவாரியம்
நம் நாட்டில் தமிழ்க்கல்வி வளர்ச்சியையும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்ச்சியையும் இலக்கெனக் கொண்டு செயல்படும் தமிழ் அறவாரியம் வெளியிடும் 'திசைகள்' செய்தி இதழைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். அவர்களின் பணிகள் அருமை; நாட்டுக்கு மிகத் தேவை. அதற்காக அவர்களைப் போற்றுகிறேன். ஆனால், தமிழ் அறவாரியம் வெளியிடும் அந்த இதழில் தமிழைக் காணாமல் திடுக்கிட்டேன். அவ்விதழின் 95 விழுக்காடு பக்கங்கள் ஆங்கிலத்தில் அச்சாகி இருந்தது. ஒப்புக்குச் சப்பாணியாக தமிழுக்கு 5 விழுக்காடு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஐயா! தெரியாமல்தான் கேட்கிறேன். இது என்ன தமிழ் அறவாரியமா? இல்லை, தமிழ் அழிவாரியமா? தமிழ்ப்பள்ளிக்காக குரல் கொடுப்பார்கள்; தமிழ்க்கல்விக்காக துணைநிற்பார்கள்; தமிழ்மொழியை முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த தமிழ் அறவாரியம் தமிழுக்குக் குழி பறிப்பார்கள் என நானும் எமது மக்களும் நினைக்கவே இல்லை. தமிழ் அறவாரியம் தமிழை மறந்த வாரியமாக மாறி தமிழ் உணர்வாளர்களின் தூற்றலுக்கும் சாபத்திற்கும் தயவுகூர்ந்து ஆளாகிவிட வேண்டாம்.இத்தனைக்கும் அதன் நிருவாக உறுப்பினர்களில் பெரும்பெரும் தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமிழ்ப் போராளிகளும் இருந்தும்கூட இப்படியொரு கேடு நிகழ்ந்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக உள்ளது. தமிழ் அறவாரியம் தமது பெயருக்கு ஏற்றாற்போல் எமது இன்னுயிர்த் தமிழை முன்னெடுக்க வேண்டாமா? தமிழ் உணர்வையும் தமிழ்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டாமா? 'டோங் ஜியாவ் ஜோங்' போன்ற சீன கல்வியாளர்கள் அமைப்புடன் கூட்டு சேர்ந்து பணியாற்றத் தொடங்கியிருக்கும் தமிழ் அறவாரியம் சீனர்களைப் போல் மொழி உணர்வைப் பெறாமல் போனது ஏன்? தன் ஆட்சிக்கு உட்பட்ட சொந்த இதழில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காத தமிழ் அறவாரியம் இந்த நாட்டில் தமிழையும் தமிழ்ப்பள்ளியையும் காக்கும் என்பது நம்பத்தகுந்ததா? மொழி உணர்வில் சீனர்களைப் போல் அல்லாமல் மழுங்காண்டிகளாக ஆகிவிட்ட தமிழ் அறவாரிய நிருவாக உறுப்பினர்கள் மனம் மாறுவார்களா?
- ஆய்தன் : அடுத்த 'திசைகள்' இதழில் தமிழுக்கு முதலிடம் கொடுத்தால் தமிழ் அறவாரியம்! இல்லையேல் தமிழ் அழிவாரியம்!!





