வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 19 பிப்ரவரி, 2009

கொல்லப்படுவது தமிழன் மட்டுமல்ல.. புத்தனும்தான்!!

கழுத்தறுபட்ட முதியவள்
கதறும் குழந்தை
புத்தருக்குத் தூக்கு..!

xxxxxxxxxxxxxxxxxxxx

யாரோ வீசிய குண்டு,
எரிந்து தணலானது
போதிமரம்

xxxxxxxxxxxxxxxxxxxxx

குருதியில் சிதறுகிறது
புத்தன் வளர்த்த
அமைதி

xxxxxxxxxxxxxxxxxxxxx

கண்மூடி இருக்கிறாய் புத்தா
திறந்து பார்
உன் காலடியில் குருதி

xxxxxxxxxxxxxxxxxxxxx

சொல்லமுடியாது
புத்தனும் ஆவேசமாகலாம்
இந்நிலை கண்டு!

xxxxxxxxxxxxxxxxxxxxxx

யாராவது எழுப்புங்கள்
நீண்ட நெடுந்துயிலொன்றில்
ஆழ்ந்திருக்கிறது அமைதி!

xxxxxxxxxxxxxxxxxxxx

இரத்தத்தில் மிதக்கிறேன்
காகிதம் கொண்டுவா
கவிதைகள் பிறக்கட்டும்

xxxxxxxxxxxxxxxxxxxxx

வழியில்லாத பாதையில்
வலியைச் சுமந்தபடி செல்கிறது
புத்தரின் போதனைகள்

xxxxxxxxxxxxxxxxxxxxx

கதறக் கதறக் கற்பழித்து
அப்பெண்ணோடு கொல்லப்பட்டான்
புத்தன்

xxxxxxxxxxxxxxxxxxxxx

யாரேனும் பார்த்தீர்களா?
நான் தவற விட்ட அம்மாவும்
என் பொம்மைகளும்..!

xxxxxxxxxxxxxxxxxxxxxx

புத்தனைச் செவிடாக்குகிறார்கள்
துப்பாக்கிச் சத்தங்களால்
புத்தனைக் குருடாக்குகிறார்கள்
கண்முன்னே கொல்லப்படும் சிசுவால்
புத்தனை ஊமையாக்குகிறார்கள்
காலால் மிதிக்கப்படும் மனிதநேயத்தால்
புத்தனைக் கொல்லுகிறார்கள்
ஒரு இனத்தை அழிக்கும் ஆயுதத்தால்...

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

@நன்றி:குழந்தை ஓவியம்

@ஆய்தன்:-

ஈழத்து மண்ணில்

எமது தமிழின உறவுக்கு

இத்தனைக் கொடுமைகள்

நடக்குமென்று தெரிந்துதான்

கண்களை மூடிக்கொண்டாயா புத்தனே..!!!

3 கருத்துகள்:

ஆதவா சொன்னது…

மிக்க நன்றி ஆய்தன்....

அடிக்கடி என் தளம் வருகை தாருங்கள்!!

குமரன் மாரிமுத்து சொன்னது…

ராட்சச ராசபட்சேவால்
காவி அங்கிகள்
கொல்லாமையை கொலை செய்கின்றன

கரைபடிந்த சிங்களச் சண்டாளர்களால்
புத்தனும் என்றோ பித்தன் ஆனான்

Tamilvanan சொன்னது…

கண்மூடிய புத்தனிடமும் துப்பாக்கி
காலடியில் தமிழின குருதி