வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

செவ்வாய், 11 நவம்பர், 2008

தமிழ்ப்பள்ளிக்கு அனுக்கிரகம் தேவையா?

**மின்மடல் விடுத்தவர்:-மனோ, மஞ்சோங் மாவட்டம், பேரா.

ஐயா அவர்களே, ஒரு பள்ளியில் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) மாணவர் ஆண்டு விழா நடைபெறுகிறது. அந்த விழாவினைப் பல பள்ளிகள் 'பரிசளிப்பு விழா' என்ற பெயரில் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்தப் பள்ளியிலோ 'அனுக்கிரக நாள்' என்று அறிவித்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இது சரிதானா என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன். 'அனுக்கிரக நாள்' என்பது தமிழ்ச் சொல்லா? விளக்கம் பெற விரும்புகிறேன்.

@ஆய்தன்:-

பரிசளிப்பு விழா என்பது நல்லதமிழ்ச் சொல்லாட்சி. பல பள்ளிகளில் பல காலமாக இந்தப் பெயரில்தான் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இப்போது 'அனுக்கிரக நாள்' என்று தாங்கள் குறிப்பிடுவது புதிய செய்தியாக உள்ளது. இப்போதுதான் இப்படி ஒன்றைக் கேள்விப்படுகிறோம்.

'அனுக்கிரஹம்' என்பது வடமொழிச் சொல். அதற்கு, அருள், இறையருள், கருணை, என்று பொருள். பரிசளிப்பு விழாவுக்கு 'அனுக்கிரக நாள்' என்று சொல்லுவது சிறிதும் பொருந்துவதாக இல்லை. அந்தச் சொல்லைப் பள்ளி நிகழ்ச்சிக்கு எதற்குப் பயன்படுத்த வேண்டும்?

ஒரு வேளை மலாய்மொழியில் 'அரி அனுகெரா' (Hari Anugerah) என்று கூறுவதை அப்படியே அனுக்கிரக நாள் என்று சொல்லுகிறார்கள் போலும். 'அனுகெரா' என்பதை மலாயில் பரிசு, விருது, கொடை போன்ற பொருள்களில் ஆழ்கின்றனர். அதற்காக, ஈ அடிச்சான் காப்பி போல அதை அப்படியே பயன்படுத்த வேண்டுமா என்ன?

பரிசளிப்பு விழா என்று நல்லதமிழ்ச் சொல் இருக்கும் போது 'அனுக்கிரக நாள்' எதற்கு? கனி இருக்கும் போது எவராவது காயைத் தின்பார்களா? அந்தப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் ஒருவருக்குக் கூடவா இது தெரியவில்லை?

தமிழைப் படித்துக் கொடுப்பவர்களே தமிழை விட்டுவிட்டு இப்படி சமற்கிருதச் சொல்லைப் பயன்படுத்தலாமா? மலக்குட்டையில் போய் மீன் பிடிக்கலாமா?

தமிழை வளர்க்க வேண்டிய இடத்தில் செத்த வடமொழியை வளர்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆசிரியர்களை அறிவிலிகள் என்று திட்டினால் நம்மீது சீற்றமடைவார்கள். அதனால், இப்போதைக்கு அறியாமைக்காரர்கள் என்று சொல்லி வைப்போம்!!

"சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே – அதை
தொழுது படித்திடடி பாப்பா" என்ற பாரதியின் பாட்டை முதலில் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். நாட்டின் மிகப்பெரிய தமிழ்ப்பள்ளியாக விளங்கும் கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் அண்மையில் இதே பரிசளிப்பு நிகழ்ச்சி 'நேர்த்திநிறை நாள்' என்ற பெயரில் நடந்ததாக நாளிதழில் செய்தி வந்தது.

'நேர்த்திநிறை நாள்'. என்ன அருமையான தமிழ்ப் பெயர் பாருங்கள். தமிழ்ப் பள்ளி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! தமிழ்ப்பள்ளியானது நமது தாய்த்தமிழை இப்படித்தானே முன்னெடுக்க வேண்டும்!

பெயரோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. இந்த நிகழ்ச்சியைப் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவேந்தலாகப் (அஞ்சலியாக) படைத்து புதுமையும் சாதனையும் படைத்துள்ளனர். தமிழ் அறிஞர்களைப் போற்றும் தலைமுறையை வளர்த்தெடுக்கும் நல்ல பணியைச் செய்திருக்கும் இப்பள்ளி பாராட்டுக்கு உரியது.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்குச் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மிகச் சிறந்த முன்மாதிரி என்று துணிந்து கூறலாம். தமிழ்ப்பள்ளி என்ற அடையாளத்தைக் காத்துநிற்கும் அப்பள்ளித் தலைமையாசிரியரையும் ஆசிரியர்களையும் தமிழுயிர் மதிப்போடு வணங்குகிறது.

1 கருத்து:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆய்தன் அவர்களே எழுத்துரு குறுகிப் போனதன் காரணம் என்ன? படிக்கச் சிரமமாக இருக்கிறது... பெரிய எழுத்தாக போடுங்கள் அப்போதாவது தமிழ் மொழி நான்கு பேருக்கு தெரியட்டும்... திரு.மனோ அவர்களே, இந்த பதிவை நகல் எடுத்து அந்த பள்ளிக்கு அனுப்பி வையுங்கள்..