வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

வியாழன், 25 டிசம்பர், 2008

தமிழ்ப் பற்றாளர்களைப் பழிப்பது நியாயமா?

*தமிழில் அன்னிய மொழிகளைக் கலக்காதே என்று தமிழ்ப்பற்றாளர்கள் சொன்னால்.. உடனே தமிழ்ப் பண்டிதர்கள் என்று முத்திரைக் குத்துவது..!

*அச்சு - ஒலி ஒளி - மின்னியல் ஊடகங்களில் தமிழைச் சிதைப்பவர்களைத் தமிழ்ப்பற்றாளர்கள் கண்டித்தால்.. உடனே தமிழ் வெறியர்கள் என்று பறைசாற்றுவது..!

*அறிவியலும் கணிதமும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் குரல் கொடுத்தால்.. உடனே பிற்போக்குவாதிகள் என்று பகடி பண்ணிவது..!

*எங்கும் – எதிலும் – எப்போதும் நல்லதமிழே பயன்பட வேண்டும் என்று தமிழ்ப்பற்றாளர்கள் அறிவுரை கூறினால்.. உடனே குறுகிய மனப்பான்மை என்று மட்டம் தட்டுவது..!

இப்படியாக, தமிழை முன்னிறுத்தி சிந்திக்கும் தமிழ்ப்பற்றாளர்களை ஏளனமும் இழிவும் செய்வதையே சிலர் ஆயுள்கால பணியாகச் செய்துவருகின்றனர்.

இவர்கள் யாரென ஆராய்ந்து பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்.

1.அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள்
2.அதிகார பலம் படைத்தவர்கள்
3.செல்வச் செழிப்பு கொண்டவர்கள்
4.பெரும் வணிகர்கள் - தொழில்முனைவர்கள்
5.சமுதாயத்தில் உயர்நிலையில் உள்ளவர்கள்
6.உயர்ப் பதவிகளில் இருப்பவர்கள்
7.ஆங்கில / மலாய் கல்விவழி முன்னேறியவர்கள்
8.தமிழர் அல்லாதவர்கள்
9.தமிழ் மொழியின உணவற்ற தமிழர்கள்
10.பிழைப்புக்காக மட்டும் தமிழைப் பயன்படுத்திக் கொள்பவர்கள்
11.ஏதேனும் ஒரு நயப்புக்காக நத்திப் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள்
12.தமிழின் மீது தாழ்வுமனப்பாண்மை கொண்டிருப்பவர்கள்

என இப்படிப்பட்டவர்கள்தாம் காலந்தோறும் காலந்தோறும் தமிழையும் தமிழரையும் தமிழ்ப் பற்றாளர்களையும் ஏளனம் செய்து வருகின்றனர் – இழிவுபடுத்தி வருகின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரையில் தமிழ் – தமிழர் பற்றி பேசுபவர்கள் வெறியர்கள்; தீவிரவாதிகள்; பிற்போக்குவாதிகள்; பழமைவாதிகள்; பிழைக்கத் தெரியாவர்கள்; காலத்திற்கேற்ப சிந்திக்காதவர்கள் என்றுதான் ஆழமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

மொழி - இனத்துக்காகப் போராடுவதும் குரல்கொடுப்பதும் குறுகிய எண்ணம் என்று நம்பியும் மற்றவரை நம்பவைத்தும் வருகின்றனர்.

மேலே அடுக்கிச் சொல்லப்பட்ட அத்தனை பேரையும் ஒரு கேள்வி கேட்க வேண்டும்! அதற்குமுன் பின்வரும் செய்தியைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்!!

"அறிவியல், கணிதம் ஆகிய இரு பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசாங்கத்தின் மீது நீதிமன்ற வழக்கு போடுவோம். எதிர்வரும் திசம்பர் 31க்குள் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்" என்று காபேனா (GAPENA) எனப்படும் மலாய் எழுத்தாளர் கூட்டமைப்பு கடந்த 24.12.2008இல் அறிவித்துள்ளது.

(மேல்விவரம் காண கீழே உள்ள படத்தைச் சொடுக்கவும்)

தமிழ்ப்பற்றாளர்களை மொழி வெறியர்கள் – தீவிரவாதிகள் – பழமைவாதிகள் – குறுகிய மனப்பான்மையர் என மட்டம் தட்டுகின்றவர்களை நாம் கேட்க விரும்பும் கேள்வி..!

