வணக்கம்! வருக! தமிழ்நலம் சூழ்க!

*மலேசியாவின் முதல் தமிழ்த் தேசிய வலைப்பதிவு*

புதன், 19 நவம்பர், 2008

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடி விடலாமா?

வசந்தராவ் என்னும் பெயரிய அன்பர் ஒருவர் "தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடலாம். ஆனால் ஒரு விதி.." (Seal The Tamil Schools With A Condition) என்ற தலைப்பிட்டு தம்முடைய 'பங்சா மலேசியா' வலைப்பதிவில் கடந்த 12-11-2008இல் எழுதியுள்ளார்.

இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ந்துபோன தமிழன்பர்கள் பலர் தமிழுயிருக்கு மின்னஞ்சல் வழியாகத் தகவல் கொடுத்திருந்தனர். அதோடு, அந்த வலைப்பதிவருக்குத் தக்க பதிலைக் கொடுக்குமாறும் கேட்டிருந்தனர்.

முதலில், இந்தச் செய்தியை எமக்கு அறியச் செய்த அத்துணை தமிழன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவர்களின் தமிழ்ப்பற்று உள்ளங்கள் செழித்தோங்கட்டும்!

'பங்சா மலேசியா' வலைப்பதிவர் அன்பர் வசந்தராவ் எழுதிய பதிவில் முக்கியக் கருத்தாக அவர் சொல்லியிருப்பது இதுதான்.

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடிவிடலாம். ஆனால், தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட வேண்டும். (Tamil schools should close down but with condition that Tamil made compulsory to all Tamil students.)

(முழுக் கட்டுரையைப் படிக்க படத்தைச் சொடுக்கவும்)அன்பர் வசந்தராவ் எழுதியிருக்கும் கருத்து புதியது அல்ல. ஏற்கனவே, இதே கருத்து கல்வியாளர் இராமசுப்பையா தலைமையில் ஒரு குழுவினால் முன்மொழியப்பட்டது. தமிழ் மக்களிடையே இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்தக் கருத்து அப்படியே முடங்கிப் போய்விட்டது.

பின்னர், அவ்வப்போது இந்தக் கருத்து தலைதூக்கிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் மரண அடி வாங்கிக்கொண்டு படுத்துக்கொண்டது. ஆகக் கடைசியாகக் கடந்த 2007இல் இதே கருத்தை ஓர் அரசியல் தலைவர் முன்வைத்தார். ஆனாலும், அவரும்கூட தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றாரே தவிர, தமிழ்ப் பள்ளிகளை மூடச் சொல்லவில்லை.

இத்தனைக்கும் மேலாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் 'தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும்' என்று பேசி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய வரலாறு ஒன்று கடந்த 2007இல் நடந்தது.

இப்படியாக, "தமிழ்ப்பள்ளிகளை மூடு! தமிழைக் கட்டாயமாக்கு" என்ற அந்த இத்துப்போன 'பீரங்கிக் குண்டு' ஒவ்வொரு முறையும் சமயலறையில் முள்ளங்கித் தண்டாக அவிந்து போனது.

இப்படிப் புளித்துப்போன வரலாறு ஒருபுறம் இருக்க, அன்பர் வசந்தராவ் மீண்டும் அதே பழைய பல்லவியைத்தான் பாடியுள்ளார். அதனால்தான், தொடக்கத்திலேயே இது ஒன்றும் புதிதல்ல என்று குறிப்பிட்டிருந்தேன்.

இருந்தாலும், அன்பர் வசந்தராவ் அவர்களுக்குச் சில செய்திகளைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதால்தான் இவ்வளவும் எழுதுகிறேன்.

கடந்த 2007இல் நான் எழுதிய இரண்டு பதிவுகளை இதற்குப் பதிலாக வைக்கிறேன். (கீழே உள்ள தலைப்புகளைச் சொடுக்கவும்.)

பதிவு 1:- தமிழ்ப்பள்ளிகளை ஒழிக்க வேண்டுமா?

பதிவு 2:- தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமா?

