வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 19 ஜூன், 2009

ஈழத்தில் இன்று நடந்தது எதுவும் முடிவல்ல.. தொடக்கம்!

நொச்சியும் முல்லையும்
நெய்தலும் பறிபோக
நூறாக நூறாக நூறாயிரமாகக்
கூறாகி நாராகிக்
குண்டேந்திச் சவமாகி
ஆறாகப் பாய்ந்திட்ட
அரும்புகளின் குருதிக்கு
சேறாகி அழுகும்
எம்செந்தமிழர் பிணத்துக்கு
சிங்களனே, இந்தியனே
சீனனே பதில் என்ன?

ஈழம் இனி...
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது என்று கருதிக் கூத்தாடுகின்றவர்கள், இலங்கையில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் இருக்கின்றார்கள். எந்த ஒரு போரிலும், களங்கள் மாறி மாறி வரும். களத்தை இழக்கும் போதெல்லாம், போரையே இழந்து விட்டதாக எண்ணிக் கலங்க வேண்டியதில்லை.
எந்த நோக்கத்திற்காகப் போர் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கும் வரை, போர் ஓய்வதில்லை.
ஈழ மக்களின் நல வாழ்வு, சனநாயக உரிமைகள் முதலானவற்றை மீட்டுக் கொள்வதற்காகவே, அங்கு விடுதலைப் போர் தொடங்கப்பட்டது. அவை முன்னிலும் இப்போது மோசமடைந்துள்ளனவே தவிர, முன்னேற்றம் என்பது முனையளவும் இல்லை. எனவே அங்கு இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு வடிவத்தில் அந்தப் போர் மையம் கொள்ளும் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களை அழித்துக் கொண்டு மக்களுக்காகப் போராடுபவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் அந்த மக்களைச் சுற்றியே சுழலும் தன்மையது என்பதை உண்மையானவர்கள் அறிவார்கள்.
அவரைக் குறை சொல்பவர்களுக்கும், கொச்சைப் படுத்துகின்றவர்களுக்கும் காலம் விடை சொல்லும்.
எமது தமிழ் ஈழப் போராட்டத்தில் - தாயகப் போராட்டத்தில் - தனிநாடு போராட்டத்தில் இன்று நடந்துவிட்டிருப்பவை எதுவும் முடிவல்ல... தொடக்கம்!
@ஆய்தன்:-
கலங்காதிரு மனமே - காலம்
கண்டிப்பாக பதில்சொல்லும்
காத்திரு மனமே..!!

கருத்துகள் இல்லை: