புதியத் தமிழனாய் எழுந்துவிட்டேன்
மலேசியத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் காப்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்த நாள் 25-11-2007. இன்றோடு ஓராண்டு நிறைபெறும் அந்தப் போராட்ட நினைவலைகளில் முகிழ்த்த உரைவீச்சு இது.
விடுதலைக் கிடைத்தும்
விடியாத மூஞ்சியாய்
ஐம்பது ஆண்டுகள்
வீணாய் கழித்தேன்!
வெந்ததைத் தின்னுவோம்
விதிவந்தால் சாகுவோம்
இதுவே வாழ்க்கையென
இயல்பாய் வாழ்ந்தேன்!
எனக்கும் உரிமையுண்டு
எதற்கும் வழியுண்டு
இதனை நம்பியே
ஏமாந்து இருந்தேன்!
எங்கும் அச்சம்
எதிலும் அச்சம்
எதிர்த்து எதனையும்
கேட்கவே அஞ்சுவேன்!
தலைவர் சொல்வதும்
ஊடகம் பேசுவதும்
உண்மையே என்றெண்ணி
ஊமையாய் கிடந்தேன்!
அறியாமைக் குட்டையின்
ஆழத்தில் படுத்திருந்தேன்
அச்சுறுக்கை மணியோசை
அலறலில் துடித்தெழுந்தேன்!
நவம்பர் இருபத்தைந்து
நாள்காட்டிக் காட்டியது
நானிருந்த சிறைக்கதவு
நாதாங்கிக் கழன்றியது!
தூங்கி வழிந்தவனைத்
தூக்கிநிறுத்திய பொன்னாள்
ஏங்கிக் கிடந்தவனை
எழுப்பிவிட்ட நன்னாள்
எனதுரிமை சொல்லவந்த
ஏற்றமிகு திருநாள்
என்னருமை இனப்பிறப்பை
எடுத்துரைத்த ஒருநாள்
எழுந்துவிட்டேன் கண்திறந்தே
எகத்தாளரை எதிர்கொள்ள
துணிந்துவிடேன் மனந்திறந்தே
தொல்லையரை வென்றெடுக்க
ஓயமாட்டேன் இனிமேல்
உரிமைகளை மீட்காமல்
சாயமாட்டேன் இனிமேல்
சந்ததியை காக்காமல்
@ஆய்தன்:-
தமிழினம் வீழும்போதெல்லாம் அதனைத் தாங்கிநிற்கவும் தூக்கிநிறுத்தவும் இயற்கையே முன்னின்று வீரத்தமிழரை வீறுகொண்டு எழச்செய்துள்ள வரலாறு ஆகக் கடைசியாக மீண்டும் இங்கே எங்கள் மலேசியத்திலும் நிகழ்ந்துள்ளது..!
தமிழினம் சாயாது..! தமிழோசை ஓயாது..!!
3 கருத்துகள்:
வணக்கம். வாழ்க
நவம்பர் 25 மலேசியத் தமிழனின் வரலாற்றுப் பொன்னாள். தூங்கிக் கிடந்த தமிழன் துடித்தெழுந்த வீர நாள். வாழ்க மலேசியத் தமிழன்.
தமிழால் ஒன்றுபடுவோம்
வணக்கம்,
தங்களின் பதிவுகள் சிறப்பு. மலேசியத் தமிழர்களால் மறக்க முடியாத மாபெரும் வீர திருநாள், நவம்பர் 25. நமக்குத் தேவை ஒற்றுமைதான். ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி.
வாழ்க மக்கள் சக்தி
தமிழுறவுடன்
பொன்னழகன்
கடாரங்கொண்டான்
//ஓயமாட்டேன் இனிமேல்
உரிமைகளை மீட்காமல்
சாயமாட்டேன் இனிமேல்
சந்ததியை காக்காமல்//
நன்று; மிக நன்று.
கருத்துரையிடுக