வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வெள்ளி, 2 ஜனவரி, 2009

தமிழில் காசோலை எழுத முடியும்

பொருளக் காசோலைகளைத் தமிழிலேயே எழுத முடியுமா?

முடியும் என்கிறார், திருவாளர் செபசுதியன் அவர்கள்.
அதன் விவரம் அறிய தொடர்ந்து படிக்கவும்.


கன்னித்தமிழில் காசோலை எழுதுவதற்கு அரசாங்கம் நமக்குக் கொடுத்திருக்கும் அரிய வாய்ப்பை நம்மவர்கள் பயன்படுத்தாமல் இருப்பது மிகுந்த வருத்தம் அளிப்பதாக எம்.சி.ஐ.எசு சூரிக் காப்புறுதி நிறுவனத்தைச் சேர்ந்த திருவாளர் செபசுதியன் தெரிவித்தார்.

நம்மிடையே பெரிய பெரிய வணிகர்கள் நிறைய பேர் உள்ளனர். பெரிய அளவிலே அவர்களின் பணம் வங்கிகளில் புரள்கிறது. இவர்கள் அனைவரும் தமிழிலேயே காசோலையை எழுதினால் பொருளகத்தில் நம்மவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்படி ஒரு அரிய வாய்ப்பை நாம் ஏன் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று திருவாளர் செபசுதியன் நமது வணிகர்களைப் பார்த்து கேள்வி எழுப்புகிறார்.

தமிழில் காசோலை எழுதுவதில் எந்தச் சிரமமும் இல்லை. ஒருவேளை வங்கியில் முடியாது என்று சொன்னால் உடனடியாக தேசியப் பொருளகத்தைத் (பேங்க் நெகாரா) தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தொடக்கத்தில் தமக்கும் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், இன்று எந்தவித தடங்கலும் இல்லாமல் மாதத்திற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான காசோலைகளைத் தமிழிலேயே எழுதி வருவதாகக் கூறினார்.

பெரும்பாலும் பலருக்கு இந்தத் தகவல் தெரியும். இருப்பினும் தெரியாதது போல இருக்கும் தன் நண்பர்கள் மேல் கோபத்தை வெளியிட்டார் அவர். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று சிந்தித்துக் கொண்டிராமல், நமக்கு உள்ள இந்த அரிய வாய்ப்பை நாம் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

இது குறித்து உதவிகள் தேவைப்படுவோர் தம்மை நாடினால் முழு விளக்கம் அளிக்கவும் காத்திருப்பதாகவும் உடனே தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் திருவாளர் செபசுதியன் கேட்டுக்கொண்டார்.

வங்கியில் தமிழில் காசோலை எழுதும்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இந்த அகப்பக்கத்திற்கு சென்று விவரம் அறியலாம்:- http://www.bnm.gov.my.infobank/

இது குறித்து மேல் விவரம் அறிய திருவாளர் செபசுதியன் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய கைப்பேசி எண்:- 012-5291990

  • நன்றி: மக்கள் ஓசை 23.12.1008
@ஆய்தன்:-
தமிழிலேயே காசோலை எழுதிவரும் திரு.செபசுதியன் அவர்களின் தமிழ்ப்பற்றுக்கும் தமிழ் உணர்வுக்கும் தமிழுயிர் தலைவணங்குகிறது. அவரைப் போல் நாட்டில் உள்ள மற்ற வணிகர்கள், தமிழர்களின் பணத்தின் மீது மட்டுமே குறியாக இல்லாமல் தமிழைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் விழிப்பாக இருக்க வேண்டும். வாழும் காலத்தில் தமிழுக்கும் தமிழர்க்கும் இப்படி ஏதாவது நன்மை செய்யுங்கள் வணிகப் பெருமக்களே..!

தனக்கென்று வாழ்ந்தது போதும் - இனி

தமிழ்க்கென்று வாழ்தல் வேண்டும்..!

  • பி.கு:கேமரன் மலை திருவள்ளுவர் நன்னெறி மையம் பல ஆண்டுகளாகத் தமிழில் காசோலை எழுதிவரும் தகவலைத் தமிழன்பர் கரு.யோகா அவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார். இப்படி, தமிழில் காசோலை எழுதும் அன்பர்கள் இருந்தால் தமிழுயிருக்குத் தகவல் தெரிவிக்கவும். இதனால் பலர் பயனும் தன்னம்பிக்கையும் பெறுவர்.

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Tamilil kasolai ellutha mudiyuma? enra seithiyai seithithallhal moolamum padithein.
Cameron malai thiruvalluvar naneri maiyam pala aanduggala imm muraiyai kaiyandu vanthulathu.Vetriyaium thanthulathoodu tamil katra tamilarkalukku vellai kidaithullathu.

ஆதவன் சொன்னது…

#கரு யோகா அவர்களே,

மிகவும் பயனான செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தமிழில் காசோலை எழுதிவரும் கேமரன் மலை திருவள்ளுவர் நன்னெறி மைய தமிழன்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நாட்டில் இப்படி தமிழில் காசோலை எழுதுபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தமிழுயிருக்குத் தகவல் தெரிவித்தால் பலருக்கும் பயனாகவும் தன்முனைப்பாகவும் இருக்கும்.

கேமரன் மலை திருவள்ளுவர் மையத்தின் தமிழ்ப்பணிகளை ஓரளவு அறிந்துள்ளோம். தங்கள் பணிகள், நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைப் படங்களோடு தமிழுயிருக்கு விடுத்து வைத்தால் கண்டிப்பாக வெளியிடுவோம்.

வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா!

தாய்மொழி சொன்னது…

தங்களின் காசோலை இடுகை மிக நன்று இருப்பினும் அந்த கூற்றுகளை அவ்வளவாக ஏற்புடையது அல்ல என்று நான் கருதுகிறேன். தகுந்த ஆதாரம் காண்பிக்க பட்டிருந்தாலும் அனைத்து சூழ்நிலையிலும் சரி வராது என்பது என் கருத்து.

ஆதவன் சொன்னது…

#தாய்மொழி,

//அனைத்து சூழ்நிலையிலும் சரி வராது என்பது என் கருத்து.//

மலாய்க்காரருக்கும் சீனருக்கும் எப்படி தமிழில் எழுத முடியும்? என்று கேட்கிறீர்கள் போலும்.

அது தேவையற்ற ஒன்று.

ஆனால், தமிழருக்குத் தமிழரே காசோலை வழங்கும்போது தமிழில் எழுதலாமே!

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

ஆக்கமாகச் சிந்தித்தால் எதையும் செய்யலாம் - சாதிக்கலாம்.

சீனர்கள் தங்கள் தாய்மொழியில் சாதிக்காததா?

தமிழனுக்கு எதிலுமே தாழ்வு மனப்பான்மை அதிகம்..! தன்னம்பிக்கை குறைவு..!

தாழ்வு மனப்பான்மையை அகற்றி தன்னம்பிக்கையை வளர்த்தால் தமிழனின் வெற்றி விண்ணைத் தொட்டுவிடும்.

Wayang Kulit Malaysia சொன்னது…

நண்பரே,
பெருநர் பெயரை ஆங்கிலத்திலும், தொகையை தமிழிலும் எழுதலாமா? அல்லது இரண்டுமே தமிழில் தான் இருக்க வேண்டுமா?

ஆதவன் சொன்னது…

#மது அவர்களே,

திரு.செபசுதியன் அவர்கள் இரண்டையுமே தமிழில்தான் எழுதியுள்ளார்.

நான் பார்த்து சீனர்களும் பெயர், தொகை இரண்டையுமே சீனமொழியில்தான் எழுதுகின்றனர்.

காசோலை பயன்படுத்தும் நம்மவர்கள் மாற்றங்களைச் செய்ய முயன்றால் நல்ல மாறுதல்களைக் காணலாம், தமிழால் முன்னேற்றங்கள் பெறலாம்!!

தங்களின் இராட்டினம் வலைப்பதிவு கண்டேன். நல்ல தொடக்கம். பாராட்டுகள். வலைப்பதிவு உலகில் தனி முத்திரை பதிக்க எமது வாழ்த்துகள்.

நல்ல பதிவுகளை - நல்ல தமிழில் நன்றே தருக மது..!

Sivaganapathy சொன்னது…

திரு.செபசுதியன் அவர்கள் தன் உரிமையை சரியாக பயன் படுத்தி இருகிறார்.
வாழ்த்துக்கள்!!!
மிகவும் பெருமையாக இருக்கிறது !!!!

எனக்கு இன்னும் காசோலை பயன் படுத்தும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படி கிடைத்தால் நானும் காசோலையில் தமிழ் மொழி நிச்சயமாக பயான்படுதுவேன் .

காசோலை அன்பர்களே / வியாபரிகளே / தொழில் அதிபர்களே ஒரு வேண்டுகோள்

நம் காசோலையில் தமிழ் மொழி பயன் படுத்துவதும் நமது உரிமைதான் !!!
பிறகு உரிமை பறித்துவிட்டார்கள் என்று கொடி பிடிக்க வேண்டாம் !!!

மு.வேலன் சொன்னது…

நல்ல தகவல். இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன். நன்றி.

//இவர்கள் அனைவரும் தமிழிலேயே காசோலையை எழுதினால் பொருளகத்தில் நம்மவர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.//

தமிழில் காசோலை எழுதுவது தமிழ் பற்றை வெளிபடுத்தினாலும், நம்மவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என உயர்ந்த எண்ணம் கொண்டுள்ள திரு செபசுதியன் பாராட்டுக்குரியவர். நன்றி.