வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 6 ஜூன், 2009

வரலாறு காணா இனப்படுகொலையை மறைத்து, துரோகத்துக்குத் துணைபோனது ஐ.நா

நாம் வசிப்பது நாகரிக உலகில்தானா என்ற பெரியதொரு ஐயம் வருமளவுக்கு இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டுகொள்ளாமலே விட்டுவிட்டது ஐக்கிய நாடுகள் சபை. கண்முன்னே நடந்த ஒரு கொடுமையை - கொடூரத்தை - கொலைப் பாதகத்தைக் கண்டுகொள்ளாமலே போய்விட்டது ஐ.நா பேரவை. வரலாறு காணாத மாபெரும் இனப்படுகொலையை மறைத்து துரோகத்திற்குத் துணைபோய்விட்டது ஐ.நா.



ஈழத்தில் நடந்த இறுதிப் போரின்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு மன்றம் நேற்று (5-6-2009) விவாதித்தது.

இனி இலங்கைப் பிரச்சினை மற்றும் இனப்படுகொலை குறித்து ஏதும் பேசுவதாக இல்லை என்ற அறிவிப்புடன் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தனது கடைசிக் கூட்டத்தை முடித்துக் கொண்டுள்ளது ஐ.நா. பாதுகாப்புப் மன்றம்.

அகதிகள் முகாமிலிருந்து 13 ஆயிரம் பேர் காணாமல் போனது தொடர்பாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அப்படி எந்த விளக்கமும் தரவே இல்லை.

‘வில்லன்’களுடன் வந்த பான்!

இக்கூட்டத்தில் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனது ஆலோசகர்களான விஜய் நம்பியார் மற்றும் கிம் வோன் சூ ஆகியோருடன் கலந்து கொண்டார்.

பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் மிசல் மோன்டாசும் அவருடன் சென்றார். ஈழத் தமிழர் படுகொலையில் அனைத்தையும் திசைமாற்றி விட்டவர்கள் இந்த விசய், சதீசு நம்பியார்கள் என்பது நினைவிருக்கலாம். (இந்தியாவின் இன்னும் இரு மலையாள அதிகாரிகள் நாராயணன் மற்றும் மேனனும் தங்கள் பங்குக்கு இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு குழி பறித்தனர்.)

‘ராஜபக்சேவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்!’

பான் கி மூனிடம் செய்தியாளர்கள் அகதிகள்முகாமிலிருந்து காணாமல் போனவர்கள் குறித்து கேட்டபோது, “போர் பாதித்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களைப் பிடித்து வைத்திருப்பது குறித்து நான் அதிபர் இராசபக்சேவுடன் பேசியுள்ளேன். இலங்கை வெளியுறவு அமைச்சரிடமும் பேசியுள்ளேன்” என்றார்.

அப்போது உடன் இருந்த இலங்கை தூதர், சம்பந்தப்பட்ட மருத்துவர்களைச் சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு, இலங்கை சட்ட திட்டத்தின்படி அனுமதி தரப்படுகிறது என்றார்.

அகதிகள் முகாம்களிலிருந்து காணாமல் போன தமிழர்கள் குறித்தோ, கடைசி நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்தோ பான் கி மூன் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

நேற்றைய கூட்டத்தோடு இனிமேல் இலங்கை தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆக, மனித குலத்தில் நடந்த பேரவலம் என்று கூறப்பட்ட ஒரு துயரத்தை, வெறும் கண்துடைப்பு வார்த்தைகளோடு முடித்துக் கொண்டுள்ளது ஐநா.

‘சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பிடிவாதம் காரணமாக ஒரு இனப்படுகொலையே முழுமையாக மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் மவுன சாட்சியாக நிற்கின்றன.

இந்தியா உண்மையில் வல்லரசானால் அந்தப் பிராந்தியம் எந்த அளவு அதன் ஆதிக்க காலனியாக மாறும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு!’ என பிரிட்டிஷ் பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன.

@ஆய்தன்:-

உண்மையின் குரல்வளை..

அதிகாரக் கூட்டத்தினரால் நெறிக்கப்பட்டுவிட்டது!

நீதியின் கருவிழிகள்..

ஆதிக்க வருக்கத்தினரால் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது!

அறத்தின் உயிர்மூச்சு..

தற்கால காட்டுமிராண்டிகளால் துடிதுடிக்கப் பறிக்கப்பட்டுவிட்டது!

கருத்துகள் இல்லை: