வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 7 ஜனவரி, 2009

மெல்லத் தமிழ்ப்பள்ளிகள் இனி எழும்!

2009 கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தமிழ்ப்பள்ளிகளைப் பொறுத்தவரையில் இந்தக் கல்வியாண்டு மிகச் சிறப்பாகவே தொடங்கியுள்ளது எனலாம். காரணம், தமிழ்ப்பள்ளிகளில் பதிந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை பேரளவில் அதிகரித்துள்ளது.

கடந்த 2008இல் பதினெட்டாயிரம் (18,000) மாணவர்கள் மட்டுமே முதலாம் வகுப்புக்குப் பதிந்தனர். ஆனால், இவ்வாண்டில் ஏறக்குறைய இருபதாயிரம் (20,000) மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பதிவுசெய்துள்ளனர். இதன்வழி தமிழ்ப்பள்ளிகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 125,000 (ஒரு இலக்கத்து இருபத்து ஐயாயிரம்) வரையில் உயரக்கூடும்.

இது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்; தமிழ்ப்பள்ளிகள் நாட்டில் பெரும் எழுச்சியுடன் வளர்ந்து வருகின்றன என்பதற்குப் சான்றுபகரும் செய்தியாகும்.

மேலும், இவ்வாண்டில் புதிதாக 1522 தற்காலிக ஆசிரியர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*நாட்டின் அரசியல் சூழ்நிலை மாற்றம்

*தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு

*தமிழ்ப்பள்ளிகளின் கல்வித்தர உயர்வு

முதலானவை இவ்வாண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கலாம்.

உண்மையில், தமிழ் மக்களின் முதல் தேர்வாகத் தமிழ்ப்பள்ளிகள் அமைந்திட வேண்டும். தமிழர்கள் தங்கள் குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்குத்தான் அனுப்பவேண்டும் என்பதில் குறியாக இருக்க வேண்டும்.


ஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது? ஏறக்குறைய 90,000 தமிழ்(இந்திய)க் குழந்தைகள் வேற்றுமொழிப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது சங்கடத்திற்குரிய உண்மையாகும்.

இந்த நிலைமை வெகு விரைவில் மாற வேண்டும் – மாற்றப்பட வேண்டும்.

கட்டடம் சரியில்லை – வசதிகள் இல்லை - திடல் இல்லை - போக்குவரத்து இல்லை - ஆசிரியர்கள் சரியில்லை - தலைமையாசிரியர் சரியில்லை என்று நொண்டிச் சாக்குகளைச் சொல்லிச் சொல்லித் தமிழ்ப்பள்ளிகளைத் தட்டிக்கழிக்கும் எமது மக்கள் இனியும் தாமதியாமல் சிந்திக்க வேண்டும்.

ஒட்டுமொத்த தமிழர்(இந்தியர்)கள் தமிழ்ப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க முன்வந்தால்.....

*தமிழ்ப்பள்ளி கட்டடங்களைப் புதிதாகக் கட்டிவிடலாம் அல்லது அரசாங்கத்தைக் கட்டச் சொல்லி வற்புறுத்த முடியும்.

*இல்லாத வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திவிட முடியும். (இப்போதுகூட அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளிகளை அரசாங்கத்தின் உதவி இல்லாமலே எமது தமிழ் மக்கள் சொந்தமாக உருவாக்கியுள்ளனர்.)

*தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புதிய பள்ளிகளைக் கட்ட ஆவனசெய்ய முடியும்.

*சரியில்லாத தலைமையாசிரியர்களையும் ஆசிரியர்களையும் கண்டித்தோ அல்லது தேவையானால் தண்டித்தோ சீர்படுத்த முடியும்.

*நாட்டில் வானுயர்ந்து நிற்கும் தேசியப் பள்ளிகள், சீனப்பள்ளிகளுக்கு நிகராக எமது தமிழ்ப்பள்ளிகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க முடியும்.

இத்தனையும் நடக்குமா என்றால் கண்டிப்பாக நடக்கும்!! எப்போது தெரியுமா?

நம்மோடு வாழும் மலாய்க்காரர் போல் - சீனர்கள் போல், நாட்டில் உள்ள அனைத்துத் தமிழ்க் குழந்தைகளும் இந்தியக் குழந்தைகளும் ஒருவர் பாக்கியில்லாமல் எப்போது தமிழ்ப்பள்ளிக்குச் செல்கிறார்களோ அப்போது..!!

@ஆய்தன்:-

இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்

என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்

துன்பங்கள் நீங்கும் - நெஞ்சினில்

தூய்மை உண்டாகிடும்; வீரம் வரும்! (-பாரதிதாசனார்)

2 கருத்துகள்:

மு.வேலன் சொன்னது…

//"மெல்லத் தமிழ்ப்பள்ளிகள் இனி எழும்!"//

நம்பிக்கை தரும் தலைப்பு. மகிழ்ச்சி. நன்றி.

ஆதவன் சொன்னது…

@மு.வேலன் அவர்களே,

யானையின் பலம் தும்பிக்கையில்
மனிதனின் பலம் நம்பிக்கையில்
தமிழனின் பலம் தமிழ்நம்பிக்கையில்!

நல்வரவுக்கு நன்றி!