ஆக, அன்பர் வசந்தராவ் அவர்களும், அவரை ஒத்தக் கருத்துள்ள அன்பர்களும் ஏனையத் தமிழன்பர்களும் அதனைப் படித்து தெளியுமாறு வேண்டுகிறேன்.

அதோடு, அன்பர்கள் தவறாமல் மறுமொழிகளை எழுதுமாறு வேண்டுகிறேன்.

இறுதியாக ஒரு செய்தி. தமிழ்ப்பள்ளியை மூடிவிடலாம் என்ற அடிப்படையற்றக் கருத்தை முன்வைத்த அன்பர் வசந்தராவ் அதனை மீட்டுக்கொள்ள வேண்டும் என தமிழுயிர் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், தமிழ்ப்பள்ளியில் படிக்காவிட்டாலும் தன்னார்வத்தின் அடிப்படையில் தமிழைக் கற்றதற்காகவும்; தமிழ்மொழி இந்த நாட்டில் நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்காகவும்; இணையத்தில் தமிழ்ப்பணி செய்து வருவதற்காகவும் அவருக்குச் சின்னதாய் ஒரு பாராட்டு.

@ஆய்தன்:-
தமிழ்ப்பள்ளிகளை மூடுவதும் – தமிழன்
தனக்குத் தானே குழிப்பறிப்பதும் ஒன்றே!

14 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வணக்கம் ஐயா,

இதை அவர் என்னிடம் அனுப்பி படித்து பின்னூட்டமிட சொன்னார்... நான் கண்டுக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். அவரை எதிர்த்து கேள்வி கோட்டோரிடம் சில முற்றிய விவாதங்கள் நடந்தன. எல்லாவற்றயும் கவனித்தே இருந்தேன். எனது கருத்தை அங்கே விட்டுச் செல்லவும் விருப்பம் கொள்ளவில்லை.

அங்கே விட்டதை இங்கே சொல்லிக் கொள்ள விருப்பம் கொள்கிறேன்.

1) தமிழ் பள்ளியை இழுத்து மூடுவது சில தரப்பினருக்கு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் அமையும். அதை ஆதரிக்கும் நம்மினத்தவரின் செயல் பச்சையான அய்யோக்கிய தனம்.

2) தாய்ப் பால் குடித்த ஒவ்வொருவனுக்கும் தாய் மொழியுணர்ச்சி அவசியம் வேண்டும். தமிழனென அடையாளமிடப்பட்டு தமிழ் பேச நாக்கு கூசுகிறது என சொல்பவன் தமிழ் துரோகிகள்.

3) கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் அவசியமானது. ஆனால் சிந்திக்காமல் பேசுபவர்களின் பேச்சை கேட்பவன் முட்டாள். ஏன் முட்டாள்? முட்டாள் தனமான கருத்துக்கு நேரத்தைச் செலவிடுவதனால் முட்டாளாகிறோம். இப்படிபட்ட கருத்துகள் பரப்பபடுவதை நிராகரிக்க ஒரே வழி அப்படி பேசுபவர்களை கண்டுக் கொள்ளாமல் விடுவதே என அறிகிறேன்.

பி.கு: ஆய்தன் ஐயா, பின்னூட்ட பக்கத்தை பழைய முறைக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன். மின் மடல் பின்னூட்ட வசதிக்கு அது பொருத்தமாய் இருப்பதாக அறிகிறேன். இது வேண்டுகோள் மட்டுமே...

பெயரில்லா சொன்னது…

இருக்கும் பள்ளிகளை இழுத்து மூடிவிடுவது எளிது; தமிழ்ப்பள்ளிகள் இல்லை என்று ஆனபின் மீண்டும் பெறுவது இயலாத செயல்.

தமிழைப் படிப்பதற்கும் தமிழில் படிப்பதற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டென்பதனை உணர்வார் உணர்வர்.

உணராதார் இவ்வாறுதான் அவ்வப்போது ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பர். உண்மையை உணராதார்தம் உரையை ஒதுக்கிவிடல் நன்று.

