வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

திங்கள், 3 நவம்பர், 2008

அறிவியல், கணிதம் படிக்க ஆங்கிலமா?



(அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் கற்பிக்க 6 வருடங்களுக்கு முன்பு நமது அரசு முடிவெடுத்தது. அப்போதே இந்தத் திட்டத்தைத் அறிவு கண்கொண்டு பார்த்து எதிர்த்தவர்கள் பலர். ஆனால், அன்றைய நாட்டுத் தலைமை எவருடைய கருத்தையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இந்தத் திட்டத்தை அமுலாக்கியது. இன்றைய தலைமையோ இந்தத் திட்டத்தைத் தொடருவதா இல்லையா என ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அன்று மனம் வருந்தி எழுதிய இந்தக் கவிதையைப் பலரால் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஆனால், இன்று படிக்கும்போது ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், வரியும் உள்ளத்தைத் தொடுகிறது!!)
  • பினாங்கிலிருந்து தமிழன்பர் திருமாமணி எம்.ஏ இக்கவிதையைத் தமிழுயிருக்கு விடுத்துள்ளார்.
*** விடியல் ***


ஆங்கிலத்தால் விஞ்ஞானம் அடைந்திடலாம் என்றெண்ணி
அரசுவேலை நடக்குதிங்கே தெரியுமா?
ஆங்கிலத்தைப் பள்ளியிலே அடுக்கடுக்காய்ப் புகுத்துவதால்
அன்னைமொழிக் கென்னாகும் புரியுமா?

விஞ்ஞான விடியலுக்கு மெல்லமெல்லத் தாய்த்தமிழை
விட்டுவிட்டுப் பார்த்திருக்க முடியுமா?
அஞ்ஞானம் விஞ்ஞானம் அத்தனையும் தாண்டியதே
அன்னைமொழி தானொன்று தெரியுமா!

அறிவியலுக்கு கேற்றபடி அருந்தமிழைப் பக்குவமாய்
ஆக்குவதே விடியலுக்கு விடையாம்
அறிவியலை, கணிதத்தை அப்படியே பிறமொழிக்குக்
கொடுத்துவிட்டு நிற்பதுமடக் கொடையாம்!

சரியாக முடிவெடுக்கத் தவறிவிட்டால் வருமழிவைத்
தடுப்பதற்குத் தலைவர்களே முடியுமா?
அறிவுலகம் கண்டுஅதைச் சரிபடுத்த முன்வந்தால்
அவர்களையும் தடுத்துவிட்டால் விடியுமா!

பள்ளியிலே தமிழின்றேல் படிப்படியாய்த் துறைதோறும்
துறைதோறும் தமிழின்றிப் போகுமே!
வெள்ளிப்பணச் சீனரைப்போல் கொள்கையிலே நில்லாக்கால்
விடியலிங்குத் தமிழருக்குத் தூரமே!

"எசு" வென்றும் "எல்" லென்றும் இடையளவுக் கேற்றபடி
உடுக்கின்றோம் ஆடைகளைச் சரியாய்
"எசு" சாரே எனத்தானே ஏவலுக்கு நம்தலைமை
இருக்கிறது மொழிநலத்தில் பொதுவாய்!

ஒன்றுபட்டச் சிந்தனையை ஒதுக்கிவிட்டு தான்என்னும்
ஒருவரிங்கே எடுப்பதுதான் முடிவா?
தொன்றுதொட்டே இப்படித்தான் தொடருகிறோம் நம்சரிதை
தொடுவானில் வெள்ளியெனும் விடிவா?

வேற்றுமொழிக் கிசைந்துவிட்டு மேடையிலே மட்டும்தமிழ்
மீட்டெடுப்புக் கொள்கையுரைச் சேவையா?
தோற்றவுடன் கோட்டையினை எழுப்புகிறப் படைத்தலைவன்
சொல்லுங்கள் நமக்கிங்கே தேவையா?


-ஆக்கம்:- திருமாமணி (முதுகலை) எம்.ஏ, பினாங்கு

@ஆய்தன்:-
வேலியில் போகும் ஓனானை எடுத்து
வேட்டிக்குள் விட்டுக்கொள்ளும் தலைவர்கள்
எமது மலேசியத்தில் அதிகமுங்கோ!!

2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

கணிதம் அறிவியல் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் என்றதும் சீனச் சமூகம் வெகுண்டெழுந்தது, ஆனால் மலேசியத் தமிழர் சமுதாயம்??

ஒரு சிலரைத் தவிர மற்றவர்களனைவரும் மௌனிகளாகவே இருந்தனர். தாய் மொழியின் மீது அவ்வளவு பற்று!

தமிழ் வீழ்ச்சிக்கு தலைவன் மட்டுமல்ல, சமுதாயமும் ஒரு காரணம்!

மலேசியத் தமிழ் ஆர்வலர்கள் சமூகத்திற்கு தமிழுணர்வை ஊட்டுவதோடு, தாய்மொழியைக் காக்கும் உரத்தினையும் இட வேண்டும்.

தாய்மொழி உணர்வில் போதிய விழிப்புணர்வு பெற்ற சமூகமே சிறந்து விளங்க முடியும்!

பெயரில்லா சொன்னது…

நல்ல பாட்டு; பொருளுணர்ந்து இயற்றப்பட்டுள்ளது.