வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 11 ஜூன், 2009

தமிழர் மனங்களைத் திசை திருப்பும் முயற்சிகளை முறியடிப்போம்

புலிகள் தலைமையின் நிலைமை குறித்து இருவேறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. என்றாலும், புலிகளின் முகமைத் தலைவர்கள் நிச்சயமாக இருக்கிறார்கள் - இருக்க வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.
இந்த இக்கட்டு நிறைந்த சூழலில், தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடிய வகையில் சில செய்திகள் பரப்பப்படுகின்றன. தமிழர்களின் நெஞ்சுரத்தை சிதறடிக்கும் வகையில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல நயவஞ்சகமாக - நாசுக்காக சில கட்டுரைகள் எழுதப்படுகின்றன.
மொத்தத்தில், தமிழர்களின் மனங்களைத் திசை திருப்பும் முயற்சியாக ஊடகப் போர் பாரிய அளவில் நடைபெறுகிறது. இந்த ஊடகப் போரைத் தமிழர்கள் முறியடிக்க வேண்டும்; நம்பிக்கையோடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
  • தமிழர்களின் நெஞ்சுரத்தை உரசிப்பார்த்த 2 கட்டுரைகள்
விடுதலைப் புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் குறித்த சரியான தகவல்களை அறிய தமிழர்கள் பெரிதும் நாடியவை தமிழ்நெட் மற்றும் புதினம் போன்றவைதான்.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லையா என்பது குறித்து இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக இந்த இணையங்களில் எந்த செய்தியும் இல்லாமல் இருந்து வந்தது.

ஆனால் இப்போது, ‘பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான்’ என்ற தொனியில் புதினம் தளத்தில் தி.வழுதி என்பவர் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. 'முன்னாலே சென்றோரின் பின்னாலே சென்றவரின் வழியினிலே..' என்ற தலைப்பில் அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கூடவே, ‘தமிழரின் தேசிய தலைவர் என்ற பெருமைக்குரிய பிரபாகரன் இறவா அமரத்துவம் கொண்டவர்’ என்றும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

அதேநேரம், அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் புதினத்துக்கு ஏற்புடையவையா என்பது தெரியவில்லை.

இன்னொரு பக்கம் தமிழ்நெட் தளத்தில், ‘இப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் மோசமான சூழலில் இருப்பது உண்மையே. ஆனால் மீண்டும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணையும் சூழல் உண்டாகி இருப்பதாகவும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துவிட்டு ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளை முன்னெடுப்போம், என்றும் கூறியுள்ளது.

இதற்கிடையில், மேற்கண்ட இரண்டு கட்டுரைக்கும் தக்க விளக்கமளிக்கும் வகையில் அதிர்வு இணையத்தில் கீழ்க்கண்ட செய்தி வெளிவந்துள்ளது. அதனை அப்படியே இங்கே முழுமையாகத் தருகின்றேன்.

  • தமிழர்களின் நெஞ்சுறுதியை வலுப்படுத்தும் அதிர்வு இணையக் கட்டுரை

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே!! என்ன ஒரு ஆக்கம்!! ஆம்... நாம் எதைப்பற்றி கூறுகின்றோம் என்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள். கடைசி நாள் போரில் 20,000 மக்கள் கொல்லப்பட்டும், முழு ஆண்டில் நடைபெற்ற போரில் 53,000 பேர் வரை கொல்லப்பட்டு, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் தடுப்புமுகாம்களில் கைதிகளாக உள்ள இந் நிலையில் இப்படி ஒரு விமர்சனம் தேவையா?

வெளிநாடுகளில் பல தமிழ் ஊடகங்கள் ஆய்வுக் கட்டுரை என்றபோர்வையில் தமிழர்களின் வீரத்தை, மானத்தை, தன்னம்பிக்கையை ஆராட்சி செய்கின்றன. இவர்கள் எழுதும் ஆராட்சிக் கட்டுரைகள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மெல்ல மெல்ல எம் தமிழின மக்களிடையே நஞ்சைக் கலக்கின்றன. இவ்வாறான கட்டுரைகள் நமக்குத் தேவை என புலம்பெயர் தமிழர்கள் கேட்டார்களா? இவற்றை எல்லாம் பக்கம் பக்கமாக ஏன் எழுதவேண்டும்? இதில் இருந்து இவர்கள் கூறவருகின்ற கருத்துக்கள் தான் என்ன? இவர்களை யார் தூண்டி விடுகிறார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும்.

நாம் தற்போது மிக முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் தளர்வடைந்துள்ள நிலையில், அது அரசியல் போராட்டமாக உருமாறி தற்போது புலம்பெயர் தமிழர்களாகிய எமது கைகளில் வீழ்ந்துள்ளது. நாம் அதனை செவ்வனவே செய்துவருவதால், பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு தள்ளப்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இவாறாக, எமது போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் புலம் பெயர் தமிழர்களின் மனங்களை திசை திருப்பும் நோக்கில் இக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தமிழீழத் தேசிய தலைவர் பற்றி பட்டிமன்றம் நடத்த யாருக்கு இங்கு அருகதை இருக்கிறது? தனது 14 வயதில் தனி ஈழம் காணப் புறப்பட்ட வீரன். தமிழ் வரலாற்றில் மாவீரன் நெப்போலியனை ஒத்த வீரனாகப் பார்க்கப்படுபவர், ஒரு கணனியும் தட்டச்சும் இருந்துவிட்டால் யாரும் கட்டுரை எழுதிவிடலாம். அதனை வாசிக்கும் எம் இன மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இக்கட்டுரையில் தமிழீழப் போராட்டத்திற்கு மிகவும் உதவியவர்கள் என்று சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் இறந்துவிட்டனர், மிஞ்சியிருக்கும் ஒருவர் யார் என எமக்குத் தெரியும் அவரும் களம்சென்று போராடப் போவதாகக் கூறட்டும். கூறுவாரா?

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பது தற்போதைய விவாதம் அல்ல. போராட்டமே எமது முழுமூச்சு, ஈழத்தில் நாள் தோறும் அல்லலுறும் எமது மக்களின் துயர்துடைக்கவேண்டும், அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவேண்டும், அதை விடுத்து எமது திசையை திருப்ப முயலும் இவ்வாறான முன்னாலே சென்றோரின் பின்னால், அல்லது பின்னாலே சென்றோரின் முன்னால் எனக் கட்டுரைகள் எழுதி கவிழ்க்க நினைப்பவர்களை நாம் இனம் காணவேன்டும்.

கவிதை பாடிக் கவிழ்த்தார் கலைஞர்! இன்று கட்டுரை எழுதிக் கவிழ்கிறான் கயவன். மீண்டெழுவோம் தமிழர்களே.. ஒரு மனதாய் போராடுவோம், அதுவும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.. எமது வெற்றி நிச்சயம்..

@நன்றி:- என்வழி, அதிர்வு

@ஆய்தன்:-

தருமத்தின் வாழ்வுதன்னைச் சூது கௌவும்..! இறுதியில், தருமமே வெல்லும்!

1 கருத்து:

கொண்டோடி சொன்னது…

அந்தக் கட்டுரை எழுதியதால் என்ன கவிழ்ந்தது என்பதை விளக்குவீர்களா?
இது தேவையா என புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்கவில்லை, காசு சுரண்டும் கூட்டமொன்று கேட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

எஞ்சியிருப்பவர் களம் சென்று போராடப் போவதாக ஏன் கூறவேண்டும்? இதுவென்ன அலுக்கோசுத்தனமான வாதம்? வவுனியாவிலே புலிகள்தான் களஞ்சியம் கொளுத்தினார்கள், புலிகள் ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்ற வை.கோ, சுப.வீ போன்ற அரசியற் கோமாளிகள் தான் உங்களுக்குச் சரி.

அது உங்கள் விருப்பம். ஆனால் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் அரசியல் அறிவிலிகள் என்று நினைத்துக்கொண்டு உங்களைப் போன்றவர்கள் உளறாமலிருப்பது நன்று.