- அ. நம்பி

Sathis Kumar சொன்னது…

தேசியப் பள்ளியில் தமிழ் கற்றுதரும் ஆசிரியன் என்ற அனுபவத்தின் பேரில் ஐயா ஆய்தன் அவர்களின் கருத்துகளை நான் முழுமையாக ஏற்கிறேன்.

மழைக்குக் கூட தமிழ்ப் பள்ளியின் பக்கம் ஒதுங்காதவர்கள்தான் அதனை மூடச் சொல்கிறார்கள். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இன்னும் ஆசிரியர்த் தொழிலில் காலடியே எடுத்து வைக்காத பட்சத்தில் தமிழ்ப் பள்ளிகள் எனும் சமுதாயக் கட்டமைப்பையும் அங்கு நடைப்பெறும் கற்றல் கற்பித்தல் முறையை கேள்விக் குறியாக்குவதுதான்.

இனவாரியாக பள்ளிகள் அமைந்திருப்பதால் நம்முடைய அறிவு மழுங்கடிக்கப்படுகிறது எனும் வாதமும், இன நல்லிணக்கம் சிதைகிறது என்கிற மாயாவாதமும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதக் கருத்தாகும்.

ஓர் இனத்தின் தனித்துவம் பாதுகாக்கப்படுவதில் தேசிய மாதிரி ஆரம்பப் பள்ளிகள் பெரும் பங்காற்றுகின்றன. பல அறிஞர்களை உருவாக்கியது இப்பள்ளிகள்தான் என்பதற்கான ஆதாரங்கள் பல நம்மிடம் இருக்கின்றன.

நம் வீட்டின் கூரையில் விரிசல் விழுந்திருக்கிறது என்று அடுத்தவன் வீட்டில் குடிபெயர்ந்து போவது மடத்தனம்! விரிசலை சரிசெய்வது ஒன்றே நம் கடமையாக இருந்தால் இனத்தின் தனித்துவம் பாதுகாக்கப்படுவதோடு நம் வரலாறும் நிலைத்து நிற்கும்!

ஒற்றுமையில் வேற்றுமை இருப்பதைவிட, வேற்றுமையில் ஒற்றுமைக் காண்பதே மேல்!

Sivaganapathy சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளை இழுத்து மூடிவிடலாம். ஆனால், தமிழ் மாணவர்கள் அனைவருக்கும் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கிவிட வேண்டும். (Tamil schools should close down but with condition that Tamil made compulsory to all Tamil students
_______________________________

ஏன் ஐயா இந்த விபரீத விளையாட்டு ???

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி ..கடைசியில் மனிசன கடிச்ச கதை ஆச்சி

ஐம்பது ஆண்டுகள் தமிழ் மொழி , தமிழர்கள் , தமிழ் பள்ளிகள் திண்டாடி வந்து கொண்டு இருக்கும் வேலையில் இப்படி வெக்கம் கேடான ஒரு விவாதம் தேவையா?

கோவி.மதிவரன் சொன்னது…

இந்நாட்டில் நமது தமிழ்ப்பள்ளிகள் இன்றுவரை நிலைத்திருப்பது என்பது ஒரு வரலாற்றுக்குரிய ஒன்றாகும். நம் நாட்டில் இயங்கிவரும் தமிழ்ப்பள்ளிகள் நமது பண்பாட்டின் அடையாளம், இனத்தின் அடையாளம், மொழியின் முகவரி, கலை கலாச்சாரங்களின் இருப்பிடம். மற்ற மொழி பள்ளிகளில் இவற்றையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்க முடியாது. மழைக்குக் கூட தமிழ்ப்பள்ளிகளின் பக்கம் ஒதுங்காதவர்களுக்கும், தமிழே தெரியாதவர்களுக்கும் நாம் கூறுகின்ற கருத்துகள் விளங்காமல் போகலாம். எ.காட்டுக்கு
நமது தமிழ்ப்பள்ளிகளில் தான் பொங்கள் விழா, கலைமகள் வழிபாடு இன்னும் பல பண்பாடு மற்றும் சமய விழாக்களைக் கொண்டாட முடியும். ஆனால் அன்பர் சொல்வதுபோல் தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டால், மற்ற மொழிப் பள்ளிகளில் இவ்விழாக்களைக் கொண்டாட முடியுமா என்பதூ கேள்விக்குறியே ? தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டும் என வாதிடுபவர்கள் இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். வெறுமனே வாய்க்கு வந்ததையெல்லாம் உளறுதல் கூடாது.
தமிழ்ப்பள்ளிகள் மலேசியத் தமிழர்களின் அடையாளம். மொழி அழிந்தால் இனம் அழியும்.

தமிழே, தமிழரின் முகவரி

தாய்மொழி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பெயரில்லா சொன்னது…

வலைப்பதிவுக்கு வணக்கங்கள். தாங்கள் தமிழ் பள்ளிகளின் மேல் வைத்திருக்கும் காதுலுக்கு ஒரு பாராட்டு. ஆனால், அன்பர் வசந்தராவ் கூறிய கருத்தை ஏன் நீங்கள் தப்பாக புரிந்து கொள்கிறீர்கள் என்பது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது. முதலில் அந்த கருத்தின் அடிப்படையை நன்றாக யோசிப்போம். நமது நாட்டிலயே எத்தனையோ தமிழ் பள்ளிகளில் மாணவர்களுக்கு இடம் பற்றாகுறை இருந்துதான் வருகிறது. இதனால் தமிழ் பள்ளிகளில் சேர்கபடவேண்டிய மாணவர்கள் மலாய் பள்ளிகளிலும் சினப் பள்ளிகளிலும் சேர்க்கப்படுகின்றனர். இப்படி படிக்கின்ற தமிழ் மாணவர்களின் மத்தியில் தமிழை கட்டாய பாடமாக்கினால் தமிழ் மொழி அழிய வாய்ப்பிலையே!! அது மட்டுமின்றி, இத்தனை வருடங்களில் தமிழ் பள்ளிகள் குறைந்து வருகிறதே தவிர அதன் எண்ணிக்கை அதிகமாகவும் இல்லை,இருக்கின்ற பள்ளிகளில் உள்ள அடிப்படை வசிதிகளும் சரியாக இல்லை .இந்த நிலையில் நமக்கு தேவை நமது மொழியே தவிர நமது தமிழ் பள்ளிகள் அல்ல.ஒரு நல்ல விஷயத்தை மீண்டும் மீண்டும் கூறுவது தப்பு அல்ல. மாறாக அந்த விஷயம் ஏன் பேசபடுகிறது என்பதை நாம் யோசிப்போம். வாழ வேண்டியது தமிழ் தானே தவிர ,தமிழ் பள்ளிகள் என்ற கட்டடங்கள் அல்ல.ஒரு இனத்தின் அடையாளம் அதன் மொழியே தவிர அதன் பள்ளிகள் அல்ல. மலாய் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்க வேண்டும்.சினப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக வேண்டும்.இதனால் நமது தலைவர்கள் பேசாமல் இருக்கக் கூடாது. கேழுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பது இயேசுவின் வார்த்தைகள். இதையும் மறந்து விட வேண்டாம். வாழ்க தமிழ் மொழி !!!!

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

தமிழ்ப்பள்ளிகளை நம்மவர்கள் பெரும்பாலும் கல்வி நிலையங்களாக மட்டுமே பார்க்கின்றனர்.

ஆனால், சீனர்கள் சீனப்பள்ளிகளை அவர்களின் ஒட்டுமொத்த பண்பாட்டு நடுவங்களாகப் பார்க்கின்றனர்.

மலாய்க்காரர்களும், தேசியப் பள்ளிகளை மலாய்ப் பண்பாட்டு நடுவமாக வளர்த்தெடுக்கின்றனர். ஆனால், அந்த வார்ப்புக்கு 'தேசியம்' என்ற மேல்பூச்சை(முலாம்) பூசியிருக்கிறார்கள்.

இந்தச் சூட்சுமம் நம் தலைவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் புரியாத காரணியத்தால்தான்...

தமிழ்ப்பள்ளிகள் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியமும் தேவையும் தெளிவாகப் புலப்படுவதில்லை.

சிங்கையில் ஒரு காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. ஆனால், இன்று ஒன்றுகூட இல்லை. ஆனால், அங்குத் தமிழ் கட்டாயப் பாடமாக உள்ளது உண்மைதான்.

கட்டாயப் பாடமாக உள்ள தமிழின் நிலைமை சிங்கையில் எப்படி உள்ளது? என்ன தரத்தில் உள்ளது? சிங்கைத் தமிழர் நாவிலும் வீட்டிலும் தமிழ் உள்ளதா? தமிழ் நாளிதழ் உள்ளதா? தமிழிய ஆக்கங்கள் உள்ளனவா? வளர்ச்சிகள் உள்ளனவா?

என்பதை சற்றே ஆராய்ந்து பார்த்தால், மிகப் பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சும்!

தமிழ்ப்பள்ளிகளை மூடிவிட்டால், இங்கேயும் அந்த நிலைமை மிக விரைவிலேயே ஏற்படும் என்பது உண்மை.

தமிழ்ப்பள்ளிகள் என்பது நமது உரிமை. நமக்குள்ள அரசுரிமையை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது.

தமிழ்ப்பள்ளியை மூடிவிட்டு தமிழை மட்டும் வளர்த்துவிட நிச்சயமாக முடியாது.

தமிழ்மொழி பாலுக்கும் ஒப்பானது; தமிழ்ப்பள்ளியோ பாத்திரத்திகு ஒப்பானது. பாத்திரம் உடைந்தால் பாலுக்குப் பாதுகாப்பு உண்டா?

ஆகவே, உயிரை வளர்க்கும் பாலைப் (தமிழ்மொழி)பாதுகாக்க வேண்டுமானால் எப்பாடு பட்டாகிலும் பாத்திரத்தைப் (தமிழ்ப்பள்ளி) பாதுகாக்க வேண்டும்.

தமிழ் நம் உயிர்; தமிழ்ப்ப்ள்ளி நம் உடல் என்ற அமரர் தமிழவேல் கோ.சா அவர்களின் தமிழ் முழக்கத்தைத் தமிழர் ஒவ்வொருவரும் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்!

Sathis Kumar சொன்னது…

வணக்கம்,

கலையமுதன்,

உங்கள் வீட்டில் சரியாக வசதியில்லாமலிருந்தால் அடுத்தவன் வீட்டில் சென்று அமர்ந்துக் கொள்வீர்களா? இல்லை வசதியை அதிகப்படுத்துவற்கு முனைப்பு காட்டுவீர்களா? உங்களுக்கு வீடு முக்கியமா குடும்பம் முக்கியமா?

இதில் இரண்டில் ஒன்றை விட்டுக் கொடுத்தாலும் மற்றொன்று உருப்படாமல் போய்விடும்!

தமிழ்ப் பள்ளிகளில் வசதில்லையென்றால் உடனே இழுத்து மூட வேண்டும் என்று தோன்றும் உங்கள் மூளைக்கு அதனை பாதுகாக்க, போதிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை!

நீங்கள் எல்லாம் வருங்கால தமிழாசிரியர்கள்! முதலில் படிப்பை நான்முறையில் முடித்துவிட்டு பணியில் அமர்ந்து பாருங்கள். தமிழ்ப் பள்ளிகளின் அவசியத்தை அப்பொழுது நீங்கள் உணர்வீர்கள்!

kalai`s entry சொன்னது…

அனைவருக்கும் வணக்கங்கள்.முக்கியமாக திருவாளர் சதீசு குமார் அவர்களுக்கு. முதலாவதாக, தாங்கள் எனது கருத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை.அதைப்பற்றி நன்ன மேலும் பேசி உங்கள் நேரத்தியும் எனது நேரத்தியும் வீணாக்க விரும்ப வில்லை.எனது கருத்தை நீங்கள் எனது வீட்டு வசிதிகளோடு ஒப்பிடுவது கொஞ்சம் கூட ஒத்துவரவில்லை.மேலும் நான் தமிழ் மீது வைத்திருந்த பற்றினால் தான் கூறினேன். இதில் மற்றவரின் பங்கு இல்லை.இது முழுக்க முழுக்க எனது கருத்து மட்டுமே. இந்த விஷத்யத்தை பற்றி உங்களுக்கு இப்பொழுது புரியாது.நேரம் கைகூடும்போது அனைத்தும் அறிவீர்! மிக்க நன்றி.

Sathis Kumar சொன்னது…

வணக்கம், முக்கியமாக கலையமுதனுக்கு..

உங்களின் தமிழ் பற்று எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் அனுபவ ரீதியில் தமிழ்ப் பள்ளி சூழலையும் அரசாங்கக் கல்விக் கொள்கைகளையும் எதிர்க்கொள்ளாத நீங்கள் எனக்கு எதைப் புரிய வைப்பது!

தமிழ்ப் பள்ளியையும் உங்கள் வீட்டையும் ஒப்பிட்டுக் கூறியதை நேரடியர்த்தமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உங்களால் புரிந்து கொள்ள முடியாதுதான். தமிழ்ப் பள்ளியில் வசதியின்மை, மாணவர் பற்றாக்குறை என்ற காரணம் காட்டி தமிழ்ப் பள்ளிகளை ஒழித்து கட்டச் சொல்வதற்கு நாம் வெட்கப்பட வேண்டும்.

சில அரசியல் காரணங்களால் மானியங்கள் கிடைக்காது அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளுக்கு உதவுவதற்காக நம்முடைய சிந்தனைகளை முடுக்கிவிட வேண்டுமே தவிர ஒழித்து கட்டுவதற்கு அல்ல!

மீண்டும் கூறுகிறேன், தமிழ்ப் பள்ளிகளில் மொழி மட்டும் கற்பிக்கப்படவில்லை! தமிழர் பண்பாடு, காலாசாரம், சமயம் என இன்னும் பல அங்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இவையனைத்தும் தேசியப் பள்ளிகளில் சாத்தியமாகாது என்பதை கண்கூடாக் கண்டு வருகிறேன், காரணம் நானும் தேசியப் பள்ளியில் தமிழை பாடமாகக் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

வீண் வாய்ப்பேச்சுகள் இனிப்பாக இருக்கும், நடைமுறை என வரும்பொழுது தமிழ் அங்கு படும்பாடு எங்களுக்குத்தான் தெரியும்!

எதையும் ஆய்ந்து பேசுவது நலம்!

பெயரில்லா சொன்னது…

தமிழ்ப்பள்ளி, வெறும் பாடம் கற்கும் இடம் இல்லை; அது பண்பாடு வார்க்கின்ற நடுவம்! இது புரிந்தால்...
இந்த வாதத்தின் முடிவு தெளிவே!
அ,ஆ தெரிந்து கொள்வதா அறிவு? நம் பிறப்பின், குடியின் பெருமை அறிந்து அதன் படி நடப்பதே அறிவு..
நம்மிடையே இன்னமும் " படிச்சவன் மாதிரியா நடக்கிறான் " என்று குறிப்பிடுவது ஏட்டுப்படிப்பையா? பண்பாட்டை அன்றோ?
இன்று நம் நாட்டில், யோகா பயிற்சி ஒரு மதத்திற்கு விரோதமானது என்று முடிவு வெளியிடப்பட்டது.
நமது பல பண்பாட்டுக் கூறுகள் இதே நிலையை அடையும் நாள் எது தெரியுமா? தமிழ்ப்பள்ளிகள் இல்லா நாள்..! இது தேவையா...?

அன்புடன்,
இளவேனில்

ஆதவன் சொன்னது…

@கலையமுதன்,

//அன்பர் வசந்தராவ் கூறிய கருத்தை ஏன் நீங்கள் தப்பாக புரிந்து கொள்கிறீர்கள் என்பது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.//

நாங்கள் தப்பாகப் புரிந்துகொண்டதாக தாங்கள் நினைப்பது தவறு. வசந்தராவின் கருத்தை நன்றாகவே உள்வாங்கி இருக்கிறோம்.

இங்கே மறுமொழி எழுதியுள்ள அன்பர்கள் அனைவரும் தெளிவாகவே எழுதியுள்ளனர். உங்களைத் தவிர!

தமிழ்ப்பள்ளியின் கட்டடம், வசதிகள் பற்றி வசந்தராவும் நீங்களும் கூறியுள்ள செய்திகள் உண்மையே. அந்தக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வது சரியான முடிவுதானா என சிந்தித்துப் பாருங்கள்!

//உங்கள் வீட்டில் சரியாக வசதியில்லாமலிருந்தால் அடுத்தவன் வீட்டில் சென்று அமர்ந்துக் கொள்வீர்களா? இல்லை வசதியை அதிகப்படுத்துவற்கு முனைப்பு காட்டுவீர்களா? உங்களுக்கு வீடு முக்கியமா குடும்பம் முக்கியமா?

இதில் இரண்டில் ஒன்றை விட்டுக் கொடுத்தாலும் மற்றொன்று உருப்படாமல் போய்விடும்!//

அன்பர் சதீசுகுமாரின் கருத்து ஆழ்ந்து சிந்திக்கக்கூடியது.

நீங்களும் நானும்கூட வெளியில் இருந்துகொண்டு கருத்து சொல்கிறோம். ஆனால், அன்பர் சிதீசு களத்தில்(தேசியப்பள்ளி) இருந்துகொண்டு தன்னுடைய நேரடி பட்டறிவில் கண்டதைச் சொல்லுகிறார். அதில், ஆழ்ந்த உண்மையும் தெளிந்த நோக்கும் இருப்பதை தயவுகூர்ந்து கவனிக்கவும்.

//இத்தனை வருடங்களில் தமிழ் பள்ளிகள் குறைந்து வருகிறதே தவிர அதன் எண்ணிக்கை அதிகமாகவும் இல்லை//

உண்மைதான். ஆனால், பள்ளிகள் அதிகமாக இருந்த காலத்தைவிட தற்போது மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளனர் என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

மேலும், ஒவ்வோராண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. அதனால், ஆசிரியர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. நம்மவர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

//இன்று நம் நாட்டில், யோகா பயிற்சி ஒரு மதத்திற்கு விரோதமானது என்று முடிவு வெளியிடப்பட்டது.
நமது பல பண்பாட்டுக் கூறுகள் இதே நிலையை அடையும் நாள் எது தெரியுமா? தமிழ்ப்பள்ளிகள் இல்லா நாள்..! இது தேவையா...?//

அன்பர் இளவேனில் கருத்து மீண்டும் மீண்டும் சிந்திக்கத்தக்கது.

அன்பர் வசந்தராவ், கலையமுதன் போன்று எண்ணமுடையவர்கள் இப்படி சிந்தித்துப் பாருங்களேன்..!

சீனர்களைப் போல் மலேசியத் தமிழர்(இந்தியர்) அனைவரும் தமிழ்ப்பள்ளிகளைத் தேர்ந்தெடுத்தால்..

என்னவாகும் தெரியுமா?

1.நமது ஒற்றுமையைப் பார்த்து மலேசிய அரசே வெளவெளத்துப் போகும்.

2.நாம் கேட்காமலேயே நமது தமிழ்ப்பள்ளிகளுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனையும் அரசிடமிருந்து கிடைக்கும்.

3.கிடக்காவிட்டாலும் நம் பணத்தைக் கொண்டே நமது பள்ளிகளை மேம்படுத்திவிட முடியும்.

4.தமிழ்ப்பள்ளி - தமிழ்மொழி இரண்டையும் ஒருசேர காலத்திற்கும் காப்பாற்றிவிட - காத்துவிட முடியும்.

அன்பர் கலையமுதன், தமிழ்ப்பள்ளிகளை மூடுவதால் ஏற்படப்போகும் குறுகியகால - நீண்டகால இழப்புகளை எண்ணிப்பாருங்கள்.

நான் குறிப்பிட்டுள்ள பதிவு 1ஐயும், பதிவு 2ஐயும் மீண்டும் படித்துப் பார்த்துத் தெளியவும்.

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்