வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

ஈழக் கொடுமை:- மலேசியத் தமிழர் தற்கொலை


இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கும் செய்திகளை நாளிதழ்களில் படித்துவிட்டு மனமுடைந்துபோன தமிழ் இளைஞர் ஸ்டீவன் சுமையுந்தின்(லாரி) முன் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

நெஞ்சை நெகிழவைக்கும் இந்தக் கொடூர சம்பவம் 2.2.2009 காலை 9.30 மணியளவில் மலேசியாவில். சொகூர் மாநிலம், ஊலுதிராம் என்னும் ஊரில் நடந்தது.

சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த அவ்விளைஞர் திடீரென அங்கு வேகமாக வந்த சுமையுந்தின் எதிரில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக சொகூர் நடுவண் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஸ்டீவன் செகதேசன் (வயது 29) கடந்த பத்து நாள்களாக பித்துப் பிடித்தவர் போல் காணப்பட்டதாகவும் அவர் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை சிறிலங்கா இராணுவம் ஈவி இரக்கமின்றி கொன்று குவிப்பதை பற்றிய செய்திகளை நாளிதழ்களில் படித்து மிகுந்த மனவருத்தமும் ஆழ்ந்த துன்பமும் அடைந்திருந்ததாக அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்காக தானும் ஒருநாள் உயிரைக் கண்டிப்பாகத் துறப்பேன் என்று நண்பர்களிடம் அவர் கூறிவந்துள்ளார்.

திருமணமான இவருக்கு மனைவி உண்டு. இவரின் இந்தத் தற்கொலை மலேசியத் தமிழர்களை அதிர்ச்சிக்கடலில் மூழ்கடித்துள்ளது. அன்னாரின் நல்லுடல் இன்று 3.2.2009 பிற்பகல் 3.00 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது.

@செய்தி:- மலேசிய நண்பன் நாளிதழ்

குறிப்பு:- இப்படிப்பட்ட தற்கொலைகளில் தமிழ் மக்கள் யாரும் தயவுசெய்து ஈடுபட வேண்டாம் என தமிழுயிர் வேண்டுகிறது.

@ஆய்தன்:-
ஒவ்வொரு தமிழனும் இறக்கின்றான் - அவன்
இருப்பவன் கண்களைத் திறக்கின்றான்

2 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

நண்பா! தமிழனின் வாழ்வே உயிர்ப்பலிகளால் நிறைந்து விட்டது.

வீரத் தமிழ் மகனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.

பெயரில்லா சொன்னது…

ஈழத் தமிழர்களுக்காக தன்னுயிரையே மாய்த்துக் கொண்ட இளைஞன் ஸ்டீபனை வணங்குவோம்.
தமிழீழம் தளைக்கும்.
மீண்டும் மீண்டும் தற்கொலைகள் வேண்டாமே...!