ஈழம்: ஐ.நாவைக் கண்டித்து மலேசியத்தில் பேரணி
ஈழத் தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து மலேசியாவில் நாளை (27.02.2009) கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது.
இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினால் மனிதப் பேரலங்களும் கொடுமைகளும் நடந்தேறுகின்றன.
அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் உடனடி நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டைக் கண்டித்து மலேசியாவில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினைக் கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் கண்டனப் பேரணியில் மலேசிய தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய நிலையில் போரை நிறுத்துவதே உடனடித் தேவையாகும். ஆனால், அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்காமல், இலங்கையில் என்னதான் நடக்கிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காப்பது உலகத் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எங்கு எல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கு எல்லாம் அப்பாவி மக்களை பாதுகாக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் பணியாகும். ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இன்று வரையில் எந்தவொரு தீர்க்கமான முடிவினையும் முன்வைக்காமல் இருப்பது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலமே மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதைத் தடுப்பது மட்டுமின்றி இலங்கை முழுவதிலும் மனித உயிர்களையும் காப்பாற்ற முடியும்.
தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம், உணவு, மருந்து, குடிதண்ணீர், தமது சொந்த கிராமங்களுக்குப் பயமின்ற திரும்புதல் என்பனவே வன்னி மக்களின் உடனடிக் கவலைகளும் தேவைகளும் ஆகும்.
ஆனால், சிங்கள பேரினவாத அரசு மக்களை பயமுறுத்தியும், கொலை செய்தும், காயமுற வைத்தும் அடிப்படை தேவைகளை வழங்காமலும் மறுத்து வருகின்றது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே எரிகுண்டுகள், கிளசுடர் வகை கொத்துக்குண்டுகள் உட்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றது.
இவர்களை சாவின் விளிம்பில் இருந்து உலக மனித உரிமை காவலன் என பறைசாற்றிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபை மட்டுமே காப்பாற்ற முடியும்.
சாவின் விளிம்பில் நின்று கொண்டு போரின் துன்பத்தினைத் தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது நாகரீகமடைந்த மனித குலத்தின் அடிப்படை கடமையாகும்.
சாவின் விளிம்பில் நின்று கொண்டு போரின் துன்பத்தினைத் தொடர்ந்து அனுபவிக்கும் மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆதரவு வழங்குவது நாகரீகமடைந்த மனித குலத்தின் அடிப்படை கடமையாகும்.
மனித உரிமைகள் மீறப்படுகின்ற போது இன்னொரு சக மனிதன் என்ற முறையில் அதற்காக கண்டனம் தெரிவிப்பதே உண்மையான மனித நேயமாகும்.
ஈழத் தமிழ் உறவுகள் அங்கே நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகின்ற வேளையில் அவர்களுக்காக கண்டிப்பாக குரல் கொடுக்க வேண்டியது நமது தார்மீக கடப்பாடு ஆகும்.
நம் தமிழ் உறவுகள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலையைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்புவது தமிழீழ மக்கள என்றென்றும் தலை நிமிர்ந்து வாழ வழி வகுக்கும். நம் உறவுகளின் துயர் துடைக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சி ஈழத்தில் அமைதி மலரச் செய்யும் என நம்பலாம்.
அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்த நடக்கவிருக்கும் இப்பேரணியில் அனைத்து மக்களும் அரசியல் கட்சிகள், பொதுக் கட்சிகள், அமைப்புகள் பேதமின்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அணித் திரள வேண்டுமென உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் பசுபதி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள இப்பேரணி கீழ்க்கண்டவாறு நடைபெறும்:
தேதி:- 27. 02. 2009 (வெள்ளிக்கிழமை)
நேரம்:- நண்பகல் மணி 1.00 லிருந்து
இடம்:- ஐநா அலுவலகம், டாமன்சாரா ஐட்சு,
சாலான் டுங்குன், கோலாலம்பூர்.
மேல் விபரங்களுக்கு: தொலைபேசி எண் 03-26980622.
மேலும், இயக்கங்களில் பிரதிநிதிகள் பொதுமக்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளும்படி பத்திரிகை அறிக்கைகள் விடும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
@நன்றி: புதினம்@ஆய்தன்:-
தமிழ் மக்கள் ஒன்றிணைவோம் - உயிர்த்
தமிழ் மண்ணை மீட்டெடுப்போம்..!
1 கருத்து:
சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படும் ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றுவதில் இந்த உலகமே அமைதியானதேன்...
எவருக்கும் கண்கள் இல்லாமல் போனதேன்..
வாருங்கள்... நம் உடன்பிறப்புகளுக்காக குரல் கொடுப்போம்.
நமது உரிமைகளைத் தட்டிக்கேட்போம்..
இந்த உலகத்தின் கண்களைத் திறக்க வைப்போம்..
தமிழ் குமரன்,
கோல கெட்டில், கெடா
tamilan66@gmail.com
கருத்துரையிடுக