வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

சனி, 7 பிப்ரவரி, 2009

மலேசியாவில் இலங்கைத் தமிழர் தீக்குளித்து பலி

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் போரில் கொல்லப்படுவதால் மனமுடைந்த இலங்கை இளைஞர் மடைராசா (வயது 28) தீக்குளித்துப் பரிதாபமாகப் பலியானார். தீக்குளிக்கும் முன் தமிழ்நாட்டிலிருக்கும் வைகோ வழியாக ஒபாமாவுக்கு வழங்குவதற்காக உருக்கமான ஒரு கடிதத்தையும் எழுதிவைத்துள்ளார்.

6-2-2009 மலேசிய நேரப்படி காலை 6.30 மணியளவில் சிரம்பான், தம்பின் ரகாங் சாலையில் உள்ள ஒரு கடைவரிசையின் கீழ்த்தளத்தில் இந்தப் பரபரபான சம்பவம் நிகழ்ந்தது.

இளைஞர் மடைராசா கடந்த ஒரு வாரமாக இலங்கைப் போரில் தமிழர்கள் கொல்லப்படுவதை நாளிதழ் செய்திகளில் படித்து மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவுக்கப்பட்டுள்ளது. அவருடைய உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஒரு நாட்குறிப்பும் (டைரி) அதனுள் அவரின் உருவப்படம், கடப்பிதழ் ஆகியவை இருந்தன.

கூடவே, அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் அந்த நாட்குறிப்பில் இருந்தது. அக்கடிதத்தில், இலங்கையில் நிரந்தரப் போர் நிறுத்தம் வரவும், உடனடி பேச்சுவார்த்தை நடத்தவும், அப்பாவித் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா உடனே இலங்கை செல்ல வேண்டும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, நார்வே தூதுவர் சான் ரிக்சன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ ஆகியோர் அவருடன் சென்று இலங்கைச் சிக்கலைக் களைய உதவ வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்தன.

மேலும், அந்தக் கடிதத்தை வைகோவிடம் ஒப்படைக்கவும், அதனைப் பின்னர் ஒபாமாவிடம் கொடுத்து இலங்கை அப்பாவித் தமிழர்களும், பச்சிளங் குழந்தைகளும் மடிவதிலிருந்து தடுப்பதற்கு உதவ வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது.

கன்னெய்யை (பெட்ரோல்) உடல் முழுவதும் ஊற்றித் தீ வைத்துக்கொண்டதாக நம்பப்படும் இச்சம்பவத்தை நேரில் கண்டு அதிர்ச்சிக்குள்ளான வாடகி(டாக்சி) ஓட்டுநர் கே.இரவிசந்திரன் உடனடியாகத் தீயை அணைப்பதற்குக் குடிநீரை ஊற்றியும் எவ்வித பயனும் இல்லாமல் அவர் அல்றியவாறு தரையில் விழுந்து துடித்தார்.

உடனே மருத்துவமனை அவசரப் பிரிவிற்குத் தகவல் கொடுத்து மருத்துவ வண்டி அங்கு வருவதற்குள் மடைராசாவின் உயிர் அமைதியாக அடங்கிவிட்டதாக இரவிசந்திரன் மிகுந்த துயரத்துடன் கூறினார்.

@ஆய்தன்:-
எத்தனை உயிர்கள் இப்படிப் போகும் – தமிழீழம்
எழுந்தால் மட்டுமே இத்தனை வலிகளும் போகும்!!

1 கருத்து:

கிருஷ்ணா சொன்னது…

ஐயகோ..
தாளமுடியவில்லையே..

முத்துக்குமார்..
ஸ்டீபன்..
மடைராசா..

இன்னும்
எத்தனை எத்தனை
தமிழுயிர்கள் எறியப் போகின்றனவோ?

தாளமுடியவில்லையே..

அடே
கொக்கரிக்கும் சிங்கள
நயவஞ்சக நரிகளே..

உங்களுக்கு நரகத்திலும்
இடம் இல்லாமல் போகட்டும்!