மலாய்மொழியைக் காக்க தற்போது துடித்து எழுந்திருக்கும் 'காபேனா' என்ன மலாய்மொழி வெறியர்கள் இயக்கமா?

மலாய்மொழியின் தூய்மையைப் பேண துடிகின்ற 'காபேனா' என்ன மலாய்மொழி தீவிரவாத இயக்கமா?

மலாய்மொழியைக் கல்வி மொழியாக்க அரசாங்கத்தைக் கோரும் 'காபேனா' மலாய் பண்டிதர் இயக்கமா?

அறிவியலையும் கணிதத்தையும் மலாயில் கற்பிக்காவிட்டால் வழக்கு போடுவோம் என அரசாங்கத்தையே மிரட்டும் 'காபேனா' பிற்போக்கு இயக்கமா?

ஆங்கிலமும் அன்னியமொழிகளும் கற்றுவிட்டு – கையில் கொஞ்சம் காசுபணம் சேர்த்துவிட்டு – அரசாங்கம் பிச்சையாகப் போட்ட அதிகாரத்தை வைத்துக்கொண்டு வாய்கிழிய தமிழ்ப்பற்றாளர்களைப் பற்றி பழித்தும் இழித்தும் பேசும் நம்மின மேதாவிகள் இதற்குப் பதில் சொல்ல முடியுமா?


தாய்மொழி என்பது ஒருவரின் பிறப்புரிமை

சொந்த மொழியைப் பற்றி சிந்திப்பதும் – சொந்த தாய்மொழியை வளர்ப்பதும் – சொந்தத் தாய்மொழியைக் காப்பதும் ஒவ்வொருவருக்கும் பிறப்புரிமை அல்லவா?

சொந்த மொழியைக் கற்க மாட்டாதவன் – சொந்த மொழியயைக் கற்பிக்க மாட்டாதவன் – சொந்த மொழியைக் காக்க மாட்டாதவன் நல்ல அறிவும் தெளிவும் பெற்றவனா?

ஆகவே, தமிழ் முப்பாட்டன் தொல்காப்பியன் தொடங்கி இன்றுள்ள கொள்ளுப்பேரன் தமிழ்ப்பற்றாளன் வரையில் தமிழைக் காத்து நிற்பவர் ஆயிரமாயிரம் பேர் உள்ளனர்.

வாழையடி வாழையென வந்த தமிழ்மரபினரான தமிழ்ப்பற்றாளர்களைக் குருட்டுத்தனமாக இனி எவரும் ஏளனம் பேச வேண்டாம். காரணம்,

அவனவன் வாயாலன்றிப் பிறனெவன் உண்ண வல்லான்
அவனவன் கண்ணாலன்றிப் பிறனெவன் காண வல்லான்
அவனவன் செவியாலன்றிப் பிறனெவன் கேட்க வல்லான்
அவனவன் மொழியினத்தைப் பிறனெவன் காப்பான் வந்தே!

@ஆய்தன்:-
BAHASA JIWA BANGSA (மொழியே இனத்தின் உயிர்நாடி)

5 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

நச்...!

Esywara சொன்னது…

These people who humiliate and propagate the Tamil lover's as fanatics are often the non-Tamils.
My family itself is a great example. The definite reason is that they are in a position of shame in admitting the pride and dignity of the Tamil's language and culture.

ஆதவன் சொன்னது…

@சதீசு குமார்,

நன்றி..! அதிகம் எழுத நேரமில்லாமல் போய்விட்டதா? நச்..சோடு முடித்துவிட்டீர்களே!!

==//==

@ஈசுவரா,

தங்களின் முதல் வருகைக்கு நன்றி. தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. தொடர்ந்து மறுமொழி எழுதுங்கள்..!

தங்கள் வலைப்பதிவில் தமிழுயிருக்குத் தொடுப்பு(Link) கொடுத்திருப்பதைக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி. நன்றி..!

பெயரில்லா சொன்னது…

மானமுள்ள,
ரோசமுள்ள,
வீரமுள்ள
உயிர் இருக்கிற,
சோறு தின்கிற எனக்கு உறைக்கிறது...!

-
செந்தில், கோத்தா திங்கி

மு.வேலன் சொன்னது…

//தமிழ்ப் பற்றாளர்களைப் பழிப்பது நியாயமா?//

நியாயமில்லாதச் செயல். பழிப்பவர்களுக்கு ஒர் அரம் பாடினால் என்ன?